Chapter 30
“ஒன்றைத் தெரிந்து கொள் ஆஷா.. நான் என்றைக்குமே என் பண வசதியை உயர்த்திச் சொல்லிய தில்லை..”
“ஆனால்… நீ வசதியில் குறைவானவன்னும் சொன்னதேயில்லையே..”
“ஷட் அப் ஆஷா.. எனக்குன்னு பொள்ளாச்சியில் சொந்தமாய் வீடு இருக்கிறது.. மெஸ் தொழில் இருக்கிறது. வெளிநாட்டில் படித்த படிப்பு இருக்கிறது.. கிராமத்தில் வீடு.. வயல் இருக்கின்றது..”
“எனக்கு இவை போதாதே..”
“போதும்ன்னு நீ சொன்னாலும்.. நீ எனக்கு இனி வேண்டாம் ஆஷா.. நான் உன்னிடம் காதல் சொன்ன தில்லை.. உன் காதலை ஏற்றுக் கொண்டேன்.. அவ்வளவுதான்..”
அவனுடைய வார்த்தைகள் ஆஷாவைப் பலமாகத் தாக்கின.. பதிலுக்குச் சந்தோஷைக் காயப்படுத்தி விடும் வேகத்துடன் அவள் பேசினாள்..
“சொந்தம்ன்னு சொல்லிக் கொள்ள இந்த ஓட்டைக் கட்டடத்தில் நடக்கும் இட்லிக் கடையைத் தவிர வேறு எதுவும் இல்லாத உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது.. ஹைதராபாத்தில் கொடி கட்டிப் பறக்கும் என் அப்பாவின் செல்லப் பெண்ணான எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்..? உன் லெவல் இதுதான்னு எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் உன்னிடம் காதல் சொல்லியிருக்க மாட்டேன்.. அதை முதலில் நீ தெரிந்து கொள்..”
“ஒருவனுடைய லெவலைப் பணத்தை வைத்துக் கணிக்கும் உனக்கு எங்கே மனிதரின் மதிப்புத் தெரியப் போகிறது..? ஒருவருடைய பண வசதியைப் பார்த்து வரும் உணர்விற்குப் பெயர் காதல் இல்லை.. அதன் பெயரே வேறு..”
ஆஷாவின் முகம் சிவந்து போனது.. சந்தோஷின் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் அவளைப் புண் படுத்தியது..
“இதெல்லாம் சம்பாதிக்க முடியாத கையாலா காதவர்கள் பேசும் பேச்சு.. சந்தோஷ்.. பணமில்லாவிட்டால் இந்த உலகத்தில் யாரும்.. யாரையும் தேடிவர மாட்டார்கள்.. குட் பை..”
இன்றைக்கு ஒருத்தி அவனைத் தேடி வந்திருக் கிறாள்.. சும்மாவும் இல்லை.. உன்னிடம் பணம் இருப்பது எனக்குக் குறையென்று சொல்லிக் கொண்டு வந்திருக் கிறாள்..
சந்தோஷிற்குத் தன் வாழ்வில் சந்தித்த அந்த இரு பெண்களின் குணாதிசயத்தை நினைத்து வியப்பு மேலிட்டது..
அதிகப் பணம் இல்லாத உன் மேல் எனக்குக் காதல் வராது என்று சொல்லி விலகிப் போனாள் ஆஷா..
இன்றோ.. உன் அதிகப் பணம்.. உன்னிடம் காதலைச் சொல்ல எனக்குத் தடை போடுகிறது என்று உருகி நிற்கிறாள் வாசவி..
காகிதப் பூவுக்கும்.. மல்லிகை மணத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தன் வாழ்வில் நிதர்சனமாகக்கண்டான் சந்தோஷ்..
சற்று முன் வாசவி தொட்டுச் சென்ற கரத்தில் சிறு முத்தம் பதித்தவன்.. மண்டபத்திற்குள் சென்றான்..
“எங்கே போய் விட்டிங்க..?” என்று எதிரே வந்தான் பிரசன்னா..
“சும்மா.. வாசலில் காற்றாட நின்று கொண்டிருந் தேன்.. என்ன விசயம்..?” என்று கேட்டான் சந்தோஷ்..
“சாப்பிட வாங்க.. நீங்கள் சாப்பிட்டு விட்டால்.. உங்களுக்கு ஹோட்டல் ரூமைக் காட்டிவிட்டு வந்து விடுவேன்..”
“நல்லாச் சொன்னீங்க போங்க.. நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை.. உங்களை நாங்கள் கவனிக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு.. நீங்க என்னை உபசரித்துக் கொண்டிருக்கீங்களே..”
“கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கிறது.. இது எங்கள் ஊர்.. நீங்கள் எங்கள் விருந்தாளி.. உங்களை நாங்கள்தானே கவனிக்க வேண்டும்..?”
“நீங்க சிரமப்பட்டுக்க வேண்டாம் மாப்பிள்ளை.. ரூம் சாவிகளைக் கொடுங்கள்.. எந்த ஹோட்டல்ன்னு சொல்லுங்கள்.. நான் அப்பா அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு போய்க் கொள்வேன்..”
சந்தோஷிடம் பிரசன்னா இரண்டு சாவிகளைக் கொடுத்தான்.. “மாமாவும்.. அத்தையும் சாப்பிட்டு விட்டாங்க..”
“இதோ.. நான் சாப்பிடப் போகிறேன்..”
சந்தோஷ்.. பந்தி நடந்து கொண்டிருந்த ஹாலுக்குள் நுழைந்தான்.. காளிதாஸ் அவனைக் கவனித்து.. அழைத்துச் சென்று அமர வைத்தார்.. இலை போடப்பட்டு.. உணவு வகைகளைப் பரிமாற ஆரம்பித்தனர்.. அப்போது தான்.. எதிர் வரிசையில் வாசவி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப் பதைக் கவனித்தான் சந்தோஷ்.. அவள் அவனைக் கவனிக்காமல்.. பக்கத்தில் இருந்த பெண்ணிடம் சளசள வென்று பேசிக் கொண்டிருந்தாள்..
‘வாய் ஓயவே ஓயாது..’ சந்தோஷ் புன்னகைத்துக் கொண்டான்.. அவளைப் பார்த்தபடி இனிப்பை அவன் வாயில் போட்டுக் கொண்ட போது.. வாசவி அவனைப் பார்த்து விட்டாள்..
அவளது விழிகளில் மின்னல் வெட்டிய அதே சமயம்.. சந்தோஷ் விழி சிமிட்டி விட்டு.. ஆறு விரல் களைக் காண்பித்தான்.. அவள் அவசரமாய்த் தலையைக் குனிந்து கொண்டாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.