Chapter 15

0Shares

திருமண மண்டபத்தின் முன்னாலிருந்த தோட்டத்தை ரிசப்சன் நடக்கும் இடமாக மாற்றி விட்டிருந்தார்கள்…

“இது முகுந்தனின் ஏற்பாடும்மா..” நிவேதாவிடம் சொன்னார் சங்கரன்..

‘இந்த ரசனைக்கெல்லாம் குறைச்சலில்லை..’ பெருமையுடன் நினைத்துக் கொண்டாள் நிவேதா…

பிளாஸ்டிக் சேர்கள் வரிசையாக போடப்பட்டிருக்க.. தோட்டத்தின் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் நின்றிருந்தார்கள்.. சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த மேடையில் மெல்லிசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது…

நிவேதாவிற்கு முகந்தனிடம் பேச நிறைய காரணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன…

அவனது நிழலாகப் பின்தொடர்ந்து அவள் அவனைப் பிடுங்கிக் கொண்டேயிருக்க.. அவன் முறைப்புடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..

‘கோபமாக்கும்..’ அவளது கண்களில் சிரிப்பு வந்தது..

இந்த ஜோடியை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று கோதாவரிக்கு தோன்றி விட்டது.. அவள் கணவரை அழைத்து அவரின் காதோடு ரகசியம் பேசினாள்..

“தூள்டி கோதாவரி…”

அவர் மனைவியைப் பாராட்டி விட்டு.. மெல்லிசை நடத்துகிறவர்களைத் தேடிப் போனார்.. சற்று நேரத்தில் மைக்கில் ஒரு அறிவிப்பு வந்தது..

“பெண் வீட்டைச் சேர்ந்தவங்களும்.. மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவங்களும்.. பாட நினைத்தால் பாட வரலாம்…”

இந்த அறிவிப்பு வந்த போது.. நிவேதா முகுந்தனின் அருகில் நின்று கொண்டிருந்தாள். யதேச்சையாக அங்கே வருவதைப் போல வந்த கோதாவரி…

“கேட்டியா முகுந்தா.. உன் திறமையைக் காட்டு..” என்றாள்.. மனைவியை அழைப்பவரைப் போல அங்கே வந்த சங்கரன்…

“ஏம்மா.. உனக்கு மட்டும் திறமையில்லையா..?” என்று நிவேதாவை உசுப்பி விட்டார்…

“ஹ.. எங்க முகுந்தனின் திறமைக்கு ஈடு கொடுத்து இந்தப் பெண்ணால பாடமுடியுமா..?”

“மாப்பிள்ளை வீடா.. கொக்கா..? இந்தப் பெண்ணைப் பார்த்தால் சாட்சாத் கலைவாணியே வீணையோட வந்து நிக்கிறதைப் போல இருக்கு… 

இவ பாடினா முகுந்தனால்தான் ஈடு கொடுத்துப் பாட முடியாது..”

“இல்லைங்கிறேன்..”

“நான்.. ஆமாம்ங்கிறேன்…”

“பார்க்கலாமா..?”

“அதையும் பார்த்து விடலாம்…”

“டேய் முகுந்தா.. நீ மேடைக்கு போடா…”

“நீ ஏம்மா இன்னும் இங்கே நிற்கிற..? உன்னை நம்பித்தானே என் பெண்டாட்டிகிட்ட பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கேன்.. நீயும் மேடைக்குப் போ..”

“ஜெயிச்சுட்டு வாடா முகுந்தா…”

“தோற்கடிச்சுட்டு வாம்மா நிவேதா…”

வயதான தம்பதி.. தங்களின் பிரதிநிதிகளாக முகுந்தனையும்.. நிவேதாவையும் மேடையேற்ற.. அது 

ஒரு போட்டியாக மாறி விட்டதால்.. இரு வீட்டாரும் சுவாரஸ்யமாக சேர்களை கச்சேரி நடக்கும் பக்கமாக திருப்பிப் போட்டு அமர்ந்து பாட்டைக் கேட்க ஆரம்பித்தனர்..

நிவேதாவிற்குள் சாரல் அடித்துக் கொண்டிருந்தது.. அந்தச் சாரலில் ஆனந்தமாக நனைந்து கொண்டிருந்தாள் அவள்.. உல்லாசமாக முகுந்தனைப் பார்த்தாள்.. அவனோ முறைத்தான்…

அவனது கோபப் பார்வையை சிருங்காரமாக எதிர் கொண்டாள் நிவேதா.. அவளது உதடுகள் காதலுடன் வளைந்து மடிந்தன.. அவனது பார்வை.. அந்த மடிப்பில் படிந்தது…

“உன் பழக்கத்தில் ஏனிந்த துடிப்பு..?

என் பருவத்தில் ஏனிந்த தவிப்பு..?

ஆசையா..? கோபமா..?

ஆ.. சை.. யா..? கோ.. ப… மா..?”

நிவேதா ஓரவிழிப் பார்வையால் முகுந்தனை சுண்டியிழுத்தபடி பாட ஆரம்பிக்க.. ‘சபாஷ்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் சங்கரன்..

அந்தக் கேள்வி முகுந்தனை எதையோ செய்ய.. அவன் தாளமாட்டாதவனாய் மேடையை விட்டு இறங்கப் போனான்.. கோதாவரியின் பார்வையில் தெரிந்த அதட்டலைக் கண்டதும் அடங்கி நின்று.. அருகில் நின்றிருந்தவளைப் பார்த்தான்…

அவள் கண்களில் சிரிப்பு இருந்தது.. முகுந்தன் பாட ஆரம்பித்தான்..

      “உன் கண்களில் ஏனிந்த சிரிப்பு..?

உன் கன்னத்தில் ஏனிந்த கொதிப்பு..?

ஆசையா..? கோபமா..?

ஆ… சை.. யா..? கோ.. ப… மா…?”

கூட்டம் கைதட்டி இருதரப்பையும் உற்சாகப்படுத்த – முகுந்தன் பாடலைத் தொடர்ந்தான்…

         “விழி யழகில் சிறு தோரணம்…

விளை யாடும் பந்தாட்டம் என்ன..?

      காதல் இல்லாத காட்டுமலர்கள்

        காட்டும் கண் ஜாடை என்ன..?

பூந் தோட்டத்தில் ஆடுவதென்ன..?

அந்தக் கோலத்தை மூடுவதென்ன..?

ஆசையா..? கோபமா..?

ஆசையா..? கோபமா..?

ஆ.. சை.. யா..? கோ.. ப.. மா..?”

முகுந்தனின் உறவினர்கள் கட்டை விரலைத் தூக்கிக் காட்ட – கல்யாணிக்குக் கூட அந்தப் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது…

என்னவோ.. மாப்பிள்ளை வீட்டாரின் பெருமையை நிலை நாட்டப் போகிறவள் போன்ற பாவனையுடன் நிவேதா பாட ஆரம்பித்தாள்..

“என் இதழில் இளம் மேனியில்…

இந்தக் கோலம் நீ காணலாமா..?

கேட்பாரில்லாமல் தோட்டம் கண்டு

ஆட்டம் நீ போடலாமா..?

மலர் சூடும் முன்னால்

என்ன ராகம்..?

மணம் ஆகும் முன்னால்

என்ன… தாளம்..?

ஆசையா..? கோபமா..?

ஆசையா..? கோபமா..?

ஆ… சை.. யா..? கோ… ப… மா..?”

இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் பாட.. இருவருமே வெற்றி பெற்றதாக மெல்லிசைக் கச்சேரியை நடத்தியவர்கள் அறிவித்தார்கள்…

“ஏண்டி கோதாவரி…”

“சொல்லுங்க…”

“இதுக சினிமாப் பாட்டைத்தான் பாடுச்சுன்னு நீ நினைக்கறியா…?”

“நீங்க நினைக்கறிங்களா..?”

“இல்லை…”

“நானும்.. இல்லை…”

“முகுந்தனின் வாழ்க்கை இப்படியே கரடு.. முரடாய் போயிருமோன்னு கவலையா இருந்துச்சுடி…”

“இந்தப் பெண்ணைப் பார்த்திங்களா.. கொட்டுகிற அருவியைப் போலக் குளுமையா இருக்கா…”

“முகுந்தனின் கரடு முரடான வாழ்க்கையை செழிக்க வைச்சிருவான்னு சொல்கிறியா…”

“உங்களுக்கு கூட இது புரிஞ்சிருச்சே..”

“உனக்கே புரியும்போது.. எனக்குப் புரியாதா..?” அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்ட பார்வையில் ஆசை இருந்ததா.. இல்லை கோபம் இருந்ததா என்று அனுமானிக்க முடியவில்லை..

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link