Chapter 11

0Shares

குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த எஸ்.ஐ.

“குட்மார்னிங் சார்..” என்ற தியாகராஜனின் குரலைக் கேட்டு நிமிர்ந்தார்.

“இவங்க தான் சார் மிஸ் காவ்யா. அந்த ரௌடி பலவேசம் கொலை நடந்த இரவில் இவங்களைத்தான் ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றி திருநெல்வேலி வரை கொண்டு போய் விட்டுவிட்டு வரப் போயிருந்தான்.” என்று காவ்யாவை எஸ்.ஐ.க்கு அறிமுகப் படுத்தினான்.

தன் முன்னால் நின்ற இளம் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தவர் முதலில் எல்லோரையும் போல் ‘என்னவொரு அழகான பெண்’ என்று மனதிற்குள் வியந்து கொண்டவர் இருவரையும் பார்த்து,

“டேக் யுவர் சீட்..” என்றார் இருவரும் அவர் முன்னால் அமர்ந்தவுடன் எழுதிக் கொண்டிருந்த பைலை மூடி வைத்தவர் பேனாவை ஸ்டாண்டில் சொருகி வைத்து விட்டு நாற்காலியில் நிமிர்ந்து வாகாக அமர்ந்து கொண்டார். அவரது கூர்மையான பார்வை எதிரே அமர்ந்திருந்த இருவரையும் ஒரு நிமிடம் துளைத்து விடுவது போல் பார்த்தது. எதிரேயிருந்தவர்களின் பார்வையில் உண்மை இருந்ததை மனதிற்குள் உறுதி செய்து கொண்டவர், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் காவ்யாவிடம்,

“சொல்லுங்கம்மா நீங்க யாரு..? அசோகனை உங்களுக்கு எப்படித் தெரியும்..? அவர் ஏன் உங்களுடன் திருநெல்வேலி வந்தார்..?” என்று வினவினார்.

“என் பெயர் காவ்யா சார். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். என் அப்பா பெயர் ராமநாதன். அவர் ஸ்டேட் கவர்ன்மென்டில் ஹெட் கிளார்க்காக இருக்கிறார். அண்ணன் பெயர் ஆனந்தன். அவர் பேங்கில் வேலை பார்க்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால் அண்ணனுக்கு மாற்றல் உத்திரவு வந்தது. அதனால் சென்னையில் என்னைக் காலேஜில் சேர்த்து விட்டார்கள். ஆனால் வீட்டை மாற்றுவதற்குள் அண்ணனுடைய மாற்றல் உத்திரவு ரத்தாகி விட்டது. திருநெல்வேலி காலேஜுகளில் எனக்கு இடம் கிடைக்காததால் இங்கேயே ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன்.”

“உங்கள் காலேஜ் பெயர் என்னம்மா..?”

சொன்னாள்.

“என்ன படித்தீங்க..?”

“பி.எஸ்ஸி மேத்ஸ்.”

“ஸோ. பைனல் எக்ஸாம் முடிந்த மறுநாள் நீங்கள் ஊருக்குக் கிளம்பினதாகச் சொல்கிறீங்க.”

“ஆமாம் சார். அண்ணன் வந்து கூப்பிட்டுப் போவதாக இருந்தது. ஆனால் அப்பாவுக்குத் திடீர்ன்னு ஆக்ஸி டெண்ட் ஆகி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கு. நீ தனியா கிளம்பி வந்திருன்னு அண்ணன் கிட்டயிருந்து திடீர்னு போன் வந்தது. அப்பா பத்தின கவலையில் நான் யோசிக்காமல் உடனே கிளம்பி விட்டேன்.”

“நீங்க கிளம்பும்போது நேரம் என்னம்மா..?”

“சாயந்திரம் ஐந்து மணியிருக்கும் சார். எக்மோருக்குப் போய் டிரெயின் பிடித்துப் போகலாம்ன்னு நினைத்துக் கிளம்பி விட்டேன் சார். இரண்டு பெட்டிகள் இருந்ததால் பஸ்ஸில் போனால் சிரமம்ன்னு ஆட்டோவில் கிளம்பினேன்.” அன்றைய நாளின் மாலைப் பொழுது நினைவில் வர நடந்தவைகளை ஆத்மார்த்தமாய் கூற ஆரம்பித்தாள் காவ்யா.. எஸ்.ஐ.க்கு அது புரிந்தாலும் எதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தால் மேலும் கேள்விகள் கேட்டார்.

“ஏறியவுடன் பாதை மாறிப் போனானா..? இல்லை பாதியில் பாதை மாறியதா..?”

காவ்யா அன்றைய நாளில் இருந்தாள். கனவில் மிதப்பவள் போல் அந்தச் சம்பவத்தில் பொதிந்தவள், அதன் பின்னால் நடந்தவைகளை வீட்டில் பேச அஞ்சி மௌனித்திருந்தவள் மனதிலிருந்ததை கொட்ட ஆரம்பித்தாள்.

“அந்த டிரைவர் மோசமானவன் சார். நான் ஏதோ யோசனையில் ஆட்டோ திசை மாறிப் போவதை கவனிக்க வில்லை. அரை மணி நேரமாகியும் ஆட்டோ ஓடிக் கொண்டேயிருந்தது. என்னன்னு பார்த்தால் சென்னைக்கு வெளியில் போற ரோட்டில் ஆட்டோ போய்க் கொண்டிருந்தது.”

“அப்புறம்..?”

“நான் கூச்சல்  போட்டேன். அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி நிறுத்தப் பார்த்தேன். முடியவில்லை. வண்டியில் கம்பி இருந்தது. எடுத்து அடித்தேன். மயங்கிட்டான். நான் என் பெட்டிகளை எடுத்து ஓடி வந்திட்டேன். அப்புறம் பார்த்தால் அவன் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்தான். அப்போதுதான் அந்த ரோட்டில் அசோகன் சாரின் கார் வந்தது…”

“அவன் என் மாமனாரை அவரது கிராமத்தில் விட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான் சார்..” என்று தியாகராஜன் குறுக்கிட்டுக் கூறினான்.

“அப்படியா..?” என்று கேட்டுக் கொண்ட எஸ்.ஐ. காவ்யாவைப் பார்க்க அவள் தொடர்ந்தாள்.

“அசோகன் சார் அவனை அடித்துப் போட்டு விட்டார். என்னை ‘பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடறேன். திருநெல்வேலிக்குப் போய் விடுங்கள்’ன்னுதான் அவர் சொன்னார். நான் பாவி சார். பயந்த நிலைமையில் இருந்தேன். தனியாகப் போகப் பயந்து அவரை என்னுடன் துணைக்கு வரச் சொன்னேன் சார். இந்தப் பாவியால்தான் அவர் திருநெல்வேலி வரைக்கும் துணையாக காரில் பத்திரமாய் கூட்டிக் கொண்டு போய் விட்டார்.. நைட்டில் ஒரு பொட்டுக்கூட உறங்காமல் கவனமாய் வண்டியோட்டி வந்தார். ஹி இஸ் எ ஜென்டில்மேன் சார். பக்கா ஜென்டில் மேன். என் அப்பா, அண்ணன் கூடப் போனால் எப்படிப் பாதுகாப்பாய் உணர்வேனோ அப்படிப் பாதுகாப்பாய் உணர்ந்தேன் சார். பாவி. என்னை பத்திரமாய் கெண்டு வந்து சேர்த்து விட்டு அவர் ஆபத்தில் மாட்டிக் கொள்ள காரணமாகயிருந்த பாவி சார் நான். என்னால்தான் அவருக்கு இந்த நிலை கடவுள் சத்தியமாய் சொல்கிறேன். அவர் நிரபராதி. அவர் கொலைகாரனில்லை சார். நல்லவர். நான்தான் பாவி. என்னால் தான் அவருக்கு இந்த நிலைமை. என்னைக் காப்பாற்றி விட்டு என் வீட்டில் அவர் எதுவோ பெரிய தவறு செய்தது போல் மன்னிப்புக் கேட்டார். இப்போது… இப்போது.. கொலைக் குற்றத்தில் மாட்டியிருக்கிறார். ஒரு நல்ல மனிதருக்கு இப்படித் துன்பம் ஏற்படுத்தவா நான் பிறந்தேன்..?” காவ்யா தாங்க மாட்டாத வளாய் குமுறி அழுதாள். அவள் கூறுவதையும், அழுவதையும் லாக் – அப்பிற்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அசோகனின் கண்கள் கலங்கியது. தியாகராஜன் பனித்த விழிகளை இமைகளைக் கொட்டி சரிப்படுத்திக் கொள்ள சூழ்நிலையின் கனம் தாங்காமல் எஸ்.ஐ. ஒரு நிமிடம் மௌனமானார்.

“சார்.. காவ்யா சொல்வதைக் கேட்டீர்கள் அல்லவா..? இனி நான் அசோகனை கூப்பிட்டுக் கொண்டு போகலாம் இல்லையா..?”

“இல்லை. தியாகராஜன். இன்னும் விசாரணை பாக்கியிருக்கு. இவங்க உண்மையில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்களா இல்லையா..? உண்மையில் அன்று சாயந்திரத்திலிருந்து காலை வரை திருநெல்வேலிக்குப் பயணம் போனார்களா இல்லையா..? அப்படிப் போயிருந்தால் மறுநாள் காலையில் இவரைத் திருநெல் வேலியில் பார்த்த சாட்சி ஏதாவது இருக்குமில்லையா..? அவரையும் விசாரித்துக் கொள்ள வேண்டும்..” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போது ‘இதோ நீ கேட்ட இன்னொரு சாட்சி’யென்பது போல் ஆனந்தன் பாய்ந்து காவ்யாவின் முடிiக் கொத்தாகப் பிடித்து கன்னம் கன்னமாய் அறையலானான்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link