Chapter 01
ஆசிரியர் கடிதம்…
மனம் விட்டுப் பேசலாமா..?
என் பிரியத்துக்குரிய வாசக.. வாசகிகளே..!
தேவயானியைத் தெரியுமாப்பா..?
நம்ம நடிகை தேவயானியில்லைங்க.. புராணத்திலே வருகிற தேவயானியைச் சொல்றேன்..
இந்த தேவயானி அசுரகுரு சுக்ராச்சாரியாரோட செல்ல மகள்..! நவகிரகங்களில் ஒரு கிரகமாக வரும் பேரு பெற்ற சுக்கிரன் இவர்தான்.. வெள்ளிக் கிழமையின் அதிபதியும் சுக்கிரன்தான்.. வியாழனான குருபகவான் தேவர்களின் குரு.. பிரஹஸ்பதி..!
இப்பேற்பட்ட சுக்கிராச்சாரியாரைக் குருவாக கொண்ட காரணத்தினால் தான் அசுரர்கள் தேவர்களுடன் மோதி ‘வந்து பார் வட்டப்பாறைக்கு..’ என்று சண்டைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
அசுரர்களுக்கு அசுரகுருவான சுக்ராச்சாரியாரின் சொல்தான் வேதம்.. சுக்ராச்சாரியாருக்கோ அவரது மகளான தேவயானியின் சொல்தான் வேதம்..!
மகளுக்காக எதையும் செய்யும் தந்தை பாசம் கொண்டவர் சுக்ராச்சாரியார்.. மகள்மீது மட்டற்ற பாசம் கொண்டவர்..
தேவகுருவான பிரஹஸ்பதியின் மகன் கசன்..! தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான சண்டையில் அசுரர்களின் கை ஓங்கியிருந்தது.. அதற்கான காரணத்தை தேவர்கள் ஆராய்ந்தார்கள்.. இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரத்தை சுக்ராச்சாரியார் பிரயோகிக்கும் காரணத்தினால் அசுரர்கள் மறுபடியும் உயிர்த்தெழுத்து மஹாபலத்துடன் சண்டையிட வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள்.. அந்த மந்திரத்தைக் கற்றுவர சுக்ராச்சாரியாரிடம் தேவகுருவின் மகனான கசன் அனுப்பப்பட்டான்.
சுக்ராச்சாரியார் கசனை சீடனாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்.. தேவயானியோ கசனிடம் மனதைப் பறி கொடுத்து அவனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.. மகளின் வற்புறுத்தலுக்காக கசனை சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார்.. அசுரர்கள் அதை விரும்பவில்லை.. கசனைக் கொல்ல அவர்கள் முடிவு செய்து கொன்று விட்டார்கள்.
கசனைக் காணாமல் தேவயானி சுக்ராச்சாரியாரிடம் அழுது புலம்பினாள்.. ஞானதிருஷ்டியில் நடந்ததை அறிந்த சுக்ராச்சாரியார் சஞ்சீவி மந்திரம் சொல்லி கசனை உயிர்ப்பித்து விட்டார்..
அசுரர்கள் அப்படியா என்று ஒதுங்கிப்போய் விடுவார்களா என்ன..? கசனைக் சாம்பலாக்கி சுக்ராச்சாரியார் அருந்தும் பாலில் கலந்து கொடுத்து விட்டார்கள்.. கசன் சுக்ராச்சாரியாரின் வயிற்றில் சாம்பலாக மிதந்தான்.
‘இப்ப என்ன செய்யுவீக..?’ என்ற ரீதியில் அசுரர்கள் கும்மாளம் போட தேவயானி கதறியழுதாள்.. சுக்ராச்சாரியார் வேறு வழியில்லாமல் வயிற்றிலிருந்த கசனுக்கு சஞ்சீவி மந்திரத்தை சொல்லிக் கொடுத்து விட்டு அவனை உயிர்ப்பித்தார்.. அவன் சுக்ராச்சாரியாரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியில் வந்து சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி அவரை உயிர்ப்பித்தான்.
இதுவரைக்கும் சரிதான்.. வந்த வேலை முடிந்தது என்று அவன் சுக்ராச்சாரியாருக்கும் தேவயானிக்கும் டாட்டா சொல்லிவிட்டு தேவலோகம் கிளம்பியதுதான் ஹை லைட்.. கூடவே கிளம்பப் போன தேவயானியைப் பார்த்து..
“சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்து நான் வெளிவந்ததால் உனக்குச் சகோதரன் முறையாகிறேன்.. நீ என் சகோதரி..” என்று சொல்லி மறுத்து விட்டதுதான் ‘ஹை’க்கும் ‘ஹைலைட்’
கசன் கொடுத்த ஷாக்கிலிருந்து மீள தேவயானிக்கு வெகு காலம் தேவைப்பட்டது.. ஒரு வழியாக கசனை மறந்து அவள் அசுரகுல இளவரசி சங்கமிஷ்டையோடு ஆற்றில் நீராடப் போனாள்.. நீராடி விட்டு வரும்போது இருவரின் துணிகளும் காற்றில் ஒன்றுபட்டுக் கிடந்தன.. அதில் வந்த வாக்குவாதத்தில் சங்கமிஷ்டை தேவயானியைத் திட்டி கிணற்றில் தள்ளி விட்டுப் போய் விட்டாள்.
கிணற்றுக்குள் இருந்த தேவயானிக்குத் துக்கமென்றால் துக்கம் அப்படியொரு துக்கம்.. அசுரகுருவின் மகளாக இருந்தும் அவளை அரச குலத்தில் பிறக்கவில்லையென்று இளவரசி அவமதித்து விட்டாளே என்று கண்ணீர் விட்டாள்.. அந்த வழியாக வந்த அரசன் ‘யயாதி’ கிணற்றில் அழுகுரல் கேட்பதைக் கண்டு எட்டிப் பார்த்து விட்டு தேவயானிக்குக் கை கொடுத்து அவளை வெளியே தூக்கி விட்டான்.
அவ்வளவுதான்.. கை கொடுத்தவனையே கை பிடிப்பேனென்று அடம் பிடித்தாள் தேவயானி.. அரசர் குலத்தைச் சேர்ந்தவன் பிராம்மணப் பெண்ணை மணக்கக் கூடாது என்று யயாதி தேவயானியின் வேண்டுகோளை மறுத்து விட்டுப் போய் விட்டான்.
ஆத்திரமும் கண்ணீருமாக தேவயானி வீட்டுக்குப் போகாமல் கிணற்றடியிலேயே உட்கார்ந்து விட்டாள்.. மகளைக் காணாமல் தேடி வந்த சுக்ராச்சாரியார் கொதித்து விட்டார்.. மகளுடன் அவர் தேசம் விட்டு நீங்க யத்தனிக்க.. அசுரகுலம் அவர் பாதம் பணிந்து வேண்டி நின்றது.
தேவயானியின் விருப்பப்படி யயாதி அவளைத் திருமணம் செய்து கெண்டான்.. இளவரசி சங்கமிஷ்டை தேவயானியின் பணிப்பெண்ணாக உடன் சென்றாள்.
இத்துடன் சுபம் என்றிருந்தால்தான் நன்றாக இருந்திருக்குமே.. அரச குலத்தின் மமதை அசுரகுல குருவின் மகளை நிம்மதியாக வாழ விடவில்லை.
அரசன் யயாதி.. பணிப்பெண்ணாக வந்திருந்த இளவரசி சங்கமிஷ்டையை காந்தர்வ விவாஹம் புரிந்து வாழ ஆரம்பித்தான்.. காலம் கடந்து அதைத் தெரிந்து கொண்ட தேவயானி வெகுண்டு தகப்பனாரிடம் அடைக்கலம் புகுந்தாள்.. இளமைத் திமிரில்தான் யயாதி இத்தகைய துரோகத்தை மனைவிக்கு இழைத்தான் என்பதால் அவனது இளமை போய் முதுமை கிடைக்கட்டும் என சுக்கிராச்சாரியார் சாபம் வழங்கி விட்டார்.. அவனது வயோதிகத்தை சங்கமிஷ்டையின் பிள்ளைகளில் ஒருவன் தலையில் சுமத்திய யயாதி மனம் திருந்தி மகளிடமிருந்த வயோதிகத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதெல்லாம் வேறு கதை..
நாம் பேசுவது தேவயானியின் விதியைப் பற்றியது. அவளுக்கு என்ன குறை..? அசுரகுல குரு சுக்கராச்சாரியாரின் அருமைப் புதல்வி.. அழகில் சிறந்தவள்.. சுற்றவள்.. அருங்குணங்களைப் பெற்றவள்..
இருந்தும் அவளை உயிருக்குயிராய் காதலிக்கும் காதலன் அவளுக்குக் கிட்டவேயில்லையே.. ஏன்..? கசன் அவளது காதலைப் பயன்படுத்திக் கொண்டு சுக்ராச்சாரியாரின் சீடனாகி சஞ்சீவி மந்திரத்தைக் கற்று கொண்டு அவளை சகோதரியாக்கி நிராகரித்துச் சென்றான்.
சுக்கராச்சாரியாரைக் குருவாகப் பெற்ற ஒரே காரணத்தினால் தேவர்களுடன் சரிக்குச் சரியாக மல்லுக்கு நின்ற அசுர அரசகுலம் தேவயானியை ‘ அரச குலமல்ல’ என்று அவமதித்தது.. அரசன் யயாதி தேவயானிக்கு உண்மையாக இருக்காமல் அரச குலத்தைச் சேர்ந்தவள் என்பதினால் தேவயானியின் பணிப்பெண்ணாக இருந்த இளவரசி சங்கமிஷ்டையை காந்தர்வ விவாஹம் செய்தான்..
பாவம்.. தேவயானி..!
– நட்புடன் –
முத்துலட்சுமி ராகவன்
கவிதை சொல்லவா..?
காத்திருப்பு…
நேற்றோடு நான் விதைத்து
நினைவில் பூத்த காதல் மலர்..
காற்றோடு போனதெங்கே..?
காதல் போன பாதையெங்கே..?
உன் நிழழை நான் தேடி..
நாள்களையே தொலைத்து விட்டேன்..
என் மடியில் நீயுறங்கும்..
நாள் வருமா..? காத்திருக்கிறேன்..
– முத்துலட்சுமி ராகவன்
அழகான பூங்காவைப் போல இருந்தது அந்தக் கல்லூரியின் நுழைவாயில்..! பிரம்மாண்டமான கட்டிடத்தை நோக்கிச் சென்ற கல்லூரிச் சாலையின் இருபக்கமும் மலர்ச்சbடிகளும் நிழல் தரும் மரங்களும் அடர்ந்திருக்க, அவற்றின் இடையே ஆங்காங்கே சிமிண்ட் பெஞ்சுகள் அமைக்கப் பட்டிருந்தன.. இளமையின் தலைவாசலை அப்போதுதான் தொட்டிருந்த யௌவன மங்கையரும், இளைஞர்களும் கவலைகள் ஏதுமின்றி சுதந்திரவானில் சிறகடிக்கும் சிட்டுக் குருவிகளைப் போல உல்லாசமும், உற்சாகமுமாக காணப்பட்டார்கள்.
‘விட்டுச் சிறகடிப்பாய்.. அந்த சிட்டுக் குருவியினைப் போலன்னு பாரதியார் இவங்களைப் பார்த்துத்தான் பாடி வைச்சிருக்கார் போல..’
கல்லூரிச் சாலையில் காரை செழுத்திக் கொண்டிருந்த முரளிதரன் நினைத்துக் கொண்டான்.. ஒரு காலத்தில் அவனும் கல்லூரி மாணவன்தான்.. விட்டுச் சிறகடித்தவன்தான்.. அந்த நாள்களின் ஞாபகங்களை நெஞ்சில் சுமப்பவன்தான்.. இந்த நாள்கள்தான் அன்று போல அவனுக்கு இன்பமான நாள்ளாக இருப்பதில்லை..
‘ஆயிரம் இருந்தும்.. வசதிகள் இருந்தும்..?’
அவன் மனம் பெருமூச்சு விட்டது.. நிம்மதியில்லாத மனதுடன் அவன் வாழும் வரத்தை எந்த தெய்வம் கொடுத்திருக்கக் கூடுமென்று யோசித்தபடி அவன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்..
‘காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை..’
அவன் கூறும் வார்த்தைகள்தான் இவை.. லெக்சர் கொடுக்கும் தருணங்களில் அடிக்க இந்த வார்த்தைகளை உபயோகிப்பான்.. இளம் வயதில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான கம்பீரத் தோற்றமுமாக இருப்பவன் வாயிலிருந்து தத்துவங்கள் உதிர்ந்தால் எந்த மாணவமணிதான் ரசிப்பார்கள்..?
எல்லோரும் தலையில் வண்டு குடைவதைப் போன்ற இம்சையை அனுபவித்துக் கொண்டு, அதைப் பற்றிய வாயே திறக்காமல் இன்டர்னல் மார்க்கை நினைவில் நிறுத்தி சித்தரும், புத்தருமாக மாறிப் போவார்கள்.. அவர்களில் ஒருத்தி மட்டும் அவன் உதிர்க்கும் அத்தனை வார்த்தைகளையும் போலித்தனமற்ற உண்மையான ஆர்வத்துடன் ரசித்துக் கேட்பாள் மற்றவர்கள் ‘விதி’ யென்று தலையில் அடித்துக் கொண்டால் அவள் வரமென்று கொண்டாடுவாள்..
அந்த விசித்திரமான பிரகிருதியின் பெயர் வர்ஷா..! வயது இருபது.. உயரம் ஐந்தடி எட்டு அங்குலம்.. எழுமிச்சை பழத்தின் நிறம்.. ஒல்லியான கொடி போன்ற உடல்.. செதுக்கி வைத்த சிலை போன்ற முகம்.. பெரிய கண்கள்.. தீர்க்கமான நாசியென்று அவளை ஒர்நாள் முழுவதும் வர்ணித்துக் கொண்டே இருக்கலாம்.. நாள்தான் முடியும்.. வர்ணனை முடியாது..
அப்பேற்பட்ட வர்ஷாவை அந்தக் கல்லூரியில் படித்த அனைத்து இளைஞர்களும், சீனியர், ஜீனியர் பேதமின்றி காதலித்து ரோஜாவை நீட்ட.. அவள் அதை வாங்கி கசக்கி எறிந்துவிட்டு முரளிதரனிடம் ரோஜாவை நீட்ட அலையாய் அலைந்தாள்.. அவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்க மறுத்தான்..
அதைப் பற்றியெல்லாம் வர்ஷா கண்டு கொள்வதாகவே இல்லை.. தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் இல்லை..
“எங்கே ஓடிடப் போறார்..? இப்பத்தானே தேர்ட் இயர் முடிச்சிருக்கேன்..? இன்னும் முழுசா ஒரு வருசம் இருக்கு.. அதுக்குள்ளே மடக்கிப் போட்டிற மாட்டேன்..? என்னைக்கிருந்தாலும் அவரோட மேரேஜ் இந்த வர்ஷா கூடத்தான்..” என்று அழுத்தம் திருத்தமாக சூளுரைப்பாள்..
“இவ தேறாத கேஸ்டி.. அந்த மனுசன் ஒரு மணி நேரம் பாடம் எடுத்தாலே மண்டை கிர்ருங்குது.. இவ வாழ்நாள் முழுசும் அவர்கூட வாழப் போறேன்னு சொல்றா.. லூஸாடி இவ..?”
“இதில சந்தேகம் வேறயா.. கன்பர்மா இவ லூஸ்தாண்டி.. சும்மா கிளாஸில இருக்கிற கேர்ள்ஸை அந்த மனுசன் லுக் விடறப்பவே கை காலெல்லாம் கிடுகிடுன்னு நடுங்குது.. என்னவோ எதிரிக்காரியைப் பார்க்கிறதைப் போல வெட்டவா, குத்தவான்னு பார்த்து வைக்கிறாரு.. இதில அவருக்கு இவ பெண்டாட்டியானா விளங்கிரும்..”
“உனக்கென்ன தலைவிதியா வர்ஷா..? இந்த காலேஜோட பியூட்டி குவின் நீ..! அத்தனை பாய்ஸீம் ஒன்னு சொன்னதைப் போல உனக்கு லவ் ரிக்வஸ்ட் கொடுக்கிறானுக.. அதில உனக்குப் பொருத்தமானவன் எவன்னு பார்த்து அக்செப் பண்ணிட்டுப் போவியா.. அதை விட்டுட்டு முகத்தில முள்ளைக் கட்டிக்கிட்டு இருக்கிற லெக்சரர் மேலே இண்ட்ரெஸ்ட் காட்டித் தொலைக்கிற..”
“வெறும் இண்ட்ரெஸ்ட்டோட நின்னு தொலைச்சாலும் பரவாயில்லையே.. வாழ்ந்தால் அவரோடதான் வாழ்வேன்னு ஒற்றைக்காலில இல்ல நின்னு வைக்கிறா..”
“அவரை மேரேஜ் பண்ணிக்கிட்டன்னு வை.. காலம், காலம்ன்னு உனக்கு கிளாஸ் எடுத்தே ஒரு வழியாக்கிருவார்.. தேவையாடி உனக்கு..”
ஊஹீம்.. தோழிகள் என்னதான் புளி போட்டுத் தேய்த்து விளக்கினாலும் அவர்கள் சொல்லும் எந்தச் சொல்லும் வர்ஷாவின் செவிகளில் ஏறவேயில்லை.. முரளிதரன்தான் அவளுக்குத் தேவையென்பதில் தீர்மானமாக இருந்தாள்.. அவள் பேசும் அனைத்துப் பேச்சுக்களும் அவனைச் சார்ந்ததாகவே இருந்து தொலைத்தன..
“உன் உயரம் என்னடி..?” என்று கேட்டால்..
“முரளியோட காதைத் தொடற அளவுக்கு உயரம்தாண்டி..” என்பாள்..
“அந்த மனுசன் காதைத் தொட்டு உனக்கென்ன ஆகப் போகுது..? காதைத் திருக பிளான் பண்றியா..?” என்று அவளுடைய தோழிகள் தலையில் அடித்துக் கொள்வார்கள்..
முரளிதரனுக்கு மெல்லிய வர்ணங்கள்தான் பிடிக்கும் என்று காற்றுவாக்கில் கேள்விப்பட்டதிலிருந்து வர்ஷாவின் உடைகள் அனைத்தும் மெல்லிய வர்ணங்களாக மாறிப் போயின..
“உன் நிறத்துக்கு அடர்த்தியான கலர்தான் எடுப்பா இருக்கும்டி..” என்று தோழிகள் எடுத்துச் சொன்னால்..
“முரளிக்கு அடர்த்தியான கலர்ஸ் பிடிக்காதே..” என்று கவலைப்பட்டுத் தோழிகளை தலையில் அடித்துக் கொள்ள வைப்பாள்..
“பீட்ஸா சாப்பிடப் போகலாமாடி..” என்று அவளைக் கூப்பிட்டால்..
“நோ.. நோ.. முரளிக்கு பீட்ஸாவே பிடிக்காதாம்.. உளுந்த வடை, பருப்பு வடை, ரவா இட்லின்னு வெரைட்டியா சாப்பிடுவாராம்.. ஸோ.. நாம சதானந்த பவனுக்குப் போகலாம்..” என்பாள்..
“ஏண்டி.. அவர் வயிற்றுக்கு அவர் சாப்பிடறாரு.. உன் வயித்துக்குப் பிடித்ததை நீ கொட்டிக்க வேண்டியதுதானே..?”
தலையில் அடித்தால் தீராது என்பதினால் தலையைப் பிடித்துக் கொண்டு தலை வேதனையுடன் தோழிகள் கேட்பார்கள்..
“பிரண்டாடி நீ..?” கேள்வி கேட்பவர்களை கொலை வெறியுடன் பார்ப்பாள் வர்ஷா..
“அவருக்குப் பிடிக்காததை நான் சாப்பிடறதா..? நெவர்..”
இப்படிச் சொல்பவளை எப்படித் திருத்துவது என்று தெரியாமல் திருதிருத்த தோழியர் கூட்டம், வர்ஷாவுக்குத் தெரியாமல் பல வட்டமேஜை மாநாடுகளைப் போட்டு கூட்டு முடிவொன்றை எடுத்தது..
“இவ என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மம்டி.. கல்லில இருந்து நார் உறிக்கிற வேலையை விட்டுட்டு அவளை அவவழியில விட்டிரலாம்.. அவ பாடு.. அந்த முரளிதரன் பாடு.. நமக்கென்ன வந்தது..? அட்வைஸ் பண்ணி அவளுக்கு எனிமியா ஆகிப் போறதைவிட.. கண்டுக்காம விட்டு பிரண்டாவே இருப்போம்..”
இப்படியாகத் தோழிகளின் வாய்களையே இறுக்கித் தாழ்ப்பாழ் போட வைத்த சரித்திர பிரசித்தி பெற்ற வர்ஷா, காரிலிருந்து இறங்கிய முரளிதனைக் காதலுடன் பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் கடந்து போனான்.
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.