Chapter 17
அந்த அதிகாலை நேரத்திலும் பெருமாள் கோவிலில் கூட்டமிருந்தது. கோவில் வாசலில் எட்டு வேன்கள், ஆறு கார்கள் வரிசையாக அணி வகுத்து நிற்க அவற்றிலிருந்து அசோகனின் தெருவைச் சேர்ந்தவர்களும், அவனது டிராவல் ஏஜென்ஸியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் குடும்பத்தோடு வந்து இறங்கினர். திருமணப் பெண் அலங்கரத்தில் காவ்யா ஜொலித்தாள். உமா கைக் குழந்தையுடன் அருகில் நின்று கொண்டிருந்தாள். அசோகனின் நண்பர்கள் வட்டாரம் குடும்பத்துடன் கார்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். மங்களம் மூக்கு கண்ணாடியை சரி பண்ணிக் கொண்டு தியாகராஜனை அடிக்கடி அழைத்து உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டு இருக்க தியாகராஜன் தாயின் அருகே குனிந்து அவற்றைக் காதில் வாங்கிக் கொண்டு உடனுக்குடன் நிறைவேற்றினான். மெஸ் மாமி கண்களில் நீர் தளும்ப தன் பிள்ளைக்கு திருமணம் போல் பூரிப்புடன் வந்தவர்களை வரவேற்பதும் மற்ற திருமண ஏற்பாடுகளை மங்களத்தை கேட்டுக் கொண்டு செய்வதுமாக இங்கும் அங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தாள் ஊடே உமாவிடம் வந்து,
“நேற்று ராத்திரி அசோகன் வந்து விடிஞ்சா கல்யாணம் மாமின்னு சொன்னதும் மனசு நிறைஞ்சு போச்சுடி குழந்தே. உடனே கடையை அடைச்சிட்டேன். என் பிள்ளையாண்டன் கல்யாணம் முடிஞ்சு குடித்தனம் ஆரம்பிச்ச பின்னாடிதான் எனக்கு நிலை கொள்ளும். எங்காத்து கல்யாணம்டி இது. என் பிள்ளையாண்டன், மாட்டுப் பெண்ணுக்கு பக்கத்தில் நாள் பூரா நான்தாண்டி நிக்கணும். ஆத்திலே மாமாவைப் பார்த்துக்க ஆளை வைச்சுட்டேன். அவருக்கு முடியலை. இல்லேன்னா இந்தப் பிள்ளையாண்டனை மாலையும் கழுத்துமா பார்க்க ஓடியே வந்திடுவார்..” என்று வாய் கொள்ளாமல் பேசினவள் காவ்யாவிடம் வந்து அவள் கன்னத்தை திருஷ்டி வழித்து ரசித்தாள்.
“கொள்ளை அழகுடி மாட்டுப் பெண். என் கண்ணே பட்டுரும் போலிருக்கு. அடிபெண்ணே. எங்காத்து பிள்ளை காத்திருந்தாலும் காத்திருந்தான். கடைசியில் அப்ஸரஸைப் பிடிச்சுண்டுட்டான். பார்க்க மூக்கும் முழியும் லட்சணமா இப்பத்தான் தேவலோகத்தில் இருந்து இறங்கின மாதிரியில்ல இருக்கேடி. எங்க பிள்ளையாண்டன் கவிழ்ந்திட்டதில் ஆச்சரியமில்லைடி. எல்லோருக்கும் ஒரு மாமியார்ன்னா உனக்கு ரெண்டு மாமியாராக்கும். தியாகுவோட அம்மா ஒருத்தி. நான் ஒருத்தி. ஆனால் பயப்படாதே. உன்னை கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்குவோம். கண்ணில விரலை விட்டு ஆட்ட மாட்டோம். நாத்தனார் முறைக்கு உமாதான். உன்னை ஆட்டி வைக்க மாட்டா. நீ சொன்ன சொல்லுக்கு அவ ஆடுவா,” என்று வாய் கொள்ளாமல் கலகலவென்று பேசி அந்தத் திருமணத்தை களை கட்ட வைத்தாள் மெஸ் மாமி.
முதல்நாள் மாலை காவ்யாவின் வாயிலிருந்து ‘சம்மதம்’ என்று ஒரு சொல் வந்தவுடன் அசோகன் இறக்கை விரித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டான். தோள் கொடுக்கும் தோழனாய் தியாகராஜனும், தாங்கி நிற்கும் தாய், தங்கையாய் மங்களமும், உமாவும் இருக்க ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். திருமணத்திற்கு தேவையான துணிகள் மாங்கல்யம் வாங்க உமா சென்றுவிட மங்களமும், மெஸ் மாமியும் விருந்துக்கு தேவையான உணவு வகைகளை தீர்மானித்தனர். அவசரம் என்பதால் உயர்தர ஹோட்டலில் இருந்து வரவழைக்க தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். தியாகராஜனின் வீட்டின் முன்னாலும் அவன் வீட்டு மொட்டை மாடியிலும் ஷாமியானா கட்டப்பட்டது. பெருமாள் கோவிலில் கல்யாணம், அங்கேயே ரெஜிஸ்டாரை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்தல், தியாகராஜனின் பங்களா மாடியில் மூன்று வேளையும் விருந்து என்று முடிவு செய்யப்பட்டது.
அசோகன் தன் தெருக்களில் குடியிருந்தவர்கள், நண்பர்கள், டிராவல்ஸ் ஏஜென்ஸியில் வேலை பார்த்தவர்களை நேரில் சென்று அழைத்தான். தியாகராஜன் கோவில் மற்றும் ரெஜிஸ்டர் ஆபிஸ்களில் வேலைகளை முடித்தான். அனைவரும் மற்ற நெருங்கிய நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் சொன்னார்கள். அழைத்திருந்த அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அசோகன் காவ்யாவுக்கென்று நகைகள் வாங்கப்பணம் கொடுத்திருந்தான். உமா அழகான நகை செட்டை வாங்கி வந்திருந்தாள். அவற்றை அணிந்திருந்த காவ்யாவின் அழகு ஜொலித்தது.
கெட்டிமேளம் முழங்க, அனைவரும் வாழ்த்த இறைவனின் ஆலயத்தில் சுபயோக நேரத்தில் காவ்யாவின் கழுத்தில் தாலிகட்டி அவளை மனைவியாக்கிக் கொண்டான். திருமணத்தை முறைப்படி பதிவு பண்ணி விட்டு வந்தனர். தியாகுவின் இல்லத்தில் விருந்தினர் வந்து கொண்டே இருந்தனர். மாடியில் காலையில் ஆரம்பித்த திருமண விருந்து இரவு வரை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தந்த வேளைக்கு ஏற்ற உணவு வகைகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.
அதே நேரம் திருநெல்வேலியில் காவ்யாவின் பிறந்த வீட்டில் ஆனந்தனுக்கு அவனது நண்பனிடமிருந்து திருமணத் தகவல் செல்போன் மூலம் வந்தது. பேசி முடித்த ஆனந்தன் தந்தையிடம், “அப்பா” என்றான்.
“சொல்லுடா. என்ன சொன்னான் உன் பிரண்ட்..?”
“காவ்யாவிற்கு இன்று காலையில் பார்த்தசாரதி கோவிலில் கல்யாணம் முடிந்து விட்டது. அசோகன் ஒரு குறையுமில்லாமல் சிறப்பாய் கல்யாணத்தை நடத்தி நம் காவ்யாவிற்கு தாலி கட்டி விட்டானாம். கல்யாணத்தை பதிவு கூட பண்ணிவிட்டானாம்.”
“என்னலே சொல்றே.. என் பொண்ணு கல்யாணம் முடிஞ்சிட்டதா..?” என்று பர்வதம் கண்கலங்க,
“அழாதேடி. நான் என்ன சொன்னேன்..? அசோகன் கடமையை தட்டிக் கழிக்கிறவனில்லை.. நம்ம பொண்ணுக்குச் சீர் செஞ்சு கல்யாணம் பண்ணியிருக்கான். ஒரு குறையும் இல்லாம வாழவைப்பான் பாரு..” என்று செல்லமாய் கடிந்து கொண்டார் ராமநாதன்.
“அது சரி. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை அவன், இவன்னு, சொல்லிக்கிட்டு.. இனிமேல் மரியாதையாய் ‘அவர்’ன்னு சொல்லிப் பழகுங்க..” என்று அவள் பதிலுக்கு கடிந்து கொள்ள, “இதைப் பாருடா..” என்று உரக்க சப்தம் போட்டு ராமநாதன் சிரிக்க ஆனந்தனும் சேர்ந்து சிரித்தான். வெகு நாள்களுக்குப் பின்னர் அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது.
சென்னையில் தியாகராஜன் இல்லத்தில் இரவு விருந்து முடிந்திருந்தது. விருந்தினர் சென்று வீடு விழா நிகழ்வின் களைப்புடன் சோம்பல் கலந்து காட்சி அளித்தது. மெஸ் மாமி மங்களத்திடம் விடைபெற வந்தார்.
“ஹோட்டல்காரங்க கிட்ட அவா பாத்திரங்களை யெல்லாம் ஒப்படைச்சாச்சு. வேலையாளை விட்டு மாடியை அலம்பி முடிச்சாச்சு. இனி நீ பார்த்துக் கிறியாடியம்மா. அவர் தனியா இருப்பார். நான் போய்த்தான் துணைக்கு இருக்கிறவாளை அனுப்பணும்.” என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோது அங்கே தியாகராஜனும் உமாவும் வந்தார்கள். உமாவைப் பார்த்த மங்களம் மெஸ் மாமியிடம், “கொஞ்சம் பொறுங்க,” என்றவள் உமாவிடம், “பொண்ணு மாப்பிள்ளைக்கு ரூம் ரெடி பண்ணிட்டயா,” என்று கேட்டாள். “அதைத் தான்ம்மா சொல்ல வந்தேன்..” என்றான் தியாகராஜன்.
“அந்த ராஸ்கல் பிடிவாதமாய் அவன் ரூமுக்கு காவ்யாவை அழைத்துக்கிட்டு இப்போதே போகணும்கிறான்.”
“என்னடா இது புதிதாய் இருக்கிறது. அந்த ஒற்றை ரூமில் பெண்டாட்டியோடு புதுக்குடித்தனம் பண்ணனும் கிறானா..? அசோகா, அசோகா,” என்று மங்களம் அழைக்க அசோகன் வந்தான்.
“ஏண்டா..? தியாகு சொல்வது உண்மையா..? நீ இப்போதே கிளம்ப வேண்டும்னியா..?”
“ஆமாம்மா.. நாங்க இப்போதே கிளம்புகிறோம்,” என்ற அசோகன் மெஸ் மாமியிடம் திரும்பி, “மாமி இருங்க சேர்ந்தே போகலாம். உங்களை வீட்டில் விட்டு விட்டுப் போகிறோம்.” என்றான். மங்களம் பல்லைக் கடித்தாள்.
“ஏண்டா உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு..? மாடி வீட்டை காலி பண்ண ஒரு மாதம் டைம் கேட்டிருக்காங்கன்னு சொன்னியே. அது வரைக்கும் நீயும், காவ்யாவும் நம்ம வீட்டிலேயே இருங்க எங்கும் போக வேண்டாம்.”
“ஐ ஆம் சாரிம்மா. நானும் காவ்யாவும் இப்போதே கிளம்புவதாய் இருக்கோம். அதில் எந்தவித மாற்றமுமில்லை. ஒற்றை ரூமாய் இருந்தாலென்ன..? நான் இருக்குமிடத்தில் அவளும் இருக்கட்டும்,” என்று தீர்மானமாய் அசோகன் கூறிவிட்டான். மங்களமும், தியாகராஜனும், உமாவும் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் கேட்க மறுத்துவிட்டு உடும்புப் பிடியாய் கிளம்புவதில் குறியாக நிற்கவும் வேறு வழியின்றி அனைவரும் தம்பதிகளை அனுப்ப இசைந்தனர்.
“டேய் உன் மனதில் ஒன்றை நினைத்திட்டால் அதிலேயே குறியா இருப்பேடா. உன்னை மாற்ற முடியாது. தியாகு, உமா நீங்க இரண்டு பேரும் கூடப்போய் விட்டு விட்டு வாங்க. உமா போகும்போது பால், பழமெல்லாம் நம்ம வீட்டில் இருந்து கொண்டு போய் விடு,” என்று மங்களம் கூற உமா தலையாட்டி விட்டு காவ்யாவை கிளப்பச் சென்றாள்.
மங்களத்தின் பாதம் பணிந்த மணமக்கள் காரில் ஏறினர். வழியில் மெஸ் மாமியின் வீட்டில் அவளை இறக்கி விட்டுவிட்டு அசோகனின் ரூமிற்கு சென்றனர். தியாகராஜனையும் அசோகனையும் சிறிது நேரம் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு உமா அறையை சுத்தம் செய்து அலங்கரித்து முடித்த பின்னர் அவர்களை அழைக்க இருவரும் இறங்கி வந்தனர். உமாவும் தியாகராஜனும் கிளம்பிச் சென்றபின் அறையில் தனித்து விடப்பட்ட அசோகனும் காவ்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.