Chapter 12
“இவ வயிறெல்லாம் பல்லு..”
எரிச்சலுடன் மகனுக்கு காபி கலக்க வீட்டுக்குள் போனாள் கார்த்திகா.. ஹாலில் தரையில் உட்கார்ந்து டீபாயின் மீது கவிழ்ந்து எதையோ வரைந்து கொண்டிருந் மாளவிகா.. தாயை நிமிர்ந்து பார்க்காமல்..
“இப்படித்தான் சொல்லுவீங்க.. கொஞ்ச நேரத்திலே அவங்க வந்து வாசல்ல நின்னுக்கிட்டு கார்த்திகான்னு சவுண்டு கொடுத்தா கையில இருக்கிறதை அம்போன்னு கீழே போட்டுட்டு வாசலுக்கு ஓடிருவீங்க..” என்று உதட்டைச் சுழித்தாள்..
“ஏண்டி.. அதுக்காக அக்கம் பக்கத்து வீடுகள்ல பழகாம இருக்க முடியுமாடி..? எல்லோரும் ஆளுக்கொரு குணமாத்தான் இருப்பாங்க.. அதையெல்லாம் கண்டுக்காம இருந்துட்டுப் போயிரனும்டி..” மகனுக்கு காபியுடன் வந்தாள் கார்த்திகா..
சோபாவில் உட்கார்ந்து ஷீவைக் கழட்டியபடியே தங்கையைப் பார்த்த மோகன்..
“அம்மாவை விடு.. உன் மூக்குறுஞ்சி பிரண்டோட ‘டூ’ விட்டிருந்தியே.. அந்த ஃபைட் எந்த அளவில் இருக்கு..?” என்று விசாரித்தான்..
“அவ ஒன்னும் மூக்குருஞ்சியில்ல..?” மூக்கை விடைத்தாள் மாளவிகா..
“பின்னே..? மூஞ்சூரா..?” காபியை வாங்கிக் கொண்டான் மோகன்..
“பாருண்ணா.. தேவையில்லாம என் பிரண்ட கிண்டலடிக்காத..?” எச்சரித்தாள் மாளவிகா..
“உன் பிரண்டா..? இது எப்போதிருந்து..? என்னவோ அவ முகத்திலயே முழிக்க மாட்டேன்னு வீரசபதம் போட்டிருந்த.. அது என்னாச்சு..? காத்தோடு போச்சா..?”
“எங்கேயோ போச்சு.. அது எதுக்கு உனக்கு..? இப்ப நானும் அவளும் பெஸ்ட் பிரண்ட்ஸ்..”
“இது எத்தனை நாளைக்கு..?”
“ஊம்.. அடுத்த சண்டைவர்ற வரைக்கும்.. நீயேன் என் பிரண்ட்ஷிப் விசயத்தில தலையிடற..? நான் என்னைக்காவது உன் ஊமைக் கோட்டான் பிரண்டைப் பத்தி ஒரு வார்த்த பேசியிருப்பேனா..?”
“இந்தா பேசிட்டில்ல…”
“பேசிட்டாலும்..”
தமையனுக்கு நாக்கைத் துருத்திவிட்டு திரும்பிய மாளவிகாவின் முகம் மாறியது.. அங்கே ஊமைக் கோட்டான் என்று அவளால் நாமகரணம் சூட்டப்பட்டிருந்த அன்பழகன் நின்று கொண்டிருந்தான்..
‘கடவுளே..’
திருதிருத்தபடி.. டீப்பாயின் மீது கவிழ்ந்து கொண்ட தங்கையைப் பார்க்க மோகனுக்கு வேடிக்கையாக இருந்தது.
‘இவன் எப்ப வந்தான்..?’ மாளவிகா திகைத்துக் கொண்டிருக்க..
“எப்படா வந்த..?” என்று கேட்டான் மோகன்..
‘இப்ப இந்தக் கேள்வி அவசியமா..? வந்தவனை ‘வா’ன்னு கூப்பிட்டு உட்காரச் சொல்லுவானா.. அதை விட்டுட்டு.. எப்படா வந்தன்னு கேள்வி கேட்டு வைக்கிறான்.. எனக்கு இப்படியொரு அண்ணன்.. ம்ஹீம்..!’
மாளவிகா அடிப் பார்வையாய் தமையனை முறைத்தாள்.. அன்பழகன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி..
“உன் தங்கை என்னை ஊமைக் கோட்டான்னு சொன்னப்பவே வந்துட்டேண்டா..” என்று உண்மையை உரைத்தான்..
‘ஹைய்யோ..’ மாளவிகாவுக்கு சுவரில் முகத்தை புதைத்துக் கொள்ள வேண்டும்போல ஆகிவிட்டது..
‘நான் சொன்னதைக் கேட்டிருந்தா கண்டுக்காம போகிறதுக்கென்ன..? இப்படியா உள்ளதை உள்ளபடி சொல்லித் தொலைப்பான்..?’
“இவன் உண்மை விளம்பி..” தங்கையைப் பார்த்துச் சொன்னான் மோகன்..
“நான் கேட்டேனா..?” எரிச்சலுடன் அந்த நண்பர்களை முறைத்தாள் அவள்..
அப்போதுதான் வீட்டுக்குள் வந்த சரவணன் அன்பழகனைக் கண்டதும் வாத்சல்யத்துடன்..
“வா அன்பு..” என்று வரவேற்றார்..
‘இவனே வம்பு.. இதில வா அன்பாம்..’ கடுகடுத்தாள் மாளவிகா..
“எங்கேப்பா.. உன்ன இந்தப் பக்கம் பாக்கவே முடியல..”
ஒரு பேச்சுக்காக அவர் கேட்டு வைக்க.. புத்தகத்திலிருந்து நிமிர்ந்த மாளவிகா..
“அப்பா.. அவர் வீடு இந்தப் பக்கம் இல்லை..” என்று குரல் கொடுத்தாள்..
அன்பழகன் புத்தரைப் போலவும் சித்தரைப் போலவும் ஒரு தெய்வீக பார்வையுடன் அவளை பார்த்து வைத்தான்.. அந்தப் பார்வையில் நொந்து போனவள்.. மானசீகமாய் தலையில் அடித்தபடி..
‘இந்தப் பார்வ பார்க்கிறதுக்கு இவன் என்னப் பாக்காமலே இருந்திருக்கலாம்.. இமயமலைப் பக்கம் தவம் செய்யப் போகிறவனயெல்லாம் இழுத்து வைச்சு எங்கண்ணன் பிரண்ட்டிஷிப்ப கொண்டாடிக்கிட்டு இருக்கான்..’ என்று மனதுக்குள் திட்டித்தீர்த்தாள்..
“அட.. அன்பு.. எப்ப வந்த..?” கார்த்திகா ஆச்சரியத்துடன் அடுக்களை பக்கம் போகப் போனாள்..
“எங்கே போறிங்க ஆண்ட்டி.. இப்படி உட்காருங்க..” என்றான் அன்பழகன்..
“வேற எங்கே போவாங்க..? வந்திருக்க விருந்தாளிக்கு காபி கலக்க போவாங்க.. ஊமையா இருந்தாலும் காபி தொண்டைக்குள்ள இறங்குமாமே.. இதுக்குப் போசாம எங்கம்மா காபி ஷாப் ஓபன் பண்ணியிருக்கலாம்..”
அன்பழகன் பார்த்த சித்தர் பார்வையில் கடுங்கோபமாக இருந்த மாளவிகா கடுப்படித்தாள்.. அவன் அதற்கும் ஓர் தெய்வீகப் பார்வையை பார்த்து வைத்து அவளைக் கலங்கடித்தான்..
“நான் இப்பத்தான் காபி ஷாப்பில நல்லதா ஒரு காபி குடிச்சிட்டு வர்றேன் ஆண்ட்டி..” அன்பழகன் கார்த்திகாவைத் தடுக்க..
“கேட்டிங்களாம்மா.. சார் நல்லதா காபி குடிச்சாராம்.. நீங்க போட்டுத் தர்ற காபி நல்ல காபி இல்லேன்னு சிம்பாலிக்கா சொல்கிறாரு.. பாக்கத்தான் ஊமை.. வாயத்திறந்தா வில்லங்கம் வீராச்சாமிதான்..” என்று கார்த்திகாவிடம் அவனை மாட்டி விட்டாள் மாளவிகா..
“ஏங்க இப்படி..?” அன்பழகன் நேரடியாகவே அவளிடம் கேட்டு விட்டான்.. அவள் வாய்க்குள் அவனைத் திட்டியபடி முகத்தை திருப்பிக் கொண்டாள்..
“அவள விடு அன்பு.. அவ சொல்றதிலயும் பாயிண்டு இருக்கில்ல.. எங்க வீட்டுக்கு வர்றவன் நல்லதா காபி குடிச்சுட்டு வந்தேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?” கார்த்திகா சண்டைக்கு வந்தாள்..
“அதானே.. அந்தக் காபியையும் எனக்கும் அப்பாவுக்கும் பார்சல் பண்ணிக் கொண்டு வராம வெறும் கையை வீசிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்..?” மோகன் நியாயம் கேட்டான்..
“அண்ணா..” மாளவிகா ஆட்சேபக் குரல் எழுப்ப..
“உனக்கெல்லாம் பங்கு இல்லை.. நீ இவனை ஊமைக் கோட்டான்னு சொன்னவதானே..” என்று சொல்லி விட்டான் மோகன்..
“ஊமைக் கோட்டான்னா சொன்னா..? யாரை.. அன்பழகனைப் பார்த்தா அப்படிச் சொன்னா..? ஹா.. ஹா..” கார்த்திகா சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..
சரவணன் மகளைக் கண்டிக்க முடியாத சங்கடத்துடன் அன்பழகனைப் பார்க்க.. அவன் அதற்கும் அயராமல் மீண்டும் ஒரு புத்தர் பார்வையை மாளவிகாவின் பக்கம் வீசி வைத்தான்.. அவள் மனம் வெறுத்துப் போய்..
“ச்சே..” என்று டீபாயை தள்ளி விட்டு தலையில் கை வைத்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்..
“விடு மாளு.. இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது..?”
மோகன் பூடகமாக தங்கையை சமாதானப் படுத்த முயன்றான்.. அவள் அவனை விட்டு விட்டு அன்பழகனை முறைத்து வைத்தாள்..
“ஆமா.. அப்போப் பிடிச்சு உன் தெரு முக்கு காபி ஷாப்பில வெயிட் பண்றேன்… உன்னை ஆளைக் காணோம்.. அப்பவே கிளம்பினவன் இப்பத்தான் வந்து சேர்ற.. எங்க போயிருந்தே..” அன்பழகன் கேட்டான்..
“அதுவா..? நம்ம பக்கத்து சீட்டு சுசரிதா இருக்காள்ல..”
“இருக்கட்டும்.. அவளுக்கென்ன..?”
“அவளுக்கு ஒன்னுமில்லைடா.. அவ சம்பளப் பணத்தைத்தான் ஆபிசிலயே வைச்சுட்டுப் போயிட்டா..”
“அதுக்கு..?”
“இதென்னடா கேள்வி.. அதைக் கொடுக்க அவ வீட்டுக்கு போயிருந்தேன்.. அதான் லேட்..”
“அதுசரி.. அவசம்பளப் பணத்தை பத்திரமா அவ கையில சேர்த்துட்டயே.. உன் சம்பளப் பணம் எங்கே..?”
அன்பழகனின் கேள்வியில் மோகனுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவசரமாக பேன்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான்..
“அது அங்கே இருக்காது… இங்கே இருக்கு..” அன்பழகன் அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்..
“இது எப்படிடா உன்கிட்ட வந்துச்சு..?”
“ம்ம்ம்..? கால் முளைச்சு வந்திருச்சு.. அவ சம்பள கவரை எடுத்துக்கிட்டு போனவன் உன் சம்பள கவரை மேஜை மேலேயே வைச்சிட்டுப் போயிட்ட…”
“ஓ காட்.. தேங்க்ஸ்டா..”
நிம்மதிப் பெருமூச்சுடன் மோகன் சம்பள கவரை வாங்கிக் கொண்டான்..
“ம்ஹீம்.. ஊரான் வீட்டக் காப்பாத்தறேன்னு என்புள்ள அவன் சம்பளத்த மறந்திருக்கான்.. நல்ல பிள்ளய பெத்தேன்..”
“என்னடா மோகன் இது..? இப்படியா கேர்லெஸ்ஸா இருப்ப..? ஹெல்ப்பிங் டெண்டன்ஸி இருக்க வேண்டியது தான்.. அதுக்காக இப்படியா..? உன் சம்பளத்தை கோட்டை விடப் பாத்துட்டு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ண ஓடுவ..?”
சரவணனும் கார்த்திகாவும் மகனை கடிந்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டார்கள்.. மோகன் அன்பழகனை முறைத்தான்..
“அறிவு கெட்டவனே..! சம்பளப் பணத்தை எடுத்தா காதும் காதும் வைத்ததப் போல என்கிட்ட கொடுக்கிறதுக் கென்னடா..?”
“அந்தக் கொடுப்பினை உனக்கில்லண்ணா.. இந்த ஜென்மத்தில இந்த ‘தத்தி’தான் உன் பிரண்ட்..”
“இப்பப்பாரு.. உன்னால அம்மாவும் அப்பாவும் என்னைக்குறை சொல்லிட்டுப் போறாங்க..”
“அதைப்பத்தி உன் பிரண்டுக்கென்ன.. இவர் உத்தம புத்திரன்னு பெயர் வாங்கிக்கிட்டா போதும்.. மத்தவங்க புத்திரனைப்பத்தி இவருக்கென்ன கவலை..? உனக்குன்னு பிரண்ட் வாய்ச்சிருக்காரே.. ம்ஹீம்..”
மோகன் காய்ச்சிய காய்ச்சலை விட மாளவிகா காய்ச்சிய காய்ச்சல்தான் அதிகமாக இருந்தது..
“இருடா வர்றேன்..” மோகனும் உள்ளே போய் விட்டான்..
அன்பழகன் பார்க்கும் தெய்வீகப் பார்வைகளை சகிக்க முடியாமல் வெறுத்துப் போனவளாக மாளவிகா வாசல் பக்கம் போய் விட்டாள்.. சற்றுப் பொறுத்து வந்த மோகனிடம் விடைபெற்று வாசலுக்கு வந்த அன்பழகன் மாளவிகாவைக் கண்டதும் தேங்கி நின்றான்..
“பைக் அந்தப் பக்கம் நிக்குது..” முறைத்தாள் மாளவிகா..
“நீ இந்தப் பக்கம் நிற்கறியே..” என்றான் அன்பழகன்..
“இதுக்கொன்னும் குறைச்சலில்ல.. நானே செம கடுப்பில இருக்கேன்.. ஓடியே போயிருங்க.. இல்லேன்னா இங்கே ஒருகொலை விழும்..”
“நான் என்ன செய்தேன்னு என்மேல கோபப்படற மாளவிகா.. நீ கொடுத்த கவரில லவ்லெட்டர் இருக்குன்னு எனக்கு ஜோஸியமா தெரியும்..?”
“தெரியலைன்னா வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதான..? உங்கப்பா இது என்னடா கவர்ன்னு பிரிச்சு படிச்சிட்டு யாருடா இதுன்னு கேட்டா.. என்பிரண்டோட தங்கை மாளவிகாதான் இதைக் கொடுத்தாப்பா.. அதில என்ன எழுதியிருக்கான்னு அவர்கிட்டயே கேட்டு வைப்பீங்களா..?”
மாளவிகா பத்ர காளியானாள்.. போயும் போயும்.. அன்பழகனைப் போன்ற அறிவிருந்தும் அதைப் பயன் படுத்தாதவனைக் காதலித்து விட்ட ஆற்றாமை அவள் குமுறலில் வெளிப்பட்டது..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.