Chapter 05
வீடு நிசப்தமாக இருந்தது. மேலே பேன் சுழலும் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. காவ்யா சரிந்து தரையில் அமர்ந்து இருந்தாள். அசோகன் வெளியேறி யவுடன் ஆனந்தனும், பர்வதமும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்று விட்டனர். காவ்யா குளித்தாளா, சாப்பிட்டாளா என்று கேட்கக் கூட ஆளில்லாமல் தனித்து விடப்பட்டாள். நின்று மகளிடம் பேசக்கூட பர்வதத்தை விடாமல் ஆனந்தன் அதட்டி அழைத்துச் சென்று விட்டான். காவ்யா தண்ணீர் கூட அருந்தாமல் அசோகனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன தவறு செய்தான் அவன்..? கண் முன்னே கொலை நடந்தாலும் கண்டு கொள்ளாத உலகில் கன்னிப் பெண்ணொருத்தியின் மானத்தைக் காப்பாற்றினான். நூற்றுக் கணக்கான மைல்களைக் கடந்து வந்து அவளை அவள் குடும்பத்தாரிடம் பத்திரமாகச் சேர்த்தான். அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்லிப் பாராட்டுவதை விட்டு அவன் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்கும்படி நோகச் செய்து அனுப்புவதா..? இது தெய்வத்திற்கு அடுக்குமா..?’
காவ்யா நினைத்து நினைத்து வருந்தினாள். அவன் செய்த உதவி ஈடு இணையற்றது. அதற்கு எந்த வகையிலும் நன்றி செலுத்த முடியாது. வெறும் வாய் வார்த்தையில் கூட அவனுக்கு நன்றி சொல்ல முடியாத தன் நிலையை எண்ணி அவளுக்குக் கண்ணீர் சுரந்தது. ஏதேனும் ஓர் வகையில் அவனுக்குத் தான் பட்ட நன்றிக் கடனைக் கழிக்க முடிந்தால்… முடியுமா..? அவ்வாறு முடிந்தால்தான் அவளுக்கு நிம்மதி கிடைக்குமென்று நிச்சயமாக அவளுக்குத் தோன்றியது.
இங்கே காவ்யா கலங்கிக் கொண்டிருக்க காரைக் கிளப்பிக் கொண்டு போன அசோகனின் கண் முன்னே காவ்யாவின் அதிர்ந்து நின்ற கோலமே கண் முன் நிழலாடியது. எவ்வளவு மென்மையான குணம் படைத்த பெண். தமையனின் பேச்சாலும், நடத்தையாலும் அவமானத்தில் கூனிக் குறுகிப் போன அவளது தோற்றமும், தமையனின் அடியில் கன்றிச் சிவந்த அவளது முகமும் அவன் மனதில் தோன்றி வேதனையைத் தந்தன. இப்படிப் பட்ட குணம் படைத்தவன் அவனது அண்ணன் என்று முதலிலேயே தெரிந்திருந்தால் அவளை பஸ்ஸில் அனுப்பிவிட்டு பாதுகாப்பாய் பின் தொடர்ந்திருப்பான். இல்லை திருநெல்வேலியில் நுழைந்தவுடன் ஓர் ஆட்டோவில் ஏற்றி விட்டு விட்டு பஸ்ஸில் வந்ததாகக் கூறச் சொல்லியிருப்பான். ஆனால் மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் வரும்..? மனதில் எந்த விதமான சலனமும், வேறுபாடும் இல்லாதவர்கள் அவர்கள் இருவரும். இருவருமே பொய் சொல்லி அறியாதவர்கள். பொய் சொல்ல விரும்பாதவர்கள். காவ்யாவின் களங்கமில்லா பிள்ளை முகம் நினைவில் வந்தது. ‘பாவம் பொய் சொல்லி அறியாதவள். மெய் சொல்லி விட்டு என்ன பாடு பட்டு விட்டாள்..’ பெருமூச்செரிந்தான் அசோகன்.
நேர்மையான நடத்தைக்கு என்று தான் மதிப்பிருந்திருக்கின்றது..?
ஒரே யோசனையுடன் வண்டியைச் செலுத்தியவன் மதுரையை அடைந்ததும் உடல் சோர்வையும், பசியையும் உணர்ந்தவனாய் வண்டியை ‘பாண்டியன்’ ஓட்டலுக்குள் செலுத்தினான். முதல் நாள் காலையில் காரை எடுத்தவன் ஏறக்குறைய முப்பது மணி நேரமாய் நிற்காமல் ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஓய்வுக்கு உடலும் மனமும் கெஞ்சின. காரை ஓட்டலில் பார்க் பண்ணி விட்டு இறங்கியவன் அங்கேயே ரூம் போட்டுத் தங்கி ஓய்வெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான். அவனால் இனி ஒரு வினாடி கூட கண் விழிக்க முடியாது என்ற நிலைமை. ஓட்டர் ரிசப்ஷனில் அறையை பதிவு பண்ணி சாவியை வாங்கிக் கொண்டவன் ரூமிற்குள் போனதும் உடனே குளித்து விட்டு உணவை வரவழைத்துச் சாப்பிட்டான். வயிற்றில் உணவு விழுந்தவுடன் அசதி உடம்பை அழுத்த நிச்சிந்தையாய் கட்டிலில் படுத்தவன் அண்ணாந்து விட்டத்தை வெறித்தான்.
அறையின் ஏஸி குளிர் உடலுக்கு இதமளித்தாலும் மனம் மட்டும் வெம்மையாகவே இருந்தது. ‘என்ன மாதிரியான அனுபவம் இது..?’ அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவனுக்கான இந்த வினோதமான அனுபவம் அவனுக்கு மன வருத்தத்தை தரவில்லை. இந்த உலகின் முரட்டுத் தனங்கள் அவன் அறிந்தவை. ஆனால் அவள்.. காவ்யா.. அந்தக் குழந்தை முகத்தின் கண்கள் கலங்கி நின்ற தோற்றம் அவன் மனதில் நெருஞ்சி முள்ளாய் தைத்தது. ‘மிக நல்ல பெண்..’ என்று நினைத்துக் காண்டான்.
அசோகனின் வாழ்வில் அவன் அறிந்த பெண்கள் மிகச் சிலர். அவனது இளம் வயதில் தெரிந்தது தாயின் முகம். அந்தக்கொடுப்பினை மறைந்தவுடன் அதை இட்டு நிரப்பியவளாய் வந்தது அவனது உயிர் நண்பன் தியாகராஜனின் அன்னை மங்களத்தின் முகம். அதன்பின் அன்ன பூரணியாய் அன்னமளித்த மெஸ் மாமி சீத்தா லட்சுமியின் தாய்மை நிறைந்த முகம் அறிமுகமானது. உடன் பிறவா தங்கையாய் அவன் வாழ்வில் வந்தது தியாகராஜனின் மனைவி உமா. இவர்கள் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் அவன் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நின்று பேசினதில்லை. முதன் முதலாய் ஒரு பெண்ணிடம் அதிக நேரம் பேசி அறிமுகமானது காவ்யாவிடம் மட்டும் தான்.
‘சென்னையில் டிராவல் ஏஜென்ஸியில் என்ன நடந்ததோ என்னவோ..? ஒரு போன் பண்ணி விசாரிக்க வேண்டும்.’என்று எண்ணமிட்டவன் நினைத்ததைச் செயலாற்ற முடியாமல் கண்கள் செறுக அப்படியே அசந்து உறங்கி விட்டான். மாலை மயங்கும் நேரம் விழிப்புத் தட்ட எழுந்தவன் ரூம் சர்வீஸை அழைத்து காபி கொண்டு வரச் சொல்லி விட்டு முகம் கழுவிக் கிளம்பினான். காபி வரவும் குடித்து விட்டு ரூமைக் காலி செய்து ரிசப்ஷனில் சாவியை ஒப்படைத்துக் கணக்கைச் சரி பார்த்துக் கொடுத்த பின் காரைக் கிளப்பி அதிவேகமாய் சென்னை நோக்கிப் பறந்தான்.
குடித்த காபியும், தூங்கிய தூக்கமும் புத்துணர்வைத் தர இப்போது காலையில் எற்பட்ட அனுபவத்தின் விளைவாக மனதில் தோன்றியிருந்த வேதனை மறைந்திருந்தது. நடந்த சம்பவத்தை சம்பந்தமேயில்லாதது போல் நினைத்துச் சீர் தூக்கிப் பார்க்க முடிந்தது. மத்திய தர குடும்பங்களில் பெண்களை வளர்ப்பது மிகப் பெரிய பொறுப்பு என்று கூட அவனால் நினைக்க முடிந்தது. அந்தப் பக்கத்து வீட்டம்மாள் தேவையில்லாமல் அநாகரிகமாய் மூக்கை நுழைக்காமலிருந்திருந்தால் ஒரு வேளை காவ்யாவின் அண்ணன் அமைதியாக பேசியிருந்திருக்கலாம்.
இவ்வாறு ஆயிரம் ‘இருக்கலாம்’களை யோசித்தவாறு வண்டியைச் செலுத்தியவன் நெடுஞ்சாலையின் இடையில் கட்டப்பட்டிருந்த மோட்டல்களில் ஒன்றில் இரவு
உணவை முடித்தான் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் சென்னையில் அவன் வீடு இருந்த தெருவில் நுழைந்தது அவனது கார்.. வீட்டின் முன்னால் காரை நிறுத்திப் பூட்டி விட்டு மாடியேறி அவனது அறையின் பூட்டைத் திறக்க முயன்றபோது கதவுகள் தானாகத் திறந்தன. பளீரென்று விளக்குகள் எரிந்தன. திடீர் வெளிச்சத்தில் கண்கள் கூசியவன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு சுதாரிப்ப தற்குள் அவனைச் சுற்றி நான்கு போலீசார் சூழ்ந்து கொண்டனர். அவன் கைகளில் விலங்கை மாட்டிய அந்த சப்-இன்ஸ்பெக்டர் கூறினார்.
“யு ஆர் அன்டர் அரெஸ்ட்…”
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.