Chapter 09
“என் அழகுக்கும் பவிசுக்கும் ஜமின்தார் மாளிகையிலே இருந்து பெண் கேட்டு வந்தாங்க.. கிரகம்.. உங்கப்பனுக்கு இரண்டாம் தாரமாகி இப்ப அவரும் இல்லாம லோல் படறேன்.. வயசான மனிதனுக்கு இரண்டாம் தாரமாகி கையிலே ஒரு குழந்தையோடு கதியத்து நிற்கனும்ன்னு எனக்கென்ன தலையெழுத்து..? நியாயம் அது இதுன்னு இப்படி வந்து மாட்டிக்குவேனா..? அதையெல்லாம் தூக்கி உடப்பில போட்டுட்டு
பணக்கார வீட்டில வாழப் போயிருந்தா இப்படி ஐந்துக்கும் பத்துக்கும் உன்னிடம் கையேந்தி நிற்கிற நிலைமை வந்திருக்குமா..?”
வீரப்பன் இறந்த இரண்டே நாள்களில் இதுபோன்ற பிலாக்கணத்தை ஆரம்பித்து வைத்தாள் லீலாவதி.. அவள் விட்ட அம்பு சரியான இடத்தில் தாக்கியது.. தகப்பன் சுமக்க வேண்டிய சுமையைத் தான்தான் சுமக்க வேண்டுமென்று அர்ச்சனாவின் மனதில் பதிந்து விட்டது.. அவள்
“நான்றிருக்கிறப்ப நீங்க ஏன் கண்ணீர் விடனும் சித்தி..? உங்களையும் வினய்யையும் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு..” என்று சொல்லி விட்டாள்..
லீலாவதிக்கு அதுதானே வேண்டும்.. அர்ச்சனாவின் மனது அலைபாயக் கூடாது.. காதல், கல்யாணம் என்றெல்லாம் அவள் கனவு கண்டு விடக் கூடாது.. கடைசிவரை அவள் லீலாவதியையும் அவள் பெற்ற மகனையும் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும்..
அர்ச்சனாவும் அது போலதான் இருந்தாள்.. ஐந்துக்கும் பத்துக்கும் என்னிடம் ஏன் நீங்கள் கையேந்தி நிற்க வேண்டும்..? இதோ.. சம்பளப் பணம் மொத்தத்தையும் உங்களிடம் தந்து விட்டேன் என்று சம்பளத்தை அப்படியே லீலாவதியிடம் ஒப்படைக்கத் துணிந்தாள்.. நல்ல வேளையாக வீரப்பன் அவளுக்கு ஒரு வழியைக் காட்டியிருந்தார்..
அர்ச்சனாவின் சம்பளப் பணம் அவளது வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்படும்.. தேவையான பணத்தை அவள் மாதந்தோறும் வித்ட்ரா செய்வாள்.. வீரப்பன் உயிரோடு இருந்தவரை அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.. முதல் மாதச் சம்பளத்தை அவள் முழுமையாக வித்ட்ரா செய்து தகப்பனாரின் கையில் கொடுத்து கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போதே அவர் பாதிப் பணத்தைக் கவரில் வைத்து மீதிப் பணத்தை அவளிடம் கொடுத்து..
“எப்போதுமே உன் முழுச் சம்பளத்தை வீட்டில் கொடுக்காதே அர்ச்சனா.. பாதியைக் கொடுத்து விட்டு மீதியை சேமிக்கப் பழகு..” என்று அறிவுரை சொன்னார்..
“எதுக்குப்பா..?” அப்பாவியாய் மகள் கேட்டபோது அவருக்குத் துயரமாய் இருந்தது..
‘கடவுளே..! என் மகளை இந்த ராட்சசியிடமிருந்து காப்பாற்று..’ என்று மனதுக்குள் மருகியவர்..
“உன் அம்மா பட்ட கடனை அடைக்கனுமே அர்ச்சனா.. இந்த வீட்டின் மேல் கடன் வாங்கியிருக்கிறோமே அர்ச்சனா.. மறந்து விட்டாயா..?” என்று நினைவு படுத்தினார்..
“ஆமாமில்ல..” மகள் கவலையானாள்..
கவலைப்பட ஏதுமில்லை என்று மகளின் முடிகோதி தைரியம் சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டவர்..
‘கவலைப்படட்டும்.. இந்தக் கவலைதான் என் மகளின் சம்பளப் பணத்தில் பாதியையாவது காப்பாற்றும்..’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்..
அர்ச்சனாவுக்குப் பொய் சொல்லத் தெரியாது.. லீலாவதி சம்பளப் பணம் எவ்வளவு என்று கேட்டால் உள்ளது உள்ளபடி சொல்லி விடுவாள்.. அதை மறைத்துப் பேச ஓர் காரணம் வேண்டும்.. அந்தக் காரணத்தை ‘தாய்க்காக பட்ட கடன்’ என்ற பாச உணர்வு கொடுக்கும்..
“மீதிப் பணத்தையும் அப்படியே தூக்கி அந்தக் கிராதகி கையில் கொடுத்து விடாதேம்மா..”
“ஏன்ப்பா..? சித்திக்கு செலவுக்கு பணம் வேண்டாமா..?”
“வேண்டும்தான்.. ஆனால் அவளுக்குச் சிக்கனமாய் இருக்கத் தெரியாது.. நீ கொடுக்கும் பணத்தை இரண்டே நாளில் செலவு செய்துவிட்டு மீதி நாள்களை ஓட்ட என்ன செய்வது என்று கடன் வாங்கி விடுவாள்.. நமக்கு இருக்கிற கடன் போதாதா..?”
வீரப்பன் பயமுறுத்தினார்.. அர்ச்சனாவும்..
“கடனா..?” என்று பயந்து விட்டாள்..
“கடன்தான் அர்ச்சனா.. சிக்கனத்திற்குப் பெயர் பெற்ற அபிராமியே கடன் வாங்கி வைத்திருக்கிறப்ப, பணத்தைக் கண்ணில் கண்ட அடுத்து நிமிசம் அதைக் கரைப்பாய் கரைத்து விடும் இவள் கடன் வாங்க மாட்டாளா..? அதனால வீட்டுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை நீயே வாங்கிக் கொடுத்துரு.. அப்பப்ப கைச்செலவுக்கு நூறோ, இருநூறோ தா.. அதுதான் அவளுக்கும் நல்லது.. உனக்கும் நல்லது..”
“அவங்க என் பேங்குக்கு வந்து சம்பளப் பணம் எவ்வளவுன்னு மத்தவங்களிடம் கேட்டுச் செக் பண்ணுவாங்களே..”
‘அவளா பெற்று வளர்த்து படிக்க வைத்து வேலை வாங்கிக் கொடுத்தாள்..?’
வீரப்பனுக்கு லீலாவதியை வெட்டிப் புதைத்து விட வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. அடக்கிக் கொண்டார்.. இது அவளுடைய மகளுக்கு அவர் இழுத்து விட்டிருக்கும் துன்பம்.. தற்காத்துக் கொள்ள வழி சொல்லித் தர வேண்டியதுதான் இப்போதைய அதி முக்கிய வேலை.. ஆத்திரப் படுவதல்ல..
“பண்ணட்டுமே.. மத்தவங்க சீனியர்.. அதிகச் சம்பளம்ன்னு சொல்லு.. உனக்கான பிடித்தங்களை அதிகப்படுத்திச் சொல்லு.. எது எப்படின்னாலும் வீட்டின் மேல் நீ வாங்கியிருக்கிற கடனை லீலாவதிக்குத் தெரியாமத் திருப்பிக் கட்ட பணம் வேண்டுமில்லையா..? அதற்கு நீ சேமித்தாக வேண்டுமே..”
“ஒன்றா.. இரண்டா..? எழுபது லட்சம் அப்பா.. அவ்வளவு பணத்தைச் சேர்க்க என்னால முடியுமா..?”
“முடியாதுதான்.. இப்படியே வாழ்க்கை போய் விடுமா அர்ச்சனா.. உனக்குச் சம்பளம் கூடும்.. பே கமிசன், அரியர்ஸ் அப்படி இப்படின்னு மொத்தமா கைக்குப் பணம் கிடைக்கும்.. அப்பப்ப எல்லாத்தையும் ஒன்றாச் சேர்த்து லோனுக்குக் கட்டிக் கொண்டே வந்தா லோன் பணம் குறையுமில்லையா..? நீ ரிட்டயராகிறப்ப ஒருவேளை முழுப்பணத்தையும் அடைத்திருக்கலாமே..”
“சரிப்பா..”
லீலாவதியிடம் தன் சம்பளம் எவ்வளவு என்று முழுத் தொகையையும் கூறாமல் பாதிப்பணத்தை மட்டும் கூறும் மன தைரியத்தைப் பெற்றாள் அர்ச்சனா.. கையில் கொண்டு வரும் பணத்தையும் அப்படியே லீலாவதியின் கையில் கொடுத்து
விடாமல் வீட்டுக்குத் தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து அவ்வபோது கைச்செலவுக்கென பணம் கொடுத்தாள்..
‘நானென்ன இவளுக்குச் சமையல்காரியா..? வீட்டைக் காவல் காக்கும் வேலைக்காரியா..?’
லீலாவதிக்குப் பொசுபொசுவென இருக்கும்.. வீரப்பனை நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொள்வாள்.. அந்த மட்டிலும் அன்றாட உணவுக்கும் தேவைக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வாழ்க்கை சீராக ஓடுகிறதே என்ற எண்ணம் அவளுக்கு.. அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்..?
வீரப்பன் இறந்ததும் அவளுக்குக் கொண்டாட்டமாகி விட்டது.. அர்ச்சனாவை அடிமைப்படுத்தும் வழிமுறைகள் தான் அவளுக்குத் தண்ணீர்பட்ட பாடாயிற்றே..
அர்ச்சனாவும் அடிமையானாள்.. வீட்டிற்குத் தேவையான மளிகை, காய்கறி இத்யாதி போன்றவற்றைத் தானே வாங்கிக் கொள்வதாகவும் அதைப் பற்றி அர்ச்சனாவுக்கு என்ன தெரியும் என்றும் அந்தச் சுமையை அர்ச்சனா சுமக்க வேண்டாம், லீலாவதியே சுமப்பாள் என்றும் லீலாவதி சொன்னதன் பேரில் அர்ச்சனா சம்பளப் பணத்தில் பாதியைக் கொண்டு வந்து லீலாவதியிடம் கொடுத்து விட்டாள்..
லீலாவதி சாகசக்காரிதான்.. நாசுக்கு நாகரிகத்தை யெல்லாம் தூக்கியெறிந்து விட்டுத் துப்பறிகிறவள்தான்.. ஆனாலும் அவளால் அர்ச்சனா முழுச்சம்பளத்தையும் கொடுக்காமல் பாதியைத்தான் கொடுக்கிறாள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.. அவள் படிக்காதவள்.. தவிரவும் அந்த ஊருக்குள் அவளுக்கு நல்ல பெயர் இல்லையென்பதால் அவளிடம் யாரும் சகஜமாக பேச மாட்டார்கள்.. அவள் பேசினாலும் முகச் சுளிப்புடன் பதில் பேசாமல் நகர்ந்து விடுவார்கள்.. அவளும் அப்படி.. அவள் செய்து கொள்ளும் மேக்கப்பும் அப்படி.. கீழ்த்தரமானதாக இருக்கும்..
மற்றவர்களே லீலாவதியைக் கண்டால் முகச் சுளிப்புடன் நகர்ந்து விடும்போது அர்ச்சனா வேலை பார்க்கும் வங்கியில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. அர்ச்சனாவைப் போன்ற நல்ல பெண்ணைப் பீடித்திருக்கும் பீடை என்று மனதுக்குள் திட்டியபடி ‘வெட்டவா, குத்தவா..’ என்பதைப் போல முறைப்பார்கள்.. முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள்.. அதிலும் அர்ச்சனாவின் தோழி..
“அவ எவ்வளவு சம்பளம் வாங்கினா உனக்கு என்ன..?” என்று சண்டைக்கே வந்து விட்டாள்..
ஆதலினால் அர்ச்சனா வேலை செய்யும் வங்கியின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காமல் ஒழுங்காய், மரியாதையாய் அவள் கொடுக்கும் பணத்தைக் கணக்குக் கேட்காமல் வாங்கிப் பத்திரப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள் லீலாவதி..
அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, ஒண்டிக் கொள்ள ஓலைக் குடிசையுமின்றி இருந்தவளுக்குச் சொந்தமாக அவள் பெயரில் வீட்டடி மனை இருக்கின்றது.. அடகு வைத்திருக்கும் நகைகள் இருக்கின்றன.. குடியிருக்க வசதியான வீடு இருக்கிறது.. உடுத்திக் கொள்ள அபிராமியின் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் இருக்கின்றன.. கைகுளிர செலவளிக்க அர்ச்சனா மாதா மாதம் கொடுக்கும் பணம் இருக்கின்றது.. இவை போதாதா..? அர்ச்சனாவின் சம்பளப் பணம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி அவள் விசாரிக்க ஆரம்பிக்க.. எவராவது ஒரு புத்திசாலி அர்ச்சனாவைத் தூண்டி விட்டு விட்டால் உள்ளதிற்கு மோசம் வந்து விடாதா..?
அப்படிச் சேர ஆரம்பித்ததுதான் அர்ச்சனாவின் சேமிப்பு.. லீலாவதியின் ஆசைகளுக்கு அளவில்லை.. அவள் வீட்டிலிருந்த டிவி, வாஷிங்மெஷின், கட்டில்,
சோபா முதலிய எல்லாவற்றையும் பழைய விலைக்குப் போட்டுப் பணத்தை வாங்கிப் பத்திரப் படுத்திக் கொண்டு.. புதிதாக வாங்கித் தரும்படி அர்ச்சனாவைக் கட்டாயப் படுத்தினாள்..
“ஏற்கனெவே இருந்ததெல்லாம் நல்லாத்தானே இருந்துச்சு சித்தி..?” அர்ச்சனா பல்லைக் கடித்தபடி கேட்டாள்..
“என்னத்த நல்லா இருந்துச்சு..? அத்தனையும் ஓட்டையும் உடைசலுமா இருந்துச்சு.. வீடான வீட்டில புதுசு புதுசா சாமான்க இருக்க வேண்டாமா..?” லீலாவதி நியாயம் பேசினாள்..
‘ஓலைக் குடிசைகூட இல்லாமல் இருந்த உனக்கு என் வீட்டுச் சாமான்கள் எல்லாம் ஓட்டை உடைசலாய் தெரிகிறதா..?’ இமைகளை இறுகமூடி மனதுக்குள் பொறுமத்தான் முடிந்தது.. வாய் விட்டுக் கேட்க முடியவில்லை.. இதைக் கூட அர்ச்சனா செய்திருக்க மாட்டாள்.. தாயும் அவளைத் தொடர்ந்து தந்தையும் அடுத்தடுத்து மறைந்த துயரத்தை அவளது மனதால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. பெற்றவர்களை மறக்க முடியாமல் அவர்களது பிரிவுத் துயரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உழன்று கொண்டிருந்தவளுக்கு லீலாவதியின் ஆட்டம் தலைவேதனையாக இருந்தது..
“புதுசு வாங்கப் பணம் வேணுமே சித்தி..”
“இன்ஸ்ட்டால்மெண்டில் வாங்கிப் போட்டாப் போச்சு..” சொன்னபடி வீடு முழுவதும் புதியவைகளை இறக்குமதி செய்தாள் லீலாவதி.. அதற்கான தவணைப் பணத்தைச் சரிகட்ட அர்ச்சனாவின் உணவிலும்.. கைச் செலவுக்குக் கொடுக்கும் பணத்திலும் கை வைத்தாள்..
“ரசம் சோறு துவையலோட சாப்பாட்டை முடிச்சுக்கனும் அர்ச்சனா.. ஸ்கூட்டியிலே வேலைக்குப் போகனும்னு நினைக்காதே.. தவணை அடைகிற வரைக்கும் பஸ்ஸில் வேலைக்குப் போ..”
அர்ச்சனா பல்லைக் கடித்தபடி ரசம் சோறையும் துவையலையும் விழுங்கி விட்டு பஸ் பிடிக்க ஓட அவளது தலை மறைந்ததும் லீலாவதி கறியும் மீனும் முட்டையுமாக சமைத்து மகனைச் சாப்பிட வைத்துத் தானும் சாப்பிடுவாள்.. வினய் தாயை மிஞ்சிய தனயன்.. அர்ச்சனா வீட்டிலிருக்கும் போது அவனுக்கு ரசம் சாதம் சாப்பிட்டு போரடிக்கிறது என்ற அழுது வைப்பான்..
அர்ச்சனா இந்த நாடகங்களை அறியாதவள் அல்ல.. அந்தத் தெருவில் இருப்பவர்கள் லீலாவதியுடன் பழக மாட்டார்கள்.. அபிராமி, வீரப்பனுடன் சொந்த பந்தமாக பழகியவர்கள் அவர்கள்.. அர்ச்சனா பிறந்தது அந்த வீட்டில்தான்.. அவள் கைக்குழந்தையாய் இருந்த போது தூக்கி வளர்த்த தோழமைகள் அவர்கள்.. இப்போது அர்ச்சனாவிற்கு நடந்து கொண்டிருக்கும் அநீதியைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கவலைப்படுபவர்கள் அவள் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் லீலாவதியும் அவளது மகனும் சசிருசியாய் அசைவ உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவதைப் பற்றி அவளிடம் சொல்லாமல் இருப்பார்களா..?
அறிந்தும் அறியாதவளைப் போல வேலைக்கு போய் வந்து கொண்டிருந்த அர்ச்சனாவின் ஸ்கூட்டி விற்கப் பட்டு லீலாவதியின் காதுகளில் புது தோடுகளாக உருமாறியது..
“இந்த மாசம் வினய்க்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டியிருந்தது அர்ச்சனா.. எனக்கு வேற வழி தெரியல..” அப்பட்டமாகப் புளுகினாள் லீலாவதி..
“அதுக்குத்தான் லோன் போட்டுப் பணம் கொடுத்தேனே சித்தி..”
“தவனைப் பணம் கட்ட அந்தப் பணத்தையும் சேர்த்துப் போட வேண்டியதாப் போச்சு அர்ச்சனா..”
ஒருவழியாய் தவணை அடைந்து அர்ச்சனா ஸ்கூட்டி ஒன்று வாங்க வேண்டும் என்று சொன்ன போது எதற்கு வீண் செலவு என்று தடுத்தாள் லீலாவதி..
“இந்தா இருக்கு பஸ் ஸ்டாப்.. இங்க ஏறினா உன் பேங்க் வாசலில இறங்கிக்கலாம்.. உனக்கு எதுக்கு ஸ்கூட்டி..?”
அர்ச்சனா நிமிர்ந்து ஓர் மௌனப் பார்வை பார்த்தாள்.. லீலாவதியின் வாய் அடைத்துக் கொண்டது..
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.