Chapter 24
அசோகனின் வீட்டு முன்னால் கார் வந்து நின்றது. அசோகனும், தியாகராஜனும் முன் கதவைத் திறந்து கொண்டு இறங்கினார்கள். அசோகன் காரின் பின் கதவைத் திறந்து விட காவ்யா இறங்கி உள்ளே அமர்ந்திருந்த மங்களத்தின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள். மங்களம் இறங்க,
“காவ்யா குழந்தையோடு நில்லுடி..” என்றவாறு மெஸ்மாமி ஆரத்தித் தட்டோடு வந்து ஆரத்தி எடுத்து காவ்யாவையும், குழந்தையையும் அழைத்துச் சென்றாள். மாடியேறும்போது அசோகன் வந்து குழந்தையை வாங்கிக் கொள்ள,
“டேய் அப்பா. ஸீன் போடாதேடா..” என்று அவன் முதுகில் அறைந்தான் தியாகு.
“குழந்தையை வைத்துக்கிட்டு எப்படிடா படி ஏறுவாள்..” என்றான் அசோகன் கரிசனையாக, எல்லோரும் உள்ளே சென்று அமர்ந்தவுடன் மங்களம்,
“அசோகா. வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்கே. சரி. கொஞ்ச நாள் சமையலுக்கு ஆள் வைத்து விடு. காவ்யா பச்சை உடம்புக்காரி..” என்றாள்.
“அதெல்லாம் ஆள் வந்தாச்சு.. நம்ம மெஸ்ஸில் வேலை பார்த்தவள் தான். நல்லா சமைப்பாள். அங்கயற்கண்ணின்னு பேரு. கார்த்தாலேயே வந்து வேலையை ஆரம்பிச்சுட்டா. பிள்ளை குட்டியெல்லாம் பெற்று வளர்த்து கல்யாணமும் பண்ணிக் கொடுத்து பேரன் பேத்தியெல்லாம் பார்த்தவ. குழந்தைக்கு குளிப்பாட்ட காவ்யாவுக்கு பூண்டுக் குழம்புன்னு பத்திய சாப்பாடும் செய்வா. கோழிக் குழம்புன்னு உங்களவா அசைவ சமையலும் செய்து தூள் பரத்துவா..” என்றாள் மெஸ் மாமி.
“மாமி வாயில் கோழிக் குழம்புகிற பேர் வருகிறதா..?” என்று ஆச்சர்யமாய் வினவினான் தியாகராஜன். மங்களம் சிரித்தாள்.
“நெருப்புன்னா வாய் வெந்திடுமா..? அசைவ சாப்பாடுன்னா அசோகன் பிளந்து கட்டுவான். அவனை என் பிள்ளையாண்டானா நினைக்கலியா..? அவனுக்கு ஆன சமையலைச் செய்ய அதற்கான ஆளைத்தானே அனுப்ப முடியும்..” என்று மாமி சிரித்தாள். அனைவரும் குழந்தைக்கு புண்ணியாசனம் செய்ய தீர்மானித்து ஏற்பாடு செய்தனர். ஒரு மாதக் குழந்தையான அசோகனின் மதுரமான மகனுக்கு புண்ணியாசனம் செய்து ‘ஸ்ரீதரன்’ என்ற பெயரும் வைத்தனர். மனதிலிருந்த பிறந்த வீட்டுப் பாசத்தை மனதிலேயே புதைத்துக் கொண்டு வாழ்ந்தாள் காவ்யா.
ஒவ்வொரு நாளும் மகனின் வளர்ச்சி மாற்றங்களில் மனம் லயிப்பவள், ‘இவனை எப்போது அம்மாவிடம் காட்டுவோம். எப்போது அப்பா இவனைத் தூக்குவார்..? அண்ணன் கைகளில் இவன் எப்போது ஊஞ்சலாடுவான்..? என்ற ஏக்கம் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.’
பச்சைப் பசேலென்ற வயல் வெளியினூடே கார் போய்க் கொண்டிருந்தது. அசோகன் காரைச் செலுத்திக் கொண்டிருக்க மடியில் ஸ்ரீதரனை வைத்துக் கொண்டு காவ்யா அருகில் அமர்ந்திருந்தாள். பின் சீட்டில் மெஸ் மாமியும், வீட்டு சமையல் செய்யும் அங்கயற்கண்ணியும் அமர்ந்திருந்தனர். ஸ்ரீதரனின் முதல் வருடப் பிறந்த நாளைக் கொண்டாடி விட்டு அசோகனின்
பூர்வீக கிராமத்திற்கு ஸ்ரீதரனுக்கு குல தெய்வக் கோவிலில் முதல் மொட்டை போட வேண்டுமென்பதற்காக மொட்டையெடுத்த பின் அங்கேயே காது குத்தி விட முடிவு செய்து கிளம்பி வந்திருந்தனர். இரண்டு நாள்கள் அவர்களது கிராம வீட்டில் அவர்கள் தங்கி இருப்பது, இரண்டு நாள்கள் சென்ற பின்னர் மூன்றாம் நாள் தியாகராஜனின் குடும்பத்தார் சென்னையிலிருந்து வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்வது, நான்காம் நாள் குல தெய்வக் கோவிலில் மொட்டையடுத்து காது குத்தி விடுவது என்று பேசி முடிவு செய்திருந்தனர். கிராமத்தில் கார் நுழைந்தது. கிராம ஜனங்கள் ‘யார் புதிதாக ஊருக்குள் வந்திருக்கிறார்கள்..?’ என்று வியப்புடன் பேசியவாறு வேடிக்கைப் பார்க்கக் கூடிவிட அசோகனின் பெரிய பூர்விக கிராமத்து வீட்டின் முன் கார் சென்று நின்றது.
கார் கதவைத் திறந்து இறங்கிய அசோகனைக் கண்டதும்,
“அட நம்ம வேலாயுதத்தின் பேரன் நாராயணனின் மகன் வந்திருக்கான் போல இருக்கே…” என்று ஒரு பெரியவர் கூற உறவுக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
“ஏன் ராசா அம்மாப்பா போயிட்டால் இந்த ஊருமா இல்லாமப் போயிருச்சு..? கண்காணாமலே இத்தனை நாள் இருந்திட்டயே ராசா..” என்று ஒரு கிழவி கூறினாள்.
“இது யார் உன் பெண்டாட்டியா..? கண்ணுக்கு அழகா இருக்கம்மா..” என்று ஒரு பெண் கூறி அருகில் வந்து காவ்யாவின் முகம் பார்த்து திருஷ்டி கழித்தாள்.
“பையன் பிறந்திருக்கானா..? வாடா ராசாப் பயலே! உன்னால தான் உன் அப்பன் பிறந்த மண்ணில் கால் வைத்திருக்கிறான்..” என்று ஒரு பெண் கூறினாள்.
“எங்கே எந்தக் காட்டில் போய் பொழச்சாலும் பிள்ளை பிறந்திட்டா முதல் மொட்டை குல தெய்வம் கோவிலில் தான் போட வேண்டும். எந்தக் காட்டு ராசான்னாலும் குல தெய்வத்த தேடி வந்து தானே ஆகணும்..” என்று ஒரு பொக்கை வாய் கிழவி கூற அங்கே நீண்ட நேரம் கலகலப்பு இருந்தது.
அசோகனின் பிறந்த வீடு பெரிதாக நிலா முற்றத்துடன் சுற்றுப் பக்க அறைகளோடு அமைந்திருந்தது. அன்ன பூரணி வந்தவுடன் சமையல் வேலையை குத்தகைக்கு எடுத்துவிட மெஸ் மாமி, காhவ்யாவும் குழந்தையும் தங்க எற்பாடுகளைக் கவனித்தாள். வீடு சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. வீடு பூராவும் கிராமத்து மனிதர்களால் நிறைந்திருந்தது. அவர்களின் அன்பான விசாரிப்பைக் கேட்ட அசோகனுக்கு தாய் தந்தையே வந்து விசாரித்தது போல் இருந்தது.
அது ஒரு நெகிழ்வான உணர்வு. ஒவ்வொரு மனிதரும் தங்கள் வேர்களை சந்திக்கும்போது அதை உணர்வார்கள். சென்னையில் அவன் அசோகன். டிராவல் ஏஜன்ஸி வைத்திருப்பவன் காவ்யாவின் கணவன். ஸ்ரீதரனின் தந்தை. ஆனால் இந்தக் கிராமத்தில் அவன் வேலாயுதத்தின் பேரன். நாராயணனின் மகன். பிறந்த ஊர் பெற்ற தாயின் மடி. அந்த மண்ணை நேசிக்காமல் அம்பானி முதல் அடிமட்ட மனிதர் வரை இருக்க முடியாது. அசோகன் அந்த உணர்வுக் கலவையில் சிக்கியிருந்தான். இரண்டு நாள்களும் காவ்யாவுடன் மகனை வீட்டில் மெஸ் மாமி பொறுப்பில் விட்டு விட்டு தோட்டம், வயல்களை யெல்லாம் காண்பித்தான். காவ்யாவும் அவனுடன் கைகோர்த்தபடி அனைத்தையும் ரசித்தாள்.
இரண்டு நாள்கள் கழித்து மூன்றாம் நாள் தியாகராஜனின் குடும்பம் வந்து இணைந்து கொண்டது. விருந்து உண்டு பேசி மகிழ்ந்து வெகு நேரம் கழித்து முற்றத்தில் ஜமுக்காளம், பாய் விரித்து ஆண்கள் படுத்திருக்க சுற்று அறைகளில் பெண்கள் உறங்கினர்.
நான்காம் நாள் அதிகாலையில் அங்கயற்கண்ணி அதிகாலையிலேயே காபியுடன் அனைவரையும் எழுப்பி விட எல்லோரும் சீக்கிரம் குளித்து உணவுண்டு கோவிலுக்குச் கிளம்பிச் சென்றனர். கோவிலில் ஊர் பெரியவர்கள், மற்றும் உறவுக்காரர்களின் குடும்பத்தார் குழுமியிருந்தனர். அசோகனின் மகனுக்கு மொட்டை யெடுக்கக் கத்தியுடன் வந்த முடிவெட்டுபவர்,
“குழந்தைக்கு தாய்மாமன் எங்கே? தாய்மாமன் மடியில் உட்கார வைங்க..” என்று கூற, காவ்யா தியாகராஜனை அழைக்கத் திரும்ப,
“இதோ வந்து விட்டேன். என் மருமகனை என் மடியில் உட்கார வையுங்க..” என்றவாறு அங்கே போடப் பட்டிருந்த மனையில் அமர்ந்தது.. தியாகராஜன் அல்ல.. ஆனந்தன்!
“அண்ணா!” என்று கட்டிக் கொண்டவளின் தலையை யாரோ வருட நிமிர்ந்து பார்த்தாள். ராமநாதன்..!
“அப்பா…” என்று பாதம் பணிந்தாள் காவ்யா.
கோவிலுக்கு உள்ளே விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தை ராமநாதன் கொண்டு வந்திருந்த சீர்வரிசைத் தட்டுகள் நிரப்பின. மகளுக்கு நகைகள்.
பேரனுக்குத் தங்கத்தில் அரை ஞாண் கயிறு, தங்க வளையல்கள், சங்கிலி என்று அணிவகுத்து நின்றன பிறந்த வீட்டு சீர்வரிசைகள்.
காவ்யா தயக்கமாய் அசோகனைப் பார்க்க அவன் ஆதரவாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“நான் தான் அவர்களை வரச் சொன்னேன்..” என்று அவன் கூற அவள் திக்கு முக்காடிப் போனாள்.
“காவ்யா! பிறந்த மண்ணில் கால் வைத்ததற்கே எனக்கு இவ்வளவு ஆனந்தம் என்றால் பெற்றவர்கள், கூடப் பிறந்தவன் பாசத்தில் வளர்ந்த உனக்கு எப்படி இருந்திருக்கும். எல்லா மகிழ்ச்சியையும் உனக்குத் தந்து விட்டேன். உன் குடும்பத்தையும் உனக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டாமான்னு நினைச்சப்போதான் தாய்மாமன் மடியில் வைத்துத்தான் குழந்தைக்கு காது குத்தணும்கிற வழக்கத்தை ஊரில் சொல்லி உனக்குத் தகவல் தரச் சொன்னார்கள். தகவல் சொன்னதுதான் தாமதம். ‘இப்பவே கிளம்பி வருகிறோம். நீங்கள் அழைக்கும் ஒரு வார்த்தைக்காகத்தான் காத்திருந்தோம்ன்னு சொல்லிட்டுக் கிளம்பியும் வந்திட்டாங்க..’ என்றான் அசோகன்.
தாய்க்கு பிறந்த வீட்டை மீட்டுக் கொடுத்த காவ்யா வின் மகன் ஆனந்தமாய் தாய் மாமன் ஆனந்தனின் மடியில் அமர்ந்து மொட்டையெடுத்து காது குத்திக் கொண்டான்.
மாமனார், மாமியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மனைவி மகனுடன் திருநெல்வேலிக்கு மறு வீடு சென்றான் அசோகன்.
அம்பாசமுத்திரத்திற்கு கணவனுடன் சென்று பூ வைத்து அகிலா ஆனந்தனின் திருமணத்தை உறுதி செய்து திரும்பி வந்தாள் காவ்யா..
சுபயோக சுபதினத்தில் முதல் இரண்டு முடிச்சுக்களை ஆனந்தன் போட மூன்றாவது முடிச்சான நாத்தனார் முடிச்சைப் போட்டு ஆனந்தன் அகிலாவின் திருமணத்தை நடத்தி வைத்தாள் காவ்யா.
பர்வதம், “எனக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்” என்று பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமையாகக் கூறி வந்தாள். அசோகன் இரண்டாவது மகனாம். அகிலா இரண்டாவது மகளாம்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே அவர்களது அன்பிற்கும், பாசத்திற்கும் சாட்சியான நிலவு நகர்ந்தது.
…முற்றும்…
Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.