Chapter 09

0Shares

மாதங்கியை பார்ப்பதில் நித்தியானந்தன் மும்மரமாக இருக்க.. நிவேதாவின் பார்வை முகுந்தனின் பார்வையை சந்திக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது…

இறுக்கமான முகுத்துடன் சங்கரனின் அருகே அமர்ந்திருந்தவனின் பார்வை நிவேதாவின் பக்கம் திரும்பவேயில்லை…

“எங்க பொண்ணு அடக்கமான பொண்ணுங்க.. பெரியவங்க பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாது..”

கல்யாணியின் முகம் பார்த்துக் கூறினார் சங்கரன். அதில் மேகநாதனுக்கு சன்னமான வருத்தம் ஏற்பட்டது…

அது எப்படி.. அவர்களின் வீட்டின் முடிவுகளைக் கல்யாணிதான் எடுக்கிறாள் என்பதை வெளியாள்கள் எளிதாக உணர்ந்து விடுகிறார்கள் என்ற விந்தை இன்று வரை அவருக்கு புலப்படவே இல்லை.

“அப்படித்தான் இருக்கணும்..” என்றாள் கல்யாணி..

“அதிலயும் அவங்க அம்மா பேசினா.. உடனே கேட்டுக்கும். வாக்குவாதமே பண்ணாது.. வீட்டுப் பெண்களுக்கு எது நல்லது.. எது கெட்டதுன்னு தாய்மார்களுக்குத்தானே தெரியும்..? என்னங்கம்மா.. நான் சொல்றது சரிதானே…”

“ம்ஹூம்.. இதை தப்புன்னா என் பெண்டாட்டி சொல்லுவா..?” மேகநாதன் சங்கரனை ஒரு ‘மார்க்கமாக’ பார்த்து வைத்தார்…

மனைவியின் நாடியினை வேற்று மனிதன் சரியாக கணித்து வைத்திருக்கிறானே என்பது அவரது ஆற்றாமை..

சங்கரன் மேகநாதனின் பார்வையைக் கண்டு கொள்வதாகவே இல்லை…

நாத்தனாரின் மறைமுகமான ஆதரவு இருக்கும் அந்த வீட்டிற்கு மாதங்கியை மருமகளாக அனுப்பியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவராய் பேச்சைத் தொடர்ந்தார்..

“ரொம்பச் சரி.. ஆம்பளைக்கு என்ன தெரியும்…? வெளியே அலையத்தான் தெரியும்.. குடும்பத்தை கொண்டு செல்லுறது பொம்பளைதானே.. அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். என்னங்க… நான் சொல்கிறது..?”

“சரியாகச் சொன்னீங்கம்மா.. எங்க பொண்ணுக்கு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி வழி நடத்த நீங்கதான் சரியான ஆள்…”

“அதை உங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வந்தால் பார்த்துக்கலாம்..”

கல்யாணி பட்டுக்கத்தரிக்க.. மேகநாதன் குறுஞ்சிரிப்புடன் சங்கரனைப் பார்த்தார்…

‘இவருக்கு என் பெண்டாட்டியின் குணத்தைப் பற்றி இன்னும் தெரியலை போல.. என்னதான் ஜால்ரா போட்டாலும் அவ்வளவு சீக்கிரமாய் இவ மலையிறங்க மாட்டாளே.. அவளா மனசு வைச்சு மலையிறங்கினால் தான் உண்டு…’

கல்யாணியை மலையிறங்க வைக்கும் வித்தையை அறிந்திருந்த சங்கரன் இப்போது நிவேதாவைப் பார்த்தார்…

‘இது உன் முறை…’ என்று அவரது பார்வை கூற… நிவேதா பேச்சை ஆரம்பித்தாள்…

“நீங்க எந்த காலேஜில் படித்தீங்க அண்ணி…”

‘என் வீட்டுக்கு மருமகளாய் வந்தால் பார்த்துக்கலாம்’ என்று கூறிய கறார் கல்யாணியின் மகள் ‘அண்ணி..’ என்று அன்பாக அழைத்து வைக்க.. கல்யாணி மகளை முறைத்தாள்… மாதங்கியோ மனம் நெகிழ்ந்து போனவளாக தான் படித்த கல்லூரியின் பெயரைச் சொன்னாள்..

“உங்களுக்கு மியூசிக் பிடிக்குமா அண்ணி..?”

“எந்த பாட்டு பிடிக்கும் அண்ணி…?”

“புக்ஸ் படிப்பீங்களா அண்ணி..?”

“எந்த எழுத்தாளரின் கதை பிடிக்குமண்ணி..?”

அண்ணி.. அண்ணி என்று அழைத்து கேட்க நிவேதாவிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தன…

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கல்யாணி குறுக்கிட்டாள்.

“இதென்ன நிவேதா புதுப் பழக்கம்..?”

“எதும்மா..?”

“பொண்ணு பார்க்கத்தான் வந்திருக்கோம்.. இன்னும் பேசி முடிக்கலை.. அதுக்குள்ள ‘அண்ணி’ முறை சொல்லிக் கூப்பிடலாமா..?”

“போங்கம்மா.. நீங்க வேற.. எனக்கு இவங்களைப் பார்த்தா அண்ணின்னுதான் கூப்பிட வருது.. வேற மாதிரி பேச வரலை… என்ன அண்ணா.. நான் சொல்றது சரிதானே..”

சங்கரனின் பாணியை நிவேதா பின்பற்ற.. நித்தியானந்தனின் பார்வை ஆவலுடன் மாதங்கியின் மீது படிந்தது…

அவள் வெட்கத்துடன் முகம் சிவக்க.. அவனது முகத்தில் அதை அங்கீகரிக்கும் புன்சிரிப்பு தோன்றியது..

கல்யாணிக்கு திக்கென்று ஆகிவிட்டது…

முதன்முறையாக அவளது மகன்.. அவளின் அனுமதியின்றி பெண்ணின் முகத்தை தன்னிச்சையாக பார்த்து விட்டான். அவளுக்கு இது மிகப்பெரிய தோல்வி…

“கிளம்பலாமா…?” அவள் எழுந்து விட்டாள்…

“அப்போ..” பெண்ணைப் பெற்ற சாரங்கபாணி மேகநாதனின் முகம் பார்த்தார்.. அதில் கல்யாணிக்கு கோபம்…

“நல்ல பதிலைச் சொல்லுங்கம்மா…” சங்கரன் கல்யாணியின் முகம் பார்த்துப் பேசி… அவளது மனத்தாங்கலைச் சரி செய்தார்…

“யோசிச்சுப் பதில் சொல்கிறோம்..” கல்யாணி வாசலை நோக்கி நடந்து விட்டாள்…

“இதில் யோசிக்க என்ன இருக்கு..?” நிவேதா கோபப்பட்டாள்.

மாலை நேரக் காற்று தவழ்ந்து வர.. பால்கனியில் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்…

நித்தியானந்தனின் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பது கல்யாணிதான் என்று மேகநாதன் வெளிப்படையாகவே மனைவியை குற்றம் சாட்டினார்…

கணவரின் குற்றச்சாட்டை விட.. அதை கேட்டுக் கொண்டிருந்த மகன் மறுத்துப் பேசாமல் மௌனம் சாதித்தது கல்யாணிக்கு அதிர்வைத் தந்தது…

“நீங்களே பழி போடுகிறீங்களா.. எதையும் தீர யோசிச்சுத்தான் செய்யணும்..” என்றாள் அவள்…

“எத்தனை நாளாய்டி யோசிப்ப..? பொண்ணு வீட்டுக்காரங்க போன் மேல.. போனாப் போடறாங்க… பொண்ணு பார்த்துட்டு வந்து ஒருவாரத்துக்கும் மேலாகுது.. இல்லைன்னா முடியாதுன்னு சொல்லிவிடணும்… இரண்டையும் விட்டுட்டு இப்படி இழுத்தடிக்கிறது சரியில்ல கல்யாணி…” மேகநாதன் கோபக்குரலில் கூறினார்…

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link