Chapter 13
“என்னைக் காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு..
அன்பே..! அன்பே..!”
உயிரை உருக்கும் விதத்தில் ஸ்வரம் தப்பாமல், பிசிறில்லாத குரலில் பாடிக் கொண்டிருந்தான் முரளிதரன்.. அந்தப் பாடலைக் கேட்கப் பிடிக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள் வர்ஷா.. அவளால் தாள முடியவில்லை.. அது போன்ற அற்புதமான பாடலை அவளைப் பார்த்துப் பாடாமல் பாரதியைப் பார்த்தபடி முரளிதரன் பாடிக் கொண்டிருந்தது அவளது வெறியைக் கிளப்பியது..
“ஹேய்.. உனக்குத் தெரியுமா..? புதுசா வந்திருக்கிற பாரதி மேமும் நம்ப முரளிதரன் சாரும் ஒரே காலேஜில படிச்ச பிரண்ட்ஸாம்.. ரொம்பக் குளோஸாம்..”
பாரதி அந்தக் கல்லூரியில் சேர்ந்த அன்றே விவரம் கசிந்து வர்ஷாவின் செவிகளுக்கு எட்டிவிட்டது.. மூன்றாம் ஆண்டில் படிப்பவளிடம், இறுதியாண்டு வகுப்பில் முரளிதரனும் பாரதியும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட காட்சி வர்ணிக்கப் பட்டது.. அவளால் அதைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.. பொறாமையால் தகிக்கும் மனதை மறைத்தபடி..
“ஸோ வாட்..?” என்று எரிந்து விழுந்தாள்..
“அவங்க காலேஜ் மேட்ஸ்.. லாங் பீரியடுக்கு அப்புறம் இப்பத்தான் பார்த்துக்கிறாங்க.. அந்தப் பாசத்தில பேசியிருப்பாங்க.. இதைப் போய் ஊதிப் பெரிசாக்குவீங்களா..? அவங்க பிரண்ட்ஸ்.. அவ்வளவுதான்..”
அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வர்ஷா முற்பட இல்லையென்பதைப் போல முரளிதரனும், பாரதியும் கல்லூரியின் மரத்தடியில் நின்று மணிக்கணக்கில் பேசினார்கள்.. அதுவும் போதாது என்று கல்ச்சுரல் டேயில் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு நானும் பாடுகிறேன் என்று மேடைக்கு வந்த முரளிதரன் பாரதியைக் காதல் சொட்டும் ஏக்க விழிகளால் பார்த்தபடி.. மனம் உருகப் பாடிக் கொண்டிருந்தான்..
“நான் நிழலில்லாதவன் தெரியாதா..?
என் நிழலும் நீயெனப் புரியாதா..?
உடல் நிழலைச் சேரவே முடியாதா..?
அன்பே..! அன்பே..”
வினோத் அசைவற்றவனாக நின்று பாரதியையே பார்த்துக் கொண்டிருந்தான்.. முரளிதரனின் பாடல் வரிகளைக் கேட்கும் அவள் முகத்தில் பொங்கிய துயரத்தின் சாயலில் அவன் மனம் கனத்தது.. இதுபோன்ற காதலுடன் வாழும் முரளிதரனின் காதலுக்கான முழுத்தகுதியும் பாரதியிடம் மட்டும்தான் உண்டு என்று அவன் நினைத்துக் கொண்டான்.. சாத்வீகமே வடிவானவளாக தோற்றமளிக்கும் அவளைப் பிரிந்தால் ஓர் மனிதன் வாழ்க்கையை வெறுத்து சிடுமூஞ்சியாகத்தான் ஆகி விடுவான்.. முரளியும் அவ்வாறு ஆனதில் ஆச்சரியமில்லையென்று அவனுக்குத் தோன்றியது..
“வா.. வா.. என் வாசல்தான்..
வந்தால் வாழ்வேன் நான்..”
முரளிதரனின் அழைப்பை ஏன் பாரதி ஏற்றுக் கொள்ள வில்லையென்று மனதிற்குள் கேள்வி கேட்டான் வினோத்.. இவள் இருந்தால்தான் முரளிதரன் வாழ்வான் என்பதை உணர்ந்த பின்பும் ஏன் அவனிடம் ஓடாமல் தேங்கி நிற்கிறாள்..?
“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்..
அன்பே.. உன் பேரைச் சிந்தித்தால்..
தீக்குச்சி இல்லாமல் தீமூட்டக் கூடும்..
கண்ணே.. நம் கண்கள் சந்தித்தால்..
நானென்று சொன்னாலே..
நானல்ல.. நீதான்..
நீயின்றி வாழ்ந்தாலே..
நீர் கூடத் தீதான்..
உன் சுவாசக் காற்றில்
வாழ்வேன் நான்..”
வினோத்தின் விழிகளில் கண்ணீர் அரும்பியது.. ஆண்கள் அழமாட்டார்கள் என்று யார் சொன்னது.. என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.. இதோ மேடையில் கல்லையும் உருக்குவதைப் போலப் பாடிக் கொண்டிருக்கிறானே முரளிதரன்.. இவனுக்குள் இப்படியொரு உருக்கம் இருக்கக்கூடும் என்று எவரேனும் நினைத்திருப்பார்களா..? இரும்பு மனிதன் என்றுதானே நினைத்துக் கொண்டிருந்தார்கள்..
வினோத் பாரதியைப் பார்த்தான்.. மேடையை விட்டுப் பார்வையை இந்தப்பக்கம், அந்தப் பக்கம் நகர்த்தாமல் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. மற்றவர்கள் உன்னிப்பாகப் பாடலைக் கேட்க இவள் மட்டும் உன்னிப்பாக பார்த்து வைத்ததில் முரளிதரன் விளிக்கும் ‘அன்பே..!’ இவள் தான் என்று நிச்சயமாக அடையாளம் கண்டான் அவன்..
வினோத் கண்டு கொண்டதை வர்ஷாவும் கண்டு கொண்டாள்.. டென்சன் அதிகமானதில் நகத்தைக் கடித்துத் துப்ப ஆரம்பித்தாள்.. அந்த டென்சனை அதிகமாக்குவதைப் போல..
“நிமிசங்கள் ஒவ்வொன்றும்..
வருசங்கள் ஆகும்..
நீ என்னை நீங்கிச் சென்றாலே…”
என்று கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான் முரளிதரன்.. அந்த வார்த்தைகளில் உருகிய பாரதியின் மென்னியைப் பிடித்துத் திருகினால் என்ன என்ற வெறி கிளம்பியது வர்ஷாவுக்கு.. எங்கேயிருந்து இவள் வந்தாள்..? இவள் இல்லாததினால் இத்தனை நாள்களாக முரளிதரன் காணாமல் போயிருந்தானா..? இவள் வந்ததினால் உயிர்ப்பாகியிருக்கிறானா..?
ஆமாம் என்று பாடலில் கூறினான் முரளிதரன்..
“வருசங்கள் ஒவ்வொன்றும்..
நிமிசங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே…”
பாரதியின் விழிகளில் தெரிந்த காதலின் காருண்யத்தில் வர்ஷாவின் மனம் திடுக்கிட்டது.. வா.. என் மடிமீது சாய்ந்து இளைப்பாறு என்ற அவளின் விழிகளின் அழைப்பில் வர்ஷாவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.. இவள் எங்கேயிருந்து வந்தாளென்று பாரதியை திட்டித் தீர்த்தாள்.. சும்மாவே முரளிதரன் அவள்பக்கமாக திரும்பிப் பார்க்க மாட்டான்.. இந்த லட்சணத்தில் இப்படியொருத்தி வந்து நின்று விட்டால் வர்ஷாவின் நிழலைக் கூட வெறுத்து விடுவானே..
“மெய்யாக நீயென்னை..
விரும்பாத போதும்..
பொய்யொன்றை சொல் கண்ணே..!
என் ஜீவன் வாழும்..
நிஜம் உந்தன் காதலென்றால்..”
முரளிதரனின் இறைஞ்சுதலில் வர்ஷாவுக்கு ஓர்வழி கிடைத்து விட்டது.. நூல்முனை கிடைத்து விட்டதில் அவள் நூல்கண்டை இழுத்து ஸ்வெட்டர் பின்னத் தயாரானாள்..
செய்ய வேண்டியவற்றை அவள் தீர்மானித்து நிமிர்ந்தபோது முரளிதரன் மேடையை விட்டு இறங்கியிருந்தான்.. பாரதி சீட்டை விட்டு எழுந்து ஆடிட்டோரியத்தின் வாசலில் இருந்த மரத்தடிக்குப் போனாள்.. இடைவெளிவிட்டு அவளைப் பின் தொடர்ந்த முரளிதரன்.. இடைபட்டவர்களின் பாராட்டுதல்களுக்கு தலையசைத்தபடி மரத்தடியை அணுகினான்..
‘என்னை விட இவ பேரழகியா..?’ வர்ஷாவின் மனம் கொதிகலனானது..
அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து மரத்தடி தெளிவாகத் தெரிந்தது.. பாரதியின் முகத்தைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான் முரளிதரன்.. இடைவிடாத அவனது பேச்சில் இத்தனை தினங்களாக இவன் மௌனகுரு வேசம் போட்டுக் கொண்டிருந்தானா என்று வெகுண்டாள் வர்ஷா.. அவன் என்ன பேசினான் என்று அவள் காதுகளுக்கு எட்டாத தொலைவில் முரளிதரனும் பாரதியும் நின்று கொண்டிருந்ததில் உட்கார முடியாமல் தவித்தாள் அவள்.. பாரதி வாயைத் திறக்கவில்லை.. மௌனவே காதலாக முரளிதரனின் முகத்தைப் பருகு, பருகு எனப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. முரளிதரனின் முகத்தில் பிரியம் வழிந்தது..
இதுபோன்ற ஆழ்ந்த உணர்வுகளும் முரளிதரனின் மனதில் இருக்கக் கூடும் என்று அன்றுதான் கண்டாள் வர்ஷா.. முகத்தில் முள்ளைக் கட்டிக் கொண்டிருந்த அந்த வேசதாரி முகமெல்லாம் மென்மை விரவ பாரதியிடம் நெகிழ்ந்து நின்றிருந்ததில் வர்ஷாவின் உடல் முழுவதும் யாரோ மிளகாயை அரைத்துப் பூசி விட்டதைப் போல எரிந்தது..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.