Chapter 25
ஜானகி.. மேடையில் சிறுமியின் காதைப் பிடித்துத் திருகிக் கொண்டிருந்த வாசவியை ஆர்வத்துடன் பார்த்தாள்.
“பொண்ணு அழகாய்த்தான் இருக்கிறாள்..” என்று ராமகிருஷ்ணனின் பக்கம் திரும்பிக் கூறினாள்..
“ஆமாம் ஜானகி..” என்று ஆமோதித்தார் அவர்..
“அவளைக் கூப்பிடவா அம்மா..” சந்தோஷ் வினவினான்..
“கூப்பிடு.. கூப்பிடு..” என்று ஆவலாய்க் கூறினாள் ஜானகி..
சந்தோஷ் எழுந்து.. திருமண மேடைக்குச் சென்றான். சிறுமியின் காதைப் பிடித்துத் திருகிக் கொண்டிருந்த வாசவி.. அவனைக் கண்டதும் சிறுமியின் காதை விட்டு விட்டாள்.. தப்பித்தேன்.. பிழைத்தேன்.. என்று சிறுமி ஓட்டம் பிடிக்க.. வாசவி குனிந்து மேடையில் இருந்த பெரிய குத்து விளக்கின் திரியைச் சரி செய்து கொண்டே மெதுவாகப் பேசினாள்..
“இங்கே என்ன பண்றீங்க..?”
“ம்ம்.. நீ என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்..?”
“அது உங்களுக்கு எதற்கு..?”
“தேவைம்மா.. அந்தக் குட்டிப் பெண்.. என் சொந்தக் காரப் பெண்..”
“இந்தப் புளுகு மூட்டையை வேறு எங்காவது அவிழ்த்து விடுங்க..”
“ஏன்..?”
“அவள் என் சித்தி மகள்..”
“அப்போ.. நான் சொன்னது சரிதானே..”
“என்ன சரி..? என் சித்தி மகளை உங்களுடைய சொந்தக்காரப் பெண்ணுன்னு சொன்னால்.. அது புளுகு மூட்டைதானே..?”
“இல்லையே..”
“எப்படி இல்லை..?”
“என் தங்கையை உன் அண்ணன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்..”
“அதுக்காகத்தானே.. நாம் எல்லோரும் மண்டபத்திற்கு வந்து கூடியிருக்கிறோம்..”
“அப்போ.. என் தங்கை உனக்குச் சொந்தம்தானே..”
“அவங்க என் அண்ணியாக்கும்..”
“இதை மட்டும் உணக்கையாய்ச் சொல்லு.. அப்போ.. உன் அண்ணன் எனக்கு மாப்பிள்ளைதானே.. நான் அவருடைய மைத்துனன்தானே..”
“என்னவோ ஒன்று.. அதை நீங்களே சொல்லிக் கோங்க..”
“அப்போ.. அந்தக் குட்டிப் பெண்ணும் என் சொந்தக் காரப் பெண்தானே..”
“ஓ.. நீங்க அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. இப்படிக் கதை சொல்லிக் கொண்டு வருகிறீங்களா..!”
“கதையா..?”
“பின்னே.. கதை இல்லையா..?”
“நிஜம்.. வாசவி.. நிஜம்..”
“என்னவோ.. டி.வி.யில் போடும் கவர் ஸ்டோரி போல இருக்கிறது..”
“இருக்கும்.. இருக்கும்.. உனக்கு.. எப்படி யெல்லாமோ தான் இருக்கும்.. உண்மையை ஒப்புக் கொள்வதற்கும் ஒரு மனம் இருக்க வேண்டும்.. அது உன்னிடத்தில் இல்லை..”
“ஆமாமாம்.. இவர் ரொம்ப கண்டு விட்டார்.. என்னிடம் ஒரு மனம் இல்லாமல்.. இரண்டு மனம்தான் இருக்கிறதுங்கறேன்.. இப்ப அதுக்கு என்னாங்கறீங்க..”
“நான் ஒன்றும் சொல்லவில்லையம்மா..”
“பின் வேறு யார் சொல்லப் போகிறாங்களாம்..”
“அதோ.. அவங்க ஏதோ சொல்லணுமாம்..”
“எவங்க..?”
வாசவி திரும்பிப் பார்த்தாள்.. சந்தோஷ்.. ராமகிருஷ்ணனையும்.. ஜானகியையும் சுட்டிக் காட்டினான்.
“யாரு அவங்க..?”
“எனக்குத் தெரியாது.. அவங்கதான் என்னிடம் உங்களைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னாங்க.. வருகிறாயா..?”
“எனக்கு அவங்களைத் தெரியாதே..”
“ஆனால்.. அவங்களுக்கு உன்னைத் தெரிந்திருக் கிறதே..”
‘யாராக இருக்கும்..’ என்ற யோசனையோடு வாசவி மேடையை விட்டு இறங்கி.. அவர்களுக்கு அருகே சென்றாள்.
“வாம்மா.. இப்படி உட்காரு..” என்றாள் ஜானகி.. மிகவும் அன்பாகப் பார்க்கும் இந்தப் பெண்மணி யார்.. என்ற குழப்பத்துடன் அவளருகில் அமர்ந்தாள் வாசவி..
“உன் பெயர்தான் வாசவியாம்மா..?”
“ஆமாம்..”
“என்ன படிக்கிறாய்..?”
ஜானகி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வாசவி வாய் திறக்குமுன்.. முந்திக் கொண்டு சந்தோஷ் பதிலளித்தான்..
“பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.. மூன்றாம் வருடம்.”
வாசவி சந்தோஷை முறைக்க.. ஜானகி அவன் தோளில் செல்லமாக அடித்தாள்..
“படவா.. கேள்வியை அவளிடம்தான் கேட்டேன்.. உன்னிடம் இல்லை.. நீ வாயை மூடிக் கொண்டிரு..”
“இல்லைம்மா.. ஒரு உதவிதான்..”
“போதும்.. நீ உதவி செய்தது.. தப்பாக எடுத்துக் கொள்ளாதேம்மா.. என் மகன் கொஞ்சம் விளையாட்டுத் தனமாய்ப் பேசுவான்..”
‘என்னது.. மகனா..? இவர்கள் சந்தோஷின் பேரண்ட்ஸா..?’
வாசவி கண்களை அகல விரித்து சந்தோஷைப் பார்க்க.. அவன் மெலிதாகக் கண்சிமிட்டி.. தன் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டினான்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.