Chapter 10
இந்தக் கண்றாவிகளையெல்லாம் கேட்பதை விட கண் காணாத இடத்திற்கு ஓடி விடலாம் என்று வாழ்க்கையை வெறுத்து விட்டாள் சுசரிதா..
அதற்கு மேலும் அவளை சோதிக்க மனமில்லாமல் போனால் போகிறதென்று விட்டு வைத்து விட்டு காருண்யத்துடன் எழுந்து கைகூப்பி விடை பெற்றான் மோகன்..
“ப்பா.. ஒரு வழியா உன் ஆபிஸ் பிரண்ட் டாட்டா சொல்லிட்டான்..” சுரேஷ் சந்தோசமானான்..
அவன் செய்த உதவிக்காக கோடி கோடியாய் நன்றி சொல்லியபடி அவனை வழியனுப்ப வாசல்வரை பூபாலனும் சிவகாமியும் போனார்கள்.. விதியை நொந்து கொண்டு கூடப் போனாள் சுசரிதா..
பூபாலனின் செல்போன் வீட்டுக்குள் இருந்து ஒலித்து அவரை அழைத்தது.. அவர் அவசரமாக மோகனுக்கு விடை கொடுத்து விட்டு வீட்டுக்குள் போனார்..
“அம்மா.. என் புளூ கலர் டி-சர்ட் எங்கே போச்சு..?”
சைரன் போல சுரேஷின் குரல் ஒலித்து சிவகாமியை அழைதது வைத்ததில் அவளும் அவசரப் புன்னகையுடன் விடைகொடுத்து விட்டு..
“இதோ வரேண்டா..” என்று குரல் கொடுத்தபடி வீட்டுக்குள் ஓடினாள்..
தனித்து நின்ற மோகனும் சுசரிதாவும் உதட்டைக் கடித்துக் கொண்டார்கள்.. பேச விரும்பாத சுசரிதா அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து வாசலை பார்த்தாள்.. மோகன் அவள் முகத்தை மட்டுமே பார்த்தான்..
அந்தி மயங்கிய முன்னிரவு வேளையின் இருள் படலம் அவர்கள் மீது கவிழ்ந்து கொண்டிருந்தது.. அந்த மனோகரமான சூழ்நிலையின் ரம்யம் மோகனின் மனதை மயக்கியது.. சுசரிதாவின் துடிக்கும் இதழ்களையும்.. கலங்கிச் சிவந்த கண்களையும் பார்த்தான்.. ஏன்
இவளுக்கு இத்தனை கோபம் வருகிறது என்று அவன் மனம் கேட்டது..
சொல்லத் தெரியாத சொந்தமென்று அவர்களை பிணைத்திருந்ததை அவர்கள் இருவருமே உணர்ந்தார்கள்..
உணர்வு..! அது உணர்த்தாத மொழியேது.. உணர்வின் பரிணாமத்தை வார்த்தைகளைக் கொண்டு விளக்கி விட முடியுமா..? உணர்வை உணர்ந்துதான் பார்க்க முடியும்..
அழகான.. அற்புதமான.. உணர்வுகளை உணர முடிந்த வாழ்வை வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்..
“உனக்கு எதற்காக இத்தனை கோபம் சுசரிதா..?” அவன் மென்மையாக வினவினான்..
இவனுக்குக் கூட இப்படி வார்த்தைக்கு வலிக்கும் என்பதைப் போல மென்மையாக பேச முடியுமா என்ற ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் சுசரிதா..
“வா.. போ..ன்னு கூப்பிடற வேலையை எல்லாம் வைச்சுக்க வேணாம்..” வெடுக்கென்று பதில் சொன்னாள்.
“ஊஹீம்..?” அவன் கேலியாக சிரித்தான்..
“கூப்பிட்டா என்ன பண்ணுவ..?” அவன் குரலில் சவால் இருந்தது..
“அப்புறம் நானும் வா.. போ..ன்னு கூப்பிடுவேன்..” என்றாள் அவள்..
“கூப்பிடு.. யார் வேணாம்ன்னு சொன்னது..?” அவன் நிதானமாக கேட்டதும் திகைத்துப் போய் விட்டாள்..
“என்ன..? பேச்சைக் காணோம்.. நீ என்னைவிட வயதில் ரொம்பவும் சின்னவதானே.. உன்னை வா.. போ..ன்னு கூப்பிட்டா என்ன தப்பு..? ம்ம்ம்..?”
“எனக்குப் பிடிக்கலை..”
“எனக்குப் பிடிக்குதே..”
“மிஸ்டர் மோகன்.. இந்த மயிலே.. மயிலே.. வேலையெல்லாம் மத்தவங்களோட நிறுத்திக்கங்க.. என்கிட்ட வேணாம்..”
“மத்தவங்கன்னா யாரைச் சொல்ற..? நம்ம சுப்பிரியர் மேமையா..?”
சுசரிதா பதில் சொல்லவில்லை.. தாராவின் முன்னால் அவள் கைகளை பிசைந்தபடி நின்ற வினாடிகள் அவள் நினைவில் நின்று துன்புறுத்தின.. மற்றவர்கள் ஒதுக்கும் இருக்கையை அவளுக்கு கொடுத்து விட்டு வேலையைச் சொல்லித்தர ஆளையும் அளிக்காமல் விட்டுவிட்டு மாத இறுதியில் ஏன் வேலையை முடிக்கவில்லை என்று அவளை சப்தம் போட்ட அநியாயம் அவள் நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது..
“அரசாங்க வேலையிலே இதெல்லாம் சகஜம் சுசரிதா..” என்றான் மோகன்…
“நீங்க எதை வேணும்னாலும் ஃபேஸ் பண்ணுவீங்க.. அந்த வித்தை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.. நான் உங்க பக்கதில கூட நிற்க முடியுமா..?” குத்தலாகச் சொன்னாள் சுசரிதா..
“இப்ப என் பக்கத்திலதான நீ நின்னுக்கிட்டு இருக்க..?” அமைதியாக கேட்டான் மோகன்..
“இந்த வாய்தான் உங்களை வாழ வைக்குது..” குமுறினாள் சுசரிதா..
“இல்லை.. தப்புக் கணக்குப் போடற.. என் வேலைத் திறமைதான் என்னை வாழ வைக்குது..” அழுத்தமாக சொன்னான் மோகன்..
“எப்படி..? என்பக்க நியாயத்தை காது கொடுத்து கேட்காத மேம்.. நீங்க பேசினா மட்டும் சிரிச்சுக்கிட்டே கேட்கிறாங்களே..”
“நான் சும்மா பேசலை.. நீ முடிக்க வேண்டிய வேலைகளை முடிச்சு எடுத்துக்கிட்டுப் போயி நீட்டிக் கிட்டேப் பேசினேன்.. அதை நீ கவனிக்கலையா..?”
“உங்களை யாரு என் வேலையை முடிச்சுக் கொண்டு வரச் சொன்னது..?”
“என் மனசு..”
ஆழ்ந்த குரலில் மோகன் சொன்னான்.. சுசரிதாவின் மனதில் அதிர்வு வந்தது.. அதன் டிரம்ஸ் வாசிக்கும் ஒளி.. தந்தன.. தந்தன.. தாளம் போட்டு அவள் மனதில் அதிர்ந்தது..
அவள் தலையைக் குலுக்கிக் கொண்டு வேறுபக்கம் பார்த்தாள்..
‘இவன் பொய்காரன்..’ மனதுக்கு அறிவுறுத்தினாள்..
“அந்த மனசு நான் வேலை சொல்லிக் கொடுங்கன்னு கேட்டபோது எங்கே போச்சு..?” அவள் படபடத்தாள்.. அவள் கண்களில் கண்ணீர் அரும்பு கட்டியது..
“எங்கேயும் போகலை.. எனக்குள்ளேதான் இருந்துச்சு.. உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு.. வேலை தெரியல.. எனக்கு இந்த வேலயச் சொல்லி கொடுடான்னு நீ என்கிட்ட கேட்டியா..?”
திரும்பவும் ஆழ்ந்த குரலில் கேள்வி கேட்டு அவள் மனதை அசைத்து வைத்தான் அவன்.. சுசரிதா தடுமாறினாள்..
“நான் கேட்டாத்தான் சொல்லிக் கொடுப்பிங்களா..?”
“கேட்காமலே சொல்லிக் கொடுத்திருப்பேன்.. அந்த லதிகாகிட்ட வேலை சொல்லிக்கொடுன்னு நீ இந்த சீட்டில இருந்து எழுந்திருச்சுப் போய் அந்தக் கடைசி சீட்டில இருக்கிற அவகிட்ட கேட்காம இருந்திருந்தா…”
சுசரிதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.. இது போன்ற ஓர் கோணத்தில் மோகன் நினைத்திருப்பான் என்று அவள் நினைத்திருக்கவில்லை..
“அது.. அது.. வந்து.. லேடிஸ்க்கு லேடிஸ் கேட்கலாம்ன்னு..” அவள் அதிகமாக தடுமாறினாள்..
“ஓகே.. நீ போய் கேட்ட.. அவ இதோ வந்து சொல்லித்தரேன்னு தாவிக் குதிச்சுக்கிட்டு ஓடி வந்து சொல்லிக் கொடுத்திட்டாளா..?”
அவன் பார்வை ஊசிக்குளிரைப் போல அவள் உடம்பை துளைத்தது.. சுசரிதா அவன் பார்வையின் வேகத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள்…
“அவளே ஒரு தத்தி..! எந்த பிரான்ச்சிலயும் ஒழுங்கா வேலை பாக்க மாட்டா.. அவகிட்ட வேலை சொல்லிக் கொடுன்னு கேப்ப.. என்கிட்ட கேட்க மாட்டே.. அப்படித் தானே..?”
“அப்படியில்லை.. நான் கேட்டுத்தான் நீங்க சொல்லிக் கொடுக்கனுமான்னு கோபம் வந்துச்சு..”
“அதான் ஏன்..?”
“தெரியலை…”
சுசரிதாவின் குழப்பத்தில் மோகனின் மனதில் காதல் மழையின் சாரல் அடித்தது.. இது போன்ற இனிய தருணங்களை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்த அந்த இனியவளை காதலுடன் அவன் பார்த்தான்..
“தெரியலைல்ல..? இதைப் போலதான் உன் வேலையை நீ முடிச்சுக் கொடுக்கலைன்னு பேர் வந்துரக் கூடாதுன்னு உனக்காக யோசிச்சு நான் எதுக்காக வேலை மெனக்கெட்டு என் வேலையைக்கூட முடிக்காம.. உன் வேலையை முடிச்சு வைச்சேன்னு எனக்கும் தெரியலை..”
சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்த சுசரிதாவிற்கு அவன் முகத்தில் தெரிந்த உண்மை அச்சுறுத்தியது.. அந்தப் பொய்காரன் ஏன் அவளிடம் மட்டும் உண்மையாக இருக்கிறான்..?
“பக்கத்து சீட்டிலதானே இருந்தீங்க… என் பிரான்சோட வேலையைப் பத்தி உங்களுக்குத் தெரியும்ன்னு ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமில்ல..?”
“உனக்கு உன் பிரான்சோட வேலையைத் தெரியலைன்னு எனக்குத் தெரியுமா..? என்னவோ
சகல கலா வல்லியைப் போல எப்பப் பார்த்தாலும் கம்யூட்டரையே நோண்டிக்கிட்டு இருந்த.. சரி.. நீ வேலையில கரை கண்ட ஆளு போலன்னு நான் நினைச்சிட்டேன்..”
“அது.. அது.. வந்து..” சுசரிதாவுக்கு அசடுவழிந்தது..
“என்ன..?” அவனுக்கு அவளைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது..
“வேலையை ஸ்டடி பண்ண டிரை பண்ணிக்கிட்டு இருந்தேன்..” அவள் முகம்சிவக்க சொல்லி விட்டாள்..
“கிழிஞ்சது போ.. டிரை பண்றதுக்குத்தான் அப்படி பில்கேட்ஸ் கூடப் பிறந்தவ மாதிரி அம்புட்டு பில்ட் அப்பைக் கொடுத்தியா..?” அவன் கேலி செய்தான்..
“சரி.. அப்பத்தான் நான் பில்கேட்ஸீக்கு உடன் பிறவாத சகோதரின்னு ஐயா நினைச்சிட்டிங்க.. லதிகாகிட்ட வேலை சொல்லித்தரச் சொல்லிக் கேட்கத்தான் போனேன்னு நான் சொன்னதுக்கு பின்னாடியாவது சொல்லிக் கொடுத்திருக்கலாமில்ல..”
“ஆமாமாம்.. நீ பக்கத்து சீட்ல இருக்கிறவனை மதிக்காம கோடி சீட்டு தத்திகிட்ட வேலை சொல்லித் தான்னு கேட்கப் போவ.. நானா உன் மனசறிஞ்சுக்கிட்டு வேலை சொல்லித் தரனும்..? உனக்கே இது அநியாமன்னு தோணலையா..? ஏன்..? உன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை வேலை சொல்லிக் கொடுன்னு என்கிட்டக் கேட்டிருக்கலாமில்ல..?”
ஒரு வார்த்தை..!
அவனிடம் அவளும்.. அவளிடம் அவனும் எதிர்பார்த்த அந்த ஓர் வார்த்தை..! இவருரின் மனதிலிருந்த ஈகோவினால் தேங்கி நின்ற அந்த ஓர் வார்த்தை..!
அவர்களின் முகங்கள் தெளிவடைந்தன..
“தேங்க்ஸ்..” என்றாள் சுசரிதா..
“எதுக்கு..” அவன் பார்வை அவளை துளைத்தது..
“எல்லாத்துக்கும்..” தழைந்த குரலில் சொன்னாள்..
“சட்டுன்னு உன் முதல்மாசச் சம்பளப் பணத்தை என்முன்னால் வைச்சுட்டு வந்திட்டியே.. கொஞ்சமாவது என் மனசு எவ்வளவு கஷ்டப் படும்ன்னு நினைச்சுப் பார்த்தியா..?”
“நீங்க மட்டும் ரோசமிருந்தா நான் செய்யாத வேலைக்கு சம்பளம் வாங்கக் கூடாதுன்னு சொல்லலாமா..?”
“மக்கு.. இது நீ செய்த வேலைக்கான சம்பளம்தான்..”
மர்மமான குரலில் மோகன் சொன்னான்.. சுசரிதா விழி விரித்தாள்..
“புரியலையே..”
அவள் விரித்த விழிகளில் வலை இருப்பதைப் போல உணர்ந்தான் மோகன்.. அது அந்த பொய்காரனை வளைத்து இழுத்து சிறை பிடித்தது..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.