Chapter 20

0Shares

‘குளிராதா..?’ பரிதவித்தாள் அர்ச்சனா..

ஸ்வெட்டர் கூட அணியாமல் வெறி பிடித்தவனைப் போலத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தான் மூர்த்தி.. ஹாலின் சோபாவில் தலைமீது கை வைத்து சோகச்சித்திரம் போல சரிந்திருந்தாள் சாவித்திரி.. நள்ளிரவைத் தொட்டுக் கொண்டிருந்த நேரத்திலும் மூர்த்தியின் பங்களா விளக்குகளின் ஒளிர்வுடன் விழித்திருந்தது.. எவரும் சாப்பிடவில்லை..

“ஸ்வெட்டர் போட்டிருக்கலாமே..” மனம் தாங்காமல் சாவித்திரியிடம் கேட்டாள்..

நிமிர்ந்து பார்த்த சாவித்திரியின் விழிகளில் துயரம் மண்டியிருந்தது..

“யார் சொல்கிறது..?” பதிலுக்குக் கேட்டாள்..

அர்ச்சனா உதட்டைக் கடித்தபடி மௌனமானாள்.. மூர்த்தியின் உன்மத்தம் பிடித்த தோற்றத்தைக் கண்டு அவளே பயந்து போனாளே.. சாவித்திரியால் எப்படி பேசியிருக்க முடியும்..?

“நிஜம்தான்..” முணுமுணுத்தாள்..

“அவரைப் பார்த்தா எனக்கே பயமாய் இருக்கு.. உங்களுக்கும் பயம இருக்கும்தானே..”

“பயமா..? மூர்த்தியிடமா..? எனக்கா..?” உதட்டைச் சுழித்து மறுத்தாள் சாவித்திரி..

“இது பயமில்லைம்மா.. பற்றியெரியும் நெருப்பு.. நான் மடியில் போட்டு வளர்த்த என் பிள்ளை மனசில எரியற நெருப்பை அறிஞ்சவ நான்.. இந்தக் குளிரால என் பிள்ளையோட கொதிப்பை அடக்க முடியுமான்னுதான் பேசாம இருக்கிறேன்.. என் மகன் விடிய விடிய பனி கொட்டற ராத்திரியில கொடைக்கானலைச் சுத்திட்டு வீட்டுக்குத் திரும்பி வர்றப்ப என் மனசு சல்லடை சல்லடையா ஆகும் அர்ச்சனா.. நீ வந்த பின்னாலே அது நின்றிருந்தத.. இந்தப் பெரியமனுசன் வந்து போனார்.. மறந்து போன நினைவுகள் எல்லாம் மறுபடியும் எழும்பி வந்து மூர்த்தியத் துரத்த ஆரம்பிச்சிருச்சு.. என் பிள்ளை தூக்கமில்லாம பித்துப் பிடிச்சதைப் போலச் சுத்திக்கிட்டு இருக்கு..”

அர்ச்சனாவின் இதயம் கனத்தது.. அடைக்கலம் கொடுக்கும் வள்ளல் அமைதியின்றித் தவிப்பதா..? மனம் தாங்காமல் எழுந்து தோட்டத்துக்குச் சென்றாள்.. சாவித்திரி அவளைத் தடுக்கவில்லை.. போர்த்தியிருந்த சால்வையையும் மீறித் துளைத்த குளிரைப் பொருட் படுத்தாமல் மூர்த்தியை அணுகி விட்டாள் அர்ச்சனா.. அவனோ அவளது வரவை உணராதவனாய் பித்துப் பிடித்தவனைப் போல இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்..

“பிறை தேடும் இரவிலே – உயிரே..!

எதை தேடி அலைகிறாய்..?”

சன்னக்குரலில் பாடினாள் அர்ச்சனா..! என்ன ஒரு ஆச்சரியம்.. மூர்த்தியின் நடை நின்றது.. அவன் அவளைப் பார்த்து விட்டான்..

அர்ச்சனாவின் விழிகளில் கண்ணீர் பொங்கியது.. அமைதி இழந்து தவிப்பவனை அன்னை போல அரவனைத்துக் கொள்ளத் துடித்தாள் அவள்..

“கதை சொல்ல அழைக்கிறேன் – உயிரே..!

அன்பே..! நீ வா..”

அவள் இருகரம் நீட்டி அழைத்தாள்.. அவன் சிலையானான்.. அவர்களின் மீது பனி பொழிந்து கொண்டிருந்தது.. சாவித்திரி வீட்டுக்குள் இருந்தாள்.. வாசலில் காவல் காக்கும் செக்யூரிட்டியின் அறை தொலைவில் இருந்தது.. அவனும், அவளும் மட்டும் இருந்த தோட்டத்தின் இருள் அவர்கள் இருவரையும் மறைத்தது.. அவள் பாடியதை அவன் மட்டுமே கேட்டான்.. பனி விழும் இரவில் அவர்கள் இருவர் மட்டும் தனித்திருந்த அந்தப் பொழுது சொல்லவொண்ணாப் பரிணாமங்களை உள்ளடக்கியதாக அவர்களை உள்ளிழுத்துப் புதைத்துக் கொண்டது..

“இருளில் கண்ணீர் எதற்கு..?

மடியில் கண்மூடு வா..

அழகே..! இந்த சோகம் எதற்கு..?

நானுன் தாயும் அல்லவா..?”

செழுத்தப்பட்டவனைப் போல அவளருகில் சென்றவனை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள் அர்ச்சனா.. தளர்ந்து சரிந்தவனைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் அருகிலிருந்த மரபெஞ்சில் விழுந்தாள்.. அவளது மடியில் சரிந்தான் மூர்த்தி.. அர்ச்சனாவின் மனம் அன்பின் கனம் தாங்காமல் தள்ளாடியது.. தன்னைப் போர்த்தியிருந்த சால்வையை இழுத்து அவனுக்கும் போர்த்தி விட்டாள்.. மூர்த்தி கண்களை மூடிக் கொண்டான்.. அவனது இமையோரங்களில் வழிந்த கண்ணீரைத் தன் முந்தானைச் சேலையினால் துடைத்து விட்டு அவனது முடிகோதி அமைதிப் படுத்த முயன்றாள் அர்ச்சனா..

“உனக்கென மட்டும் வாழ்ந்த இதயமடி..

      உயிர் உள்ளவரை நானுன் அடிமையடி..”

அவனது இதழ்கள் முணுமுணுத்ததில் வேதனையைடந்த அர்ச்சனாவுக்கு என்ன சொல்லி அவனை தேற்றுவது என்று தெரியவில்லை.. அவள் காதலித்ததில்லை.. ‘காதல் என்பது ஆள்கொல்லி நோய்’ என்று அவளுக்குத் தெரியாது.. மூர்த்தியின் மீது இருக்கும் அளவு கடந்த அன்பினால் மட்டுமே மடியில் சரித்திருந்தவளுக்கு அவனது இதயத்தை வாட்டிக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிக் கொண்டிருக்கும் காதல் தோல்வியின் வேதனை எத்தகையதாக இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை.. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் மூர்த்தியின் மீது அவள் கொண்டிருந்த நேசம் மட்டும்தான்.. அது காதலா என்று கேட்டால் தெரியாது என்பதுதான் அவளது பதிலாக இருக்கும்.. அவளது நேசத்துக்குரியவன் மனவலியில் துடித்துக் கொண்டிருக்கிறான்.. அவனை அமைதிப்படுத்த அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்..

“அழுதால் உன் பார்வையும்

அயர்ந்தால் உன் கால்களும்..

அதிகாலையில் கூடலும்

சோகம் தீர்க்கும்.. போதுமடி..”

அவன் பாடலில் இறைஞ்சினான்.. அர்ச்சனாவின் கன்னி மனம் மருண்டது.. அவன் கேட்டதைக் கொடுக்க அவளால் முடியுமா..?

மனதின் கேள்விக்கு விடை தேடாமல் அவனது முகத்தின் மீது கவிழ்ந்தாள் அவள்.. பரந்த அவனது நெற்றியில் சூடான இதழ்களை அவள் பதித்த கணத்தில் அவனது தலைமீது ஏறியிருந்த பாரம் அகன்று விட்டதைப் போல உணர்ந்தான் மூர்த்தி..

“நிழல் தீண்டிடும் ஆண்மையும்

நிஜம் தேடிடும் பெண்மையும்..

ஒரு பார்வையில் வாழும் இன்பம்..”

அவளது விழிகளில் துளிர்த்த வெப்பக் கண்ணீர் துளிகள் அவன் முகத்தின்மீது விழுந்த போது கடந்த காலத்தின் மனச்சுமை அகன்று மனம் பஞ்சுப் பொதி போல லேசானது..

“என் ஆயுள்ரேகை நீயடி..

என் ஆணி வேரடி..

சுமை தாங்கும் எந்தன் கண்மணி..

எனை சூடும் பனி..”

இப்போது அவன் பாடிய பாடல் அவளுக்கான பாடலாக இருந்தது.. எதிர்பாராத ஒரு கதவு திறந்து ஏதோ ஓர் நதிச் சுழலுக்குள் அவளை அழைத்தது.. சுழலில் மூழ்கிக் கொண்டிருந்தவன் அவளது பிரியத்துக்குரியவன் என்பதால் சற்றும் யோசிக்காமல் தயக்கம் தவிர்த்து அந்தச் சுழலில் இறங்கி விட்டாள் அர்ச்சனா.. அவளைத் தேடிப் பிணைத்து இழுத்த அவனது கைகளுக்குள் அவள் அடங்கினாள்.. உஷ்ணம் நிரம்பிய அவளது உடல் பனியில் குளிர்ந்திருந்த அவனது உடல் மேல் போர்வையாக போர்த்திக் கொண்டதில் அவளது உஷ்ணம் அவனது உடலுக்கு இடம் மாறியது.. அர்ச்சனாவுக்குள் பூகம்பம் வெடிப்பதைப் போலிருந்தது.. இது அவளா என்று அவள் நடுங்கினாள்.. அபிராமியின் மகள் அவள்.. அன்னிய ஆடவனின் மீது சரிந்திருக்கிறாள்.. இது முறையல்ல என்று கூவியது அவள் மனம்.. விலகும் நினைவை மூர்த்தியின் விழிகளில் இருந்த தேடல் அழித்தது.. அலைபாயும் அவனது நெஞ்சை தடதடக்கும் அவனது மார்பகம் உணர்த்தியதில் அவள் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டாள்..

“விழியின் அந்தத் தேடலும்..

அலையும் உந்தன் நெஞ்சமும்..

புரிந்தாலே போதுமே..

ஏழு ஜென்மம் தாங்குவேனே..”

புரண்டு அவளைத் தனக்குள் கீழே கொண்டு வந்தவனைத் தாங்கிக் கொண்டாள் அர்ச்சனா.. அவளது முகத்தில் கவிந்த அவன் முகத்தின் முத்தங்களை இமைமூடி ஏற்றுக் கொண்டாள்.. கொதிக்கும் அவன் மனதை குளிர்விக்கும் பனித்துளிகளாய் பனி விழும் இரவில் அவனது மனத்துயரைத் தணித்தாள்..

“அனல் மேலே வாழ்கிறாய்..

நதிபோலே பாய்கிறாய்..

ஒரு காரணம் இல்லையே..

மீசை வைத்த பிள்ளையே..”

அவனது மீசையின் ரோமங்கள் வழவழப்பான அவளது கன்னத்தில் உராய்ந்து சுகமான ஓர் வேதனையைக் கிளப்பியது.. கண்மூடிக் கிடந்தவளின் மீது அவனுக்குள் காதல் பெருகியது.. இதற்கு முன் அவன் இழந்ததைக் காதல் என்று சொல்வதாக இருந்தால், எவளோ ஒருத்தி அவனது துயருக்காக தன்னையே இந்த பனி விழும் இரவில் அர்ப்பணிக்க முன் வருகிறாளே, இதை என்னவென்று சொல்வது..? இது காதல் இல்லையா..?

“இதைக் காதல் என்று சொல்வதா..?

நிழல் காய்ந்து கொள்வதா..?

தினம் கொல்லும் இந்த பூமியில்..

நீ வரும் வரும் இடம்..”

மனம் தாளாமல் அவளது முகத்தில் முகம் புதைத்தான்.. முடிகோதி அணைத்துக் கொண்ட அவளது பரிவில் அவன் பட்ட மன ரணங்கள் ஆறத் துவங்கின.. மெதுவாக விலகி அவன் எழுந்ததில் அவளது காருண்யத்தை கௌரவிக்கும் கண்ணியம் இருந்தது.. அர்ச்சனா எழுந்து கொள்ள கை கொடுத்தான்.. எல்லை கடக்காத அவனது ஆண்மைக்கு அவளது மௌனம் நன்றி தெரிவித்தது.. இவன் இப்படித்தான் இருப்பான் என்ற பெருமையில் அவளது நெஞ்சம் பூரித்தது..

அவர்கள் மௌனமாக வீட்டை நோக்கி நடந்தார்கள்.. அவன்மீது சேர்த்துப் போர்த்தப் பட்டிருந்த சால்வையை இழுத்து அவள்மீது முழுமையாக போர்த்தி விட்டுச் சரி செய்தான்.. மிருதுவான அவளது புன்னகை அவனது கடந்த கால காயங்களை ஆற்றி விடும் வல்லமை கொண்டதாக இருந்தது..

ஒரு பாடல்..! திரைப்படப் பாடல்..! அதற்குத்தான் எத்துனை சக்தி..! மனம் நைந்து போயிருந்த மூர்த்தியையும் தனக்குள் இழுத்து அர்ச்சனாவுடன் சேர்ந்து பாட வைத்து விட்டதே..

காலடியோசையில் சோபாவில் முழங்கால்களில் முகம் பதித்து அமர்ந்திருந்த சாவித்திரி தலை நிமிர்ந்தாள்.. மூர்த்தியுடன் அர்ச்சனா வந்து கொண்டிருந்ததில் பரபரப்பானாள்.. அவள் முகத்தில் வியப்புப் பரவியது..

அதுநாள்வரை அமைதியிழந்து தவித்த மூர்த்தி தனது உலாவலை நிறுத்தி விடிவதற்குள் வீடு வந்ததாக சரித்திரம் இல்லை.. முதன் முறையாக அர்ச்சனாவைக் கண்ட பனி விழும் இரவில் விடிவதற்குள் வீடு திரும்பினான்.. இரண்டாவது பனி விழும் இரவு இது..

“பசிக்குதும்மா.. சாப்பிட என்ன வைத்திருக்கீங்க..?”

எதுவும் நடக்காததைப் போல மூர்த்தி கேட்டதும் கரகரவென அழுது விட்டாள் சாவித்திரி..

“உனக்குப் பிடித்த இடியாப்பம், தேங்காய்பால், தோசை, சிக்கன் வறுவல், சிக்கன் குருமா வைச்சிருக்கேன் மூர்த்தி.. சாப்பிட வா ராசா..”

“செமத்தியான சாப்பாடுதான் போங்க.. இந்தக் குளிருக்கு கோழி வறுவலை ஒரு பிடிபிடிக்கப் போறேன் பாருங்க..”

“பிடிப்பா.. நீ ரசிச்சுச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு..”

சாவித்திரி கண்ணீரைத் துடைக்கும் நினைவின்றி ஓடியோடி பரிமாறினாள்..

“நீயும் உட்காரு..” அர்ச்சனாவிடம் சொன்னான் மூர்த்தி.. அவனைப் பார்க்கக் கூச்சப்பட்டு வேறு திசையில் பார்த்தபடி..

“நானும் ஆண்ட்டியும் சேர்ந்து சாப்பிட்டுக்குவோம்..” என்று முணுமுணுத்தாள் அர்ச்சனா..

செம்மை படர்ந்த அவளது முகத்தைப் பார்க்க அவனுக்குப் பிடித்திருந்தது.. சற்றுமுன் தோட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் அவள் லஜ்ஜை கொண்டிருப்பதை புரிந்து கொண்டவனுக்கு உல்லாசமாக இருந்தது.. நிகழ்ந்த நிகழ்வுகளை மனதுக்குள் அசை போட்டவனுக்கு சீழ்க்கையடிக்க வேண்டும் போல இருந்தது.. சன்னமாக விசில் அடித்தான்… சாவித்திரி ஆச்சரியமானாள்.. அர்ச்சனாவைப் பார்த்தாள்.. சிவந்திருந்த அவளது முகம் எதையோ உணர்த்தியது.. அர்ச்சனாவின் தடுமாற்றம் புதிதாக இருந்தது..

மூர்த்தி சாப்பிட்டு எழுந்து கை கழுவி விட்டு வந்தான்.. சூடான பாலை தம்ளரில் நிரப்பி அவனிடம் தந்தாள் சாவித்திரி.. அர்ச்சனாவையே பார்த்தபடி மூர்த்தி பாலை உறிஞ்சிக் குடித்ததை கவனித்தவளுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது..

“ஈவினிங் யார் போன் பண்ணினதும்மா..?” எதையோ கேட்க வேண்டும் என்று கேட்டு வைத்தான் அவன்..

“மாயா பேசினாப்பா..” ஏதோ நினைவில் சொல்லி விட்டுப் பதறிப் போனவளாக மூர்த்தியைப் பார்த்தாள் சாவித்திரி..

அவள் வளர்த்த பிள்ளை இப்போதுதான் மனமிரங்கி தன் உலாவுதலை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்து வயிறாரச் சாப்பிட்டிருக்கிறான்.. மறுபடியும் அவனது அமைதியைப் பறித்து பனி கொட்டும் இரவில் அவன் அலையத் துரத்தி விடும் பெயரை அவள் சொல்லி விட்டாளே..

‘வெளியில் போய் விடாதே மூர்த்தி..’ அவளது விழிகள் கெஞ்சின.. 

அவள் பயந்ததைப் போல எதுவும் நடக்கவில்லை..

“மாயாவா..? அவ பேசினா போனை கட் பண்ணிருங்கம்மா..” வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டு அர்ச்சனாவைப் பார்த்தபடி மாடிப்படிகளில் ஏறி விட்டான் மூர்த்தி..

“அந்த மாயா யார் ஆண்ட்டி..?” கேள்வி கேட்டவளை உற்றுப் பார்த்தாள் சாவித்திரி..

மெல்லிய உடல் வாகும், களங்கமற்ற முகமுமாக இருந்த அந்தச் சின்னப் பெண் தான் எதைச் சாதித்திருக்கிறோம் என்பதை அறிவாளா என்று பிரமித்தது அவளது மனம்..

“அந்த மாயாதான் மூர்த்தியின் காதலி..!”

அர்ச்சனாவை நேர்கொண்ட பார்வை பார்த்தபடி சொன்னாள் சாவித்திரி.. அவள் நினைத்தைப் போல அர்ச்சனாவின் முகம் மாறிவிட்டது.. ஏக்கமும் நிராசையும் ஒன்றுசேர ஏழைத்தனமான பார்வையொன்றை பார்த்து வைத்தாள் அர்ச்சனா..

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link