Chapter 17
“நிவி.. நீ சின்னப் பெண்ணைப் போல இரு.. நான் அவகிட்ட ஒன்று சொன்னா.. நீ உடனே ஊடே வந்து வேற சொல்றியே.. அப்புறம் எப்படி அவ என்னை மதிப்பா..?”
“அம்மா.. இப்ப நீங்க செய்கிற வேலைதான் உங்க மதிப்பைக் குறைக்கப் பார்க்குது.. அது ஏன் உங்களுக்குப் புரியலை…?”
“வாழ வந்த மருமகள்… மாமியாரை மதிக்கணும்டி..”
“முதலில் அவளை நீங்க வாழ விடுங்க.. அதுக்கப்புறம் நீங்க கேட்காமலேயே அவ தானாகவே உங்களை மதிப்பா..”
“ஏண்டி.. நானா அவளை வாழவிடக் கூடாதுன்னு நினைக்கிறேன்..? இன்னும் ஒரு நாள்கூட முழுசா ஆகலை.. அதுக்குள்ள என்மேல… இப்படியொரு பழியைத் தூக்கிப் போடணும்கிறதுதான் உன் எண்ணமா..?”
“நீங்களா அப்படி நினைச்சால்.. அதுக்கு நான் பொறுப்பில்லைம்மா…”
“என் மகனுக்கு என் கையால் காபி கொடுக்கணும்னு நான் நினைக்கிறது தப்பா..?”
“உங்க புருஷன் எனக்கு யாரு..?”
“அடிப்பாவி.. அவர் உனக்கு அப்பாடி…”
“தெரியுதில்ல.. என் அப்பாவுக்கு என்னைக்காவது ஒருநாள் என் கையால் காபி கலந்து கொடுக்க விட்டிருக்கீங்களா..?”
இதைக் கேட்ட கல்யாணிக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை…
உண்மையில் அப்படியொரு வேலையை நிவேதா செய்தால் கல்யாணி மறுக்கமாட்டாள். வேலையைப் பகிர்ந்து கொள்ள மகள் உதவி செய்கிறாளே என்று சந்தோஷப் படுவாள்..
ஆனால் நிவேதாவிற்கு வெந்நீர் போடக்கூடத் தெரியாது… நல்ல வேளையாக ஹீட்டர் போன்ற உபகரணங்கள் வந்ததால் கல்யாணி தப்பித்தாள்.. இல்லா விட்டால் மகளுக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கும் வேலையும் அவளுக்கு சேர்ந்து கொள்ளும்.
நிவேதா காபிகலந்தால்.. அதை நிவேதாவே குடிக்க முடியாது. அப்படியிருக்கையில் மேகநாதனுக்கு தெரிந்தே அந்தத் தண்டனையைத் தர கல்யாணியால் முடியுமா..? அதனால்…
“உன் அப்பாவுக்கு என் கையால் காபி கலந்து தந்தால்தான் எனக்கு நிம்மதி… நீ போய் வேலைக்கு கிளம்புகிற வேலையைப் பாரு…” என்று சொல்லி விடுவாள்…
அதை இப்போது நிவேதா பிடித்துக் கொள்ள.. உண்மையை, வந்திருக்கும் உறவினர் கூட்டத்தின் முன்னால் விளக்கிச் சொல்ல கல்யாணியால் முடியவில்லை…
“என்னம்மா… பேச மாட்டேங்கறிங்க.. நீங்களே சொல்லுங்க பெரியம்மா.. இவங்க புருஷன் மேல.. இத்தனை வயசுக்குப் பின்னாலேயும் இவங்களுக்கு பொஸஸிவ்னெஸ் இருக்கிறப்போ.. பாவம்.. நேற்றுத்தான் கல்யாணமாகி வந்த பொண்ணு.. அவளுக்கும் அந்த உரிமையுணர்ச்சி இருக்காதா..?”
தூண்டி விட்டவளையே நிவேதா பஞ்சாயத்து தலைவியாக்க… திடீரென்று கிடைத்த ‘நாட்டாமை’ பதவியில் மகிழ்ந்து போன அந்தப் பெண்மணி தடாலடியாகக் கட்சி மாறினாள்…
“ஆமாமாம்.. புதுப் பொண்ணு.. அதுக்கும்.. தன் புருஷன்னு இருக்குமில்ல..?”
“அம்மா செய்கிறது சரியா..?”
“கொஞ்சம் கூடச் சரியில்லை…”
“நீங்க பெரியவங்க..”
“ஆமாமாம்..”
“நீங்களே இவங்களுக்கு புத்திமதி சொல்லுங்க…”
“இதப்பாரு கல்யாணி.. நீயும் ஒரு பெண்ணைப் பெத்து வச்சிருக்க.. இவளும் ஒரு வீட்டுக்கு வாழப் போகணும்.. அப்படி இவ போகிற வீட்டில.. இவளோட மாமியா.. நீ உன் மருமகளை நடத்தறதைப் போல நடத்தினா நீ தாங்கிக்குவியா..?”
“என்னக்கா இப்படிச் சொல்ற..?”
“ஒரு பேச்சுக்கு – ‘உன் மகளுக்கு இப்படி நடந்தா எப்படியிருக்கும்..?’-ன்னு கேட்கிறதுக்கே பதறிப் போறயே.. உன் மருமகளைப் பெத்தவளும் இப்படித்தானே பதறிப் போவா…?”
“அக்கா…”
“மருமகளையும் மகளைப் போல நினை கல்யாணி. அப்பத்தான் உன் மகளுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்…”
தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மூச்சு விடாமல் அந்த அக்கா நியாயம் பேச.. காபிகூடக் குடிக்காமல் அதைக் கேட்க நேர்ந்த கல்யாணி திக்கு முக்காடிப் போனாள்.
“இங்கே வாங்கம்மா..”
தாயின் நிலைமையைக் கண்ட நிவேதா பரிதாபத்துடன் அவளை மீட்டு.. பின்பக்கமாக தள்ளிக் கொண்டு போனாள்..
“இதுதான் உலகம்.. புரியுதாம்மா..?”
“ம்ஹூம்.. இதை நீ சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு…”
“அதனால் உங்களுக்கு ஒரு குறையுமில்ல.. இனியாவது சொல்வார் பேச்சைக் கேட்காம இருங்க…”
“நானாடி.. அதுகிட்டப் போயி சொல்லு.. சொல்லுன்னு கேட்டேன்..?”
“அவங்களாச் சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டுப் போகிறதுக்கென்ன..? ஆண்டவர் அதுக்காகத்தானே நமக்கு இரண்டு காதைக் கொடுத்திருக்கிறார்..?”
“இருந்தாலும் நிவி.. நேற்றுவரை அம்மா.. அம்மான்னு என்னைச் சுற்றிவந்த பிள்ளைக்கு இன்னைக்கு என் கையாலே காபிகூடக் குடுக்க முடியாமப் போயிருச்சே..”
“உங்களைத் திருத்தவே முடியாதும்மா.. நீங்க இப்படிப் போட்டி போட ஆரம்பிச்சா.. அவங்க தனிக்குடித்தனம்ன்னு ஆரம்பிச்சுருவாங்க.. பார்த்துக்கங்க..”
“ஏண்டி.. என் பிள்ளை அப்படி என்னை விட்டுட்டுப் போயிருவானா..? நான் அப்படியொன்றும் பிள்ளை வளர்க்கலை…”
“அண்ணன் போக நினைக்கலைன்னாலும்.. அண்ணி அவனை விட்டுட்டு பிறந்த வீட்டில் போய் உட்கார்ந்துட்டா என்ன செய்வான்..?”
“அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டான்…”
“நீங்க கனவு கண்டுக்கிட்டு இருங்க.. நீங்க என்ன பேச்சு பேசினாலும் அப்பா உங்களை விட்டுட்டு இருந்துடுவாரா…?”
“அதெப்படி இருப்பார்..? பெண்டாட்டியை விட்டுட்டு ஒரு மனுசன் இருப்பானா..?”
“அப்ப.. உங்க மகன் மனுசனில்லையா..?”
“என்னடி பேசற..?”
“அவனும் மனுசன்தானேம்மா.. அவனுக்கும் அவன் பெண்டாட்டின்னு இருக்குமில்ல.. அம்மாவை விட்டுக் கொடுக்காதவன் பெண்டாட்டியையும் விட்டுக் கொடுக்க மாட்டான்.. அதனால் அடக்கி வாசிங்க..”
கல்யாணிக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது..
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.