Chapter 06

0Shares

வாராது வந்த மாமணியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமில்லையா…?

நிவேதா அதில் முனைப்பு காட்டினாள்…

எந்த நொடியில் அவளுடைய அண்ணனுக்கு பார்க்க வந்திருக்கும் பெண்.. முகுந்தனின் தங்கைதான் என்று அவளுக்கு தெரிய வந்ததோ.. அந்த நொடியிலேயே அவள்தான் நித்தியானந்தத்திற்கு மனைவி என்று நிவேதா தீர்மானித்து விட்டாள்…

அங்கே.. இங்கே.. என்று ஓரிடத்தில் நிற்காமல் அலைந்து கொண்டிருக்கும் முகுந்தனின் வேர் இந்த வீட்டில்தானே இருக்கிறது.. 

இது அவனுடைய வீடு.. மாதங்கியைப் பெற்றவர்கள் தான் அவனுடைய பெற்றோர்…

எங்கே சுற்றினாலும் இளைப்பாற அவன் வீடு வந்து சேரத்தானே வேண்டும்…

அந்த வீட்டிற்குள் இயல்பாக நிவேதா வந்து போக வேண்டுமென்றால் அந்த வீட்டுக்கும் அவளுக்கும் சொந்தம் ஏற்பட வேண்டும்..

அந்த சொந்தத்தை உருவாக்கியே தீருவது என்ற பிடிவாதத்தோடு நிவேதா வாசல் பக்கம் பார்த்தாள்..

“என்னப்பா.. முகுந்தா.. ஒரு வாரமாய் ஆளைக் காணோம்.. இப்பத்தான் கண்ணில் தட்டுப்படற.. எங்கே போயிருந்தே..?”

பக்கத்து வீட்டுக்காரர் போல! இயல்பாக முகுந்தனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.. இப்படிக் கேள்வி கேட்கும் உரிமை தனக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள் நிவேதா…

“பிஸினெஸ் ஆரம்பிக்கிற விசயமா ஒரு ஃபிரண்டைப் பார்க்க ஹைதராபாத் வரைக்கும் போயிருந்தேன் அங்கிள்..”

“என்னவோ போ.. நீயும்தான் வானத்தில் பறந்துடணும்னு ஆளாய் பறக்கிற.. ஆனா.. இருக்கிறதையும் கோட்டை விட்டுட்டு நிற்கிற… உன் தங்கையைப் 

பெண் பார்க்க வருகிறப்போ.. அண்ணன்காரன் நீ முன்னாடி நிற்க வேணாமா..? உன் அப்பாவும்.. அம்மாவும் எவ்வளவு வேதனைப் பட்டாங்க தெரியுமா..? அவங்களும் தான் நீ இன்ஜினீயரா ஆன பின்னாலே குடும்பத்தைக் கை தூக்கி விட்டுருவன்னு கனவு கண்டாங்க.. நீ வேற கனவு கண்டுக்கிட்டு இருக்க.. இதில யாரு யாரைக் குத்தம் சொல்றது.. இப்பவாவது வந்து சேர்ந்தியே.. உள்ளே போ..”

முகுந்தனிடம் இந்த அளவுக்குக் கூட உரிமை பாராட்டி மனதிலிருப்பதைத் தயங்காமல் ஒருவர் பேசக்கூடுமா என்ற ஆச்சரியத்துடன் அந்த பக்கத்து வீட்டு மனிதரைப் பார்த்தாள் நிவேதா…

அவரோ சுவாதீனமாக உள்ளே வந்து கரம் குவித்தார்..

“வணக்கம்.. என் பெயர் சங்கரன்.. பக்கத்து வீடு.. நானும் சாரங்காபணியும் சின்ன வயசிலிருந்தே சிநேகிதமா இருந்தவங்க…”

அவர் சொன்னதை அங்கீகரிப்பதைப் போல மாதங்கியின் அப்பா சாரங்கபாணியும் புன்முறுவல் பூத்தார்..

“நாங்கதான் சிநேகிதங்க.. ஒண்ணாப் படிச்சோம்.. ஒரே கம்பெனியில் ஃபோர்மனா வேலைக்குச் சேர்ந்தோம்.. படிப்படியா முன்னேறி.. பக்கத்து.. பக்கத்தில் வீடு கட்டினோமுன்னா எங்களுக்கு வாய்ச்ச பெண்டாட்டிகள் எங்களை விட அதிகமா சிநேகிதிகளா ஆகிட்டாங்க.. என் பெண்டாட்டி கோதாவரிக்கு காலையில காபி போடறதுக்கு முன்னாலேயே இவன் பெண்டாட்டி வாசவியோட பேசிரணும்…”

அவரின் இயல்பான பேச்சை ரசித்துக் கேட்டார் மேகநாதன்…

கல்யாணியோ கடுப்புடன் நிவேதாவின் காதருகே முணுமுணுத்தாள்..

“பெண்ணைக் கண்ணில் காட்டாம.. பக்கத்து வீட்டுக்காரங்களைக் கண்ணில் காட்டறாங்க.. இவங்களோட கதையைக் கேட்கவா நாம இங்கே வந்தோம்..? என்ன குடும்பம்டி இது..”

அதைக் கேட்டவுடன் நிவேதாவுக்குள் பதட்டம் ஏற்பட்டது.. அவளுக்கு கல்யாணியின் குணம் தெரியும்.. ஒரு சிறு தீப்பொறி காற்றுப்பட்டால் பெருந்தீயாக மாறிவிடுவதைப் போன்றது கல்யாணியின் அதிருப்தி…

அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால் அதன் பின்விளைவு பெரிதாக மாறிவிடக் கூடும் என்ற பயத்துடன்..

“இதெல்லாம் நேச்சர்ம்மா..” என்று தாயிடம் சொன்னாள்..

“எது நேச்சர்..? இவங்க சிநேகிதத்தின் பெருமையை நம்மகிட்ட அளந்து விடறதுதான் நேச்சரா..?” கல்யாணி எரிச்சல்பட்டாள்…

அவளும்தான் என்ன செய்வாள்…? அவளுடைய பக்கத்து வீடுகள் அவளுக்கு பகையாய் இருந்தன.. எதிர் வீடுகளோ பெரும்பகையாய் இருந்தன…

இந்த லட்சணத்தில் பொழுது விடிந்து பொழுது போகும் வரை அக்கம் பக்கத்தில் உரசல் வராமல் இருக்க வேண்டுமே என்ற பயத்துடன் காலத்தைக் கழிப்பவளுக்கு.. பக்கத்து.. பக்கத்து வீடுகளில் சொந்தத்தையும் தாண்டிய சொந்தத்தைக் கொண்ட நட்புப் பிணைப்புடன் இருக்கும் குடும்பங்களின் கதையைக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வராதா..?

“அம்மா.. இதுவும் நல்லதுக்குத்தான்..”

“என்னத்தை இதில நல்லதைக் கண்டே..?”

“அக்கம் பக்கத்திலேயே இவ்வளவு அனுசரணையா இருக்கிறவங்க வீட்டில் வளர்ந்த பொண்ணு நம்ம வீட்டிலே உங்ககூட எவ்வளவு அனுசரணையா இருப்பா..?”

நாம் ஒன்று நினைக்க தெய்வம் தான் ஒன்று நினைக்கும்..

ஆனால் நிவேதா ஒன்றை நினைக்க.. கல்யாணி வேறு ஒன்றை நினைக்கலாமா..?

அவள் சண்டைக் கோழியாய் சிலிர்த்தபடி மகளை முறைத்தாள்…

“ஏண்டி.. அப்ப பக்கத்து வீடுகள்ல.. பகையாய் இருக்கிறவங்களெல்லாம் அனுசரணையா நடந்துக்க தெரியாதவங்களா..?”

‘ஆஹா.. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது என்பது இதுதான் போல..’

நிவேதா சுதாரித்துக் கொண்டாள்…

“என்னம்மா நீங்க இப்படி பேசறீங்க.. அதெப்படி அப்படிச் சொல்ல முடியும்..? நீங்க எவ்வளவு குணசாலின்னு எனக்கும்.. அப்பாவுக்கும் நல்லாத் தெரியுமே…”

பொருள் பொதிந்த பார்வையை மேகநாதனின் மேல் நிவேதா வீச.. பதில் பார்வையை அவரும் மகளின் பக்கம் வீசினார்..

“என்னடி.. இடக்கா..?”

மகளின் குணம் தெரிந்த கல்யாணி மடக்கினாள்..

“நிச்சயமா இப்ப நான் இடக்காப் பேசலை.. நீங்க பக்கத்து வீட்டுக்காரங்களால எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு எனக்கும் அப்பாவுக்கும் நல்லாத் தெரியும்…”

“அதைச் சொல்லு… பொழுது விடிஞ்சு.. பொழுது போகிற வரைக்கும் ஒரே பிரச்னைதானே..”

“நானும் சரி.. அப்பாவும்… அண்ணனும் சரி.. வேலைக்குப் போகிறோம்ன்னு தப்பித்துக் கொள்கிறோம்..”

“அதைச் சொல்லு.. வீட்டில் மாட்டிக்கிட்டவ நான் தானே…”

“பாவம்.. பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் உங்களுக்கு மூச்சு முட்டிப் போயிருக்கும்…”

“பைத்தியமே பிடிக்குதுடி..”

“அதுனாலதான் சொல்றேன்.. இந்த மாதிரி அனுசரணையான மருமகள் இருந்தால்.. அக்கம் பக்கத்து வீடுகளின் உறவு உங்களுக்கு எதுக்கு..? பேச்சுத் துணைக்கு பேச்சுத் துணையுமாச்சு.. உங்களையும் புரிந்து கொள்ள ஒரு ஆளும் கிடைச்சாச்சு.. இந்தப் பெண் வேலைக்கு போகலை.. நோட் திஸ்.. பாயிண்ட்..”

‘அதுதானே..’

கல்யாணி சிந்திக்க ஆரம்பித்து விட்டதை அவளது முகம் உணர்த்த, இன்னும் வீட்டுக்குள் வராத முகுந்தனை ஏக்கத்துடன் பார்த்தாள் நிவேதா..

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link