Chapter 26

0Shares

“நிறுத்துங்க கல்யாணத்தை..”

இந்த டயலாக்கை கேட்டவுடன் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் அடக்க ஒடுக்கமாக ஓரம் கட்டி அமர்ந்து கொண்டு..

“இது என்ன சினிமா கிளைமாக்ஸா..?” என்று கேட்டு வைத்தார்.. மாப்பிள்ளை கோலத்தில் இருந்த மூர்த்தியின் முறைப்பு..

‘இருக்கு அய்யரே உனக்கு..’ என்றது..

“கல்யாணத்தை நிறுத்தச் சொன்னவாளை விட்டு விட்டு என்னை முறைக்கறேளே.. இது நோக்கே நன்னாயிருக்கா..?” அய்யர் நியாயம் கேட்டார்..

“சித்த வாயை மூடிக்கிட்டு இருக்கேளா..?” மூர்த்தி கையைக் கொண்டு வாயைப் பொத்தி டெமான்ஸ்ட்ரேசன் செய்து காண்பித்தான்..

“இது நேக்கே நன்னாத் தெரியுமே..” அய்யர் கரம் கொண்டு திருவாய் மூடினார்..

“நான் சொல்கிற வரை இதையே கண்டினியூ பண்ணனும்..” அய்யருக்கு அதட்டல் போட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான் மூர்த்தி..

“யாரும்மா நீ..? எங்கே வந்து யார் கல்யாணத்தை நிறுத்தச் சொல்கிற..?” மதுசூதனனின் வயநாட்டு மலையாள சம்பந்தி கர்ஜித்தார்..

மூர்த்தியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வயநாட்டில் இருந்து அவர் வந்திருக்க, உள்ளூரில் இருந்த மதுசூதனன் குளிர் காய்ச்சல் என்று சாக்குப் போக்கு சொல்லிவிட்டு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அரண்மனையில் பதுங்கி விட்டார்.. அவரைக் கவனித்துக் கொள்ள அலமேலு பாட்டி.. ஒத்தாசைக்கு மூத்த மகன் ஜனார்த்தனம்.. கூடமாட உதவி செய்ய ஜனார்த்தனத்தின் மனைவி யமுனா.. பெற்றவர்களைப் பாதுகாக்க நவீனும், நீரஜாவும் என்று சொல்லி வைத்துக் கொண்டு மூர்த்தியின் திருமணத்தைப் புறக்கணித்தார்கள்..

மற்றபடி உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள், கோவிந்தராஜன் – வசுந்தரா, வசுந்தராவின் பிறந்த வீட்டுச் சொந்தங்கள், மூர்த்தியின் சித்தப்பா சித்தியான ராமநாதன்-கோமளா, அவர்கள் பெற்ற ராஜேஸ்-ராதிகா, மூர்த்தியின் தங்கை மிருதுளா, கோமளாவின் பிறந்த வீட்டுச் சொந்தங்கள் என்று மண்டபம் நிரம்பி வழிந்தது..

“நான் யாரா..? கல்யாணப் பெண்ணோட அம்மாவுக்குத் தெரியாம பொண்ணக் கடத்திக்கிட்டு வந்து திருட்டுத்தாலி கட்டப் பார்த்துக்கிட்டு என்னிடமே 

நீ யாருன்னு கேக்கறிங்களா..? கேட்டுக்கங்கய்யா.. நானு இந்தா மாலையும் கழுத்துமா மணமேடையில் உக்காந்திருக்காளே அர்ச்சனா.. அவளோட அம்மா.. இவரு அவளைக் கட்டிக்கிறதுக்காக நிச்சயம் பண்ணி வைச்சிருந்த மாப்பிள்ளை.. இவருக்கும் இவளுக்கும் 

தான் கல்யாணம் நடக்கிறதா இருந்தது.. கட்டிக்கப் போகிறவங்கதானேன்னு ஒரே வீட்டில ஒன்னு மண்ணா வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க.. சின்னச் சண்டையில இந்தப் பொண்ணு சொல்லாமக் கொள்ளாம வீட்டை விட்டு ஓடி வந்திருச்சு.. ஓடி வந்த பொண்ணுக்கு ஒளிச்சு வைச்சுக் கல்யாணம் பண்ணப் பாக்கறிங்களே.. நீங்கள்ளாம் பெரிய  கட்டிக்கப் போகிறவன்னு ஆசையாசையா இவகூட வாழ்ந்தக்கிட்டு இருந்தாரே.. இவருக்கு என்ன பதிலைச் சொல்லப் போறிங்க..?”

அர்ச்சனா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கிச் சரிந்தாள்.. மாலையும் கழுத்துமாக மணமேடையில் மூர்த்தியின் மடியில் மயங்கிச் சரிந்தவளை மடியில் தாங்கிக் கொண்ட மூர்த்தி.. மிகச்சரியாக திருமண நாளன்று லீலாவதியை அங்கே அழைத்து வந்தது யார் என்று பார்த்தான்.. அலட்சியப் பார்வையுடன் மாயா நின்றிருந்தாள்.. அவளது விழிகள்..

‘என்னைப் பார்த்து ‘ச்சீ’ன்னு சொன்னியே.. இப்ப உன் காதலியைப் பார்த்து இந்த ஊர் உலகமே ‘ச்சீ’ன்னு சொல்லப் போகுது.. இதுக்கு என்ன செய்யப்போகிற..?’ என்று வன்மம் கலந்த ஏளனத்துடன் கேட்டன..

வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மூர்த்தியுடன் வியாபாரத் தொடர்வில் இருந்த நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.. அத்தனை பேரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.. மூர்த்தியின் மரியாதை கத்தி முனையில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்ட அந்தச் சூழலில் நடராஜன் கர்ஜித்தார்..

“உனக்குப் பதிலை நான் சொல்கிறேன் லீலாவதி.. கேட்க யாருமில்லைன்னு இஷ்டத்துக்கு கதை கட்டினா சும்மா விடமாட்டேன்.. இங்கே போலிஸ் உயர் அதிகாரிகள் வந்திருக்காங்க.. உன்னை உள்ளே தள்ளி களி திங்க வைச்சுருவாங்க.. ஜாக்கிரதை..”

“போலிஸா..?” லீலாவதி பயந்து பின்வாங்கினாள்..

“ஏம்மா.. இங்கே போலிஸெல்லாம் இருப்பாங்கன்னு நீ சொல்லவே இல்லையே..” என்று மாயாவிடம் கேட்டு அவளையும் மாட்டி விட்டாள்..

பாண்டுரங்கனோ எனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதைப் போலத் துள்ளிக் குதித்து தள்ளி நின்று கொண்டான்.

“அதுசரி.. இதெல்லாம் உன் வேலைதானா..?” மாயாவை முறைத்த ராஜேஸ் தன் வயநாட்டு தாத்தாவிடம்.

“தாத்தா.. இந்த மாயாதான் மூர்த்தி அண்ணாவை வருசக் கணக்கில் காதலிக்கிறதாச் சொல்லிக்கிட்டு பின்னாடியே அலைந்தவங்க.. அண்ணனுக்கு சொத்தில பங்கு கிடைக்கலேன்னு தெரிந்ததும் நவீன் அண்ணாவை மேரேஜ் பண்ணிக்க சம்மதம் சொன்னவங்க.. எங்கேஜ்மெண்ட் நடந்து முடிந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே..” என்று சொன்னான்..

“ஈ பெண்குட்டிதான் ஆ மாயாவோ..? கர்மம்.. இதெல்லாம் பெண் குட்டின்னு ஜீவிதம் செஞ்சு.. எண்ட குருவாயூரப்பா.. மலையாள பகவதி.. ஈ பெண்குட்டியின் வதனம் நோக்கக்கூட எனிக்கு இஷ்டமில்லா… பணமிருந்தாத்தான் புருசன்.. இல்லையெண்டா வேறு ஒரு புருசன்னு தடம் மாறுகிற பெண்குட்டிக்கு எந்து பேரு கொச்சுமோனே..?”

“அதை என் வாயாலே சொல்ல முடியாது தாத்தா..”

மாயா திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் முன்னிலையில் மறுபடியும் அவமானப்பட்டுப் போனாள்.. நீயெல்லாம் ஒரு பெண்ணா என்று அனைவரும் பார்த்த பார்வையில் மண்டபத்தை விட்டு ஓடிப் போனாள்..

“இந்தப் பொண்ணு பணம் தர்றேன்னு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டு பாதியிலே ஓடிப் போனாளே..” லீலாவதி சத்தம் போட்டாள்..

“உஷ்ஷ்..” வாயில் ஒற்றை விரலை வைத்து அவளை அடக்கிய நடராஜன் அடக்கி வைத்திருந்த கொந்தளிப்பையெல்லாம் கொட்டித் தீர்த்தார்..

“யாருக்கு யார் அம்மா..? அர்ச்சனா அபிராமி பெற்ற பெண்.. என் நண்பர் வீரப்பனோட மகள்.. எம்.காம் படித்துட்டு பேங்கில் வேலை செய்கிறவள்.. கொடைக்கானலிலே பங்களா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்ட இடம்ன்னு சீர் செனத்தியோடு மூர்த்திசாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற பெரிய இடத்துப் பெண்..! நீ அர்ச்சனாவின் வீட்டில் குடியிருக்கிற கேடு கெட்ட பெண்.. இவன் உன்னோட காதலன்.. கல்யாணம் பண்ணிக்காம நீயும், இவனும் சேர்ந்து வாழ்கிறீங்க.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பையன் இருக்கான்.. உன் புருசனை நீ என்னென்னவோ சொல்லுவியா..?”

“என் பையன் இவளோட தம்பி..”

“தன் வீட்டில அர்ச்சனா உன்னைக் குடி வைத்தது எதுக்கு..? தாய் தகப்பன் இல்லாம தனியா இருக்கோமே.. துணைக்கு ஒரு குடும்பம் இருக்கட்டுமேன்னு அர்ச்சனா நினைத்தா.. உன் பையனிடம் தம்பி, தம்பின்னு பழகினா அவன் அர்ச்சனாவுக்குத் தம்பியாகிருவானா..? டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தா உண்மை தெரிஞ்சிருமே.. உன் மகன் இந்த பாண்டுரங்கனுக்குப் பிறந்தவனா இல்லை அர்ச்சனாவின் தம்பியான்னு..”

“டி.என்.ஏ டெஸ்ட்டா..” பாண்டுரங்கனின் முகம் வெளிறிவிட்டது..

அதற்கும் மேல் வீரப்பனுக்கும் தனக்கும் நடந்த கல்யாணத்தைப் பற்றிச் சொன்னால் அசிங்கமாகி விடும் என்று லீலாவதி வாயை மூடிக் கொண்டாள்.. வயிற்றில் பாண்டுரங்கனின் குழந்தையை சுமந்து கொண்டு அதை வீரப்பனின் குழந்தையென்று பொய் சொல்லி வழக்கு வைத்து வீரப்பனை தாலிகட்ட வைத்து விட்ட குற்றத்திற்காக போலீஸ் அவளை அரெஸ்ட் செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவளை பிடித்துக் கொண்டது..

“இதோ பார்.. அர்ச்சனாவின் வீட்டை விற்றாகி விட்டது.. வாங்கியிருப்பது பெரிய ஆள்.. இன்னும் இரண்டே நாளில் நீ மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறலைன்னா அவரோட ஆள்கள் உன்னை எப்படிக் காலி பண்ணனுமோ அப்படிக் காலி பண்ணிருவாங்க..”

நடராஜன் விசமக்காரர்.. உன்னை எப்படி காலி பண்ண வைக்கனுமோ என்று சொல்ல வேண்டியதை வேண்டுமென்றே எப்படிக் காலி பண்ணனுமோ என்று சொல்லி பயமுறுத்தி வைத்தார்..

“அந்த வீட்டு மேலே லோன் இருக்கே..” லீலாவதி வீடாக்கண்டியாக வாதாடினாள்..

“லோன் அமொண்டைக் கட்டி விட்டு மீதத் தொகையை கொடுத்துத்தான் பெருமாள் வீட்டை வாங்கியிருக்காரும்மா..”

“பெருமாளா..?” லீலாவதியின் சர்வாங்கமும் ஒடுங்கி விட்டன..

பெருமாள் சாத்தூரில் மிகப்பெரிய பணக்காரர்.. அடியாள்கள் படைகொண்ட அடாவடிக்காரர்.. அவரை எதிர்த்து நிற்பவர்களை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்.. அவர் வாங்கியிருக்கும் வீட்டில் லீலாவதி ஓர் நிமிடம் குடியிருந்தால்கூட ஆபத்து அவளைத் தேடி வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே வீடு வந்து சேர்ந்து விடும்..

மூர்த்தியின் தந்தையிடம் சம்பந்தம் பேசும் போதே அர்ச்சனாவுக்குத் தான்தான் கார்டியன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார் நடராஜன்.. லீலாவதியைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.. மூர்த்திக்கு அனைத்து விவரங்களும் தெரிந்திருக்கும் போது அனைவருக்கும் அதைபற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று மூர்த்தி நடராஜனிடம் சொல்லியிருந்தான்..

நடராஜன் தன் பொறுப்பில் வீரப்பன் ஒப்படைத்திருக்கும் சாத்தூர் பங்களாவும், வீடும் அர்ச்சனாவுக்குச் சொந்தம் என்பதைச் சொல்லி அவற்றை விற்று கொடைக்கானலில் பங்களாவும், இடமும் வாங்கித் தருவதாக சொன்னார்.. கோவிந்தராஜனுக்கு சந்தோசமாகி விட்டது.. மருமகளை எவரும் குறைவாக பேசிவிட முடியாது என்ற நிம்மதி அவருக்கு தாய் வீட்டுச் சீதனமாக அவரது மருமகள் பங்களாவையும், வீட்டையும் கொண்டு வருகிறாள்.. அத்துடன் நூறு பவுன் நகை வேறு..

“அபிராமியின் நகைகளை வீரப்பன் என்னிடம்தான் கொடுத்து வைத்திருக்கிறார்.. அர்ச்சனாவின் சேமிப்பில் செய்த நகைகளுடன் அதைச் சேர்த்தால் நூறுபவுன் வரும்.. உங்கள் தகுதிக்கு இது ரொம்ப ரொம்ப கம்மிதான்.. இருந்தாலும் எங்க அர்ச்சனா உங்க வீட்டுக்கு சீர், செனத்தியோடுதான் மருமகளாய் வருவா சார்..”

நடராஜன் சொன்னபடி உடனடியாக அர்ச்சனாவின் பெயரில் இருந்த பங்களாவை விற்று கொடைக்கானலில் புதிய பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டார்.. லீலாவதி குடியிருந்த வீட்டை விற்பதுதான் அவருக்குத் தலைவேதனையாக இருந்தது.. பெருமாளை அணுகினார்..

“இதுக்கா இம்புட்டுக் கவலைப்படறீங்க..? நீங்க சொல்கிற அர்ச்சனா வேலை பார்த்த பேங்கிலதான் என்னோட அக்கவுண்ட் இருக்கு.. பேங்குக்குப் போகிறப்ப பார்த்திருக்கேன்.. அமைதியான பொண்ணு.. முகத்தில எப்பவும் ஒரு சோகம் இருக்கும்.. அதுக்குக் காரணம் அந்த லீலாவதிதானா..? கவலையை விடுங்க.. லோனை அடைச்சுட்டு வீட்டை நான் வாங்கிக்கறேன்.. என் வீட்டில் அந்த லீலாவதி எப்படிக் குடியிருக்கிறாள்ன்னு பார்த்துடறேன்.. யாருகிட்ட..?”

பெருமாள் லீலாவதி குடியிருந்த வீட்டை வாங்கிக் கொண்டார்.. லோன் போக மீதிப் பணத்தை கொடுத்து விட்டார்.. அந்தப் பணத்தில் கொடைக்கானலில் முக்கியமான பகுதியில் அர்ச்சனாவின் பெயருக்கு நடராஜன் இடம் வாங்கிப் போட்டு விட்டார்..

“வீடு கட்ட மனை இருக்கு.. சேர்த்து வைச்ச பணம் இருக்கு.. அபேஸ் பண்ணின நகை இருக்கு.. இதுவே அதிகம்.. நாம வேற வீட்டுக்கு குடிபோய் விடலாம்..” பாண்டுரங்கனின் காதில் ஓதி அவனைக் கைப்பற்றிக் கொண்டு லீலாவதி இடத்தைக் காலி செய்து விட்டாள்..

“கல்யாணப் பொண்ணு மயக்கமாயிருக்காளே..” அய்யர் மந்திரம் சொல்லத் தயங்கினார்..

“தண்ணி தெளிச்சா எழுந்திருச்சுவாளே..” மூர்த்தி தண்ணீரை அர்ச்சனாவின் முகத்தில் தெளித்து அவளை எழுப்பி உட்கார வைத்தான்..

“கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..”

அனைத்து திருமணங்களிலும் நடப்பதைப் போல எங்கிருந்தோ ஒருகுரல் ஒலிக்க நாதஸ்வரமும் கெட்டி மேளமும் இணைந்து ஒலித்தன.. மூர்த்தி-அர்ச்சனாவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது..

அது பனி விழும் இரவு..! மழையும் பொழிந்து கொண்டிருந்தது… குடையில்லாமல் நனைந்தபடி மூர்த்தியும் அர்ச்சனாவும் கொடைக்கானலின் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள்.. குளிரில் நடுங்கியவளைத் தன் ஜெர்கினுக்குள் இழுத்துக் கொண்டு சூடேற்றினான் மூர்த்தி.. கிளர்ச்சியடைந்த அர்ச்சனா தவித்தாள்.. மூர்த்தியின் கழுத்தை வளைத்தாள்..

“வீட்டுக்குப் போகலாம்..” தாபத்துடன் குழைந்தது அவள் குரல்..

“எதுக்கு..?” அவளது கழுத்தில் சூடான முத்தத்தை பதித்தான் மூர்த்தி..

“குட்டிஸ் ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களோ என்னவோ..”

அவர்களின் பிள்ளைச் செல்வங்களான முகுந்தனையும், அப்சராவையும் அர்ச்சனா நினைவு படுத்தியதில் அவன் அவளது கையைக் கிள்ளி..

“நமக்கு கல்யாணமாகி ஆறு வருசமாச்சு… பிள்ளைகள் வந்தாச்சுன்னு நினைவு படுத்தறியா..? உன்னை..” என்று அடிப்பதைப் போல பாவனை செய்தான்..

அர்ச்சனா கலகலவென சிரித்தாள்.. பனி விழும் இரவுதான் எத்தனை குளுமையானது..! 

வெண்புகை போல பனி அவர்களைச் சுற்றிக் கவிந்திருந்தது.. மழைச்சாரல் போல பொழிந்த பனிச் சாரலில் நனைந்த அர்ச்சனா குளிரில் நடுங்கினாள்.. உள்ளங்கைகளைத் தேய்த்து உஷ்ணமாக்கி அவளது கன்னங்களில் வைத்துக் கதகதப்பையூட்டிய மூர்த்திக்கு அவளது முகத்தைப் பார்த்தால் நிலவைப் பார்ப்பதைப் போல இருந்தது..

“பனி விழும் இரவு..

நனைந்தது நிலவு..”

கனத்த அவனது குரலில் அவள் கன்னிப் பருவத்திற்குத் திரும்பினாள்.. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் இளமைப் பருவத்தின் தலைவாசலில் நிற்பதைப் போன்ற ஒர் சிலிர்ப்பு அவனது தொடுகையிலும் பார்வையிலும் உண்டாகிறதே.. அது எப்படி..? ஓர் நொடியில் கிளர்ச்சியை விதைத்து விடுகிறானே..

“இளங்குயில் இரண்டு..

இணைகின்ற பொழுது..”

அவனுள் புதைந்தவளைத் தழுவிக் கொண்டவனின் பாடல் பூத்தூறலாய் அவளது காதுகளில் புகுந்தது..

“பூப்பூக்கும் ராப்போது

    பூங்காற்று தூங்காது..

வா.. வா.. வா..”

அவனது தாபக்குரல் அவளை அழைத்தது.. புல்வெளியில் அவன் சரிந்து அமர்ந்தான்.. மழை நின்றிருந்தாலும் குளிர்காற்று உடலைத் துளைத்தது.. புல்வெளியின் ஊடே இருந்த பூமரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் பாய் போட்டு அவர்களை அழைத்ததில் தவித்தாள் அர்ச்சனா..

“பூவிலே ஒரு பாய் போட்டு

பனித்துளி தூங்க..

பூவிழி இமை மூடாமல்

பைங்கிளி ஏங்க..”

அவளது நெற்றியில் சூடான இதழ் பதித்துச் சூடேற்றிப் பாடினான் மூர்த்தி.. அர்ச்சனாவின் உடல் நடுங்கியது..

“இரவுப் பொழுது இந்த நேரம்..

இனியும் மனதில் என்ன பாரம்..?

துணையை விலக்கி வைத்தால் பாவம்..

தேவையில்லாத தாபம்..”

மூர்த்தியின் விரல்கள் அவளது மேனியில் ஊர்ந்தன.. அவள் புரண்டு அவனது மார்பில் சயனித்தாள்..

“தனிமையே போ..

இனிமையே வா..

நீரும் வேரும்

சேர வேண்டும்..”

சேரத்துடித்த தம்பதியினரைச் சூழல் கட்டிப் போட்டது.. வீடு போக வேண்டும் என்ற நினைவு அவர்களை எழுப்ப யத்தனிக்க, விலக முடியாத தாகம் அவர்களைத் தளை போட்டுப் பிணைத்து படுத்தி வைத்தது..

“காவலில் நிலை கொள்ளாமல்..

தாவுதே மனது..

காரணம் துணையில்லாமல்

வாடிடும் வயது..”

தந்தையாகி விட்ட வயதினன் பாடிய பாடலில் அவள் வாய் பொத்திச் சிரித்தாள்.. மனதுக்குப் பிடித்தவளை மனைவியாக்கிக் கொண்டவன் துணையில்லாமல் வாடுகிறவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு ஏக்கப் பெருமூச்சை விட்டதில் அவளது சிரிப்பு அதிகரித்தது..

“ஆசை கொல்லாமல் கொல்லும்..

அங்கம் தாளாமல் துள்ளும்..

என்னைக் கேட்காமல்

ஓடும் இதயம்..

உன்னைத் தேடி வந்து கூடும்..”

அவனது நெருக்கம் அதிகரித்ததில் அவள் அவனது மார்பில் கை வைத்துத் தள்ளி விட்டுத் துள்ளி எழுந்தாள்.

“விரகமே.. ஒர் நரகமோ..? சொல்..

பூவும் முள்ளாய் மாறிப் போகும்..

பனி விழும் இரவு..

நனைந்தது நிலவு..”

குளிர் நிரம்பிய பாடலுடன் அவர்கள் பங்களாவை நோக்கி நடந்தார்கள்.. சாவித்திரியின் இருபக்கமும் அமர்ந்து கைகளை அவளது மடியில் ஊன்றி கதை கேட்டுக் கொண்டிருந்த நான்கு வயது முகுந்தனும்.. இரண்டு வயது அப்சராவும் தாய், தந்தையைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.. அவர்களை விட்டு விட்டு மூர்த்தியும் அர்ச்சனாவும் தனித்து உலாவப் போய் விட்டு வந்ததில் கோபமாம்.. மூர்த்தியை வளர்த்து ஆளாக்கி விட்டு அவனது பிள்ளைச் செல்வங்களையும் வளர்க்க ஆரம்பித்திருக்கும் சாவித்திரி குழந்தைகளின் கோபத்தில் சிரித்தாள்..

“குட்டிங்க சாப்பிட்டிருச்சுங்களா..?”

பொறுப்பு மிக்கத் தாயாகக் கவலைப்பட்டாள் அர்ச்சனா..

“ஊஹீம்.. அப்பாம்மா வந்தாத்தான் வாயைத் திறக்குங்களாம்.. அரட்டி வைச்சிருக்குதுக..” சாவித்திரி சொன்னாள்..

“அப்சராக் குட்டிக்கு அப்பா மேல கோபமா..?” மூர்த்தி மகளை அள்ளிக் கொண்டான்..

“முகுந்த் கண்ணா.. அம்மாகூடப் பேச மாட்டியா..?” அர்ச்சனா மகனைத் தூக்கித் தோளில் சாய்த்துச் செல்லம் கொஞ்சினாள்..

மூர்த்தி உயரேத் தூக்கிப் போட்டுப் பிடித்ததில் அப்சரா கோபத்தை மறந்து மூர்த்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டது.. முகுந்தனோ தாயின் செல்லத்தில்..

“இல்லியே.. அம்மாகூட ‘டூ’ இல்லையே..” என்று உடனடியாக சமாதானப் புறாவைப் பறக்க விட்டான்..

‘இதுக கோபம் இவ்வளவுதான்..’

பெற்றோரின் பெருமிதத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட மூர்த்தி, அர்ச்சனாவின் விழிகளில் தாய், தந்தையின் கர்வம் வழிந்தோடியது..

இரவில் பிள்ளைகள் சாவித்திரியின் அரவணைப்புடன் தூங்கிவிட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்தார்கள்.. அர்ச்சனா கதவைத் தாழிடுவதற்குள் மூர்த்தியின் கரம் அவளை வளைத்து இழுத்துக் கொண்டது.. தாகத்துடன் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தவனுக்கு தாபத்துடன் இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா..

நவீனுக்கும் மாயாவுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனது.. வருடக் கணக்கில் காதலித்த மூர்த்தியையே தூக்கியடித்து விட்டு நவீனுடன் நிச்சயதார்த்த மேடையில் நின்றவளுக்கு அவனைத் தூக்கியடித்து விட்டு அடுத்தவனுக்கு கழுத்தை நீட்டத் தெரியாதா என்ன..?

மாயா வெளிநாட்டுத் தொழிலதிபர் ஒருவனை மணந்து கொண்டு விமானத்தில் ஏறிப் பறந்து விட்டாள்.. நவீன் தாய்வழி உறவில் ஒரு பெண்ணை மணந்து கொண்டான்.. மதுசூதனனின் பெயர் மறக்கப்பட்டுக் கொடைக்கானலில் மூர்த்தியின் பெயர் முதன்மையான பணக்காரனாக உச்சரிக்கப்பட்டது..

மிருதுளாவுக்கு சென்னையில் வரன் பார்த்து மணம் முடித்து வைத்தான் மூர்த்தி.. தங்கைக்குத் தன் பரிசாக சென்னையில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றைக் கட்டிக் கொடுத்தான்.. ராஜேஸ் வயநாட்டில் கேரளத்து அழகியைத் திருமணம் செய்து கொண்டு நவீனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.. திருவனந்தபுரத்தில் ஸ்டார் ஹோட்டல், பங்களாக்கள், எக்ஸ்போர்டு பிஸினெஸ் என்று வளம் கொழிக்கும் பணக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாள் ராதிகா.. நவீனின் தங்கை நீரஜாவுக்கு குன்னூரில் மணமகன் அமைந்தான்..

வாழ்க்கை அவரவருக்கான பாதைகளை சரிவரத்தான் அமைத்துக் கொடுக்கிறது..

திசை மாறும் பறவைகள் எல்லாம் திசையின்றிப் போய் விடுவதில்லை.. தடம் மாறும் பாதங்கள் எல்லாம் வழி மாறிப் போய் விடுவதில்லை..

ஏதேனும் ஓர் திசை கிடைக்கும்.. எங்கோ ஓர் பாதை தோன்றும்.. பாலைவனத்திலும் சோலை இருக்கும்..

ஆதலினால் மக்களே..! வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்.. நம் முன் இருப்பது மலர் பாதையோ, முள் பாதையோ, பயணத்தை ஆரம்பிப்போம்.. வலிகள் 

என்றும் நிரந்தரமில்லை.. சோகம் மட்டும் நம் சொந்தமில்லை..

பனிவிழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவரின் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும், ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள்.. அந்த நாளில், அந்த இரவில், அந்தப் பனியில், அந்த நொடியில் அவர்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.. காலம் அவர்களைச் சோதித்துக் கொண்டேதான் இருந்ததா..? வாழ்க்கை அவர்களை வஞ்சித்துக் கொண்டேதான் இருந்ததா..?

இல்லையே.. அவர்கள் ஒருவருக்கொருவர் மருந்தானார்கள்.. மண ரணத்தை ஆற்றி வாழ்வில் கை கோர்த்து இணைந்து நடக்க ஆரம்பித்தார்கள்.. முகுந்தன், அப்சரா என்று இரண்டு அழகுப் பெட்டகங்களுக்குத் தாய், தந்தையாகி வாழ்வை வாழ்வாக ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

அனைவரின் வாழ்விலும் பனிவிழும் ஓர் இரவு வரத்தான் செய்யும்.. அதன் குளுமைக்காக நிகழ்கால வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தால் ஒரு குறைவும் வராது..

சரிதானே..?

… சுபம் …

0Shares

Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link