Chapter 15
“இந்த வீடுதானே..?”
காரைச் சாலையில் ஓரம்கட்டி நிறுத்திய மூர்த்தி கேட்டான்.. ‘ஆம்’ எனும் விதத்தில் தலையை அசைத்தாள் அர்ச்சனா..
“வீடு பூட்டிக் கிடக்கே..” மூர்த்தி சுட்டிக் காட்டினான்.
அர்ச்சனாவின் முகத்தில் பயமும் கலவரமும் வந்தன.. அவளது முகத்தை மூர்த்தி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில் அவற்றை மறைக்க முயன்றாள்.. முடியவில்லை.. அடுத்தது காட்டும் பளிங்கைப் போல மனதின் உணர்வுகளை முகத்தில் பிரதிபலித்து விடும் தன்மை கொண்டவள் அவள்.. அனிச்ச மலர்..! அவளது குணத்திற்கு அவள் லீலாவதியிடம் சிக்க நேர்ந்தது பெருந்துயரம்..
“இவ ஒருத்தி கூடத்தான் அதிகமா பழகியிருக்கேன்..” மன வேதனையுடன் முணுமுணுத்தாள்..
மூர்த்தி பேசவில்லை.. அவள் பேசட்டும் என்பதைப் போல அமைதியாக இருந்தான்.. அர்ச்சனாவின் விழிகளில் நிரம்பியிருந்த அச்சம் அவன் மனதை அசைத்தது..
அர்ச்சனா காரை விட்டு இறங்க முயன்றாள்..
“எதுக்கு..? அதுதான் வீடு பூட்டிக்கிடக்கே..” மூர்த்தி அதட்டினான்..
“எங்கே போயிருக்கா, எப்போ வருவான்னு தெரிந்துக்கலாமே..” பிடிவாதம் பிடித்தாள் அர்ச்சனா..
“சொன்னாக் கேட்க மாட்ட.. நானும் கூட வர்றேன்..”
இயல்பான ஒருமை அவனிடம் வந்திருந்தது.. அர்ச்சனாவுக்கு அது தவறாகத் தெரியவில்லை.. அவனது ஒருமை அழைப்பில் ஒர்வித சொந்தத்தையும் பாதுகாப்பையும் தான் அவள் உணர்ந்தாள்.. அவளுக்கு அந்த அழைப்பு பிடித்தமானதாக இருந்தது.. இருளைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்றாய் அவனது அழைப்பை உணர்ந்தாள்..
அவர்கள் இருவரும் பூட்டிக் கிடந்த வீட்டை அணுகினார்கள்.. பூட்டைத் தொட்டுப் பார்த்தாள் அர்ச்சனா..
“இதைப் பத்தி எதுவும் ரிசர்ச் பண்ணப் போறியா..?” சிரிக்காமல் கேட்டான் மூர்த்தி..
அர்ச்சனாவுக்கு வெட்கமாகி விட்டது.. சிவந்த அவளது முகத்திற்கு அந்த வெட்கம் வெகு பாந்தமான அழகைக் கொடுத்ததில் மனதிற்குள் புதியதோர் உணர்வை உணர்ந்தான்.. அந்த அழகை அதிகப் படுத்திப் பார்க்கும் ஆசை அவனுக்குள் தோன்றியது..
“இல்லேன்னா பூட்டப்பட்ட பூட்டு, பூட்டியிருக்கும் வீடு, அப்படி, இப்படின்னு கவிதை எதுவும் எழுதப் போறியா..?”
அர்ச்சனாவின் முகம் இன்னும் அதிகமாகச் சிவந்தது.. லஜ்ஜையுடன் அவள் உதட்டைக் கடித்தாள்.. மூர்த்திக்கு அதுதானே வேண்டும்..? அவளது கன்னச் சிகப்பையும், உதட்டுச் சுழிப்பையும் ஆழ்ந்த பார்வையுடன் ரசித்தான்.
‘உன் உதட்டோரச் சுழிப்பு..’
மனதுக்குள் மழைச்சாரலாய் பாடல் வந்தது.. இது போன்ற உல்லாச மனநிலை, தொலைந்து போய் வெகு காலமாகிறது.. ‘ஒரு காலத்திலே’ என்று கதை சொல்வதைப் போல அவன் கதை ஆகி விட்டது… உன்மத்தம் பிடித்தவனாக உறக்கமில்லா இரவுகளோடு சுற்றிக் கொண்டிருந்தவனின் செவிகளில் தாலாட்டுப் பாடலொன்று ஒலிப்பதைப் போல இருந்தது.. அதுதான் முதல் நாளின் பின்னிரவில் அவனை உறக்கத்தில் ஆழ்த்தியதோ..
எதனால் அவளிடம் இனம் புரியாத ஈர்ப்பு உண்டாகிறது என்று அவனால் கண்டு கொள்ள முடியவில்லை.. ஒருவேளை அவனையும், சாவித்திரியையும் போல உறவுகளால் வஞ்சிக்கப்பட்டு தனித்து நிற்பதினால் இருக்குமோ..
அர்ச்சனா முகச் சிகப்பை மறைத்துக் கொண்டு பக்கத்து வீட்டைப் பார்த்தாள்.. அங்கே விசாரிக்கலாமா என்று அவள் யோசித்த அதே நொடியில்..
“யாரு..?” என்ற விசாரணை பக்கத்து வீட்டிலிருந்து வந்தது..
வாசல் கதவைத் திறக்காமல் ஜன்னலின் கதவுகளை மட்டும் திறந்து, திரைச் சீலைகளை விலக்கி வெளியே எட்டிப் பார்த்த பெண்மணி நாற்பது வயதுகளில் இருந்தாள்..
“சுஹாசினி..” அர்ச்சனா இழுத்தாள்..
“சுஹாசினிக்கு என்ன..?” மிளகாயின் காரத்தோடு அடுத்த கேள்வி வந்தது..
அர்ச்சனா மூர்த்தியைப் பார்த்தாள்.. அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருந்த விசாரணை வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.. இது உனக்கான விசாரணை என்பதைப் போல நமட்டுச் சிரிப்புடன் பேசாமல் நின்றிருந்தான்..
“சுஹாசினிக்கு ஒன்னுமில்லைங்க..”
“தெரியுதில்ல.. அப்புறம் எதுக்காக சுஹாசினி பெயரைச் சொல்லிக்கிட்டு பூட்டை ஆட்டிக்கிட்டு இருக்க..?”
“இல்ல..”
“எது இல்ல..?”
“எதுவும் இல்லைங்க..”
“எதுவும் இல்லேன்னா இங்கே உனக்கென்ன வேலை..?”
என்னடா இது என்று ஆகி விட்டது அர்ச்சனாவுக்கு.. அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் விசாரித்தால் சுஹாசினியைப்பற்றி ஏதாவது தகவல் தெரியும் என்று பார்த்தால் இந்த அம்மா இந்தக் கடி கடிக்கிறாளே..
‘அந்தப் பக்க வீட்டில் கேட்டுப் பார்க்கலாமா..?’
சுஹாசினியின் வீட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் வீட்டில் விவரம் பெயராது என்று அந்தப் பக்க வீட்டைப் பார்த்தாள் அர்ச்சனா..
‘நாய்..! ஜாக்கிரதை..’ என்ற போர்டு மிரட்டியது..
“அங்கே நாய் இருக்கும் போல இருக்கே..” பயந்து போனாள்..
“இருந்தா என்ன..?” இலகுவாக கேட்டான் மூர்த்தி..
“கடிக்கும்.. குரைக்கும்..” அடுக்கினாள் அர்ச்சனா..
“இந்த அம்மாவை விடவா குரைத்து கடிக்கப் போகுது..?”
மூர்த்தியின் கேள்வியில் அர்ச்சனாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது.. முல்லைப் பூக்கள் இதழ் விரிப்பதைப் போன்ற அவளது சிரிப்பு மூர்த்தியின் மனதை கொள்ளை கொண்டது.. இந்தச் சிரிப்பை இவள் எங்கே ஒளித்து வைத்திருந்தாள்..?
‘பாவம்.. இவளா ஒளித்து வைத்தாள்..? அது தானாக தொலைந்திருக்கிறது..’
“என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு..?” பக்கத்து வீட்டின் ஜன்னலில் இருந்து அதட்டல் வந்தது..
அர்ச்சனா அவசரமாக வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.. குறிஞ்சி மலரைப் போன்ற அரிதான சிரிப்பை அடக்கிக் கொள்ள வைக்கிறாளே என்று ஜன்னல் பெண்மணி மீது மூர்த்திக்கு கோபம் வந்தது..
“போர்டை தப்பா மாத்தி மாட்டி வைச்சிருக்கிறாங்க.. ஆக்சுவலா அந்த போர்டை இந்த வீட்டில மாட்டியிருக்கனும்..” என்றான்..
அர்ச்சனா வெடித்துச் சிரித்து விட்டு..
“சும்மாயிருங்க..” என்றாள்..
“நான் என்ன பண்ணினேன்..? நீ அங்கே இருக்க.. நான் இங்கே இருக்கேன்.. அபாண்டமாப் பேசக் கூடாது..”
மூர்த்தியின் பேச்சில் அர்ச்சனாவின் முகம் குங்குமக் கூடையானது.. அதை ஜன்னல் பெண்மணி கவனித்திருக்க வேண்டும்..
“கொடைக்கானலில லேக் இருக்கு.. கோக்கர்ஸ் வால்க் இருக்கு.. பார்க் இருக்கு.. ஃபால்ஸ் இருக்கு..” என்று வரிசைப் படுத்தினாள்..
“இதை எதுக்கு நம்மிடம் சொல்கிறாங்க..?” அர்ச்சனா புரியாமல் கேட்டாள்..
அந்தப் பெண்மணி என்ன சொல்ல வருகிறாள் என்று மூர்த்திக்குத் தெளிவாகப் புரிந்தது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்..
“அதை என்னிடம் கேட்டா, எனக்கு என்ன தெரியும்..? சொல்கிறவங்களிடம்தான் கேட்கனும்..” என்றான்..
“இந்த அம்மாவிடம் யார் கேட்பது..?”
“நான் கேட்கவா..?”
“வேண்டாம்.. வேண்டாம்..”
“ஏன்..?”
“உங்க லெவலுக்கு இந்தம்மாவிடம் பேசக் கூடாது.. இவங்க மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிற ரகமா இருக்காங்க..”
அவன் மீதான அவளது அக்கறையில் ஈர்க்கப் பட்டவனாக அவளை ஆழ்ந்து ஓர் பார்வை பார்த்தான்.. அவள் முகச்சிகப்புடன் தடுமாறினாள்..
“ம்ஹீம்.. காலங்கார்த்தாலேயே வீட்டு வாசலில் மார்னிங் ஷோ..! தேவைதான் எனக்கு.. ஏம்மா.. உனக்கு உன் லவ்வருடன் கொஞ்சிக் குழாவ என் வீட்டு வாசல்தான் கிடைச்சதா..? கொடைக்கானலில இருக்கிற இத்தனை இடங்களில ஏதாவது ஒரு இடத்துக்குப் போய் கொஞ்ச வேண்டியதுதானே..” ஜன்னல் பெண்மணி அலுத்துச் கொள்ள..
“ஹைய்யோ.. இந்தம்மா என்ன இப்படியெல்லாம் பேசறாங்க..” என்று அரண்டு போனாள் அர்ச்சனா..
“அவங்க உன்னையும் என்னையும் லவ்வர்ஸ்ன்னு முடிவே பண்ணிட்டாங்க..” ரசித்துச் சொன்னான் மூர்த்தி..
“லவ்வர்ஸா..?”
“நான் சொல்லலை.. அவங்க சொல்கிறாங்க.. என்னவோ கதை வசனம் எழுதி அவங்களிடம் கொடுத்துப் பேச சொன்னதைப் போல என்னை முறைக்கிறயே..”
மூர்த்தியின் விழிகளில் தெரிந்த சிரிப்பு அவளது இக்கட்டான நிலையை அவன் ரசிப்பதை படம் போட்டுக் காட்டியது..
“இந்த அம்மாவோட சங்காத்தமே வேண்டாம்..”
ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் ‘நாய்..! ஜாக்கிரதை..’ போர்டு மாட்டப்பட்டிருந்த வீட்டிற்கு நகர்ந்தாள்..
“அங்கே நாய் இருக்குமே..” மூர்த்தி பயமுறுத்தினான்.
“இருக்கட்டும்..”
“கடிக்குமே..”
“இந்தம்மாவை விட அதிகமாக் கடிக்காது..”
“குரைக்குமே..”
“இந்தக் குரைப்பை விட வேற எந்தக் குரைப்பும் பெரிதா இருக்காது..”
“குட் டிசிசன்..”
அவன் மெச்சுகிறானா இல்லை கேலி செய்கிறானா என்று ஒரு மண்ணும் புரியவில்லை.. என்னத்தையோ சொல்லி விட்டுப் போகட்டும் என்று வீரத்துடன் அடுத்த வீட்டை அணுகி காலிங் பெல்லை அழுத்தியவள்..
“லொள்.. லொள்..” என்ற நாயின் குரைப்புச் சப்தத்தில்..
“அம்மாடி..” என்று அலறிப் பின்வாங்கி மூர்த்தியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்..
“என்னே உன் தைரியம்..” மூர்த்தியின் கேலியில் முகம் சிவந்தாலும் அவனது முதுகின் மறைவிடத்திலிருந்து அவள் வெளியே வரவேயில்லை..
அவளது அச்சம் அவனுக்கு உவப்பானதாக இருந்தது.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகைக் குணங்கள் கொண்ட மங்கையாக அவள் இருந்தாள்.. அவள் மீதான மூர்த்தியின் ஆர்வம் அதிகமானது..
“யார் நீங்க..?”
கதவைத் திறந்த பெரியவர் அறுபதுகளில் இருந்தார்.. அவருக்குப் பின்னால் பொசுபொசுவென வெண்ணிற முடி அடர்ந்திருக்க நீண்ட மூக்குடன் நாய் நின்றிருந்தது..
அதன் விழிகளில் கோபம் இல்லாமல் சிநேகிதப் பளபளப்பு இருந்ததில் அச்சம் அகன்ற அர்ச்சனா சிறிதளவு தைரியம் வரப் பெற்றவளாக மூர்த்தியின் முதுகுக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாள்.. அவளைக் கண்டதும் நாயின் காதுகள் விடைத்துக் கொண்டன.. அதன் வால் இங்குமங்கும் ஆடியது..
“அட.. எங்க வீட்டு ஜிம்மிக்கு உங்களைப் பிடிச்சு போச்சு போல..” நட்புடன் சிரித்தார் பெரியவர்..
இப்படிப்பட்ட மனிதர் இருக்கும் வீட்டில் வளரும் நாய் சிநேகித குணத்துடன்தான் வளரும் என்று நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.. மனிதர்களைப் போல வளர்ப்புப் பிராணிகளும் வளரும் சூழலுக்கேற்ற குணாதிசியங்களுடன் தான் வளர்கின்றன..
“ஐ ஆம் மூர்த்தி..”
அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் பெரியவரின் முகத்தில் பிரமிப்பு கலந்த ஆச்சரியம் வந்தது..
“யார்..? கொடை உல்லன், யூகலிப்ட்ஸ் ஆயில் பேக்டரியோட முதலாளியா..?” என்று பரபரத்தார்..
“யெஸ்..”
“சாரோட முக ஜாடையைப் பார்த்ததுமே மூர்த்தி சார் போல இருக்கேன்னு நினைச்சேன்.. நீங்க எப்படி இங்கே வந்திருப்பீங்கன்னு சந்தேகப்பட்டுக்கிட்டு பேசாமல் இருந்துட்டேன்.. என் தம்பி மகன் உங்க பேக்டரியிலதான் வேலை செய்கிறான் சார்..”
“ஓ..”
“வாசலிலேயே நிற்கறிங்களே.. ப்ளீஸ் கம் இன்..”
சிகப்புக் கம்பள வரவேற்புக் கிடைக்கும் பெரிய மனிதன் அவன் என்ற உண்மை உறைத்ததில் அர்ச்சனா அவனது முதுகை விட்டு விலகி நின்றாள்.. மூர்த்தியின் புருவங்கள் ஆட்சேபமாக சுருங்கின.. அவளது விலகலை அவன் விரும்பவில்லை.. அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் கோபம் கொண்டான்..
“நீதானே விவரம் கேட்கணும்னு வந்த..? இப்ப என்னவோ உனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததைப் போலத் தள்ளி நிற்கிற..?”
வேறு வகையில் அவனது கோபம் அவள் மீது பாய்ந்தது..
“ஐ ஆம் ஸாரி..” குற்ற உணர்வுடன் அவள் முன்னால் வந்து..
“சார்.. உங்க பக்கத்து வீட்டில இருக்கிற சுஹாசினி என்னுடைய பிரண்ட்..” என்று ஆரம்பித்தாள்..
“பக்கத்து வீட்டில் இருந்த சுஹாசினின்னு சொல்லும்மா..” பிழைதிருத்தம் செய்தார் பெரியவர்..
“ஏன் சார்..?”
“இப்ப அந்தப் பொண்ணு இங்கே இல்லைம்மா.. அவ அப்பாவுக்கு டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகிட்டதினால அவங்க ஃபேமிலி டெல்லிக்கு ஷிப்ட் ஆகி சிக்ஸ் மன்த்ஸ் ஆகுதே..”
‘டெல்லிக்குப் போயிட்டாளா..?’
அர்ச்சனாவுக்கு கண்களை இருட்டியது.. அடுத்த வரிசையில் இருக்கும் தோழிகளில் அர்ச்சனாவுக்கு அடைக்கலம் தருவதைப் போன்ற பெரிய மனதும் சொந்தமும் கொண்ட தோழி யார் என்று சல்லடை போட்டு யோசித்துப் பார்த்தாள்.. எவர் முகமும் நினைவில் வரவில்லை..
“சுஹாசினி வீட்டுக்கா வந்தீங்க..?” பெரியவரின் கேள்விக்கு..
“சும்மா பார்த்து விட்டுப் போகத்தான் வந்தா.. ஷி இஸ் மை ரிலேட்டிவ்.. எங்க வீட்டில்தான் இருக்கா.. சுஹாசினி இவளோட பெஸ்ட் பிரண்டாம்.. பார்க்கனும்னு சொன்னா.. அழைத்துக்கிட்டு வந்தேன்..” என்று கோர்வையாகப் பதில் சொன்னான் மூர்த்தி..
அவன் சமாளித்து விட்ட நன்றி மனதில் வந்தாலும் ‘நானென்ன இவனுக்கு உறவுக்காரியா..? ஏன் இப்படிச் சொல்கிறான்..?’ என்று ஆட்சேபம் கொண்டாள் அர்ச்சனா..
விண்ணுக்கு மண் எப்படி உறவாக முடியும்..? அவன் எங்கே..! அவளெங்கே..? மலைக்கு மடு உறவாக முடியுமா..?
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.