Chapter 07

0Shares

வினாடிப் பொழுதில் முடிவெடுத்த பின் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான் அசோகன். அவனது உடனடித் தேவை ஒரு வக்கீல் என்பதை அவனது அறிவு உணர்த்திக் கொண்டிருக்கையில்,

“சொல்லுப்பா ஏன் வாயடைச்சுப் போய் நிற்கிறே..” என்று எஸ்.ஐ. இளக்காரமாய் கூறுவது போல் உசுப் பேற்றினார்.

“சார் நான் என் நண்பனுக்கு ஒரு போன் பண்ணலாமா..?” என்று அசோகன் கேட்க,

“அவசியமேயில்லை நானே வந்துவிட்டேன்..” என்றது பின்னாலிருந்து தியாகராஜனின் குரல். திகைப்புடன் திரும்பிப் பார்த்த அசோகன்,

“உனக்கு எப்படிடா தெரியும்..?” என்றான்.

“மெஸ் மாமி காலையில் வீட்டுக்கு ஓடி வந்தாங்கடா. அவங்க சொல்லித்தான் ஓடி வரேன். என்னடா இதெல்லாம்…?”

“இவங்க என் மேல் கொலைப்பழி போடறாங்கடா..”

“சார். நான் லாயர் தியாகராஜன்..” என்றவாறு எஸ்.ஐ. யிடம் கை குலுக்க கை நீட்டினான் தியாகராஜன்.

“அப்படியா சரி. சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்கு..” என்றார் அவர் கை கொடுக்காமல்,

“என் நண்பனிடம் தனியாகப் பேச வேண்டும்..”

“பேசுங்கள் பேசுங்கள். உங்களிடமாவது உண்மையை ஒத்துக் கொள்கிறாரான்னு பார்ப்போம்..” அசுவாரஸ்யமாய் கூறினார் எஸ்.ஐ.

அசோகனைத் தனியாக தள்ளிக் கொண்டு போனான் தியாகராஜன்.

“சொல்லுடா அசோக்.. என்ன பண்ணித் தொலைச்சே..?”

“இரண்டு நாள்களா நான் சென்னையிலேயே இல்லைடா தியாகு. நேற்று நடு ராத்திரிக்கு மேல் ஆயிருச்சு நான் திரும்பி வர. வந்து பார்த்தால் ரூம் திறந்து கிடக்கு. உள்ளே நுழைந்தால் இவங்க என்னை அரெஸ்ட் பண்ணி இங்கே கொண்டு வந்திட்டாங்க..”

“ம்ம்ம்.. மெஸ் மாமி எல்லாத்தையும் சொன்னாங்க. அவங்க கடையில்தான் அந்த ரௌடியோடு சண்டை போட்டாயாம்.. அது சரி நீ நேற்றே திரும்பியிருக்கணுமே.. வேறு எதுவும் வாடகைக்குப் போனாயா..?”

அசோகன் மௌனமானான். தியாகராஜனின் கூர் விழிகள் அவனது மௌனத்தை அவதானித்தது.

“சொல்லுடா அசோhக்.. உன்னைத்தான் கேட்கிறேன்.”

“தியாகு.. உங்க மாமாவை அவர் ஊரில் விட்டு விட்டு நேற்ற சாயந்திரமே நான் வந்திட்டேண்டா.. ஆனால் வரும்போது…”

“ம்ம் சொல்லு வரும்போது..”

“வரும் வழியில் ஒருத்தரைப் பார்த்தேன். அவங்களை திருநெல்வேலி வரை கொண்டு போய் விட்டு விட்டு வர வேண்டியதாகி விட்டது.”

“அது போதுமே! அவர் யாருன்னு சொல்லு.. திருநெல்வேலியில் அவர் அட்ரஸ் எதுன்னு சொல்லு. நான் எஸ்.ஐ.யிடம் பேசி..” என்று பேசிக் கொண்டே போனவனை இடைமறித்துப் பேசினான் அசோகன்.

“இல்லை தியாகு அவங்க வந்து சாட்சி சொல்ல முடியாது..”

“ஏண்டா பைத்தியக்காரா..? உன் நிலைமை என்னன்னு தெரியுமாடா உனக்கு..?”

“தெரியும் தியாகு! ஆனால் அந்தப் பெண் வந்து சாட்சி சொல்ல முடியாது. அவங்க வீட்டில் விட மாட்டாங்க.”

“பெண்ணா..?” என்று கண்களை விரித்த தியாகராஜனைப் பார்த்து,

“அப்படிப் பார்க்காதேடா. நீ நினைப்பது போல் இல்லை. நான் வரும் வழியில் அந்தப் பெண் ஒரு முரடனிடம் மாட்டிக் கொள்ளவிருந்தாள். நான் காப்பாற்றினேன். தனியாக ஊருக்குப் போகப் பயந்தாள். என் காரில் திருநெல்வேலி வரை கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன்.”

“நீ நல்லது தானேடா செய்திருக்கிறாய்..? பின்னே ஏன் அந்தப் பெண் வராது..?”

“அவள் வீட்டில் விட மாட்டார்கள் தியாகு. நேற்றே அவளை என்னோடு காரில் தனியாக வந்ததற்கு அடித்து விட்டான். அந்தப் பெண்ணின் அண்ணன். நான்தான் தலையிட்டு மன்னிப்புக் கேட்டு விட்டு வந்தேன்.”

“உனக்கென்ன தலை எழுத்தாடா..? யாரு எக்கேடு கேட்டா உனக்கென்னடா வந்தது..? சென்னையிலிருந்து திருநெல்வேலி வரைக்கும் வேலையற்றுப் போய் அவமானப்பட்டு வந்தானாம்.. உன்னை என்ன செய்தால் என் கோபம் ஆறும்..? அறிவு கெட்டவனே! அவளைக் காப்பாற்றப் போய் இப்போது இவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டியிருக்கிறாயேடா. இப்போது உன்னை யாருடா காப்பாற்றுவாங்க..?”

“நான் கொலை செய்யவில்லை தியாகு. இது சத்தியம். நீ என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. அவளைத் தொந்தரவு செய்யாமல் என்னைக் காப்பாற்று..”

நண்பனைப் பார்க்க பாவமாக இருந்தது தியாகராஜனுக்கு. உயிர் நண்பன். பெற்றோரில்லாதவன். தியாகராஜனின் தாய், தந்தையைத்தான் ‘அம்மா, அப்பா’ வென்று அழைத்து வந்தான். ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன் லீவு விடும் போதெல்லாம் அந்த விடுமுறை நாள்களை தியாகராஜனின் வீட்டில் தான் கழிப்பான். தியாகராஜனுக்கு எத்தனையோ முறை நெருக்கடியான சமயங்களில் பண உதவி செய்து காப்பாற்றி இருக்கிறான். இத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் தியாகராஜன் ஒரு கேஸ் விஷயமாக வெளி மாநிலம் சென்றிருந்தபோது அவனுடைய தந்தை இறந்து விட தியாகராஜன் வரத் தாமதம் ஆனதால் அவருக்கு அசோகன் தான் கொள்ளி வைத்தான். தியாகராஜன் திரும்பி வரும் வரை 

எல்லாக் காரியங்களையும் அவன் தான் கவனித்துக் கொண்டிருந்தான். தியாகராஜனின் தாய்க்கு அசோகனும் ஒரு மகன் தான். இன்று அசோகனுக்கு இவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கும்போது தியாகராஜன் தன் உயிரைக் கொடுத்தாவது அசோகனைக் காப்பாற்றியாக வேண்டும் தான். ஆனால் அவனும் தான் என்ன செய்வான்..? எப்படிக் கேட்டாலும் அந்தப் பெண் யாரென்று அசோகன் சொல்ல மறுக்கிறானே. அவனை அவன் வழியிலேயே போய் மடக்க நினைத்த தியாகு,

“அவ ஏண்டா அந்த நடுக்காட்டுக்குப் போனாள்.. ஒரு வேளை.. ஒரு மாதிரிப் பெண்ணோ..?” என்றான்.

“சேச்சே என்னடா தியாகு இப்படிப் பேசற..?”

“பின்னே என்னடா.. முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்து தெரிந்துக்கலாம்ன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. அவ முகத்தில் விழித்த நேரம்.. நீ எங்கே வந்து நிற்கிற பாரு..” என்றான் தியாகராஜன் உண்மையான ஆதங்கத்துடன்.

“தியாகு! நீ என் மேல் இருக்கிற அன்பில் அவசரப் பட்டுப் பேசற.. அவள் முகம் நிலவு முகம்டா. களங்க மில்லாத நிலவு முகம்..” என்றான் அசோகன் கனிவுடன்.

“அப்போ அந்த நிலவை வந்து சாட்சி சொல்லச் சொல்லுடா..” என்றான் தியாகராஜன் கோபத்துடன்.

“வரும்டா.. எனக்கு இப்படி ஒரு ஆபத்து வந்திருக்குன்னு தெரிந்தால் அந்த நிலவு நிச்சயம் சாட்சி சொல்ல வரும். ஆனால் நான் அதை அனுமதிக்க மாட்டேன். இந்த விஷயம் அந்தப் பெண் காதுக்கு போகக் கூடாது..”

“சரி சரி விடுடா.. என்னவோ நான் அந்தப் பெண்ணிடம் போய் நின்று ‘நிலவே நீ சாட்சி’ன்னு சொல்லி சாட்சி சொல்லக் கூப்பிட்டுக்கிட்டு வரப்போவது போல் பதறுகிறாயே. நீ இவ்வளவு சொல்லும்போது நான் அதை மீறவாப் போகிறேன். விடு நான் வேறு வழி ஏதாவது யோசிக்கிறேன். ஆனால் அவளை நீ எங்கே பார்த்தே..? எப்படிப் பார்த்தே..? அதையாவது இந்த நண்பன் கிட்ட சொல்லலாமில்லையா..?”

“காவ்யா இங்கே காலேஜில் படிக்கிறவடா.. முந்தா நாள் தான் கடைசி பரிட்சை எழுதி முடித்திருக்கிறாள். நேற்று ஊருக்குக் கிளம்பினாளாம்.”

“சரி அவள் ஊரென்னா நடுக்காட்டிலயா இருக்கிறது..?”

“ஆட்டோக்காரன் தப்பா ஆளாயிருந்துட்டா ஊருக்குப் போக நினைக்கிற பெண்கள் நடுக்காட்டுக்கு போக வேண்டியதுதான்.”

“உன்கிட்ட கதை எதுவும் விட்டாளோ..? முறைக்காதே.. வக்கீல் பார். எல்லா கேள்வியும் கேட்பேன்.”

“அந்தப் பெண்ணை சந்தேகப்படாதே தியாகு..” என்று கோபமான அசோகன் அவள் படிக்கும் கல்லூரியின் பெயரைக் கூறினான்.

“அந்தக் கல்லூரியா..? ஹிஸ்டிரி ஸ்டூடண்டா.. ஏன்னா கதை பெரிசா இருக்கே.. என் கணக்கு என்னன்னா..”

“டேய் வக்கீல்.. நீ வேணும்னா ஹிஸ்டிரி படிச்சுட்டு கணக்குப் போடலாம். காவ்யா மேத்ஸ் படிச்சுட்டு கதை சொல்ல மாட்டாள்.”

“சரி சரி.. என்னமோ எல்லாத்தையும் தெரிந்துகிட்டால் எனக்கு நிம்மதின்னு கேட்டேன். நீ இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறன்னா அவ நல்ல பெண்ணாத்தான் இருப்பாள். நீ ஒண்ணும் கவலைப்படாதே. நான் அவள் பெயரை இழுக்காமல் ஏதாவது செய்கிறேன். அப்போ நான் வரட்டுமா.. தைரியமா இருடா.. இனி உன் கவலை, என் கவலை. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

மனத்துக்குள் சிரித்துக் கொண்டே தியாகராஜன் கூறினான். பின்னர் எஸ்.ஐ.யிடம் தனியாகப் பேசினான்.

“அவன் ஒரு பெண்ணைக் காப்பாற்றி அவள் ஊரான திருநெல்வேலியில் விட்டு விட்டு வந்திருக்கான் சார். அந்தப் பெண் சாட்சி சொல்ல வந்தால் அந்தப் பெண்ணுக்கு எதுவும் சிக்கல் வந்திடுமோன்னு பயப்படறான். அவன் நல்லவன் சார். கொலையெல்லாம் பண்ண மாட்டான்.”

“நானும் அவர் கொலை பண்ணிட்டார்ன்னு நினைத்து கைது பண்ணவில்லை மிஸ்டர் தியாகராஜன்! சந்தேகத்தின் பேரில்தான் அரெஸ்ட் பண்ணியிருக்கிறோம். கொலை நடந்த நேரத்தில் அவர் எங்கேயிருந்தார்ன்னு ஆதாரத்தோடு நிரூபிக்கட்டும். அந்த வினாடியே அவரை விட்டு விடுகிறேன்.” என்றார் எஸ்.ஐ.

“நிரூபிக்கிறேன் சார்.. நான் அதை நிரூபிக்கிறேன். எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்க சார். நான் திருநெல்வேலி போய் அந்தப் பெண்ணை கூட்டி வந்து உண்மையைச் சொல்ல வைக்கிறேன்.”

“செய்யுங்க. போலீஸ்காரனும் மனிதன் தான் உங்க ஃபிரெண்ட் குடியிருக்கிற தெருவில் ஒருவர் கூட அவருக்கு எதிராய் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அது மட்டுமில்லை. அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாய் சொல்லி வைத்தாற் போல் அவரைப் போல் ஒரு நல்ல மனிதனைப் பார்க்க முடியாதுன்னு சொன்னாங்க. மெஸ் மாமின்னு சொல்லப்படுற சீத்தாலட்சுமியை விசாரிக்கப் போனால் மயக்கமே போட்டு விழுந்துட்டாங்க.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதனைப் பார்ப்பது அரிது. ஆனால் நானென்ன செய்யட்டும் சொல்லுங்க. கொலையை யார் செய்தான்னு நேரில் பார்த்த சாட்சியில்லை. அதுவே உங்க நண்பருக்கு ஒரு வகையில் சாதகமாகவும் இன்னொரு வகையில் பாதகமாகவும் முடிந்திருக்கு. ஏன்னா கொலை நடந்த அன்று காலையில் உங்கள் நண்பர் அந்த ரௌடியோடு சண்டை போட்டிருக்கார்.

‘ராத்திரி வாடா பொலி போட்றேன்’னு உங்க நண்பரைப் பார்த்துக் கத்திய அந்த ரௌடி அந்த ராத்திரியில் கொலையாகிக் கிடக்கிறான். அதே சமயம் உங்க நண்பரோ அந்த நேரத்தில் எங்கேயிருந்தார்ன்னு சொல்ல மறுக்கிறார். கொலை நடந்த ராத்திரி எங்கே, யாரோடு காரில் போனேன்னு கேட்டால் மறைக்கிறார். நான் என்னதான் செய்வது..? அந்த சாட்சி மட்டும் 

இங்கே வந்து சாட்சி சொன்னால் நாங்க என்ன செய்யப் போகிறோம்..? உண்மையை நிரூபியுங்கள்.. உடனே உங்கள் நண்பரை விட்டு விடுகிறோம்..” என்று காக்கிச் சட்டை போட்டாலும் மனித நேயம் மறவாத அந்த உண்மையான காவல்காரர் நிலைமையை எடுத்துச் சொன்னார்.

பொறுமையாகக் கேட்ட தியாகராஜன் நிலைமையை சரிவரப் புரிந்து கொண்டான். இனி என்ன செய்வது என்று மனதிற்குள் உடனே திட்டம் வகுத்துக் கொண்டான். எஸ்.ஐ.யிடம் நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்ட தியாகராஜன் காவ்யா படித்த கல்லூரியை நோக்கி நடந்தான்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link