Chapter 20

0Shares

நிவேதாவுக்கு நன்றாகத் தெரியும்…

‘ஆமாம்’ என்ற பதிலை ஒருநாளும் முகுந்தன் சொல்ல மாட்டான்..

அவன் அவளை அறிந்தவன்.. அவளது காதலின் ஆழத்தைப் புரிந்தவன்…

யாருக்கும் கட்டுப்படாத போர் குணம் கொண்டவன் அவளது காதலுக்கு கட்டுப்பட்டான்.

எவருக்கும் முக்கியத்துவம் கொடுக்காதவன் அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்.

அவளுடைய காதல் காணக் கிடைக்காத திரவியம் என்றால்.. அவனுடைய காதல்.. கிடைப்பதற்கரிய பொக்கிஷம்…

மறுவீட்டு விருந்து முடிந்து… பலகாரக்கூடையுடன் சீர் வாங்கிக் கொண்டு மாதங்கி புகுந்த வீட்டிற்கு திரும்ப வேண்டிய நாள் நெருங்கிவிட்டது.

மறுநாள் அவர்கள் கிளம்ப வேண்டும் என்ற நிலையில் சங்கரன் வீட்டுக்குப் போயிருந்த நிவேதா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

“என்னம்மா யோசனை..?” சங்கரன் இதமாக வினவினார்..

“இல்லைப்பா.. அண்ணியோட அண்ணன் இப்ப எங்கே வேலை பார்க்கிறார்..?”

“யாருக்கும்மா தெரியும்..? முதலில், அவன் இத்தனை நாளாய் வீடு தங்கியதே பெரிய விஷயம்.. தங்கைக்கு கல்யாணம்ங்கிறதால.. குடும்பத்துக்கு மூத்தவனாய் கூடவாவது நில்லுன்னு சாரங்கபாணி சத்தம் போட்டதால இத்தனை நாளாய் இங்கே இருந்தான்.. இல்லைன்னா அவனாவது.. வீடு தங்கறதாவது…”

சங்கரனின் பேச்சைக் கேட்ட நிவேதா முகம் வெளிறிப் போனாள்..

அப்படியானால்.. அவள் அடிக்கடி மாதங்கியின் வீட்டிற்கு எதையாவது காரணம் சொல்லி வந்து போனாலும் முகுந்தனைச் சந்திக்க முடியாதா..?

அவளது மனதைப் படித்தவரைப் போல…

“இப்பவே எதைக் கேட்கிறதாய் இருந்தாலும் அவன் கிட்ட கேட்டு வைச்சிருன்னு கோதாவரிகிட்ட சொல்லிட்டேன்… அவனை விட்டால்தான் திரும்பவும் பிடிக்கமுடியாதே…” என்று சொல்லி வைத்தார் சங்கரன்..

விட்டதைப் பிடிக்க கஷ்டப்பட்டவளுக்கா அந்த சிரமம் தெரியாது..?

அவனைத் தேடியலைந்த நாள்கள் நினைவுக்கு வர.. சிலிர்த்துப் போனாள் நிவேதா..

‘ஊஹூம்.. அவனைக் கை நழுவ விட மாட்டேன்..’

நினைத்ததை முடிக்க எதையும் செய்வது என்ற முடிவுடன் சங்கரனை நிமிர்ந்து பார்த்தாள் நிவேதா..

“என்னம்மா..” என்றார் அவர் வாத்சல்யத்துடன்..

நிவேதா வந்திருந்ததால்.. முகுந்தன் அவர்களின் வீட்டில் படுக்காமல்.. சங்கரனின் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தான்…

அதை யோசித்த நிவேதா…

“அப்பா.. இன்றைக்கு நைட்.. நான் இங்கே தூங்கிக்கவா..?” என்று கேட்டாள்..

சங்கரனின் கண்களும்.. கோதாவரியின் கண்களும் சந்தித்துக் கொண்டன…

“கொஞ்சம் பொறும்மா…”

சங்கரனும்.. கோதாவரியும் தனித்து ஆலோசித்தனர்.

“என்ன செய்யலாம் கோதாவரி..”

“அந்தப் பொண்ணு மனசில எதையோ வைச்சுக்-கிட்டுத்தான் இங்கே தங்க வருகிறேன்னு சொல்லுது..”

“வரட்டுமா..”

“வரட்டும்..”

“யோசிச்சுத்தான் சொல்கிறயா..?”

“ம்ம்.. யோசிச்சுத்தான் சொல்றேன். அந்தப் பொண்ணும் சாம.. தான.. பேத.. முறைகளையெல்லாம் செய்து பார்த்திருப்பா.. இவன் மசிந்திருக்க மாட்டான்.. அதான் கடைசியா தண்டத்தை கையில் எடுத்துட்டா..”

“எடுக்கட்டும்ங்கறியா..?”

“வேற வழி..? அவங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டிங்கள்ல.. அவன் இவளை விட்டு வேறொருத்தியைக் கட்டமாட்டான்.. இவளும் அவனை விட்டுட்டு இன்னொருத்தனை நினைச்சுப் பார்க்க மாட்டாள்ங்கிறப்போ.. எதைச் செய்தாவது.. அவனோட சேர்ந்திரணும்னு அவ நினைக்கிறதில என்ன தப்பிருக்கு..?”

“எதைச் செய்யப்போறா..?”

“எனக்கும் தெரியலையே..”

“வில்லங்கமா எதையாவது செய்து வைச்சிட்டா..?”

“அதையும் பொறுத்துக்க வேண்டியதுதான்.. வேற என்ன செய்ய..? அவனை வளர்த்தோம்.. இந்தப் பெண்ணோ வாய் நிறைய நம்மை அம்மா.. அப்பான்னு கூப்பிடுது..”

பிள்ளைகளைப் பெற்றவர்கள் சந்திக்க நேரும் இக்கட்டுக்களை இவர்கள் சந்தித்து விட-சந்தோஷமாக முடிவு செய்தார்கள்..

“தாராளமா வாம்மா.. இது உன் வீடு..” என்று அவளிடம் சொன்னார்கள்…

அன்றைய இரவில் அவள் அங்கே தங்கவரப் போவது முகுந்தனுக்குத் தெரியாது..

இரவு உணவு முடிந்ததும்.. நித்தியானந்தனும்.. மாதங்கியும் அவர்களுக்கு தரப்பட்டிருந்த அறைக்குள் போய்விட… மறுநாளைய பலகாரங்களைப் பாத்திரங்களில் நிரப்பும் வேலையை பெரியவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள்..

“அம்மா.. எனக்கு தூக்கம் வருது..”

“நீ போய் தூங்கும்மா..”

நிவேதாவிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்து விட்டாள் கோதாவரி.

வீட்டைத் திறந்து உள்ளே போன நிவேதா.. வழக்கமாக முகுந்தன் படுத்துத் தூங்கும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சாரங்கபாணியின் குத்தல் பேச்சை சகித்துக் கொள்ள முடியாத முகுந்தன் சங்கரனின் வீட்டை நோக்கி நடந்து விட்டான்.

திறந்திருந்த வாசல் கதவைக் கேள்விக் குறியுடன் பார்த்தவன்.. அதை மூடிவிட்டு.. அறைக்குள் புகுந்து படுக்கையில் படுத்தான்.. அயர்வுடன் தூங்க ஆரம்பித்து விட்டான். வெகுநேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சங்கரனும்.. கோதாவரியும்.. நிவேதாவின் நினைவின்றி அலுப்புடன் படுத்து தூங்கி விட்டார்கள்..

அன்றைய இரவு மௌனமாக நகர்ந்தது…

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link