Chapter 22

0Shares

‘அச்சமில்லை.. அச்சமில்லை..

அச்சமென்பதில்லையே..

இச் சகத்தில் உள்ளோர்கள்

எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை.. அச்சமில்லை..

அச்சம் என்பதில்லையே..’

எட்டயபுரத்தின் முண்டாசுக் கவியின் எழுச்சிமிக்க வரிகளுக்கான எடுத்துக்காட்டாக மதுசூதனனை எதிர்த்து நின்றான் மூர்த்தி..

“உங்க பாட்டன், பூட்டன் சம்பாதித்த சொத்துங்கறிங்களே.. உங்க பாட்டனும், பூட்டனும் எனக்கு யாரு..? வழியில் போகிற வழிப் போக்கர்களா..?”

நல்ல நல்ல கேள்விகளைத்தான் கேட்டான் மூர்த்தி.. மற்றவர்கள் என்றால் வெட்கித் தலை குனிந்திருப்பார்கள்.. மதுசூதனன் வெறி பிடித்தவர்.. அப்படிச் செய்யாமல் மூர்த்தியைத் துவம்சம் செய்தால் என்ன என்ற வெறி கொண்டார்..

“உங்க பாட்டனும், பூட்டனும், அவங்கவங்க காலத்தில பரம்பரைச் சொத்தை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் காண்பிச்சாங்க.. சொத்து உங்க கைக்கு வந்த போது நீங்க என்னத்தைச் செய்து கிழித்தீங்க..? உங்க காலத்தில நீங்க உருவாக்கின சொத்துன்னு ஒன்றைக் கை காட்டுங்க பார்க்கலாம்.. ஒன்றுமே இல்லை.. பரம்பரைச் சொத்தை வைத்துக்கிட்டுப் பந்தாக் காண்பித்தீங்க.. நீங்களும் எதுவும் செய்யலை.. உங்க மகன்களையும் எதுவும் செய்ய விடலை.. சொத்தைப் பிரித்துக் கொடுத்தால் தானே அவங்களால் எதுவும் செய்ய முடியும்..? நீங்கதான் அத்தனை சொத்துக்கும் நீங்கதான் அதிபதின்னு ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தீங்களே.. நல்லவேளை..! சித்தப்பாவுக்கு மலைநாட்டில பெண் எடுத்தீங்களோ.. நாங்க பிழைத்தோமோ… வயநாட்டுத் தாத்தா துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கொடைக்கானல் மலையில வந்து குதிச்சிருவாருன்னு பயந்து பாகத்தைப் பிரித்தீங்க.. தேங்க் யு சித்தி.. என் அண்ணன், தம்பி, தங்கைகள் சார்பாக நான் தேங்க்ஸ் சொன்னேன்னு வயநாட்டுத் தாத்தாவுக்குப் போன் போட்டுச் சொல்லிருங்க..”

மதுசூதனனின் கடைசி மருமகளான கோமளா மூர்த்தியின் நன்றியுரையில் திணறிப் போனாள்.. மாமனாரின் கோப முகத்தைப் பார்க்கப் பயந்தவளாக வசுந்தராவின் முதுகின் பின்னால் ஒன்றிக் கொண்டு மூர்த்தியைப் பார்த்து உதட்டில் ஒற்றை விரலை வைத்துப் ‘பேசாமல் இரு..’ என்று சைகை காட்டினாள்..

மூர்த்தியா பேசாமல் இருப்பான்..? அவன் பேச வேண்டியதை எல்லாம் பேசித் தீர்த்து விட்டுத்தான் வெளியே போனான்.. அவன் பேசிய பேச்சுக்களில்..

“வயதான காலத்தில் உங்களுக்கு எதுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸீம், ஸ்டார் ஹோட்டலும்..?” என்று கேட்ட கேள்வி மட்டும் நவீனுக்குப் பிடித்தமானதாக இருந்தது..

“இருக்க அரண்மனை, போட்டுக்க பரம்பரை வைர நகைகள்.. செலவளிக்க பேங்க் பேலன்ஸ்ன்னு இருந்துக்கிட்டு ஹோட்டலையும் ஷாப்பிங் காப்ளெக்ஸீகளையும் கைப்பற்றிக்கிட்டு இருக்கீங்களே.. நீங்கள்ளாம் ஒரு பெரிய மனுசன்.. பொடித்தனமான வேலைகளுக்கு நீங்கதான் பெஸ்ட் எக்ஸாம்பிள்.. இதில இவரு பரம்பரைப் பெருமையைப்பற்றி வாய் கிழியப் பேசறாரு.. உங்க பரம்பரையில யாராவது ஒரு தாத்தா இப்படியாப்பட்டவரா இருந்திருக்காங்களா..? நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க..?”

மூர்த்தி கிழித்த கிழியில் நைந்து நொந்து போன மதுசூதனன் மூர்த்தியை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்.. மூர்த்தியுடன் பேசுபவர்களைக் கூடத் தள்ளி வைத்தார்.. பெற்ற தாய், தகப்பனிடம் கூட மூர்த்தி பாசத்துடன் பேச முடியாமல் போனது.. 

“மூர்த்தி.. சாப்பிட வா..”

மகனை வசுந்தரா அழைக்கும் போதே..

“வசுந்தரா.. என்னோட வைர அட்டிகையைப் பார்த்தியா..?” என்று அலமேலுவின் குரல் எழும்பி விடும்.

“இல்லையே அத்தை..” மாமியாருக்குப் பதில் சொல்ல விரைந்து விடுவாள் வசுந்தரா..

“அப்பா..” தகப்பனிடம் பேச நினைத்து அணுகுவான் மூர்த்தி..

“கோவிந்த்.. நம்ம ஆடிட்டரைப் பார்க்கச் சொன்னேனே.. பார்த்தியா..?” மதுசூதனன் அதிகாரமாக கோவிந்தராஜனை வெளி வேலைக்கு அனுப்பி விடுவார்..

பெற்றவர்களுக்கே இப்படியெனும் போது மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.. அகன்று, பரந்து, விரிந்திருந்த அந்த அரண்மனையில் மூர்த்தி தனிமைப் படுத்தப் பட்டான்.. மதுசூதனனுக்குத் தெரியாமல், அவரது அதிகாரத்திற்குப் பணியாமல் அஞ்சாமையுடன் மூர்த்தியைப் பார்த்துப் பேசிப் பாசம் காட்டுவது மூன்று பேர்தான்… மூர்த்தியின் தங்கை மிருதுளா, மூர்த்தியின் சித்தப்பா ராமநாதனின் பிள்ளைகளான ராஜேஸ், ராதிகாதான் அவர்கள்..

“அண்ணா..” என்ற மனம் நிறைந்த பாச அழைப்போடு அவர்கள் மூர்த்தியிடம் பேசிப் பழகுவார்கள்..

அதைப் பற்றிய விசாரணைக்கு மதுசூதனன் அவர்களை அழைத்தால் அவர்கள் மதுசூதனனும், அலமேலுவும் கடை பிடிக்கும் வழிமுறையையே கடைபிடித்துத் தப்பித்து விடுவார்கள்..

“மிருதுளா..” மதுசூதனன் அழைப்பார்..

“அம்மா.. கூப்பிட்டிங்களா..?” வசுந்தராவிடம் ஓடி விடுவாள் மிருதுளா..

“ராதிகா..” அலுமேலு அதட்டுவாள்..

“ஹலோ.. ஹலோ.. இருடி.. சிக்னல் கிடைக்கல..” 

வராத போன் அழைப்பிற்கு பதில் சொல்லியபடி அலமேலுவின் குரல் காதில் விழாததைப் போல தோட்டத்துக்குப் போய் விடுவாள் ராதிகா..

இவர்கள் இருவருக்கும் மேலே இருப்பான் ராஜேஸ்.. அவனிடம் பேச வேண்டும் என்று மதுசூதனன் உதட்டைப் பிரித்தாலே போதும்.. இவன்..

“இப்பத்தான் வயநாட்டில இருந்து தாத்தா பேசினார் தாத்தா.. உங்களைப் பற்றி விசாரித்தார்..” என்பான்..

‘பயபுள்ள.. நல்லபடியாச் சொன்னானா, இல்லையா..?’

மதுசூதனன் கிலி பிடித்தவராக கேட்க வந்ததைக் கேட்க மறந்து..

“ஹி..ஹி.. அவர் நல்லாயிருக்காரா..?” என்று வழிவார்..

“அவருக்கென்ன தாத்தா.. நூறு பேர் வந்தாக்கூட பந்தாடற உடம்புவாகு.. நல்லாத்தான் இருக்கார்.. நீங்க எப்படி இருக்கீங்கன்னுதான் கேட்டார்..”

மலைவளநாட்டுத் தாத்தா அடித்தால் மதுசூதனன் தாங்குவாரா என்று மேலும் கீழுமாகப் பார்த்து வைக்கும் ராஜேஸின் பார்வையில் கதிகலங்கிப் போய் விடும் மதுசூதனன் அவனிடம் பேச்சை வளர்க்கப் பயப்படுவார்..

‘அஃது..’ என்ற பார்வையோடு நகர்ந்து விடும் ராஜேஸின் மலைவள நாட்டுத் தாத்தாவிற்கு மூர்த்தியை மிகவும் பிடிக்கும்..

“ஈ கொடைக்கானல் கொட்டாரத்தில ஞான் வளர நேசிக்கும் மனுசன் மூர்த்தி மட்டுமல்லோ.. ஈ மனுசனும் எண்ட கொச்சு மோன்தானாக்கும்..” என்று அவர் 

வளர்க்கும் பாசப் பயிரை நினைத்து ஊமையாகி விடுவார் மதுசூதனன்..

அரண்மனையில் மூர்த்தியின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்து பசியாற வேளா வேளைக்குப் பரிமாறி கவனித்துக் கொள்வது சாவித்திரி மட்டும்தான்.. வசுந்தரா பிறந்த ஊரிலிருந்து வரவழைக்கப் பட்டவள் என்பதால் மதுசூதனனின் பேச்சுக்கும் அலமேலுவின் அரட்டலுக்கும் கட்டுப்பட மாட்டாள்.. மற்றவைகளில் தகப்பனாரின் பேச்சிற்கு மறு பேச்சுப் பேசாத கோவிந்தராஜன்..

“இந்த சாவித்திரியை வேலையை விட்டுத் தூக்கு..” என்ற மதுசூதனனின் கட்டளைக்கு மட்டும் கட்டுப்பட மாட்டார்..

“ஸாரிப்பா.. சாவித்திரியை வசுந்தரா அழைத்து வந்திருக்கா.. கடைசி வரைக்கும் அவளை வேலையை விட்டு அனுப்ப மாட்டேன்னு வசுவுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கேன்..” என்று சொல்லி விடுவார்..

மனைவிக்குக் கொடுத்த வாக்கை மீறச் சொன்னால் எங்கே மகன் தகப்பன் பேச்சை மீறி விடுவானோ என்ற பயத்தில் வாயை இறுக்கி மூடிக் கொள்வார் மதுசூதனன்..

“சொல்பேச்சுக் கேட்காத வேலைக்காரிக்கு வெட்டியாச் சம்பளம் கொடுக்கனுமா..? சாவித்திரியோட கணக்கைப் பார்த்துச் செட்டில் பண்ணி அனுப்பிச்சுரு யமுனா..” அலமேலு மூத்த மருமகளுக்கு கட்டளையிடுவாள்..

“ஆகட்டும் அத்தை..” யமுனா உற்சாகமாகி விடுவாள்..

அந்த அரண்மனையில் கடைசி மருமகளான கோமளாதான் வசுந்தராவுடன் ஒற்றுமையாக இருப்பாள்.. யமுனா சூழச்சியும், வன்மமும் நிறைந்தவள்.. அவளிடமிருந்து மற்ற இரு மருமகள்களும் விலகியே நிற்பார்கள்.. அதில் யமுனாவுக்கு பலத்த கோபம் உண்டு..

“சாவித்திரி எங்க ஊர்க்காரி அத்தை.. எனக்குத் தூரத்து சொந்தம் கூட.. பணத்துக்காக அவள் இங்கே வேலை பார்க்கலை.. எனக்காக இருக்கிறா.. அவ கணக்கை செட்டில் பண்ணும் உரிமை இங்கே யாருக்கும் கிடையாது.. அப்படிச் செய்ய நினைத்தா நிறைய கணக்கு வழக்குகளைச் செட்டில் பண்ணித் தரச் சொல்லி எங்கப்பாவையும் அண்ணன் தம்பிகளையும் இங்கே வரவழைப்பேன்.. கோமளாவோட அப்பா மட்டும் கோபக்காரரில்ல.. என் அப்பாவும், அண்ணன் தம்பிகளும் அப்படித்தான்..”  வசுந்தரா போடும் போட்டில்..

“இந்தா பாரு யமுனா.. நான் என்ன சொன்னாலும் ஆகட்டும் அத்தைன்னு தலையை ஆட்டுகிற வேலையை இதோடு நிறுத்திக்க.. சாவித்திரி யாரு..? நம்மளை நம்பி வந்திருக்கிறவ.. அவளை வெளியே அனுப்பினா நம்ம பரம்பரை கௌரவம் என்ன ஆகிறது..?” என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பேச்சை மாற்றி விடுவாள் அலமேலு..

எங்கே, எப்போது, எப்படி அடிக்க வேண்டும் என்ற வித்தையைக் கற்றுக் கைக்குள் வைத்திருப்பவர்கள் மதுசூதனனும், அலமேலுவும்.. அவர்கள் மூர்த்தியை அடிக்கும் நாளுக்காக காத்திருந்தார்கள்..

சாக்லெட் பேக்டரியில் மூர்த்தி செய்த சீர்திருத்தங்களும், மற்ற அவனது செயல்பாடுகளும் குற்றங்களைப் போல மதுசூதனனிடமும் அலமேலுவிடமும் சொல்லப்பட்டன.. அவர்களின் மனதிலிருந்த வன்மம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.. அப்போதுதான் தன் மனதிலிருந்த ஒருதலைக் காதலை அவர்களிடம் வெளிப்படுத்தினான் நவீன்..

நவீனுக்காகப் பெண் தேட ஆரம்பித்திருந்த நேரம் அது.. பார்க்கும் பெண்களையெல்லாம் பிடிக்கவில்லை யென்று சொல்லித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான்..

“என்னடா நவீன் இது.. காலா காலத்தில கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா..?” மதுசூதனன் கோபப்பட்டார்..

“மனதுக்குப் பிடித்த பெண்ணைக் கண்ணில காட்டினா நான் மாட்டேன்னு ஏன் சொல்லப் போறேன் தாத்தா..”

நவீன் நயவஞ்சகமாகப் பதில் சொன்னான்..

“உன் மனசுக்குப் பிடித்த பெண் யாருன்னு எங்களுக்கு எப்படிடா தெரியும்..? அதைக் கண்டு பிடிக்க வெத்தலையில் மை தடவிப் பார்க்கிற ஜோஸியரைத்தான் கூப்பிடனும்..” என்றாள் அலமேலு..

“யாரையும் கூப்பிட வேண்டாம்.. என் மனதுக்குப் பிடித்த பெண் உங்களுக்கும் தெரிந்தவள்தான்..” புதிர் போட்டான் நவீன்..

“எங்களுக்குத் தெரிந்தவளா..? யாருடா அவ..?”

தாத்தாவும், பாட்டியும் ஆர்வமாகி விட்டதைப் புரிந்து கொண்ட நவீன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு..

“சொல்லி என்ன பிரயோசனம் தாத்தா.. தி கிரேட் மதுசூதனனால முடியாதது எதுவுமில்லைதான்.. பட்.. அவ யாருன்னு நான் சொன்னாலும் அவளை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க உங்களாலே முடியாது தாத்தா..” என்று அவரது சுய மரியாதையைக் கிளறி விட்டான்..

“இந்த மதுசூதனனாலே முடியாததுன்னு எதுவுமில்லடா..” சுண்டெலி சிங்கம் போல மார்தட்டிக் கொண்டது..

‘கிழிச்ச..’  மனதுக்குள் சொல்லிக் கொண்டு.. வெளியே..

“முடிந்தாலும் நீங்க அதைச் செய்ய மாட்டிங்க.. நீதி, நேர்மை, நியாயம்ன்னு தேவையில்லாததையெல்லாம் பேசுவீங்க.. நீதி, நேர்மை, நியாயமெல்லாம் ஒழுங்கானவனுக்குத்தான் தாத்தா.. பெரியவங்க என்கிற மரியாதையில்லாத ரௌடியோட விசயத்தில எல்லாம் இதுகளை இழுத்துப் போடக் கூடாது.. தாத்தா..” என்றான் நவீன்..

“என்னத்தடா குழப்பற..?” மதுசூதனன் தலையைச் சொறிந்தார்.. அவருக்கு ஒரு மண்ணும் புரியவில்லை..

அலமேலுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது.. அவள் மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் ஆசைகளைத் துல்லியமாக இனம் கண்டு கொள்பவள்.. அவள் அறிந்த ஒரு பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் நவீனின் கண்களில் மின்னும் ஆசையைப் பலமுறை அவள் பார்த்திருக்கிறாள்..

“மாயாவைச் சொல்கிறாயா நவீன்..?” அவள் கேட்டுவிட்டாள்..

“மாயாவா..?” மதுசூதனன் அதிர்ச்சியானார்..

மூர்த்தி உயிருக்குயிராகக் காதலிக்கும் மாயாவையா நவீன் தன் மனதுக்குப் பிடித்த பெண் என்று சொல்கிறான்..?

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link