Chapter 22

0Shares

மனதில் நினைத்ததை மெஸ்மாமி அப்படியே சொல்லி விட காவ்யா திகைத்தாள். ‘இவளென்ன யட்சினியா..? மனதில் நினைத்ததை மனதில் புகுந்து பார்த்தது போல் அப்படியே சொல்கிறாளே..’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையில்,

“என்னடி திகைச்சுப் போயிட்ட. என்னடா மாமி மனசில் நினைச்சதைக் கண்டு பிடிச்சிட்டாள்னா.. நானும் உன் வயசைத்தாண்டி வந்தவ தாண்டிக் கொழந்தே! பொம்மனாட்டி வீம்பு எனக்குத் தெரியாதா..? ஆனா மாட்டுப் பொண்ணே! நீயொன்னை மறந்திட்ட. பொம்மனாட்டி வீம்பு பிடிச்சா ஆம்படையான் என்ன நினைப்பான். அவளுக்கு நம்மை பிடிக்கலைன்னு நினைச்சிர மாட்டானாடி..?”

“என்ன மாமி இப்படிச் சொல்றீங்க. அவரைப் பிடிக்காமலா கல்யாணம் செய்துக்கிட்டேன்..? எவ்வளவு கம்பீரமானவர் அவர். அந்த உயரமும், செதுக்கிய முகமும், சிறுமை கண்டு பொங்கும் கோபமும் அவரோடு சேர்ந்து நடந்துபோனால் எனக்குச் சிலிர்த்துப்போகும் மாமி. இவருக்கு மனைவியா வர நாம் என்ன புண்ணியம் செய்திருக்கோமோன்னு தோணும் மாமி.”

“அடித்தங்கமே!” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினாள் மாமி.

“இவ்வளவு ஆசையை உன் ஆம்படையான் மேல வைச்சிருக்கியே. இதில ஒரு துளியையாவது அவன்கிட்ட சொல்லப்படாதோ. புருசன் பொண்டாட்டிக்குள்ளே ஊடல் வரலாம்டி ஆனால் அதை முளைக்கும்போதே கிள்ளி எறிஞ்சுடணும். இல்லை அது வேர் விட்டு மரம் ஆகிருச்சுன்னுவை வெட்டுறது கஷ்டம். மாமி சொல்லிட்டேன். கெட்டிக்காரத்தனமாய் பிழைச்சுக்கோ. பாருடி காவ்யா நீ புத்திசாலியா இருந்தால் மட்டும் போதாது. கெட்டிக்காரியாயும் இருக்கணும். முதல்ல உன் ஆம்படை யான் மனசில் என்ன இருக்குன்னு கண்டுபிடித்து சரி பண்ணப்பாரு. சரி. நாழியாயிடுத்து. நான் கிளம்பறேண்டி.”

மெஸ்மாமி போய்விட்டாள். காவ்யா சிந்தனையில் ஆழ்ந்தாள். மதியம் உணவிற்காக அசோகன் வீடு திரும்பிய போது காவ்யா ஒரு முடிவோடு எதிர்கொண்டாள். டைனிங் டேபிளில் அவன் கைகழுவி விட்டு அமர சமையலறையில் நுழைந்தவள், உள்ளே பாத்திரங்களை ஓசையுடன் உருட்டினாள். காத்திருந்த அசோகனின் முன் சப்தம் எழுப்பியவாறு, ‘ணங்’கென்ற ஓசையுடன் பாத்திரங்களை வைத்தாள்.

“எதுக்கு இப்போ பாத்திரங்களை உடைக்கிற..? மெல்ல வைக்கத் தெரியாதா..?”

“உடைக்கலை சாமி. நான் எதற்கு உங்கள் வீட்டுப் பாத்திரங்களை உடைக்கப் போகிறேன்..? நாதியில்லாத வளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கீங்கள்ல. அதிகாரம் பண்ணுங்க.”

“என்னடி பேச்சு திசை மாறுது..? உன் வீடு, என் வீடுன்னு பேச்செல்லாம் பெரிய பேச்சா வருது. இதில் வாழ்க்கை கொடுத்திருக்கேன்னு வேற சொல்ற. நல்லாயில்லை. சொல்லிட்டேன்.”

“எதுதான் நல்லாயிருக்கு இந்த வீட்டில்..?”

“ஆமாடி இந்த வீட்டில் எதுவும் நல்லாயிருக்காதுதான். அந்த வினோத் வீட்டில் எல்லாம் சரியாக இருந்திருக்கும்..”

“எந்த வினோத்..?” என்று புரியாமல் கேட்டவளுக்கு மூளையில் மின்னலடித்தது. இவன் பெற்றவர்கள் மேல் கோபமாய் இருக்கிறான் என்று நினைத்தது தவறாகி விட்டது. கதை இப்படிப் போகிறதா..? வெகுண்டு எழுந்து விட்டாள் காவ்யா.. அப்படியே அவனது முன்னுச்சி முடியைப் பிடித்து அவன் முகத்தின் நேரே குனிந்து பேசினாள்.

“என்ன சொன்னே? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லு. என்னை யாருன்னு நினைச்சே..? உன்னை நினைச்சுக்கிட்டு நான் உருகி வழிகிறேன். நீயானால் மனதில் தோணினதை பேசிட்டேல்ல. இதுக்காகவா உன் கிட்டத் தாலியை வாங்கிக்கிட்டேன்.?”

அசோகன் பரிதவித்துப் போய் விட்டான். முதன் முதலாய் அவனை நினைத்து உருகுவதாய் அவள் சொல்கிறாள். “இல்லை காவ்யா…”

“எது இல்லை..? உன் மனதில் அந்த வினோத் மேல் காட்டம் இல்லையா..?”

“அது.. அந்த ஹரிதா அன்னைக்குச் சொன்னதை வைத்துச் சொல்லிட்டேன் காவ்யா.”

“அவ என்ன சொன்னாள்..? அவன் என் பின்னால் சுற்றினான். நான் அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லைன்னு தானே சொன்னாள். யார் மேல் யார் பொறாமைப்படுவது..? நீயும் அவனும் ஒன்றா..? உன் கால் தூசி பெறுவானா அவன்..? அவனை எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னேனில்லை. ஏன் பிடிக்காதுன்னு தெரியுமா..? நாங்க காலேஜில் படித்துக்கிட்டு இருந்தப்போ ஒரு சம்பவம் நடந்தது. எங்க காலேஜில் படிக்கும் ஒரு பெண் பஸ் ஸ்டாப்பில் நின்னுக்கிட்டு இருந்தப்போ அவனும் அவன் நண்பர்களும் ஈவ் டீஸிங் செய்ததில் அந்தப் பெண் ரோட்டில் தடுமாறி விழுந்து பின்னந் தலையில் அடிபட்டு ஸ்பாட்டிலேயே செத்துப் போனாள். இவன் அதைத் தட்டிக் கேட்காதது மட்டுமில்லை. பின்னால் கோர்ட்டில் அவன் நண்பர்களுக்கு ஆதரவா சாட்சி சொன்னான். அவனைப் பார்த்தாலே கொன்னுடணும்னு எனக்கு வெறி வரும். அவன் பெயரைக் கேட்டாலே குமட்டும். உடம்பு பதறும் அருவெறுப்பில் வெறுத்துப் போய் விடுவேன். அவன் ஒரு ஆண் மகனா..? பெண்மையை அவமானப்படுத்துபவன் அவமரியாதை செய்பவன் ஒரு நல்ல தாய்க்கு மகனாக இருக்க முடியுமா..?” அவள் உடல் பதறப் பேச அவள் நிலையையும் ஆவேசத்தையும் கண்டு அவன் பதறிப் போனான்.

“போதும் காவ்யா. போதும் ஏதோ சிறு பிள்ளைத்தனமாய் கேட்டு விட்டேன். விட்டுவிடு,”

“எப்படி விட முடியும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு நீ மனசுக்குள் தோன்றியதைப் பேசுவ. நான் கேட்டுக் கொண்டிருக்கனுமா..? இதற்கு என்ன காரணம். நீ ஆண் பிள்ளைங்கிற திமிர்தானே..”

“காவ்யா உன் மனதிற்குப் பிடித்தா என்னைத் திருமணம் செய்தாய்..? சூழ்நிலையால்தானே..?”

“எதை வைத்து உன்னை எனக்குப் பிடிக்காதுன்னு சொல்கிறாய்..? உன்னை முதன் முதலில் பார்த்தபோதே உன் கம்பீரத்திலும், ரௌத்ரத்திலும் மனதைப் பறி கொடுத்தவள் நான்.”

“ரௌத்ரமா..?”

“ஆமாம். ரௌத்ரம்தான். பாரதியார் என்ன சொன்னார் தெரியுமா..? ‘ரௌத்ரம் பழகு’ன்னு சொன்னார். ரௌத்ரம் ஆண்மைக்கு அழகு. சிறுமைகண்டு பொங்கா விட்டால் அவன் ஆண் மகனேயில்லைன்னு நினைப்பவள் நான். சிறுமையை செய்த வினோத்தை மதிப்பேனா..? கண்முன் நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்காத அவனெல்லாம் ஒரு மனிதப் பிறவியா..? நீ தட்டிக் கேட்டாயே. முன் பின் தெரியாத எனக்காக உன் உயிரையும் பொருட்படுத்தாமல் கத்தியோடு நின்றிருந்தவன் மேல் பாய்ந்தாயே. எனக்கு சிறுமை வந்துவிடக் கூடாது என்பதற்காக கொலைப் பழியை ஏற்றுக் கொண்டு என் பெயரை போலீஸில் மறைத்தாயே. அதற்குப் பின்னால் என்னைப் பெற்றவர்கள் கை கழுவி விட்டுப் போனபோது என்னைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் தாலி கட்டி எனக்கு வாழ்க்கை கொடுத்தாயே. உன்னைப் போன்ற ஒரு மனிதன் என் கணவனாக கிடைக்க நான் ஏழேழு ஜென்மத்திலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.” ஆத்திரத்தில் முகம் சிவந்தது காவ்யாவிற்கு,

“மன்னித்து விடு காவ்யா. என்னை மன்னித்து விடு. இந்த உலகமே என்னை நீதாண்டா ராஜான்னு சொல்லி யிருந்தாலும் சந்தோசப்பட்டிருக்க மாட்டேன். உன் மனதில் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுத் திருக்கிறாயே. எனக்கு அது போதும் காவ்யா..” அவன் குழந்தையாய் அவள் கைகளில் முகம் புதைத்துக் கொள்ள ஆவேசம் வடிந்து அவள் மெல்ல மெல்ல அமைதியானாள். அவன் தலையை விரல்களால் அளைந்தபடி,

“போகட்டும் விடுங்க. நீங்க என்னைத் தெரிஞ்சுக் கலைங்கிற கோபத்தில் பேசி விட்டேன். அது சரி நாம் மனது விட்டுப் பேசினால் தானே ஒருத்தரையொருத்தர் தெரிந்திருக்க முடியும். பேசலாம்ன்னு அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போனோம். அங்கே ஹரிதா வந்திட்டா..” என்று சொன்னாள்..

“சும்மா இல்லைடி.. பூஜை வேளை கரடியாய் வந்தாள்.”

அன்றைய நினைவில் அசோகன் கூற காவ்யா முகம் சிவந்தாள்.

“இங்கே பாருங்கள். பெண்கள் தங்களோட கணவனாக வரும் ஆண் மகனிடம் முதலில் என்ன விரும்பு வார்கள் தெரியுமா..? பாதுகாப்பை விரும்புவார்கள். நீங்கள் நமது முதல் சந்திப்பிலேயே என்னைப் பாதுகாத்தீர்கள். திருமணம் என்பதன் அடிப்படையே பெண்ணுக்கு பாதுகாப்பு என்பதுதான். அதைப் புரிந்துக்காமல் நீங்களிருந்தால் எப்படிங்க..?”

அசோகன் அவள் விரல்களைப் பற்றி ஒவ்வொன்றாய் சுண்டி இழுத்தவாறு பேசினான்.

“ஏண்டி. இவ்வளவு காதலையும், அன்பையும் என்மேல் வைச்சிருக்கியே. மனுசன் முதலிரவுன்னு எவ்வளவு ஆசையாய் நெருங்கி வந்தேன். அன்றைக்கு நீ எப்படி விலகிப் போனாய்…? சும்மாவும் விலகவில்லை. ஒரு மாதம் டைம் கேட்டு விலகினாய்..”

அவ்வளவுதான். இதைக் கேட்ட காவ்யா பொங்கிப் பொங்கிச் சிரித்தாள். கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்தாள். ஊடே, “கடவுளே” என்று கூறித் தலையில் அடித்துக் கொண்டு சிரித்தாள். அசோகன் புரியாமல் பேந்தப் பேந்த விழித்து “என்னடி..?” என்று கேட்டான்.

“என்ன, என்னடி..? இந்த வீட்டைக் காலி பண்ணிக்குடுக்க குடியிருந்தவர் எவ்வளவு நாள் டைம் கேட்டிருந்தார்னு சொன்னீங்க..”

“ஏன் ஒரு மாதம் டைம் கேட்டிருந்தார்..?”

“அந்த ஒரு மாதம் தானே நானும் டைம் கேட்டேன்.?”

“புரியவில்லை காவ்யா. அது ஒரு ரூம் தான் என்பதற் காகவா டைம் கேட்டாய்..? அப்படின்னா சின்ன ஸ்டவ் வாங்கி வைத்துச் சமைத்துப் போட நீ தயங்கவில்லையே..”

“ம்ம்.. மரமண்டை, சமைப்பதும் மற்றதும் ஒன்னா..? பேச்சு மட்டும் வாய் கிழியுது. நானே சொல்கிறேன். அந்த ரூம் எங்கேயிருக்கு..?”

“ஏன் மாடிப்படி கிட்ட எடுத்தவுடன் முதலில் அந்த ரூம் தானே..”

“மாடிப்படிக்கு அடியில் என்ன இருக்கு..?”

“ஜெராக்ஸ் அன்ட் எஸ்.டி.டி பூத் இருக்கு..”

“அது இருபத்தி நாலு மணி நேரமும் வொர்க் பண்ணுகிற பூத்துதானே..?”

“ஆமாம் காவ்யா. நீயென்ன நம்ம வாழ்க்கைக்கும் கடைக்கும் என்ன சம்பந்தம்..?”

“அது சரி.. ஐயாவோட ரூமுக்கு மரக்கதவா.. இல்லை கிரில் கதவா..? என்ன கதவுன்னு சொல்லுங்க. சம்பந்தம் இருக்கா இல்லையான்னு நான் சொல்கிறேன்.”

“ஏய்ய்ய்…” அவனுக்குப் புரிந்து விட்டது. அவன் ரூமின் கதவு சல்லடையாய் பூ வேலை செய்த கிரில் கதவு. அதன் ஓட்டைகள் மூலம் நன்கு உள்ளே பார்க்க முடியும். தனிக்கட்டை. பிரம்மச்சாரி. இரவு தூங்க மட்டும் அறைக்கு வருபவன் கண்ணில் அது ஒரு பெரிய விசயமாகப் பட்டதே இல்லை. அதனால் தான் காவ்யா வந்தவுடன் மிகக் கனமான திரைச்சீலை வாங்கிப் போட்டு மறைத்திருக்கிறாள்.

“புரிந்ததா சார்..? குடிசையானாலும் நம்ம வீட்டில் தான் இருக்கணும்னு நீங்க நினைச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சது. அந்த ரூமிலிருந்து வீட்டிற்கு வர குடியிருந்தவர் கேட்ட ஒரு மாத டைமை நானும் கேட்டேன்.”

“நல்ல வேளைடி. அவங்க ஒரு மாதத்தில் காலி பண்ணிட்டாங்க ஒரு வருடம்ன்னு இழுத்திருந்தால் என் கதி என்னாகிறது..? ஏண்டி இதை என்கிட்ட முன்னாடியே இது இது.. இப்படி இப்படின்னு சொல்லியிருக்கலாமில்ல..”

“எது எது எப்படி எப்படின்னு.. எப்படி என் வாயால் சொல்லுவதாம்..?” காவ்யா நாணத்துடன் வினவினாள்..

அசோகன் ஆமோதிப்பாய் தலை அசைத்தான். முதல் நாளிலேயே இதை எப்படிச் சொல்லுவாள்..? காவ்யா வெட்கமும் மென்மையும் நிறைந்த பெண். புது வீடு போய் பால் காய்ச்சிய அன்று பின் நிகழ்ந்ததும்.. நினைவுக்கு வர அவன் மூச்சு சூடேறியது. இவன் தான் மடத்தனமாய் இத்தனை நாளும் விலகியிருந்தது… அவன் எண்ண வோட்டத்தை தடுத்து நிறுத்தியது காவ்யாவின் குரல்.

“அப்புறம். ஐயா மனசுக்குள்ள பெரிய பட்டிமன்றம் நடத்தறாப்புல இருக்கே..”

“அதுவா உன் தலையில் ஓங்கி குட்டு வைக்கவா.. இல்லை கன்னத்தில்…” என்றவன் செயலில் இறங்க காவ்யா விலகாமல், “இது மதிய நேரம்…” என்று முணுமுணுத்தாள்.

“ஆமாடி.. இனிமே டைம் சொன்னே கொன்னுடுவேன்..” என்றவன் ஆவேசமாய் சேர்த்து அணைக்க காவ்யா பேச்சிழந்து இன்ப சாகரத்தில் மூழ்கினாள்.

0Shares

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link