Chapter 14
அன்பழகனும் அது போலதான்.. குற்றம் குறைகள் இல்லாத நல்லவன்.. மாசு மறுவற்ற தூய்மையான அன்பைக் கொண்டவன்.. அவனைப் போன்ற கணவன் கிடைக்க எந்தப் பெண்ணாக இருந்தாலும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான்.. ஆனால்.. அவனைப் போன்ற காதலன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டியதில்லை.. என்ற முடிவை மாளவிகாவை அவன் எடுக்க வைத்திருந்தான்..
‘மாளவிகா இந்த ஜென்மத்தில இவனை மன்னிப்பான்னு எனக்குத் தோணலை.. எந்த மடையனாவது டீன் ஏஜ் பொண்ணு கொடுக்கிற கடிதத்தை.. படிக்காம அவன் அப்பன் கையில கொடுத்துட்டு இன்னார்தான் எழுதினது.. அதில என்ன எழுதியிருக்குன்னு கேட்டு வைப்பானா..? இவன் இந்தக் கருமாயத்தை செஞ்சு தொலைச்சிருக்கான்.. இவனுக்குப் போய் எப்படி நான் சப்போர்ட் பண்ண..?’
மோகன் தோளைக் குலுக்கிவிட்டு வீட்டுக்குள போய் விட்டான்.. மாளவிகா எம்.எஸ்ஸி படித்துக் கொண்டிருந்தாள்.. முதல் வருடத்தில் இருந்தவளுக்கு உடனடியாக மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைக்கும் உத்தேசத்தில் அந்தக் குடும்பம் இல்லாததால்.. அதைக் குறித்த ஆராய்ச்சியில் அப்போது அவன் ஈடுபடவில்லை..
மாளவிகா மோகனை விட ஏழுவயது இளைவள்… அப்போதுதான் இருபத்தியொராம் வயதில் அடியெடுத்து வைத்திருந்தாள்.. சரவணனும் கார்த்திகாவும் மோகனுக்குத் தான் தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருந்தார்கள்.. மாளவிகா படிப்பை முடித்து ஒரு வேலையில் அமர்ந்த பின்னால்தான் அவளது திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம்…
மாளவிகாவிற்கு எப்படி அன்பழகனின் மீது எண்ணம் விழுந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.. மோகனின் கல்லூரிகால நண்பர்களில் இருந்து அன்றைய காலகட்ட நண்பர்கள் வரை எல்லோரும் திருட்டுப் பார்வையுடன் மாளவிகாவை சைட் அடித்து வைக்க.. அவன் மட்டும் மாளவிகாவின் முகம் பார்க்காமல் பேசிய கண்ணியத்தால் அவளைக் கவர்ந்தானா..? இல்லை.. அவளுடைய தோழிகள் கூறும் காதல் கதைகளில் அடிக்கடி கேள்விப் படும் செய்தியான ஒருத்தியை காதலித்தபடி மற்றொரு தோழிக்கு நூல் விடும் தெய்வீகக் காதலர்களைப் போல அன்பழகன் ஒருநாளும் இருக்க மாட்டான் என்ற அவளின் நம்பிக்கையாலா..? ஏமாற்றுக்காரர்களைப் பற்றி தினம் தினம் கேட்டவளுக்கு அன்பழகனைப் போன்ற குணசாலியின் மீது அபிமானம் ஏற்பட்டு விட்டது..
அது.. இது.. என்று அடையாளம் காண முடியாமல் அன்பழகன் அவளை ஈர்த்து விட்டான்.. மாளவிகா அவனின் நல்ல குணங்களில் மயங்கிப் போய் விட்டாள்.. அவனிடம் அவள் மனதை வெளிப்படுத்த பற்பல முயற்சிகளைப் பண்ணியவள் அது முடியாமல் போனதில் காதல் கடித ஐடியாவை கையில் எடுத்தாள்.. அவன் அதில் செமத்தியாக சொதப்பி விட்டான்.. வாழ்நாள் முழுவதும் அவளால் அந்தச் சம்பவத்தை மறக்க முடியாமல் செய்து விட்டான்..
மாளவிகாவினால் அவனை மன்னிக்க முடியவில்லை..
மறுநாள் மோகன் வேலைக்குப் போன போது வாசலில் நின்றிருந்த மார்ட்டின்..
“ஹாய்..” என்றான்..
“ஹாய்.. எப்படா வந்த..?”
“இப்பத்தான்.. முன்னாடியே வந்தா கேஷ் அவார்டா கொடுக்கப் போறாங்க..? கரெக்ட் டயத்துக்கு வந்தாப் போதாதா..?”
“போதாதுன்னு நான் ஏண்டா சொல்லப் போறேன்..? நீதான் மேத்ஸில் பி.ஜி. பண்ணினவனாச்சே.. உன் கணக்கு தப்புமா..?”
அவர்களைக் கடந்து போன கலாவைப் பார்த்தபடி மோகன் சொல்ல.. அவள் மார்டினைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டுப் போனாள்..
“ஏண்டா..?” என்றான் மார்ட்டின்..
“நான் இந்தக் கணக்கைச் சொல்லலைடா..”
“நீ எந்தக் கணக்கைச் சொல்லியிருப்பேன்னு அவளுக்குத் தெரியாதா..? சொல்லறதுதான் சொல்ற.. வேற யாரையாச்சும் சொல்ல வேண்டியதுதான.. இவளக் கணக்குப் பண்ணிட்டாலும்..”
“வேணாம்ங்கறியா.. கலாவேணாம்னா.. கோமளா ஓகேயா..?”
“டேய்.. போடா.. போய் வேலையைப் பாரு.. ரெண்டுமே செம ‘லா’ பேசறதுக.. போயும் போயும் இதுக கிட்டத்தான் நான் மாட்டனுமா..?”
மார்ட்டின் சிரித்தபடி மோகனின் முதுகில் தட்டினான்.. மோகன் ஆபிசுக்குள் போனான்.. அப்போது தான் உள்ளே வந்த தாராவைக் கண்டதும் நின்று காலை வணக்கம் சொன்னான்.. அவள் சிநேகிதமான சிரிப்புடன் தலையை அசைத்தாள்..
“அசப்பில சாட்சாத் மகாலட்சுமியப் போலவே இருக்கீங்க மேடம்.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேறயா.. கோவிலுக்கே போக வேணாம்.. நேரா உங்க கேபினுக்கு வந்து கும்பிட்டுட்டு வந்தாப் போதும்..” பக்த சிரோண்மணியானான் மோகன்..
தாராவின் புன்னகை விரிந்தது.. அவள் போனவுடன் திரும்பியவன் திகைத்து நின்றான்.. அங்கே மகாகாளியின் முறைப்போடு நின்று கொண்டிருந்தாள் சுசரிதா..
“குட் மார்னிங்.. இப்பத்தான் வந்தீங்களா..?”
மனதுக்குள் ‘பதக் பதக்’ என்று இருக்க.. வெளியில் அதைக்காட்டிக் கொள்ளாமல் விசாரித்து வைத்தான் மோகன்..
“நீங்க சூடம் ஏத்தி சாம்பிராணி காட்டிக்கிட்டு இருந்தப்பவே வந்துட்டேன்.. ஏன் இங்க நிக்கறிங்க..?”
“இதானே என்னோட சீட்..”
“வெள்ளிக்கிழமையெல்லாம் நீங்க சீட்டில உக்காந்து வேலை செய்யக் கூடாது..”
“பின்னே..?”
“மேடத்தோட ரூமில போய் பூசாரி வேலைபாக்க வேணாமா..? நான் வேணும்னா அவங்களை தரிசனம் பண்ண ஆபிசில இருக்கிறவங்கள வரிசைகட்டி அழைச்சுக்கிட்டு வரவா..?”
மோகனுக்கு அவள் கோபப்படுவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.. அதை அவன் முகத்தில் கண்டு கொண்டவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“காலையிலேயே பட்டாசு வெடிக்கனுமா.. கூல் டவுன்..”
“விடுங்க..”
அவள் கோபத்தில் சொல்ல வேண்டியதை மறந்து பாதி வாக்கியத்தைச் சொல்ல.. அவன் புருவங்கள் முடிச்சிட்டன..
“எதை விடச் சொல்ற..? உன் கையையா..?”
“என்னது..?”
“சும்மா விடுங்கன்னு சொன்னா ஒன்னும் புரியலைல்ல..”
“புரியாது.. புரியாது.. வழியை விடுங்கன்னு சொன்னேன்..”
“அப்படி விவரமாச் சொன்னாத்தானே தெரியும்..”
“நீங்க விவரமில்லாதவர்.. உங்களுக்கு எதுவுமே புரியாதுன்னு கைக்குழந்தைகிட்டச் சொன்னாக்கூட அது நம்பாது..”
“அதுவே கைகுழந்தை.. அதுக்கென்ன விவரம் தெரியும்..?”
தூரத்து சீட்டில் வந்து உட்கார்ந்த கோமளாவைப் பார்த்தபடி அவன் சொல்ல.. கையில் கிடைத்த ஃபைலை எடுத்து அவன் தலையில் ஒரு போடலாமா என்று சுசரிதா யோசித்தாள்..
“எது குழந்தை..? கோமளாவா..?”
“அவ குழந்தைன்னு சொன்னா அவளே ஒப்புக்க மாட்டா..”
“ஆக மொத்தம் இந்த ஆபிசில வேலை பாக்கிற அத்தனை பொண்ணுகளோட ஜாதகமும் உங்களுக்கு அத்துபடின்னு சொல்லுங்க..”
“நானென்ன ஜோஸியம் பாக்கிறவனா..? இப்படி யெல்லாம் அபாண்டமா பேசக்க கூடாது..”
“ஒரு பாண்டமாவும் பேசலை.. என் சீட்டுக்கு போற வழியை அடைச்சுக்கிட்டு நிக்கறிங்க.. வழியை விட்டு விலகி நில்லுங்க..”
“இப்படித் தண்ணியைக் குடிச்சுட்டு தவிக்கத் தவிக்கப் பேசாம ஒரு கையாலே என்னைத் தள்ளி விட்டுப் போகலாமில்ல..?”
“என்னது..? நான் உங்களைத் தொடறதா..?”
“வொய்..? எதுக்காக இந்த சாமியாட்டம்ன்னு கேக்கறேன்..?”
“அதை உங்க மகாலட்சுமி ஆடுவாங்க.. நீங்க போய் உடுக்கடிங்க..”
“அது அப்புறம்..? என்னைத் தொடுன்னு நான் சொன்னேனா..?”
“தொடாம தள்ளிவிட முடியுமா..?”
“ஏன் முடியாது..? நான் உன்னைத் தொடாம தள்ளி விட்டுக் காண்பிக்கவா..?”
மோகன்.. பக்கத்திலிருந்த ஸ்கேலை எடுத்தான்.. அவளைத் தொடாமல் நகர்த்தி விட்டுக் காண்பித்தான்..
“எப்புடி..?” அவன் புருவங்கள் உயர்ந்ததில் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.. விலகி நின்றவனை முறைத்தபடி வாய்க்குள் அவனைத் திட்டியவள் சீட்டில் உட்கார்ந்தாள்..
மோகன் அவளுக்கு எதிராக அவன் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.. அவள் மேஜையில் கையூன்றி குனிந்து அவள் முகம் பார்த்தான்.. அவள் மனம் படபடத்தது..
“தொடச் சொல்லி நான் சொல்லலை.. ஆனா.. என்னைத் தொடனும்கிற ஆசை உன் மனசில இருக்கு.. அதனாலதான அப்படிச் சொன்ன..?” அவன் புருவங்கள் ஏறி இறங்கின..
சுசரிதாவிற்கு வந்த கிறக்கம் விடை பெற்று ஓடி விட்டது.. அவள் கொதிப்பாகி மேஜையில் இருந்த ஃபைல்களை ஓசையுடன் இடம் மாற்றினாள்..
“மெல்ல.. கவர்ண்ட்மென்ட் ஆபிஸ்.. பப்ளிக் புராப்பர்டியை நம்ம சொந்தக் கோபத்தில சேதம் பண்ணிரக் கூடாது..”
“எனக்குத் தெரியும்.. நினைப்பைப் பாரு.. இவர் பெரிய ஆணழகன்.. இவரைத் தொடனும்னு நான் ஆசைப்படறேன்.. எரிச்சலைக் கிளப்பாம போயிரனும்.. ரொம்பவும் நினைப்பு வைச்சுக்கக் கூடாது..”
“இல்லேங்கறியா..?”
“இல்லை..”
“ஓகே.. நீ ஒப்புக்கலைன்னா என்ன.. நான் ஒப்புக்கறேன்..”
“எதை..?”
“உன்னைத் தொடனும்கிற ஆசை என் மனசில இருக்கிறதை..”
“வாட்..?”
சுசரிதா விழிகள் விரிய அவனைப் பார்க்க.. அவன் எதுவுமே நடக்காததைப் போல அன்பழகனிடம் பேச ஆரம்பித்து விட்டான்.. சுசரிதாவிற்கு வியர்த்துப் போனது.. படபடப்பாகவே உணர்ந்ததில் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை அப்போதே காலி செய்து விட்டாள்.. சற்றுப் பொறுத்து அவள் பக்கமாக திரும்பிய மோகன்..
“ஆரம்பிக்கலாமா..?” என்று கேட்டான்..
“எது.. எதை..?” அவள் வார்த்தைகள் தந்தியடித்தன.
“வேலையை.. சொல்லிக் கொடுத்தா ரெண்டே நாளில தேறிருவ.. வேற எதைன்னு நினைச்ச..? ம்ம்ம்..?” அவன் புருவங்கள் ஏறி இறங்கின…
அவன் கண்களில் சிரிப்பிருந்தது.. அப்போதும் அவன் பூடகமாகவே பேசுவதை அவள் உணர்ந்தாள்.. அதை வெளிப்படையாக அவனிடம் கேட்டு விடவும் அவளால் முடியாது.. நானா.. அப்படிச் சொன்னேனா என்று கேட்பான்.. அவள் மனதில்தான் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறதென்று அவள்மீது பழியைத் தூக்கிப் போட்டு விடுவான்..
இதுவா.. அதுவா.. என்று புரியாத ஒரு போராட்டம் சுசரிதாவின் மனதில் ஆரம்பமானது..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.