Chapter 16
“பிடிங்கடா அவளை..”
பாரதியைப் பார்த்ததும் இந்த வார்த்தைகளைத்தான் சொன்னான் முரளிதரன்.. அதைக் கேட்டதும் கதாநாயகியை கை காட்டி நம்பியார் கைகளைப் பிசைந்தபடி சொல்வதைப் போல பயந்து போனாள் பாரதி.. முரளிதரனும் அப்படியொரு கெட்டப்பில்தான் இருந்து வைத்தான்.. வில்லனுக்குரிய அனைத்து லட்சணங்களும் அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தன..
“ஏய்ய்.. அங்கே சீனியர்ஸ் ராகிங் பண்றாங்க போல இருக்குடி.. வா, இந்தப் பக்கமா ஓடிப் போயிரலாம்..”
உயிருக்குயிரான தோழியென்று பீற்றிக் கொண்டிருந்த மாயா சொல்லி வாய் மூடும் முன்பு மாயமாகி விட, தனித்து அகப்பட்டுக் கொண்ட பாரதி திருதிருத்து எஸ்கேப் ஆக முயற்சி செய்தாள்..
அதைப் பார்த்து விட்டதினால்தான் முரளிதரன் அப்படியொர் ஆணையை பிறப்பித்தான்.. அவனைச் சூழ்ந்து நின்ற நண்பர்கள் தலைவனின் கட்டளையைச் சிரமேற்கொண்ட அடியாள்களைப் போல பாரதியைச் சூழ்ந்து கொள்ள அவள் நடுநடுங்கிப் போனாள்.
முரளிதரனின் பார்வை ‘இழுத்து வாங்கடா அவளை..’ என்று சொல்வதைப் போல இருக்க.. யாரும் இழுக்காமலே அவன் முன்னால் போய் நின்று விட்டாள்.. அதில் முரளிதரனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பொன்று உதித்ததை அவள் கவனிக்கவில்லை..
மழையில் நனைந்த பூங்கொடிபோல் அவள் வெட வெடப்பதை ரசித்துப் பார்த்தான் முரளிதரன்.. அகப்பட்டுக் கொண்ட முயல்குட்டியின் பரிதவிப்பை அவள் விழிகளில் கண்டவனுக்கு பாவமாக இருந்தது.. அவளை விட்டு விடலாமா என்று யோசித்தவன் அந்த நினைவை விட்டு விட்டான்.. அவளைப் பாவம் பார்த்து விட்டுவிட்டால் அவளைப் பற்றிய விவரங்களை எப்படி அவன் அறிவது..?
ஆகையால் கொடூரமான வில்லன் வேடத்தைக் கன்டினியூ பண்ணினான்.. கறாராக முகத்தை வைத்துக் கொண்டு அவளை அதட்டினான்..
“என்ன தப்பிச்சுப் போகப் பார்க்கிறயா..?”
அவள் கிடுகிடுவென நடுங்கி விட்டாள்.. முரளிதரனின் நண்பர்களுக்கு ஆச்சரியம்.. முரளிதரன் பெண்களை அதட்ட மாட்டான்.. அவனுடைய முரட்டுத்தனங்களை ஆண்களிடம்தான் பிரயோகிப்பான்.. முதன் முதலாக ஒரு பெண்ணை
அவன் அரட்டியதில் தங்களுக்குள் கேலிப்பார்வை பார்த்துக் கொண்டார்கள்..
“என்ன மச்சி.. அதட்டலெல்லாம் பலமாயிருக்கு.. பட்ஷி பயந்து நடுங்குது.. அது தெரிஞ்சும் வில்லன் வேசம் கட்டறன்னா எங்கேயோ இடிக்குதே..” முரளிதரனின் நண்பன் தாடையைத் தடவியபடி கிசுகிசுத்தான்..
“டேய்.. போடா.. போடா..” சிரிப்பை அடக்கியபடி தாழ்ந்த குரலில் அதட்டினான் முரளிதரன்.
“ஹ.. அப்படியொரு ஐடியா இருக்கா..? நாங்க போயிரனும்.. நீ மட்டும் பட்ஷிகூட பேச்சு வார்த்தை நடத்தனும்.. கெட்டிக்காரன்டா நீ..” அந்த நண்பனான பார்த்திபன் பாராட்டினான்.
அவர்கள் என்னவோ உலக சமாதானத்தை நிலை நிறுத்துவதைப் பற்றிப் பேசுவதைப் போல பய பக்தியுடன் அவர்கள் முகத்தைப் பார்த்தபடி வெடவெடத்துக் கொண்டிருந்தாள் பாரதி..
“பாவம்டா..” பார்த்திபன் பரிதாபப்பட்டான்..
“அத நீ சொல்லக்கூடாது.. ஏன் சொல்ற..? ஏன் சொல்ற..?” பிரகாஷ்ராஜ் அவதாரமெடுத்தான் முரளிதரன்.
“கில்லிடா நீ.. இந்த ரூட்டில வர்றியா..? இது உன் செல்லமா..? கேர்ள்ஸைக் கண்டாலே உனக்கு ஆகாதே..”
“இதைக் கண்டா ஆகும் போலத் தோணுதுடா பார்த்தி..”
“நடத்து கண்ணா நடத்து.. பட்ஷி பயப்படுதே.. எப்படி கண்ணி வைக்கப் போற..?”
“வேட்டைக்காரன்தாண்டா கண்ணி வைப்பான்..”
“நீ சேட்டைக்காரனாச்சே..”
“அஃது.. பொறுத்திருந்து பாரு..”
கண்ணி வைக்கப் போவதாக நினைத்துத்தான் அவளிடம் ராகிங்கை ஆரம்பித்தான் முரளிதரன்.. அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும்.. உறவுப் பயிரை வளர்க்க வேண்டும் அதற்கு ராகிங்தான் கை கொடுக்கும்..
“உன் பேர் என்ன..?”
“பா.. பா.. பா..”
பாரதி தந்தியடிக்க முரளிதரனும் அவனுடைய நண்பர்களும் ஒருவரையொருவர் பார்த்தபடி ‘பா’ வரிசைப் பெயர்களைக் கேட்க ஆரம்பித்தார்கள்..
“பாவனாவா..?” என்பதில் ஆரம்பித்து..
“பாப்பம்மாவா..?” என்பது வரை அவர்கள் அனைத்துப் பெயர்களையும் கேட்டு முடிக்க அவள் ஒவ்வொரு பெயருக்கும் ‘ஊஹீம்’ என்று தலையாட்டி மறுத்துக் கொண்டே இருந்தாள்..
கட்டக் கடைசியில் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போனவர்களாக அவர்கள் தண்ணீர் பாட்டிலை தொண்டைக்குள் சரித்து ஆசுவாசமாக.. முரளிதரன் சிடுசிடுத்தான்..
“இத்தனை பெயரில ஒரு பெயர் கூடவா உன் பெயரா இல்ல..?”
“ம்ம்ம்..”
“அப்புறம் என்ன கழுதைக்கு ‘பா,பா’ன்னு தந்தியடிக்கிற..?”
“எல்லாப் பெயரையும் சொன்னவங்க.. பாரதிங்கிற என் பெயரை மட்டும் சொல்லலையே..”
அவள் தயங்கித் தயங்கித் திணறியபடி சொன்னதில் நண்பர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு சிரித்து விட்டார்கள்..
“ஆமாமில்ல.. பாரதிங்கிற பெயரை மட்டும் எப்படிடா விட்டோம்..?” பார்த்திபன் வியந்தான்..
“இவங்க முண்டாசு கட்டலைல்ல.. அதனால விட்டிருப்போம்..” கேலியாகச் சொன்னான் முரளிதரன்..
அவனது கேலியில் விழியுயர்த்தி அவனைப் பார்த்தவளின் பார்வையை அவன் பார்வை சந்தித்தது.. மின்சாரம் உடலில் பாய்ந்ததைப் போன்ற உணர்வுக்கு ஆளானாள் பாரதி.. பயந்து போனவளாக அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டதில் அவன் விழிகளில் மின்னல் வந்தது.. அவன் கண்களைச் சந்திக்கப் பயந்து தாமரை மலர் போல தலையைக் கவிழ்ந்து நின்றிருந்தவளிடம்..
“பாட்டுப் பாடத் தெரியுமா..?” என்று கேட்டான் முரளிதரன்.
“பெண் பார்க்கவாடா வந்திருக்க..?” இன்னொரு நண்பன் ஒருவன் கேலி செய்தான்..
“இருடா..” என்ற முரளிதரனின் மனதில் அவள் பாடினால் எப்படியிருக்கும் என்று கேட்கும் ஆவல் இருந்தது..
அந்தக் கல்லூரியின் பாடகனாக அனைவராலும் ஏக மனதாக போற்றப்படுபவன் அவன்.. அவனது குரலை வைத்து அவளைக் கவர நினைத்தான் முரளி.. நிச்சயம் அவள் சொதப்புவாள் என்று நம்பினான்.. மட்டக் கேவலமாக அவள் பாடும் போது.. இப்படியா பாடுவது..? காலேஜை சுற்றி நிற்கும் கழுதைகளெல்லாம் ஓடி வந்திரப் போகுது என்று கலாய்த்து விட்டு.. பாட்டென்றால் இப்படி இருக்க வேண்டும் என்று பாடிக்காட்டி அவளை மயக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான் அவன்.. அவனது நினைவுக்கு ஏற்ப அவள் பாடத் தெரியும் என்று சொல்லாமல் மருண்டு நின்றதில் கள்ளுண்ட வண்டானவன்..
“பாடத் தெரியுதோ, தெரியலையோ.. நீ பாடித்தான் ஆகனும்..” என்று கட்டளையிட்டு விட்டு நண்பர்களைப் பார்த்தான்.
“எங்களையேண்டா பார்க்கற..? நாங்க ஓடித்தான் ஆகனுமா..?” அவர்கள் பங்குக்கு அவர்களும் கலாய்த்தனர்..
“ஹா..ஹா..” உரக்கச் சிரித்த முரளிதரனின் சிரிப்பு..
“நேற்று இந்த நேரம்..
ஆற்றங்கரை ஓரம்..
உன்னைத் தொட்டு
என்னைத் தொட்டு
தென்றல் செய்த கோலங்கள்..
ஜாலங்கள்.. ஆஹா..
நேற்று இந்த நேரம்..”
என்று பாடிய பாரதியின் பாடலைக் கேட்டதில் உறைந்து போய் நின்று விட்டது..
அவன்தான் கல்லூரிப் பாடகன் என்ற இறுமாப்பில் இருந்தவனை ஒரே பாடலில் கவிழ்த்தி விட்டாள் அந்தக் கல்லூரிப் பாடகி..!
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.