Chapter 03
வாணலியில் எண்ணை காய்ந்து கொண்டிருந்தது.. வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தாள் மாளவிகா.. உளுந்த மாவை பிசைந்து பதம் பார்த்த அபிராமி மகளிடம் திரும்பி..
“வெங்காயத்தை நறுக்கி முடிச்சிட்டியா..?” என்று கேட்டாள்..
“ஆச்சும்மா..”
வெட்டி வைத்திருந்த வெங்காயத்தை நீட்டினாள் மாளவிகா.. அதை வாங்கி உளுந்த மாவில் கலந்து பிசைந்த அபிராமி வடைகளைத் தட்டிப் போட ஆரம்பித்தாள்.. வடை வாசனை
வீடு முழுவதும் வியாபித்தது.. வெங்காயம் எண்ணையில் பொரியும் அந்த வாசனையை முகர்ந்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்த விஸ்வநாதன்..
“ம்ஹா..” என்று வடைவாசனையை முகர்ந்தார்..
“என்னப்பா.. வாசனை பிடிக்கறிங்க..?” சிரித்தாள் மாளவிகா..
“உங்கம்மாவோட கைப்பக்குவமே தனிம்மா..” சிலாகித்தார் விஸ்வநாதன்.
நவின் வாசலுக்கு விளையாட ஓடிவிட்டதால் ஹாலில் தனித்து அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்தான கிருஷ்ணன்..
“நீங்க கொடுத்து வைத்தவர் மாமா..” என்று மனைவியை ஜாடையாகப் பார்த்தபடி கூறினான்.
மாளவிகாவின் முகத்தில் தணலின் சிகப்பு வந்தது.. அவள் கணவனை முறைத்தாள்.. அவளுக்கும் சமையலுக்கும் ஆகாதுதான்.. அபிராமியின் கைப்பக்குவத்தின் பக்கத்தில் கூட அவளால் நிற்க முடியாதுதான்.. அதற்காக அவளது பிறந்த வீட்டிற்கே வந்து சந்தானகிருஷ்ணன் அதைச் சொல்லிக் காட்டுவதா..?
“மாதாமாதம் ஆயிரக்கணக்கில என் சம்பளம் பேங்கில கிரெடிட் ஆகுதே.. அதை நீங்க கொடுத்து வைக்கலியா..?” என்று கணவனைப் பார்த்து உஷ்ணமாகக் கேட்டாள்..
சந்தானகிருஷ்ணன் பசை போட்டு ஒட்டியதைப் போல வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான்.. மாளவிகா பேங்க் மேனேஜர்.. சந்தானகிருஷ்ணன் கஸ்டம்ஸ் ஆபிசர்.. இருந்தும் அவனால் அந்தத் தோரணையைக் காட்ட முடியவில்லையே என்ற வருத்தம் அவனது தொண்டைக்குழி வரை நிரம்பியிருந்தது.. கஸ்டம்ஸ் ஆபிசர் என்றால் மாமனார் வீட்டில் கெத்துக் காண்பிக்க வேண்டாமா..?
எங்கே..? அதற்கு விடாமல் நீ மட்டுமா ஆபிசர்..? நானும் உன்னைப் போல ஆபிசர் கேட்டகிரிதான் என்று பேங்க் மேனேஜர் மனைவி கெத்துக் காண்பிக்கிறாளே..
“நவின் எங்கே..?” நாசுக்காக பேச்சை மாற்றினார் விஸ்வநாதன்..
“இவர் கூடத்தான் இருந்தான்ப்பா.. ஏங்க.. என்னவோ கஸ்டம்ஸ் ஆபிசர்ன்னு சொல்லிக்கறிங்க..”
“பொய்யாடி சொன்னேன்..?”
“மெய்யாத்தான் சொல்றீங்க.. யாரு இல்லேன்னு சொன்னா..?”
“இல்லேன்னும் சொல்லிருவியா..?”
“அடடா..! நாலு வயசுப் பையனைப் பக்கத்தில பிடிச்சு வைச்சுக்க முடியலை.. நீங்கள்ளாம் கடத்தல்காரனைப் பிடிச்சு.. ம்ஹீம்.. நவின்..நவின்.. எங்கேடா இருக்க..?”
சமையலில் அவள் ஜீரோ என்பதைச் சுட்டிக் காட்டி விட்ட குற்றத்திற்காக கணவனை மறைமுகமாக வாரு, வாரு என வாரி விட்டு மகனை அழைத்தாள் மாளவிகா..
“ம்மா..” வாசல் பக்கமிருந்து குரல் கேட்டது.
“காம்பவுண்டு கேட் பூட்டியிருக்கு.. அவன் எங்கே போயிரப் போறான்..? தோட்டத்தில விளையாடிக்கிட்டு இருப்பான்.. துருதுருன்னு இருக்கிற பிள்ளையை ஒரு இடத்தில பிடிச்சு வைக்க முடியுமாடி..? பேச வந்திட்டா.. அவன் ஆம்பளை சிங்கம்டி..”
மகனையாவது மாளவிகா சிங்கமென ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் பேசிய சந்தான கிருஷ்ணனின் நம்பிக்கையைத் தகர்த்தாள் அவள்..
“பொம்பளை சிங்கங்களும் நாலு வயசில துருதுருன்னுதான் இருக்கும்… என்ன ஒன்னு… வளர்ந்தவுடன் அதுகளைக் கல்யாணம்ங்கிற பெயரில கூண்டில அடைச்சு ஹஸ்பெண்ட்ங்கிற ரிங் மாஸ்டர் கண்ட்ரோலில விட்டுத் தொலைச்சுடறாங்க..”
அடுத்த அம்பை எய்துவிட்டு மகனைத் தேடித் தோட்டத்துக்குப் போய் விட்டாள் மாளவிகா.. எப்படி எய்தாலும் அம்பை அவன் பக்கமே திருப்பி விடுகிறாளே என்ற கவலையில் ஆழ்ந்தான் சந்தான கிருஷ்ணன்..
“விடுங்க மாப்பிள்ளை.. வீட்டுக்கு வீடு வாசல்படி..” என்று மருமகனை சமாதானப் படுத்தினார் விஸ்வநாதன்.
“உங்களுக்கென்ன மாமா.. சாதுவான அத்தை கழுத்தில தாலியைக் கட்டியிருக்கீங்க..” பெருமூச்சு விட்டான் சந்தான கிருஷ்ணன்..
“இவளா சாது..? என்ன மாப்பிள்ளை நீங்க.. இந்த வீட்டுக்கு மருமகனா வந்து ஆறு வருசமாகுது.. இன்னமும் அறியாப் பிள்ளையாவே இருக்கீங்களே..”
தன் பங்குக்கு அவனுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் விஸ்வநாதன்.. பெண்ணைக் கொடுத்து விட்டத் தெனாவெட்டில் இந்த மனுசன் என்னவெல்லாம் பேசுகிறார் பார் என்று கொதித்துப் போனான் சந்தான கிருஷ்ணன்..
‘துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் அது மாப்பிள்ளைங்கிற கெத்தைக் காண்பிக்கும்ங்கிறது அந்தக் காலம்.. இப்பல்லாம் தூசிக்குத் தாலி கட்டினாலும் அது இரும்பு போல ஏறி மிதிக்குது.. மாப்பிள்ளைத் திமிரு மலேயேறிப் போச்சுடா சந்தான கிருஷ்ணா.. இது பெண்டாட்டிக திமிர்காட்டற காலம்..’
அவனுக்கு சண்யாசம் வாங்கும் ஆசை வந்தது.. விளையாடிக் கொண்டிருந்த மகனைத் தூக்கிப் பிடித்து முத்தம் கொடுத்தபடி வீட்டுக்குள் வந்த மாளவிகா அவனை ஒட்டி உரசியபடி உட்கார்ந்தாள்.. அவள் சூடியிருந்த மல்லிகையின் மணம் அவனை மயக்கியது.. ஷாம்பூ வாசனையும், மஞ்சள்பொடியின் வாசனையும் கலந்த நறுமணம் அவள் மேனியில் கமழ்ந்ததில் அவன் கிறங்கிப் போனான்.. துறவறத்தைக் கைவிட்டு இல்லறத்தில் வீழ்ந்தவனாக மனைவியை மையலுடன் பார்த்தான்.. மகனை மடியில் வைத்தபடி அவனுடன் பேசிக் கொண்டிருந்தவளின் மீது அவனுக்கு காதல் வந்தது.. இவள் என் மனைவி.. என் மகனைப் பெற்றெடுத்து என்னைத் தகப்பனாக்கியவள் என்ற கனிவு பிறந்தது.
“ஹைய்யோ.. இவன் பேசறதைப் பார்த்தீங்களா.. அப்படியே உங்க ஜெராக்ஸ்தான்..” மகிழ்ந்து போனாள் மாளவிகா..
“என்ன ஒரு ‘ஐ க்யூ’.. அப்படியே உன் புத்திதாண்டி..” மனைவியைப் புகழ்ந்தான் சந்தானகிருஷ்ணன்..
புயல் மாறி அங்கே தென்றல் வீசியது.. இதுதான் வாழ்க்கை என்பதைப் போல புன்னகை பூத்தார் விஸ்வநாதன்.. வாழ்ந்து பார்த்த அனுபவம் அவரது பார்வையில் தெரிந்தது..
கமகமக்கும் வடைகளும், தொட்டுக் கொள்ள கெட்டிச் சட்னியுமாக டிபன் தட்டுக்களுடன் வந்தாள் அபிராமி.. ஆளுக்கொரு தட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் டிவி பார்த்தபடியே வடைகளை ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்..
“நீயும் உட்காரேன்..” பரிவுடன் அபிராமியிடம் சொன்னார் விஸ்வநாதன்..
“காபி கலக்கனும்..” அபிராமி சமையலறைக்குப் போய் விட்டாள்..
அவள் சந்தானகிருஷ்ணனின் முன்னால் சகஜமாக உட்கார மாட்டாள்.. மருமகனுக்கு அவள் காட்டிய மரியாதையில் சந்தான கிருஷ்ணனின் முகம் மலர்ந்து விட்டது.
அபிராமி காபிக் கப்புகளுடன் வந்து விட்டாள்..
“உட்காருங்க அத்தை.. நீங்களும் எங்க கூடச் சேர்ந்து பேசியபடி காபியைக் குடிக்கலாமே..” வேண்டுதல் போலச் சொன்னான் சந்தான கிருஷ்ணன்..
மருமகனின் வார்த்தையைத் தட்ட முடியாமல் விஸ்வநாதனின் பக்கத்தில் சாய்ந்து உட்காராமல் சோபாவின் நுனியில் தொற்றிக் கொள்வதைப் போல உட்கார்ந்தாள் அபிராமி..
“பாட்டிகிட்டவா நவின்..”
பேரனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டாள்..
“இன்னைக்கு சன்டேதானே.. முரளிதரன் வீட்டில் இல்லையே.. எங்கே போனார்..?” மாமனாரிடம் கேட்டான் சந்தானகிருஷ்ணன்..
விஸ்வநாதனின் முகம் சோர்ந்தது.. அபிராமி பெருமூச்சு விட்டாள்.. முப்பத்திஐந்து வயதாகியும், மகன் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் வருத்தம் அவள் முகத்தில் படர்ந்தது.. அவனைவிட ஐந்து வயது இளையவளான மாளவிகாவிற்குத் திருமணம் ஆகி ஆறு வருடங்களாகி விட்டன.. அவள் நான்கு வயதுக் குழந்தையின் அம்மாவாக நிற்கிறாள்.. அவளுடைய அண்ணன் மட்டும் தனிமரமாக நிற்கிறான்..
“என்னத்தைன்னு சொல்றது..? எப்பவும் போல இப்பவும் லைப்ரரிக்குப் போயிருக்கான்..” விஸ்வநாதன் விட்டத்தை வெறித்தார்..
“என்ஜினியரிங் படிச்சுட்டு சைன்டிஸ்ட் போல பிஹேவ் பண்றாரு.. எம்.ஈ முடிச்சு, எம்.பி.ஏ முடிச்சவரு ஏதாச்சும் ஒரு மல்ட்டி இண்டர்நேசனல் கம்பெனியில நுழைவாருன்னு பார்த்தா.. காலேஜில லெக்சரா நுழைஞ்சிருக்காரு.. அதுவும் பத்தாதுன்னு லைப்ரரியிலேயே குடியிருக்காரு..” கேலியாகச் சொன்னான் சந்தான கிருஷ்ணன்..
மாளவிகா அதை விரும்பவில்லை.. அதென்ன அவளது அண்ணனை அவளது கணவன் ஓட்டிப் பார்க்க முனைவது..?
“ஹலோ.. காலேஜ் லெக்சரா இருந்தாலும் என் அண்ணன் உங்களை விட அதிகமாச் சம்பாதிக்குது.. அந்த நினைப்பு மனசில இருக்கட்டும்..” எகிறினாள்.
“இல்லேன்னு யாருடி சொன்னது.. உன் அண்ணனுக்கு என்னைவிட சம்பளமும் அதிகம்.. வயதும் அதிகம்..”
இந்த முறை குறி பார்த்து அம்பை எய்து விட்டான் சந்தான கிருஷ்ணன்.. அதைத் திருப்பியனுப்ப முடியாமல் மனதில் வலியேற்றாள் மாளவிகா.. உண்மைதான்.. சந்தான கிருஷ்ணன் இருபத்தியெட்டு வயதில் இருபத்தி நான்கு வயதான மாளவிகாவைத் திருமணம் செய்து கொண்டான்.. இப்போது அவனுக்கு முப்பத்தி நான்கு வயதாகிறது.. முரளிதரனுக்கோ முப்பத்தி ஐந்து வயது.
“ஆமாமாம்.. என் அண்ணன் தொண்டுக் கிழவன்தான்.. நீங்க இன்னைக்குப் பிறந்த பப்பாதான்..” விட்டுக் கொடுக்காமல் நொடித்தாள் மாளவிகா..
“விடு மாளு.. கல்யாணம் வேணாம்ன்னு உன் அண்ணன் கோராமை பண்ணினா நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்கதானே.. மாப்பிள்ளை நம்ம காதுபடப் பேசறாரு.. நம்ம காதுக்குக் கேட்காம பேசறவங்க எத்தனை பேரு.. எல்லாம் நம்ம தலைவிதி.. இதை எங்கேன்னு போய் சொல்றது..?”
வேதனையுடன் சொன்னாள் அபிராமி.. வாயை இறுக மூடிக் கொண்டான் சந்தானகிருஷ்ணன்.. இருந்திருந்து அவனது மாமனார் வீட்டில் அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்றதைப் போல மாப்பிள்ளைக்கான மரியாதையை பயபக்தியுடன் கொடுப்பது அபிராமி மட்டும்தான்.. அத்தகைய தெய்வத்தாயை அவன் பகைத்துக் கொள்வதா..?
“கவலைப் படாதீங்க அத்தை.. காலம் இப்படியே போயிராது.. முரளியின் மனசும் மாறும்..”
அவன் தடாலென உத்தம மருமகனாகி மாமியாருக்கு ஆறுதல் சொன்னான்.. விஸ்வநாதனும் மாளவிகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
‘இப்ப என்னத்துக்கு அப்பாவும் மகளும் அவசரக் கூட்டணி போடப் பார்க்கிறாங்க..? இது டேன்ஜராச்சே..’ உஷாரான சந்தான கிருஷ்ணன்..
“அத்தை கவலைப்படறதில தப்பில்லை மாமா.. மகனுக்கு காலாகாலத்தில கல்யாணம் செய்து பார்க்கனும்னு அவங்களுக்கு மட்டும் ஆசையிருக்காதா..?” என்று பல்டி அடித்தான்..
“கண்ணுக்கு அழகான பொண்ணு கிடைக்கனுமே மாப்பிள்ளை..” அபிராமி ஆதங்கப்பட்டாள்..
“அப்படி நான் நினைச்சிருந்தா இந்த ஜென்மத்தில எனக்குக் கல்யாணம் நடந்திருக்குமா அத்தை..?”
ஆறுதல் சொல்வதாக நினைத்துக் கொண்டு வாய் விட்டு மாட்டிக் கொண்ட சந்தான கிருஷ்ணன்..
“என்ன சொன்னீங்க..?” என்று மாளவிகா காளி அவதாரம் எடுத்ததில் மிரண்டு போய் நாக்கைக் கடித்தான்.
‘பேசாம வாயை மூடிக்கிட்டு இருந்திருக்கலாம்.. இப்படி வாயை விட்டு வாங்கிக் கட்டிக்கப் போறேனே..’
“இவரு பெரிய மன்மதன்..”
என்று ஆரம்பித்த மாளவிகா.. அவனது முகத்தோற்றத்தையும் அங்க அமைப்புகளையும் சகட்டு மேனிக்கு விமரிசத்ததோடு நிறுத்தாமல் அவனது குடும்பத்தினரின் அழகையும் சேர்த்து இழுத்து வர்ணித்துக் கிழித்துத் தோரணமாக்கித் தொங்க விட்டாள்.. ‘ஙே’ என்று விழித்துக் கொண்டிருந்த சந்தான கிருஷ்ணனைக் காப்பாற்ற வந்த ரட்சகியாய் வாசலில் காலிங் பெல் அடித்து வைத்தது.
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.