Chapter 14
காவ்யாவின் வீட்டை அடைந்ததும் காரை விட்டிறங்கி அவர்கள் சென்று காலிங் பெல்லில் கை வைக்கும் முன்னரே கதவு திறந்தது. ராமநாதன் நின்றிருந்தார்.
“கார் சத்தம் கேட்டவுடன் நினைச்சேன். கடன்காரன் எவனோ உயிரை எடுக்க வந்திருக்கான்னு நினைச்சது சரியாப் போச்சு. என்னடா வேணும்.” என்று அவர் அதட்ட மங்களம் ‘பொறுமையாய் இரு..’ என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினாள்.
“சார் என் பெயர் தான் அசோகன்.”
“அசோக சக்ரவர்த்தி பெயரெல்லாம் நல்லாத்தான்டா வைச்சிருக்கே. விளக்குமாத்துக்கு பெயர் பட்டுக் குஞ்சலமாம். பெயர் சொல்லி விளக்குகிறான். இங்கே என்னத்துக்குடா வந்தே..? அதைச் சொல்லு. உன்னை..? வெத்தலை பாக்கு வைத்து அழைத்தேனா நான்..?”
அசோகனின் முகம் மாற மங்களம் அவசரமாகப் பேசினாள்.
“அசோகா! பெரியவர் கோபமாய் இருக்கிறார். நாம் தான் பொறுத்துப் போகணும். ஐயா! என் பெயர் மங்களம். இவனோட நண்பன் தியாகராஜனோட அம்மா நான்.”
“ஓகோ! என் குடியைக் கெடுத்த வக்கீலைப் பெத்த மகராசி நீதானா..? நல்ல மகனைப் பெற்றிருந்தால் பெருமையாச் சொல்லிக்கலாம். இந்த மாதிரி கோடாரிக் காம்பை பெத்து வைச்சுக்கிட்டு எங்கேம்மா வந்த பெருமை பேசிக்கிட்டு…?”
அசோகன் ஆத்திரமானான். மங்களம் தடுக்க, தடுக்க.
“இதோ பாருங்கள் சார். நீங்க கோபப்பட வேண்டியது என்கிட்ட.. என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க. அடிங்க, கொல்லுங்க. ஆனால் அம்மாவை மட்டும் பேசாதீங்க.” என்று ஆத்திரப்பட்டான்..
“அடேங்கப்பா! உங்க வீட்டுப் பெண்களைப் பேசினால் மட்டும் என்னமா கோபம் வருது. அதே எங்க வீட்டுப் பெண்ணாயிருந்தால் வீட்டை விட்டு வெளியேற வைப்பே.. போலீஸ் ஸ்டேசனில் நிப்பாட்டுவே. ஏன்னா நீயும் உன் பிரெண்டும் கெட்டிக்காரன்க. நான் கேணப் பையன் பாரு. உங்க அம்மாவைப் பேசினால் என்னடா பண்ணுவ..? கொலை பண்ணிடுவியா கொலைகாரப்பாவி. இதில் இவன் என்னவோ நியாயக்காரனாம்.. நான் இவனை அடிக்கணுமாம். ஏன்.. இவனை கொலைகூட பண்ணிக்கலாமாம். நான் ஏண்டா உன்னைக் கொலை பண்ணனும்..? எங்களுக்கு கொலையெல்லாம் பண்ணிப் பழக்கமில்லை. அது உன் பழக்கம்டா..”
மங்களம் பதறிப் போனாள்.
“அசோகா. பொறு. நீ எதுவும் பேசாதே. ஐயா..! நீங்க ரொம்பக் கோபமா இருக்கீங்க. உங்க கோபம் நியாயம் தான். ஆனால் நாங்க பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க..”
“இது என் காதும்மா.. நான் கொடுக்க முடியாது..”
அசோகன் முறைக்க மங்களம் மீண்டும் அவனை சமாதானப்படுத்தினாள்.
“இருடா.. அவர்தான் கோபத்தில் இருக்காருன்னு தெரியுமில்லை. பொறுமையா இரு. ஐயா.. உங்க மனைவி இருந்தால் கொஞ்சம் கூப்பிடுங்களேன். நாங்க அவங்க கிட்ட பேசணும்.”
“ஏன்.. வீட்டில் மிச்சம் இருக்கிற பொம்பளை அவள் மட்டும் தான். அவளையும் வீட்டை விட்டு ஓடி வர வைக்கப் போறியா..?”
மங்களமே சலிப்படைந்து விட்டாள். இவரிடம் பேசுவதைவிட குட்டிச் சுவரில் தலையை மோதிக் கொள்ளலாம். மகன் ஏன் தோற்றுப் போனான்..? காவ்யா ஏன் வீட்டிற்குத் தெரியாமல் சாட்சி சொல்ல வந்தாள்..? என்று இப்போது அவளுக்குப் புரிந்தது. இருப்பினும் பெண் விசயமல்லவா..? காவ்யாவின் முகத்திற்காக விக்ரமாதித்தன் போல் மீண்டும் முயற்சியைத் தொடர்ந்தாள்.
“ஐயா.. வீட்டுப் பொம்பளைகளுக்கு நல்லது கெட்டது நாலும் தெரியும். அவங்க கிட்டப் பேசினால் அவங்க புரிஞ்சுக்குவாங்க.”
“என் வீட்டுப் பொம்பளைக்கு நல்லது மட்டும்தான் தெரியும். உன் கிட்ட பேசினால்தான் கெட்டதும் தெரிய வரும். அதனால் அவள் பேச வரமாட்டாள். நீ நடையைக் கட்டு.”
அசோகன் கோபத்தில் கை முஷ்டியை மடக்கியே விட்டான். ஆனால் அந்த நேரம் சுவரில் மாட்டப்பட்டிருந்த காவ்யாவின் படத்தைக் கண்டதும் அவன் கோபம் பறந்தோடியது. இது காவ்யாவின் குடும்பம்.. இவர் காவ்யாவைப் பெற்றவர். அவன் பொறுமையை சிதற விட்டால் காவ்யாவை அவள் வீட்டில் சேர்க்க முடியாது. அவன் குடும்பமில்லாமல் அநாதையாய் வாழ்வது போதாதா..? அவன் முகத்தில விழித்த பாவத்திற்கு அவள் குடும்பமிருந்தும் அநாதையாய் வாழ வேண்டுமா..? ‘பொறுமணமே பொறு’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ‘என்ன நடந்தாலும் சகித்துக் கொள். காவ்யாவிற்காக’ என்று கூறிக் கொண்டவன் ராமநாதனிடம் பணிந்து பேசினான்.
“சார் உங்கள் காலில் வேணும்னாலும் விழுகிறேன். உங்க பெண் மேல் எந்தத் தப்புமில்லை. தயவு செய்து உங்கள் பெண்ணை ஏத்துக்கங்க..”
“யாருடா என் பொண்ணு. ஓடுகாலியெல்லாம் என் பொண்ணு கிடையாதுடா..”
மங்களம் தவிப்புடன் குறுக்கிட்டாள்.
“ஐயா.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் பெத்த பெண்ணைப் பற்றி உங்களுக்குத்தான் நல்லாத் தெரியும். அது தங்கமான பொண்ணுன்னு நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியணுங்கிற அவசியமில்லை. அந்தக் குணவதி சொல்கிற ஒற்றை வார்த்தையிலே ஒரு குற்றமில்லாதவன் உயிர் ஊசலாடுதுன்னா அந்தக் குழந்தை என்னய்யா செய்யும்..? வந்து அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்லி நம்மைக் காப்பாத்தின நல்ல மனிதனை நாமும் காப்பாத்துவோம்னு ஒரு நல்ல பொண்ணு நினைக்கும். உங்க பொண்ணு நல்ல மனசுள்ள பொண்ணு. நல்லது பண்ணியிருக்கு..”
“நல்லது பண்ணிட்டாள்ல. நீயே நடு வீட்டில் வைத்துக் கொள். ஏன் இங்கே வந்து என் உயிரை வாங்கறே. ஆனால் நீ வைத்துக் கொள்ள மாட்டே. பெண்ணில்லையா..? நாளைக்குக் கல்யாணம் பண்ணனும். சீர் வரிசை செய்யணும். கடைசி வரைக்கும் வைத்துக் தாங்கணும். அதையெல்லாம் செய்ய பெத்தவன் இந்த இளிச்சவாயன் வேண்டும். ஆனால் அவள் நல்லது செய்வதை மட்டும் உனக்குச் செய்யணும். என்னம்மா.. நியாயம் பேசுறம்மா நீ..”
“ஐயா.. இப்படிப் பேசினால் எப்படிங்க..?”
“உனக்கு நல்லது பண்ணியிருக்கா.. நீ கொண்டாடு.. எனக்கு அது கெடுதலாயிடுச்சே.. அதான் அவள் செத்துப் போனாள்னு அவள் போட்டோவுக்கு மாலை போட்டுக் கும்பிடறேன்.”
அப்போதுதான் அசோகனுக்கு அது உறைத்தது. அவசரமாய் சுவரில் மாட்டியிருந்த காவ்யாவின் போட்டோவைப் பார்த்தான். அதற்கு மாலை போடப்பட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்திருந்தார்கள். ஏதோ வித்தியாசம் முதலில் அவள் போட்டோவை அவன் பார்த்த போதே அவனுக்குப் புலப்பட்டது. ஆனால் பரபரப்பில் அவன் மனதில் அது பதிவாகவில்லை. அசோகனும், மங்களமும் உறைந்துபோன அதே நேரம் உள்ளே அறைக்குள் நடைபிணமாய் படுத்திருந்த பர்வதம் தற்செயலாய் பேச்சுக்குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தவள் அசோகனைக் கண்டதும் ஆவேசம் கொண்டவளாய் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கலானாள்.
“அடேய் கொலைகாரப்பாவி! சண்டாளா..! என் ஆவியை குடிச்சிட்டியேலே. நீ நல்லா இருப்பியா..? ஒத்தப் பொண்ணை உயிரைக் கொடுத்து வளர்த்தேனே. அதை உறவு முறையெல்லாம் அறுத்துப் போட்டு விட்டு உன்னைத் தேடி ஓடிவர வச்சிட்டியேலே. அவளை ஒழுங்கா வைச்சுப் பிழைக்கிறயா..? இல்லை அவளையும் கொன்னு புதைச்சிட்டியா..?”
“அம்மா உள்ளே போங்க..” என்று அதுவரை தந்தையைப் பேச விட்டு விட்டு அமைதியாக இருந்த ஆனந்தன் அதட்ட,
“அவள் பேசட்டும் ஆனந்தா. அவளைப் பேச விடு.” என்றார் ராமநாதன்.. ஒன்றும் புரியாதவனாய் மகன் தந்தையின் முகம் பார்த்தான். கல்லாகிப் போயிருந்த ராமநாதனின் முகத்திலிருந்து அவனால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று வளர்ந்தவன் அவன். உடனே மௌனமானான். பர்வதம் தொடர்ந்து அசோகனைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டேயிருந்தாள்.
“என் பொண்ணு தங்கம்லே. தகரத்தை நம்பி ஓடியாந்துட்டா. அவ தரம் தெரிந்து வைச்சுப் பிழைப்பியாலே..? அவ பச்சை மண்ணுலே. அடிச்சா அழுகக் கூடத் தெரியாதுலே நான் பெத்த கண்ணிற்கு.. அவளை இந்தப் பாவிகள் போட்டோவுக்கு மாலை போட்டுக் கும்பிட வைச்சுட்டியேலே. அவளை இவங்க சொல்ற மாதிரி சாகடிக்கப் போறியா இல்லை வாழ வைக்கப் போறியா..? சொல்லுலே. என் பெத்த வயிறு பத்தி எரியுதுலே. என் கண்ணுக்குள்ள வைச்சு பொத்திப் பொத்தி வளர்த்தேனே. எங்கண்ணைப் பறிச்சுக்கிட்டுப் போயிட்டியேலே. அவளை உன் கண்ணுக்குள் வைச்சுப் பார்ப்பியாலே..? சொல்லுலே.. சொல்லுலே..” என்று நெஞ்சினில் அறைந்து கொண்டு அவள் கதறியழுக ராமநாதன் வெளியே தள்ள அவசியமே யில்லாமல் வெளியேறிய அசோகன், மங்களம் தொடர்ந்து ஓடி வந்து ஏறியதைக் கூட கவனிக்காமல் அவள் ஏறினாளா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் பேய் துரத்துவது போல் வண்டியை விரட்ட ஆரம்பித்தான்.
உள்ளே நின்றிருந்த ராமநாதன், “ஆனந்தா அவர்கள் போய் விட்டார்களா என்று பார்..” என்றார். வெளியே வந்து திறந்திருந்த கேட்டைப் பூட்டி விட்டு உள்ளே வந்து வாசல் கதவையும் சார்த்திய ஆனந்தன்,
“போயிட்டாங்கப்பா..” என்றான். உடனே காவ்யாவின் போட்டோவின் மேல் போடப்பட்டிருந்த மாலையையும், முன்னால் எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியையும் அகற்றியவர் மகளின் போட்டோவை எடுத்து விழிகளில் கண்ணீர் துளிர்க்கப் பார்த்தார். பர்வதம் புரியாதவளாய் கணவனின் முகம் பார்க்க, அதையே ஆனந்தன் வாய் விட்டுக் கேள்வியாய்க் கேட்டான்.
“அப்பா உங்கள் செயல் எதுவுமே எனக்கு விளங்காதது போலிருக்கிறது. நீங்கள் காவ்யாவை வெறுத்து ஒதுக்கியது போல் நடிக்கிறீர்களோன்னு தோன்றுகிறது.”
“ஆனந்தா! இது உனக்கு விளங்காமல் போனதில் அதிசயமில்லை. முப்பது வருடமாய் என்னோடு நிழல் போல் வாழ்ந்து வருகிற என் மனைவிக்கே என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லைங்கிறபோது.. நீ என்னடா..? என் மகன் தானே.. உனக்கு எங்கே புரியப் போகிறது.”
“என்னங்க..” என்று பர்வதம் கதறியழுது கணவனின் தோள் மேல் சாய மனைவியை ஆதரவாய் அணைத்துத் தட்டிக் கொடுத்தவர்.
“பர்வதம். இப்போ வந்திட்டுப் போனானே அசோகன். அவன் மேலும் தப்பில்லை. அவனுக்காக வீட்டை விட்டு வெளியே போனாளே காவ்யா.. அவள் மேலும் தப்பில்லை. ஆனால் நம்ம சமூகம் இருக்கிறதே அது நல்லதையே யோசிக்காது. தப்பைத் தான் யோசிக்கும். அசோகன் நம்ம பெண்ணைக் காப்பாற்றி கூட்டிக் கொண்டு வந்து விட்டது பகலில் இல்லை. இரவில். அதை நம்ம பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் ஒத்துக் கொண்டு விட்டாள். அவனுக்காக நம்மை உதறி விட்டுப் போகிற அளவுக்கு அவன் மேல் காவ்யாவுக்கு அக்கறையிருக்கு. நன்றிக் கடனிருக்கு. ஆனால் உலகம் என்ன சொல்லும்..? காவ்யாவுக்கு அசோகன் மேல் காதல்ன்னு சொல்லும். அவனுக்காக வீட்டை விட்டு ஓடிப் போனாள்ன்னு சொல்லும்..”
“அதுக்காக நம்ம பொண்ண கை விட்டு விடுவதா..?”
“இல்லைடி. கை பிடித்துக் கொடுத்திருக்கிறேன். அந்த அசோகனிடம். பர்வதம் அவன் நல்லவன்டி. நம்ம பெண்ணை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டான்..”
“அப்பா என்ன சொல்றீங்க..?”
“ஆமாம் ஆனந்தா. அவன் பொறுப்பானவன். நடுக் காட்டில் எத்தனை பேர் உயிரைப் பொருட் படுத்தாமல் ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றப் போராடுவார்கள்..? இவன் போராடியிருக்கிறான். வேலை வெட்டியை விட்டு நம்ம வீட்டுப் பெண்ணை பழுதில்லாமல் நம்ம கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கிறான். காவ்யா மட்டும் என்ன அவனுக்கு குறைந்தவளா..? நம் ஒரு பார்வைக்கு அஞ்சி நடந்த பெண் அவன் உயிரைக் காப்பாற்ற மானம் மரியாதையை லட்சியம் பண்ணாமல் வீட்டை விட்டுப் போகவில்லையா..? இந்தச் சூழ்நிலையில் அவனுக்குக் காவ்யாவைக் கொடுப்பது தான் சரி.”
“அப்போ நீங்களே கல்யாணம் பேசி முடித்திருக்கலாமே அப்பா..”
“அது நிர்பந்தம். இப்போது அவனுக்கு உருவாகி யிருப்பது கடமை. காவ்யா அவனது பொறுப்பாகி விட்டாள். கடமையைத் தட்டிக் கழிக்காதவன் அவன். என்ன செய்யப் போகிறான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனந்தா..! உன் பிரெண்ட் ரமேஷ் சென்னையில் தானே இருக்கிறான்..?”
“ஆமாம் அப்பா. அவனிடம் இப்போதே செல்போனில் பேசி விடுகிறேன் அசோகன், தியாகராஜன் இருவரின் வீட்டையும் கண் காணித்து உடனுக்குடன் விவரம் சொல்லச் சொல்கிறேன்.”
“நல்லது.. அப்படியே செய். பர்வதம் எழுந்து வா.. சாப்பிடு.. இப்போது போன அம்மாளைப் பார்த்தா யில்லையா..? அந்த அம்மாள் உன்னைப் போல் நூறு மடங்கு காவ்யாவைப் பார்த்துக் கொள்வாங்க.. எப்படிப்பட்ட பெண்மணின்னு பார்த்தேயில்ல.. அப்புறம் என்ன பயம்..? வலியில்லாம ஆபரேசன் பண்ண முடியாது. ஆபரேசன் பண்ணாம உயிர் பிழைக்க முடியாது. நாளைக்கு நம்ம பொண்ணு ஒரு சொல் வராமல் வாழணும்னா அசோகனைத் தான் கல்யாணம் செய்துக்கணும். அதுதுhன் முறை. எப்படி அசோகன் கொலை செய்யவில்லை என்பதற்கு காவ்யா மட்டுமே சாட்சியோ அதே போல் அந்த இரவில் அவளைத் துரத்திக் கொண்டு வந்த அயோக்கியனாலேயோ இல்லைக் காப்பாற்றிக் கூட்டி வந்த அசோகனாலேயோ காவ்யாவுக்கு எந்தவித ஆபத்தும் நேரவில்லை என்பதற்கு அசோகன் மட்டுமே சாட்சி.”
ஆனந்தனுக்குப் புரிந்தது. அவனும் ஆண் தானே. பர்வதத்திற்கும் புரிந்தது. அவளும் பெண் தானே. சீதைக்கே பழிச் சொல் வரும்போது சாமான்ய காவ்யாவிற்கு அது வராதா..? கணவன் கையாண்ட யுக்தி புரிந்ததால் அவள் நெஞ்சில் அமைதி பிறந்தது.
அங்கே பேய் துரத்துவது போல் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்த அசோகனைக் கவனித்த மங்களத்திற்கு அந்த முரட்டு மகன் தவிக்கும் தவிப்பு புரிந்தது. காவ்யாவின் தாய் தவித்த தவிப்பைத் தாங்காமல் அதை நினைத்து நினைத்து அவனது உயிர் துடித்தது. பர்வதத்தின் தாயுள்ளம் தவிக்கும் தவிப்பை மங்களத்தால் புரிந்து கொள்ள முடிந்தது. தகப்பனும், உடன் பிறந்தவனும் ஆயிரம் தான் பாசத்தில் குளிப்பாட்டினாலும் தாயின் இடத்தை அவர்களால் நிரப்ப முடியுமா..? மகளின் பாதுகாப்பை எண்ணி அந்தத் தாய் தவிப்பதை அறிந்து கொண்ட அதே தாய்மையுள்ளம் கொண்ட மங்களத்தின் மனம் ஒரு முடிவை எடுத்தது.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.