Chapter 27
மெலிதான இரவு நேரத்தின் இதமான பூங்காற்று மேனி வருடிச் செல்ல.. மனதிற்குள் இதமாக உணர்ந்தாள் வாசவி.. அவளுக்குப் பழக்கமில்லாத பெர்ப்யூமின் நறுமணம் நாசியைத் தொடத் திரும்பிப் பார்த்தாள். சந்தோஷ் அவளருகில் வந்தான்..
வாசவி அவனையே பார்த்தாள்.. அவளது நெற்றியில் சிந்தனை ரேகைகள் ஓடின.. அவள் தீவிரமாய் எதையோ யோசிப்பதை யூகித்துக் கொண்ட சந்தோஷ்.. அவளருகில் வந்து நின்றான்..
“என்ன விசயம் வாசவி..”
“ஏன்.. என்னையே பாலோ பண்ணுகிறீங்க..?”
நேரிடையான கேள்வி.. நெற்றியிலடித்தது போன்ற கேள்வி.. நேருக்கு நேர்.. விழி சந்திக்க.. நிமிர்ந்து நின்று கேள்வி கேட்டவளை.. ஊன்றிப் பார்த்தான் சந்தோஷ்..
அவனுக்கு வாசவியின் இந்த வெளிப்படையான அணுகு முறை பிடித்திருந்தது..
“ஏன்னா… எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது..”
அவனும் வெளிப்படையாய்ப் பதில் சொல்லி விட்டான்.. வாசவியின் முகம்.. பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டியது.. பின் நிதானமானது..
“பிடித்திருக்கிறது.. என்பதற்குப் பெயர் என்ன..?”
“இப்போதைக்குப் பிடித்திருக்கிறது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்..”
“ம்ம்.. அது ஆண் பிள்ளைத் திமிரா..? இல்லை, பணக்காரத் திமிரா..?”
அவள் அலட்சியமாக வினவினாள்.. அவள் முகத்தில் ஒரு இறுக்கம் தென்பட்டது..
“ஆண் பிள்ளைத் திமிருக்கு.. உன் பெண் பிள்ளைத் திமிர் ஒன்றும் குறைந்ததில்லையே.. அத்தோடு.. அது என்ன பணக்காரத் திமிரான்னு கேட்கிற..? நீயென்ன ஏழையா..?”
“இல்லைதான்.. ஆனால் உங்கள் அளவுக்குப் பணக்காரியும் கிடையாது..”
“அதனால்.. என் பணத்திமிரை உன்னிடம் காட்டு கிறேன்னு நினைத்தாயா..? இதோ பார்.. என் ஆண் பிள்ளைத் திமிரை வேண்டுமானால் உன்னிடம் காட்டு வேன்.. ஆனால் பணக்காரத் திமிரை ஒரு போதும் காட்ட மாட்டேன்..”
வாசவி திரும்பி உள்ளே போக முயற்சித்தாள்.. சந்தோஷ் அவளது கரம் பற்றித் தடுத்தான்..
“எங்கே போகிறாய்..?”
“நிச்சயதார்த்தம் இந்நேரம் முடிந்திருக்கும்.. அம்மா தேடுவாங்க..”
“போகலாம்.. பொறு..”
“எதற்காக இருக்கச் சொல்கிறீங்க..”
“கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிரு..”
“நமக்குள்ளே பேச என்ன இருக்கிறது..?”
“எவ்வளவோ இருக்கிறது..”
“உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லுங்கள், பார்ப்போம்..”
“அதென்ன கஞ்சத்தனமாய் ஒன்றுன்னு சொல் கிற..? தொண்ணூற்று ஐந்து இருக்கிறதே..”
வாசவியின் முகம் குப்பென்று சிவந்து விட்டது..
‘என்னடா.. கொஞ்ச நேரம் கண்சிமிட்டாமல் நல்ல பிள்ளை போல நடந்து கொள்கிறானேன்னு பார்த்தால்.. இவனுடைய புத்தியைக் காட்டுகிறானே..’
“நீங்கள் அதை மறக்கவே மாட்டீங்களா..”
“ஏன் மறக்க வேண்டும்..?” என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருந்த போதே..
“மறக்குமோ.. மாமன் எண்ணம்..” என்று மண்டபத்தில் ஒலி பரப்பிக் கொண்டிருந்த பாடல் பாடியது.
“பார்த்தாயா.. மாமன் மனசைப் பத்தி பாட்டே சொல்லி விட்டது..” சந்தோஷ் சிரித்தான்..
“யார்.. அந்த மாமன்..?”
“ஏன், நான்தான் உனக்கு மாமன்.. வேண்டுமானால் உன் அம்மாவிடம் போய்க் கேட்டு விட்டு வரலாமா..?”
“வேண்டாம் சாமி.. நீங்கள் எனக்கு முறை மாமன் தான்.. ஒப்புக் கொள்கிறேன்.. இப்ப ஆளை விடுங்க..”
வாசவி அவனது கரத்திலிருந்து.. தன் கரத்தை உருவிக் கொள்ள முயன்றாள்.. அவனது பிடி இறுகி விட மறுத்தது..
“இந்தத் தொட்டுப் பேசும் வேலை யெல்லாம் என்னிடம் வேண்டாம்..”
“ஏன்..? சும்மா கையைத்தானே தொட்டேன்..”
அவர்கள் வாக்கு வாதம் பண்ணிக் கொண்டிருந்த போதே.. ஒலி பெருக்கியில் வேறு பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது..
“மாமா.. மாமா.. மாமா..
சிட்டுப் போலே பெண்ணிருந்தால்..
வட்டமிடும் கண்ணிருந்தால்..
கிட்டக்கிட்ட ஓடி வந்து தொடலாமா..?
தாலிகட்டு முன்னே.. கைகள் மேலே படலாமா..?
மாமா.. மாமா.. மாமா..”
இப்போது வாசவியின் முகத்தில் பதட்டம் விலகிக் குறும்பு வந்தது.. இதழ்களில் மெல்லிய சிரிப்பு உதித்தது.. தன் கையைப் பிடித்திருந்த அவனது கையைக் குறிப்பாகப் பார்த்துவிட்டு.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு முகம் திருப்பிக் கொள்ள.. சந்தோஷின் கண்கள் ஒளிபெற்று மின்னின..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.