Chapter 24

0Shares

“மாலை சூடும் மணநாள் – இளம் 

மங்கையின் வாழ்வில் திருநாள் 

சுகம் மேவிடும் காதலின் எல்லை -வேறொரு

திருநாள் இனியில்லை….”

அதே திருமண மண்டபம்… அதே தோட்டம்.. அதே மெல்லிசைக் கச்சேரி குழுவினர்.. மணமக்கள் தான் முகுந்தனும்.. நிவேதாவும்..

நித்தியானந்தனின் திருமணம் நடந்த அதே மண்டபத்தில் முகுந்தனின் மனைவியாக திருமண வரவேற்பிற்காக அவனருகில் நின்று கொண்டிருந்தாள் நிவேதா…

அவள் முகம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது..

“நினைச்சதை நடத்திட்டோம்ன்னு திமிரா.. மகளே.. இருக்குடி உனக்கு..” மெல்லிய குரலில் முணுமுணுத்தான் முகுந்தன்.

“நினைச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அதில உங்களுக்கு எதுக்கு இத்தனை வருத்தம்..?” முகம் மாறாமல் சிரித்தபடியே.. பதிலுக்கு முணுமுணுத்தாள் நிவேதா..

“திட்டம் போட்டு சாதிச்சுட்டடி…”

“அதுக்கு அவார்டு கொடுக்கணும்.. எங்கே..? அதை விட்டுட்டு நீங்கதான் தாளிச்சுக்கிட்டு இருக்கீங்களே…”

“என்னை அயோக்கியன்னு உன் அண்ணனை நினைக்க வச்சிட்ட…”

“எப்படியிருந்தாலும் என் வாழ்க்கைக்காக அவன் உங்களிடம் வாதாடித்தான் இருக்கணும்.. அதை சீக்கிரமாய் செய்ய வைச்சேன்… இது ஒரு குத்தமா..?”

அவள் மீண்டும் அறியாக் குழந்தையாய் இமை கொட்ட.. அவளையே இமைக்காமல் பார்த்தான் அவன்..

“இத்தனை வித்தையையும் எங்கேடி கத்துக்கிட்ட..?”

“பேய்க்கு வாழ்க்கைப்பட்டா முருங்கைமரத்தில ஏறித்தானே ஆகணும்..?”

“இதையேண்டி என்கிட்ட சொல்ற..?”

“இல்லை.. உங்களைக் காதலிச்சா இந்த வித்தையையெல்லாம் கத்துக்கிட்டுத்தானே ஆகணும்..?”

மீண்டும் அவள் இமைகொட்ட..

“வேண்டாம்டி.. என்னைக் கொலைகாரனாக்காதே..” என்றாள் அவன்.

ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்ட கோதாவரியிடம் தனிமையில் –

“ஸாரிம்மா..” என்றாள் நிவேதா..

அவளோ அன்புடன் நிவேதாவை அணைத்துக் கொண்டாள்..

“எதுக்கு ஸாரியை வேஸ்ட் பண்ற…? நீ எதையோ எக்குத்தப்பாய் செய்து வைக்கப் போகிறன்னு எனக்கு அப்பவே தெரியும்…”

“தெரிஞ்சுமா.. என்னை உங்கவீட்டில் தூங்க அலவ் பண்ணினீங்க..?”

“எதையாவது செய்து எங்க வீட்டு பிள்ளை-யாண்டானைக் கட்டிக்கிறணும்னு நீ நினைச்சே.. எனக்கு அதில் பூரண சம்மதம்… சந்தோஷம்.. அதனால உனக்கு உதவி செய்தேன்..”

இரவின் தனிமையில் தனியறையில் சந்தித்த நிவேதாவின் கழுத்தைப் பிடித்து நெரித்தான் முகுந்தன்..

“பாவி.. என் பெயரைக் கெடுத்து.. என் தங்கையின் வாழ்க்கையையும் கெடுக்கப் பார்த்தியே.. உன்னைக் கொன்று புதைச்சால்தான் என் மனம் ஆறும்…”

நிவேதா அலட்டிக் கொள்ளவில்லை.. கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த அவன் கைகளில் முத்தமிட்டாள். காதலுடன் அவனைப் பார்த்தாள். அவனது பிடி தளர்ந்தது..

“கொன்னுடுங்க.. கொன்னு புதைச்சிருங்க.. சந்தோசமா சாகிறேன்.. உங்க பெண்டாட்டியாய் செத்தால் போதும்..”

“த்சு..”

அவளை ஒன்றும் செய்ய முடியாமல் தள்ளிவிட்டு கட்டிலின் ஓரமாக முதுகு காட்டிப் படுத்தான் அவன்..

நிவேதா கட்டிலில் ஏறி.. அவன் பக்கமாக சரிந்து அவனது முதுகில் முகம் புதைத்தாள். அவன் உடலில் ரசாயன மாற்றம் நிகழ ஆரம்பித்தது…

“தொடாதேடி…”

அவள் தொட்டாள்..

“கிட்ட வராதே..”

அவள் வந்தாள்..

“ஏய்ய்.. தள்ளிப் போடி..”

அவள் தள்ளிப் போகவில்லை.. அவன் மேல் படர்ந்தாள்…

மல்லிகை மணத்துடன் கூடிய இதமான நறுமணம் அவள் மேல் கமழ.. முகுந்தன் கிறங்கிப் போனான். அவள் கழுத்தில் தவழ்ந்து.. அவன் மார்பில் விழுந்த புரண்ட மாங்கல்யம்.. அவள்.. அவனுடைய பெண்டாட்டி என்பதை நினைவு படுத்திக் கொண்டிருந்தது..

“முரட்டு ராஸ்கல்..”

அவனது முடி கோதி.. முகத்தோடு முகம் வைத்து அவன் நெற்றியில் அவள் முத்தமிட்டபோது அவன் முற்றிலுமாகத் தன்வசத்தை இழந்தான்..

“கொழுப்புடி உனக்கு..”

கிறக்கத்துடன் அவளை இறுக்கிக் கொண்டவன்.. அவளை ஜெயிக்க ஆரம்பித்தான்..

“அம்மா மாதங்கி…”

கல்யாணியின் அழைப்பைக் கேட்ட மாதங்கி.. தனது அம்மாதான் வந்து விட்டாளோ என்று வாசல் பக்கம் போய் பார்த்தாள்…

“உன்னைத்தான்ம்மா..” பாசம் பொங்க கல்யாணி கூற..

“என்னையா அத்தை..?” என்று விழிவிரித்தாள் மாதங்கி…

“ஆமாம்மா.. இன்னும் கொஞ்சநேரத்தில் நிவேதாவும், மாப்பிள்ளையும்.. மறுவீட்டுக்கு வந்திருவாங்க.. ஆரத்தி கரைச்சு வச்சுட்டியாம்மா..?” அன்பொழுகக் கேட்டாள்…

“வைச்சுட்டேன் அத்தை..”

நம்பமுடியாத அதிசயத்துடன் மாமியாரைப் பார்த்தபடி பூஜையறைக்கு சென்றாள் மாதங்கி…

“என்னம்மா.. உன் அத்தை பாசத்தை பொழிகிறாளா..?”

கடவுள்களுக்கு கற்பூர ஆரத்தியைக் காட்டியபடி மேகநாதன் கேட்டார்..

“ஆமாம் மாமா…”

“அது வேற ஒண்ணுமில்லைம்மா.. இத்தனை நாளாய் நீ அவளுக்கு மருமக மட்டும்தான். இப்ப.. அவ மகளுக்கு நீ நாத்தனார்.. தென்னை மரத்தில தேள் கொட்டினா.. பனை மரத்தில நெறி கட்டிருமேன்ற பயம்தான். உன்னை இவ ஒழுங்கா நடத்தினாத்தான்.. உங்க அம்மா இவ மகளை ஒழுங்கா நடத்துவாங்க… என்ற கணக்குத்தான்..”

இதில் இத்தனை இருக்கிறதா என்று பிரமித்துப் போன மாதங்கி.. நிவேதாவை மனதிற்குள் வாழ்த்தினாள்..

மறு வீட்டு விருந்து முடிந்து.. புகுந்த வீட்டிற்கு வந்த நிவேதா.. வேலைக்கு கிளம்பினாள்.. முகுந்தனும் கிளம்ப ஆரம்பிக்க..

“எங்கே கிளம்பறீங்க..?” என்றாள் நிவேதா..

“உன் கழுத்தில் தாலியைக் கட்டிட்டேனில்ல.. உன்னை வைச்சுக் காப்பாத்த வக்கு வேணாமா..? வேலைக்குப் போகிறேன்டி.. ஒரு மாதத்தில் நின்றுவிட மாட்டேன். நிலைச்சு வேலையைப் பார்ப்பேன்… போதுமா.. இதுதானே உனக்கு வேணும்..?”

“ஊஹூம்.. இது எனக்கு வேணாம்…”

“பிரச்சனைக்கு பிறந்தவளே.. புதிதாய் எதைக் கிளப்பற..?”

“இந்தாங்க.. இது என் பேங்க் பாஸ்புக்.. இது என் நகைப் பெட்டி..”

“எதுக்கு…?”

“நீங்க கனவு கண்ட கம்பெனியை ஆரம்பியுங்க.. பெண்டாட்டியோட பணம் நகைன்னு நினைக்க வேணாம்.. கடன் வாங்குறதா நினைச்சுக்குங்க.. வட்டியோட திருப்பிக் கொடுங்க…”

“நிவேதா…”

அவளை இழுத்து அணைத்துக் கொண்ட முகுந்தனின் முகத்தில் தெரிந்த நிறைவை.. ஓரவிழிப் பார்வையிலே.. நிம்மதியான மனதுடன் பார்த்தாள் நிவேதா…

… முற்றும் …

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link