Chapter 11

0Shares

விழுந்து.. விழுந்து டி.வி.எஸ். அப்பாச்சியை துடைத்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து…

“உனக்கு ஏன்டா இந்த வீண் வேலை…” என்று கேட்டார் சாரங்கபாணி..

“என்னடா கேள்வி கேட்கறே..? இன்ஜினீயருக்குப் படிச்சவன் நாலு இடத்திற்கு போய் வருவான்.. 

அதுக்கு அழுக்குப் பிடிச்ச வண்டியிலா போய் வர முடியும்..?”

வாசல் கேட்டைத் திறந்து உள்ளே வந்தபடி முகுந்தனின் சார்பாக பதிலைச் சொன்னார் சங்கரன்…

“நாலு இடத்திற்கு போய் வந்து என்னத்தை கிழிச்சான்..?”

சாரங்கபாணியின் உக்கிர பார்வைக்கு மட்டும் சக்தியிருந்தால் முகுந்தன் கஷ்டப்பட்டிருப்பான்…

நல்லவேளையாக அவருக்கு அந்த சக்தி இல்லையென்பதால் தப்பித்தான்..

“அவன் என்னத்தைக் கிழிக்கணும்..?”

“வேலை செய்து கிழிக்கணும்..”

“கிழிப்பான்.. கிழிப்பான்.. அதுக்கும் ஒரு நேரம் காலம் கூடிவர வேண்டாமா..?”

“இவனுக்கெல்லாம் கூடிவந்து.. என் வாயைப் பிடுங்காதே சங்கரா.. நான் எதையாவது பேசி வைச்சிருவேன்…”

“இப்ப மட்டும் ஒழுங்கா பேசிறியாக்கும்.. எப்பப் பாரு அவனைக் கரிச்சுக் கொட்டறதே உனக்கு வேலையாய் போச்சு..”

“நீ என்ன அவனுக்கே சப்போர்ட் பண்ற..?”

“என்னடா செய்யறது.. பெத்தவன் நீயும் சப்போர்ட் பண்றதில்லை.. பெத்த தாயும் சப்போர்ட் பண்றதில்லை.. கூடப்பிறந்த பாசத்தில் மாதங்கி மட்டும்தான் இவனுக்கு சப்போர்ட்டாய் நிற்கிறா.. அவ ஒருத்தியின் சப்போர்ட் மட்டும் போதுமா..? அதுதான் நானும் சேர்ந்துக்கிறேன்..”

“இவன் என்னத்தை கிழிச்சுட்டான்னு நான் சப்போர்ட் பண்ணனும்னு சொல்ற..? வேலைக்குப் போய் சம்பாதித்து வீட்டைக் காப்பாத்த வேணாம்… அவனைக் காப்பாத்திக் கலாமில்லையா..?”

“இப்ப அவனென்ன உன் காசிலா சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்..? அதுக்குத்தான் பணம் கொடுத்துடறானேடா…”

“அதெல்லாம் கெட்டிக்காரன்தான்.. மாசம் ஒரு வேலைன்னு பார்த்து சாப்பாட்டுக்கு பணத்தைத் கொடுத்து விடுகிற ரோசக்காரன்தான்.. அந்த ரோசத்தை மத்ததிலயும் காட்டணுமில்ல…”

“இப்ப உனக்கு என்னதான்டா பிரச்னை..? காலங்கார்த்தாலேயே அவனைக் கரிச்சுக் கொட்டிக்கிட்டு இருக்க..”

“வயிறு எரியுது சங்கரா.. இவனுக்கு பெண் தேடப் போனால்.. மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறாருன்னு கேட்கிறாங்க.. இவன் அந்த மாதம் பார்க்கும் வேலையைச் சொல்ல பயமாயிருக்கு.. இந்த வேலை இன்னும் எத்தனை நாளைக்கோ என்ற நினைப்பில் வேலையைப் பற்றிச் சொல்லத் தைரியமில்லாம வந்து விடுகிறேன்டா..”

அதுவரைக்கும் தகப்பன் பேசியதை இந்தக் காதில் வாங்கி.. அந்தக் காதில் விட்டுக் கொண்டிருந்த முகுந்தன்.. கோபத்துடன் நிமிர்ந்தான்…

“எனக்கு கல்யாணமே வேண்டாம் அங்கிள்.. யாரைக் கேட்டு இவர் எனக்குப் பொண்ணு பார்த்தார்…”

“யாரைக் கேட்கணும்..?”

“என்னைக் கேட்கணும்..”

“உன்னையேண்டா கேட்கணும்..?”

“தாலி கட்டப் போகிறவன் நான்தானே..”

தகப்பனும்.. மகனும் மோதிக் கொண்டிருக்க..

“அடடா..” என்றபடி.. இருவருக்கும் ஊடே வந்தார் சங்கரன்…

“அடேய்.. சாரு..”

சாரங்கபாணியை செல்லமாக ‘சாரு..’ என்றுதான் சங்கரன் அழைப்பார்…

“என்னடா..?”

“இப்போ.. கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற உன் மகனின் கல்யாணமா முக்கியம்? பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையின் வீட்டாளுக முன்னாடி வந்து நின்ன உன் பொண்ணோட கல்யாணம்தான் முக்கியம். மாப்பிள்ளை வீட்டார் என்ன பதிலைச் சொன்னாங்க…?”

“யோசிச்சுச் சொல்றோம்ன்னாங்க…”

“இன்னுமா யோசிக்கிறாங்க..?”

“அந்தம்மாவை பார்த்தால் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆயுசு பூராவும் யோசிக்கிற ஆள் போல தெரியுது.. யோசிக்கட்டும்.. யோசிக்கட்டும்…”

“இப்படிச் சொன்னா எப்படிடா சாரு..?”

“வேற என்னடா பண்ணச் சொல்ற..? ஒத்தை ஆளாய் கிடந்து திண்டாடுறேன்.. இதோ தடி மாட்டு தாண்டவராயன் போல நிக்கிறானே..”

“இவனை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கமே வராதே.. இப்ப இவனுக்கு என்னடா..?”

“இவன்தானே மாதங்கிக்கு அண்ணன்..?”

“அடிபடப் போறேடா.. இது ஒரு கேள்வியா..?”

“அண்ணன்காரனாய் – லட்சணமாய் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் என்னாச்சு.. ஏதாச்சுன்னு விவரம் கேட்டு வரலாமில்ல..?”

“அந்த வேலையெல்லாம் என்னால் முடியாது அங்கிள்… சொல்லிடுங்க..”

“உங்கப்பன் என்ன.. ஏழுமைலுக்கு அந்தப் பக்கமாவா நிற்கிறான்..? உன் முன்னாடிதானே நிக்கிறான்..? நீயே சொல்லேன்..”

சங்கரன் சொன்னது காதில் விழாததைப் போல முகுந்தன் வண்டியில் கவனமாக.. சாரங்கபாணியின் ரத்த அழுத்தம் எகிறியது…

“பார்த்தியாடா..” என்று சங்கரனிடம் பொறுமினார்..

“விடுடா.. இளம்வயசு.. கொஞ்சம் அப்படி.. இப்படித்தான் இருப்பான்.. பெரிசு பண்ணாதே…”

சாரங்கபாணியை சமாதானப் படுத்திக் கொண்டே வாசல் பக்கம் பார்த்த சங்கரன்.. அவசரமாக..

“வாம்மா..” என்று வரவேற்றார்..

‘யாரைக் கூப்பிடுகிறார்..’ – திரும்பிப் பார்த்த முகுந்தன், கண்களில் மின்னலைக் கொண்டு வந்தான்..

அவனையே பார்த்தபடி நிவேதா உள்ளே வந்தாள்…

‘இவ எப்ப வந்தா..’ யோசனையுடன் வண்டியைத் துடைப்பது போல அவளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் முகுந்தன்…

சாரங்கபாணிக்கும் அதே யோசனைதான்.. வீட்டிலுள்ள ஓட்டை உடைசல்களை பெண் கொடுக்கப் போகும் வீட்டினர் அறிந்து கொள்வதா.. என்று சங்கடப்பட்டார்..

“வந்து ரொம்ப நேரமாச்சாம்மா..?”

அவள் அப்போதுதான் வந்தாள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள விரும்பி கேள்விகேட்டார் சாரங்கபாணி..

அவர்களின் வாக்குவாதம் ஆரம்பிக்கும் போதே வந்து விட்ட நிவேதா.. அதை மறைத்து…

“இப்பத்தான் வந்தேன் மாமா..” என்றாள்..

அவளது ‘மாமா’ என்ற அழைப்பைக் கேட்ட முகுந்தன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க – இருவரது பார்வைகளும் கலந்தன..

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link