Chapter 20

0Shares

காதல் வயப்பட்ட அசோகன் அவளை நெருங்கி சிவந்திருந்த அவள் முகத்தை தன்புறத்தில் திருப்பினான். அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் அவள். எத்தனை முயன்றும்  அவள் முகத்தை நிமிர்த்த முடியாமல் போக பேரலையாய் எழுந்த உணர்வுகளுடன் அவளை இறுகக் கட்டிக் கொண்டான் அவன். எத்தனை யுகங்கள் என்று தோன்றிய நிமிடங்கள் ஓட அவன் அவள் காதருகில் குனிந்து.

“ஏய்ய்.. இன்று என்னடி புது கரிசனம்.. உன் புருசன் மீது..?” என்று கேட்டான்.

“அதை இப்போ சொல்ல மாட்டேன்..” என்று அவன் பிடியிலிருந்து அவள் விலகி எழ,

“எங்கே போகிறாய்..?” என்று அவளை விட மறுத்து தனக்குள் அடக்கிக் கொண்டவன் கேட்டான். “கோவிலுக்குப் போக வேண்டும்..” என்றாள் காவ்யா..

“எந்தக் கோவிலுக்கு..?” என்று அவன் காதலுடன் வினவ அவன் மார்பில் விரல்களால் கோலமிட்டபடி, “அஷ்டலட்சுமி கோவிலுக்கு..” என்றாள் காவ்யா.

“அந்தக் கோவில் உனக்குப் பிடிக்குமா…?” என்று அவன் வினவ,

“ஆமாம். என்னை கூட்டிப் போவீர்களா..? ப்ளீஸ்..” என்றாள் அவள்.

“இதுக்குப் போய் ப்ளீஸ் போடுவானேன். இன்று முழுவதும் உன்னுடன்தான். ஏஜென்ஸிக்கு போன் பண்ணி சொல்லிவிடுகிறேன். நீ குளித்து டிரஸ் பண்ணிக் கிளம்பு..” என்றவன் போனில் தொழில் விசயம் பேச ஆரம்பிக்க அவள் உள்ளே போனாள்.

சற்று நேரத்தில் இருவரும் குளித்து முடித்து குதூகலமாய் காரில் கிளம்பினார்கள். அருகில் அமர்ந்திருந்த மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தபடி காரை ஓட்டினான் அசோகன். நீல வண்ணப்பட்டு உடுத்தியிருந்தாள். நீண்ட பின்னலில் முல்லைச் சரம் சூடியிருந்தாள். காதுகளில் கல் ஜிமிக்கி ஆட, கழுத்தில் கல் அட்டிகை போட்டு கை நிறைய பொன் வளையல்கள் குழுங்க பேசிக் கொண்டு வந்தவளைப் பார்த்து,

‘இந்த ஜ்வலிப்பு எனக்குச் சொந்தமா..?’ என்ற பிரமிப்பு தட்டியது.

“ஏன் காவ்யா..? இப்போது எவ்வளவு அழகாய் பாந்தமாய் இருக்கிறாய் தெரியுமா..? இந்த வீட்டிற்கு வந்தவுடன் போட்டுக் கொள்ளும் இந்த நகைகளை முதலில் எல்லாம் ஏன் போட மறுத்தாய்..?” என்று அவன் வினவ,

“எல்லாம் காரணமாகத்தான்..” என்று சிரித்தாள் அவள்.

“என்ன காரணம்..?” என்று கேட்டவனிடம்,

“அப்புறம் சொல்கிறேன். இப்போது கோவிலுக்குப் போகலாம்..” என்றாள் அவள்.

கோவிலருகே காரை நிறுத்திப் பூட்டிவிட்டு இறங்கி நடந்தார்கள். ஒவ்வொரு சந்நிதானத்திலும் ஒவ்வொரு தேவியிடமும் கண்மூடி பக்திப் பரவசத்துடன் வேண்டிக் கொண்டிருந்தவளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். தரிசனம் முடிந்ததும் கோவிலுக்கு வெளியே வந்து கடலோரம் நடந்தார்கள்.. கடல் காற்றில் அவள் புடவை முந்தானை அவன் முகத்தில் மோத அவளுடன் இணைந்து நடக்கையில் அவன் மனம் மிக லேசானது. எங்கிருந்தோ உல்லாசம் மிதந்து வந்து அவனுள் குடிபுகுந்து கொள்ள ஆனந்தமானான். வழக்கமான சீழ்க்கை யொலி அவன் உதடுகளில் ஒலிக்க இருகைகளையும் பேன்ட் பாக்கெட்டில் விட்டவாறு நடந்தான். காவ்யா அவனை அள்ளி விழுங்கி விடுவதுபோல் பார்க்க அதைக் கவனித்தவன் சீழ்கையை நிறுத்தாமல் புருவத்தை ‘என்ன’ என்பதாக உயர்த்தினான்.

“இப்போதுதான் நான் முதன்முதலில் உங்களைப் பார்த்தபோது எப்படி இருந்தீங்களோ அப்படியிருக்கீங்க,” என்றாள் காவ்யா.

“என்னை முதன் முதலாய் பார்த்தபோது என்ன நினைத்தாய்..?” என்று சீழ்க்கையிலே அவன் பாடலாகப் பாட,

“நான் உன்னை நினைத்தேன்..” என்று பதிலுக்கு இனிய குரலில் வாய்விட்டுப் பாடியவள் புன்னகையோடு மணலில் அமர்ந்தாள். அவளருகே மணலில் வானம் பார்த்தபடி அண்ணாந்து கைகளை தலையணை போல் கொடுத்து படுத்த அசோகன்,

“காவ்யா..” என்று மென்மையாக அழைத்தான்.

அவள்,”ம்ம்ம்..” என்றபடி அவனைப் பார்த்தாள்.

“சென்னையில்தான் இருக்கிறேன்.. இந்தக் கோவிலுக்கு வந்ததில்லை. வெண்மையான கடைசலுடன் எவ்வளவு அழகான பளிங்குக்கோவில்..? நீ இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவாயா..?” என்று கேட்டான்.

“இங்கே படித்த மூன்று வருடங்களும் வெள்ளிக் கிழமையானால் என் தோழி ஹரிதாவுடன் வந்துவிடுவேன். மகாலட்சுமி என் இஷ்ட தெய்வம்.”

“அப்போது நமக்கு பெண் பிறந்தால் மகாலட்சுமின்னு பேர் வைத்து விடலாம்.”

குழந்தையின் பேச்சை எடுத்ததும் பேச முடியாமல் சங்கோஜப்பட்டவள், தலைகுனிந்து கொண்டு மணலில் கோலம் போட்டாள். அவளையே ஒருக்களித்து மணலில் படுத்துக்கொண்டு கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்த வாறு பார்த்துக் கொண்டு இருந்தவன், “மணலில் என்ன எழுதுகிறாய் காவ்யா..?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை,” என்று கிசுகிசுப்பாக பதில் சொன்னாள்.

“ஒன்றுமே…யில்லையா..?” என்று கிறங்கிய குரலில் வினவினான்.

பதிலுக்கு அவள் மோகனமாய் நகைத்தாள்.. அந்த நகைப்பில் மயங்கியவன் தாபத்தோடு எழுந்து அவள் விரல்களைப் பற்றினான். மன்மதன் கரும்பு வில்லையெடுத்து அதில் மலரம்பைப் பூட்டி நாணேற்றி அந்த இருவரையும் குறி பார்த்தான். அவன் விடுத்த 

அம்பு குறி தவறாமல் அந்த இருவரையும் தாக்கி மலர் வளையத்தில் சிக்கிக் கொள்ள வைத்தது. காலம் அப்படியே நகர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. ஆனால் காவ்யாவோடு சிறிது விளையாடிப் பார்க்க ஆசைப்பட்ட காலம் கலகலவென நகைத்தது ஹரிதாவின் உருவத்தில்.

“காவ்யா” என்ற ஆரவாரமான குரல் கேட்டு கணவனிடமிருந்து விலகி அமர்ந்த காவ்யா திரும்பிப் பார்த்தாள். பார்த்தவள் “ஹரிதா..” என்றாள் ஆனந்தக் கூச்சலாய், ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்ட ஹரிதாவிற்கு மூச்சு இரைத்தது.

“காவ்யா நீ தானேடி. நீயேதானடி. என்னால் நம்பவே முடியலை..”

“ஏண்டி நம்ப முடியாமல் போகிற அளவுக்கு அடையாளம் தெரியாமல் நான் மாறிவிட்டேனா..?” என்று சிரித்த படி ஹரிதாவின் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தாள்.

“ரிசல்ட் வந்துவிட்டது காவ்யா.. நீ தான் காலேஜ் பர்ஸ்ட். யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியிருக்கடி. நீ சர்டிபிகேட் வாங்கக் கூட வரவில்லைன்னு காலேஜில் சொன்னாங்க.. அதனால் உன்னைப் பார்க்க திருநெல்வேலிக்கு உன் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே உங்க அப்பாவும், அண்ணாவும் ஆயிரம் கதை சொன்னாங்க..” என்று மூச்சு விடாமல் ஹரிதா பேசிக் கொண்டே போக, ‘திருநெல்வேலி’ என்ற பெயரைக் கேட்டதும் முகம் சுருங்கி விட்ட 

அசோகன் சட்டென்று எழுந்து மணலை தட்டி விட்டுவிட்டு கடலோரம் சென்று நடக்க ஆரம்பித்தான்.

“காவ்யா.. அவர்தானே உன் ஹஸ்பெண்ட்..? வெரி ஹேண்ட்சம்டி..” என்று ஹரிதா கூற,

“அவர் என் ஹஸ்பெண்ட்தான் என்பதை எப்படிக் கண்டுபிடித்தாய்..?” என்று காவ்யா குறும்பாகக் கேட்டாள்.

“ஆ…ஆ… நான் பின்னாலிருந்து வரும்போதே உங்க ரெண்டு பேரோட ரொமான்ஸைப் பார்த்துட்டேன் மேடம்… அம்மா பாட்டு பாடறாங்க ஐயா சைட் அடிக்கிறாரு..”

“அப்புறம் ஏண்டி பூஜை வேளைக்கரடியாய் குறுக்கே வந்தாய்..?”

“கொஞ்ச நேரம் கழித்து வரலாம்ன்னு நினைத்தால் நேரமில்லையே. இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம். அப்பா வந்து விடுவார் பெங்களூருக்குப் போகணும்.”

“சும்மா உன்னோடு வம்பிழுக்க சொன்னேன்டி. நாங்க வீட்டில் போய் கொஞ்சிக்குவோம். என் ஆசை ஹரிதா வோடு பேசுவதை விட வேறு முக்கியமான வேலை எனக்கு இப்போது இல்லை. சொல்லு நீ எப்படி இருக்கே..? எவ்வளவு மார்க் வாங்கின..? மேலே என்ன படிக்கப் போகிற..?”

“அதையேன் கேட்கிற..? என் ஐடியா இப்போது மாறிவிட்டது..” என்று கூறிய ஹரிதாவின் முகம் குங்குமமாய் சிவக்க,

“வாரே.. வாஹ்.. கடைசியில் அப்படிப் போகிறதா கதை..? கள்ளி! யாரடி இந்தக் கள்ளியின் உள்ளம் கவர்ந்த கள்வன்..?” என்று காவ்யா கேட்டாள்.

“அவர் பெயர் முகேஷ். பாம்பேயில் பெரிய பிஸினஸ்மேன். அப்பாவின் நண்பரின் மகன். படிக்கணுமா.. எவ்வளவு வேண்டுமானாலும் படி. என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு பாம்பே வந்து படின்னார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். அதற்காகத்தாண்டி.. என் கல்யாண இன்விடேசனை உனக்கும் உன் வீட்டிற்கும் கொடுக்க திருநெல்வேலி போனேன். நீயில்லை.. உன் அம்மா நீ காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னாங்க.. உன் அப்பாவும், அண்ணாவும் உன் கணவரைப் பற்றி ரொம்பப் பெருமையா பேசினார்கள்.”

பேசிக் கொண்டிருந்தவளை அவசரமாய் இடைமறித்தாள் காவ்யா..

“என்னடி.. என்னடி சொன்னே.. அப்பாவும் அண்ணனும் என் ஹஸ்பெண்டை பத்திப் பெருமையா பேசினாங்களா உண்மையாத்தான் சொல்கிறாயா..?”

“நம்பமுடியவில்லைதானே. அம்மா எல்லாம் சொன்னாங்க காவ்யா.. நீ தனியா ஊருக்கு கிளம்பியதில் ஆரம்பித்து இன்றுவரை என்ன நடந்ததுன்னு சொன்னாங்க. நாணயத்திற்கு இருபக்கம் காவ்யா. அப்பாவோட பக்கம் என்னன்னா எப்படி அசோகன் கொலை குற்றவாளி யில்லையென்பதற்கு நீ சாட்சியோ அதுபோல் நீ சுத்தமானவள் என்பதற்கு அசோகன் மட்டுமே சாட்சி என்பதுதான். அசோகன் நல்லவர், நேர்மையானவர்ன்னு அப்பா நம்பினார். நம்புகிறார். அதனால் உன்னைக் காப்பாற்றும் கடமையை அசோகனுக்கு உருவாக்கினார். அவர் கணக்குத் தப்பவில்லை. அசோகன் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டார். காவ்யா ஆனந்தனண்ணா சொல்கிறார் உன் கணவர் தொழிலில் கெட்டிக்காரராம். பணக்காரர் என்ற பந்தா கிடையாதாம். அம்மா சொல்றாங்க ‘எங்க காவ்யா மகாராணி போல் வாழறாள்’ன்னு. ‘இவ்வளவு பாசத்தை வைத்துக் கொண்டு ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்’ன்னு நான் கேட்டேன். காலம் வரும். காவ்யாவின் கணவருக்கு எங்கள் மேல் உள்ள கோபம் குறையும். அதுவரை தள்ளியிருந்து எங்கள் வீட்டுப் பெண் வாழ்வதை பார்க்கிறோம்ன்னு சொல்றாங்க..” ஹரிதா சொல்லச் சொல்ல காவ்யாவின் கண்ணீர் பெருகியது. இழந்த சொந்தம் என்று நினைத்தது நிலைத்த சொந்தம் என்று ஆனதை அறிந்த ஆனந்தக் கண்ணீரா..? இல்லை கொடுமைக்காரனாக தன்னை காட்டிக் கொண்டு மகளைத் தியாகம் செய்த தந்தை செய்த தியாகத்தை எண்ணியதால் வந்த கண்ணீரா..? சொல்லத் தெரியவில்லை காவ்யாவிற்கு.

கடலோரம் சென்ற அசோகன் திரும்பி வந்தான். காவ்யாவின் கண்ணீர் கண்டதும் அவன் புருவங்கள் உயர்ந்தன. ஹரிதாவின் பக்கம் கோபமாய் திரும்பி,

“ஹலோ. நீங்கள் திருநெல்வேலி போய் வந்தால் உங்கள் மனதோடு அங்கே நடந்தவைகளை வைத்துக் கொள்ள மாட்டீர்களா.? அந்த ராட்சஷர்கள் திட்டினதை அப்படியே இங்கே வந்து கொட்ட வேண்டுமா..?” என்று பொரிந்தவன் காவ்யாவின் பக்கம் திரும்பி, “உன் அண்ணன், அப்பா பேச்சை இப்படியே கடலோடு விட்டு விட்டு வருவதானால் என் கூட வா. இல்லையென்றால் இங்கேயே உட்கார்ந்து அழு..” என்றபடி காரை நோக்கி நடக்கலானான்.

அவனது கோபத்தை வாய் பிளக்க பார்த்து நின்ற ஹரிதா,

“ஹலோ மாப்பிள்ளை சார்.. நீங்க என்ன எங்க காவ்யாவை அம்போன்னு விட்டுவிட்டுப் போகலாம்ன்னு பார்த்தீங்களா..? அது ஒன்னும் அவ்வளவு ஈஸியில்லை சார். காலேஜில் படிக்கும்போது வினோத்துன்னு ஒரு பணக்கார ஹீரோ சுற்றி சுற்றி வந்தான். அவனைத் திரும்பிக் கூட பார்க்காதவள் உங்க பின்னால் நாய்குட்டி மாதிரி ஓடி வருகிறாள். எல்லாம் தாலிக்கயிறு செய்த மாயம். ம்ம்.. ஜமாயுங்கள். நீங்க உங்க பெண்டாட்டியை கூட்டிக் கொண்டு போங்க சார். என்னைக் கூட்டிக் கொண்டு போக என் அப்பா வந்துவிட்டார். என் கல்யாணத்திற்கு என் பிரண்டை கூட்டிக் கொண்டு வரமாட்டேன்னு சொல்லிடாதீங்க சார்.. கருணை காட்டுங்கள்,” என்றவள் ‘களுக்’கென்று சிரித்தபடி காவ்யா வின் காதில் “சூப்பர் ஹீரோவை பிடிச்சிருக்கடி. பெண்டாட்டி கண்ணில் கண்ணீரைப் பார்த்தால் என்னமா கோபம் வருது. ம்ம்… என் முகேஷ் இந்த அளவுக்கு இருக்கணும்..” என்று கூறி விட்டுக் கையாட்டிக் கொண்டே காத்திருந்த காரில் போய் ஏறிக் கொண்டாள்.

ஹரிதா சென்றபின் மௌனம் ஒரு போர்வையாய் காவ்யாவையும் அசோகனையும் சுற்றிக் கொள்ள ஆளுக்கொரு நினைவுடன் அவர்களது காரை நோக்கிச் சென்றார்கள்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link