Chapter 19

0Shares

இனியும் பொறுப்பதிற்கில்லையென்ற வர்ஷாவின் தீர்மானத்தைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தாள் பாரதி… இலக்கிய விழா மேடையில் அவள் பாடப் போவதை அறிந்ததுமே வர்ஷாவின் பார்வை முரளிதரனைத்தான் தேடியது.. அவளது கணிப்பு பொய்க்கவில்லை.. அவன் பார்வை மேடையிலிருந்த பாரதியைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது..

‘அன்னைக்கு என்னன்னா.. அவ கேட்கனும்னு இவன் பாடினான்.. இன்னைக்கு இவன் கேட்கனும்னு அவ பாட மேடையேறியிருக்கிறா.. இதுக ரெண்டும் மாறி மாறி பாட்டுப் 

பாடிக் கொஞ்சறதை வேடிக்கை பார்க்கத்தான் நான் பிறப்பெடுத்திருக்கேனா..?’

வர்ஷாவுக்கு வெறுத்துப் போனது.. அவளது வெறுப்பை அதிகப் படுத்துவதைப் போல..

“நேற்று இந்த நேரம்..” என்று பாட ஆரம்பித்தாள் பாரதி..

முரளிதரனின் கண்களில் கோடி மின்னல்கள் வந்து குவிந்தன.. வர்ஷாவுக்கு வெறி வெறியாக வந்தது.. மறுநாளே பாட்டுக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டுமென அவள் முடிவு செய்தாள்.. எத்தனைதான் கற்றாலும் பாரதி அளவுக்கு அவளால் பாடமுடியுமா என்ற கலக்கம் ஏற்பட்டது..

“பௌர்ணமி இரவில்..

கனவொன்று கண்டேன்..

உன் கோட்டின் மீது..

எனது கோடு படிந்தது..

கோட்டை விட்டுத் தாண்டும் வரை

நானும் உன்னை விட மாட்டேன்..

கீழ்வானமே வானம்..!

நேற்று இந்த நேரம்..”

பாரதியின் பாட்டு முரளிதரனை ஆற்றங்கரையின் ஓரத்துக்கு அழைத்துச் சென்றிருப்பதை வர்ஷாவால் உணர முடிந்தது.. முரளிதரன் பரவசத்தில் உறைந்திருந்தான்.. அவனும் பாரதியும் மட்டும் இடம் பெற்ற பிரத்யேகமான மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.. அங்கே தனக்கு இடமில்லையென்பதில் வெகுண்டாள் வர்ஷா.. தென்றல் வந்து முரளிதரனையும் பாரதியையும் மட்டுமே சொந்தம் கொண்டாடி ஜாலங்கள் செய்யுமா என்ற வெறி அவளுக்குள் பிறந்தது.. இருப்பது போதாதென்று அவளது தோழிகள் வேறு பாரதிக்கும் முரளிதரனுக்குமான ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாகக் கூறி வெறியை அதிகரித்து வைத்தார்கள்.. அவளுக்குள் இருந்த வெறியை அவர்கள் உசுப்பி விட்டதில் முரளிதரனின் வாழ்க்கையை ரணமாக்க எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்டாள் வர்ஷா.

அவள் பேரழகி.. கல்லூரியின் அழகுராணி..! அவளது கடைக்கண் பார்வைக்காக கல்லூரியின் கதாநாயகனான வினோத்தே மண்டியிடுகிறான்.. அவனை வேறு அவளுக்குப் பிடித்துத் தொலைத்திருக்கிறது.. இருந்தும் அவனிடம் அதை ஒப்புக் கொள்ளாமல் முரளிதரனைப் போன்ற முசுட்டு மூஞ்சிக்காரனிடம் காதலைச் சொன்னாளே.. அதை அவன் கொண்டாடி ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமா, வேண்டாமா..? சரி, போகட்டும்.. அவனுக்கும் கொண்டாட்டத்துக்கும் எட்டாத தூரம் என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.. அவளது காதலை அவன் மதிக்காமல் புறக்கணிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது..?

அதையும் வர்ஷா ஏற்றுக் கொண்டாள்.. முரளிதரனின் மனதை அவள் பக்கம் திருப்புவதற்கான அத்தனை பிரயத்தனங்களையும் மேற்கொண்டாள்… அவன் வீடு வரை சென்று உறவு கொண்டாடினாள்.. அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விட்டதே..

மரத்தடியில் நின்றிருந்த முரளிதரன் பல்வரிசை தெரிய சிரித்தபடி பாரதியிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்.. 

“இவருக்குச் சிரிக்கக் கூடத் தெரியும்ங்கிறது பாரதி மேம் வந்த பின்னால தான் தெரியுதுடி..”

வர்ஷாவை ஜாடையாகப் பார்த்தபடி ஊர்வசி உரத்த குரலில் சொன்னாள்.. வேண்டுமென்றேதான் அவள் குரலை உயர்த்திப் பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்டாள் வர்ஷா.. இன்று எழும்பும் குரல், நாளை, அதற்கும் மறுநாள் என்று தொட்டுத் தொடரும்.. அது வர்ஷாவின் இமேஜை உலுக்கி இல்லாமல் செய்து விடும் அபாயம் கொண்டது.

“கேட்டிங்களாடி நியூஸை.. பெரிசா காலேஜ் பியூட்டி குவின்னு அலட்டிக்கிட்டாள்ல இந்த வர்ஷா.. இவள ஒரு ஆளாவே முரளிதரன்சார் மதிக்கலைடி.. பாரதி மேம் வந்தாங்க.. மனுசன் தேன் குடிச்ச சிங்கமாட்டம் அவங்க பின்னாலேயே போயிட்டாருடி.. 

இவ பெரிய இவன்னு இவதான் சொல்லிக்கனும்.. முரளிதரன் சார் திரும்பிப் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்ட ஆள்தானே இவ..”

இதுபோன்ற கிசுகிசுப்பு கல்லூரி வளாகத்துக்குள் வலம் வருவதை அவள் அறிவாள்.. கிசுகிசுப்பு வலுத்து உரம் பெற்று அவளது முகத்துக்கு நேரான எள்ளலாக மாறுவதற்குள் புதிதாக துளிர் விட்டிருக்கும் பாரதியின் காதல் கதையை வர்ஷா துளிர்க்க விடாமல் கிள்ளியெறிந்தாக வேண்டும்.

வர்ஷாவுக்கு கிடைத்திருக்கும் நூலிழை ஒன்றே ஒன்றுதான்.. அது பாரதியின் காதலை முரளிதரன் இறைஞ்சுவது.. அவளது காதலை அவன் யாசிக்கிறான் என்றால் பாரதியும், முரளிதரனும் இணைவதில், முரளிதரனின் காதலை பாரதி ஏற்றுக் கொள்வதில் ஏதோ தடையிருக்கிறது என்று அர்த்தம்.

அந்தத் தடையென்ன..?

அதை அறிந்து கொள்ள வேண்டுமானால் முரளிதரனின் கடந்த காலத்திற்குள் வர்ஷா பிரவேசித்தாக வேண்டும்.

‘எண்டராகிட்டாப் போகுது..’

தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் வர்ஷா.. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கும் அட்சயப் பாத்திரம் போல, முரளியின் கடந்தகாலத்தைப் பற்றிய ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் வர்ஷாவிடம் கொட்டிக் கவிழ்க்க அபிராமி இருக்கிறாளே..

வர்ஷா முரளிதரனின் வீட்டை முற்றுகையிட்டாள்..

“பாரதியா..?”

அபிராமியின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி இருந்தது.

“பாரதியேதான் ஆண்ட்டி..” அழுத்தமாகச் சொன்னாள் வர்ஷா..

பாரதியின் பெயரைக் கேட்டதுமே அபிராமி அதிர்ந்து போனதில் அவளது ஆழ்மனது திருப்தி கொண்டது.. பாரதியின் வருகையை அபிராமி விரும்ப மாட்டாள் என்று அவளது ஆழ்மனம் சொன்னது.. அது உண்மையென்பதை அபிராமி நிரூபித்தாள்.

“அவளைப் பத்தி உனக்கு எப்படித் தெரியும்..?”

“இதென்ன ஆண்ட்டி இப்படிக் கேட்டுட்டிங்க.. எங்க காலேஜில புதுசா ஜாயின் பண்ணியிருக்கிற லெக்சரர் பாரதி மேம்தான்.. சார் சொல்லலையா..?”

அப்பாவி போல் போட்டுக் கொடுத்தாள் வர்ஷா.. அபிராமியின் முகம் மாறியது.

“முரளி என்கிட்ட எதையும் மறைச்சதில்ல.. இதை மறைச்சுட்டான் பார்த்தியா..” வருத்தத்துடன் சொன்னாள்..

“புதுசா வந்த லெக்சரர்தானேன்னு நினைச்சிருக்கலாம்.. காலேஜ் மேட் பத்தி வீட்டுக்கு சொல்வானேன்னு இருந்திருக்கலாம்.. ஐ டோன்ட் நோ.. பட் ஆண்ட்டி.. சாரும், பாரதி மேமும் பழகிக்கிறதைப் பார்த்தா அவங்க வெறும் காலேஜ் மேட்ஸ் மட்டுமில்லைன்னு தோணுது ஆண்ட்டி.. அதுக்கும் மேலே ஏதோ ஓர் சொந்தம் அவங்களுக்குள்ள இருக்கு..”

“என்னத்த பெரிசா வெண்டைக்காய் சொந்தம் கொண்டாட வந்துட்டா அவ..? பெத்தவள மீறின சொந்தம் என்ன இருக்கு..? முரளிக்கு ஆசை காட்டி மோசம் செய்துட்டு, வேற எவனோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு முரளியை அம்போன்னு விட்டுட்டுப் போனவதான அவ.. போனவ போனவளா இல்லாம என்ன கழுதைக்குத் திரும்பி வந்திருக்கிறா..? கொஞ்ச நாளா என் புள்ள சந்தோசமா இருக்கானேன்னு சந்தோசப்பட்டேன்.. இவதான் காரணமா..? இவ சந்தோசத்தையும் கொடுத்து கொடுத்த சந்தோசத்தைச் சாகடிக்கிற ஜாதியாச்சே.. அது தெரியாம என் மகன் அவள் பின்னாடி அலைவானே..” அபிராமியின் பரிதவிப்பில் வர்ஷாவின் முகம் ஜொலித்தது..

0Shares

Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link