Chapter 17

0Shares

“உங்க புத்தியைக் காட்டிட்டீங்கள்ல..” அவள் சீறினாள்..

“என்ன புத்தி.. என்புத்தி..?” அவன் நிதானத்தை கைவிடாமல் கேட்டான்..

இதுவேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் அவள் ஸ்கூட்டியைக் கிளப்பப் போனாள்..

“நில்..” அவனுடைய கை ஸ்கூட்டியை கிளப்ப விடாமல் தடுத்து நிறுத்திப் பிடித்தது..

“சொல்கிறதைக் கேட்டுட்டுப் போ..”

“கேட்டவரைக்கும் போதும்.. உங்களைப் போல கேவலமான புத்தியிருக்கிறவரை நான் பார்த்ததே இல்லை..” அவள் படபடத்தாள்..

“என்ன கேவலத்தை கண்டுட்ட..?”

அவன் கண்கள் இடுங்க கேட்ட விதத்தில் கையிலிருக்கும் ஹெல்மெட்டால் அவன் தலையைப் பதம் பார்த்து விடலாமா என்று யோசித்தாள் சுசரிதா..

பேசுவதையும் பேசிவிட்டு என்ன கண்டு விட்டாள் என்றா கேட்கிறான்..? 

“வேணாம் மோகன்.. வண்டியை விடுங்க.. எனக்கு உங்க கூடப் பேசவே பிடிக்கலை..”

“பொறுடி.. பிடிக்காம எப்படிப் போயிரும்..? எதைக் கேட்டாலும் அரையும் குறையுமாய் கேட்டுக்கிட்டு அவதிப்பட வைக்கிறதே உன் வேலையாய் போயிருச்சு.. இப்ப நான் என்ன சொன்னேன்..?”

“காதலிச்சாத்தானே பிரச்னைன்னு நீங்க சொல்லலை..?”

“ஆமாம் சொன்னேன்.. காதலிச்சாத்தானே என் காதலில் நம்பிக்கை இல்லாம நீ பயப்படுவ..? இன் செக்யூராய் ஃபீல் பண்ணுவ..? அதுவே கல்யாணம்ன்னு ஒன்னு ஆகிட்டா..?”

மோகனின் கேள்வியில் திகைத்துப் போனாள் சுசரிதா.. இப்படி ஒன்று இருக்கிறதா..? ஆனால் காதலில்லாத கல்யாணம் எப்படி சாத்தியமாகும்..?

“அதெல்லாம் ஆகும்..” என்றான் மோகன்..

“உனக்கென்ன போச்சு..? நீ பாட்டுக்கு உன் வீட்டுக்குப் போ.. வேலையைப் பாரு.. உன்னைப் பெண் பார்க்க நான் வருவேன்..”

“தனியாவா..? எங்க அப்பா பிளந்து கட்டிருவார்..”

“பார்த்தேனே.. உன் தம்பியையே திட்ட முடியாம ஜாடையாய் பேசிக்கிட்டு இருந்தாரே.. வீர தீர அப்பாவை வைச்சக்கிட்டு உனக்கு இவ்வளவு வாய் இருக்கக் கூடாது.”

“அதுக்காக தனியாப் பெண் கேட்டு வருவீங்களா..?”

“இதத்தான் அரைகுறையாய் கேட்டுட்டு குதிக்கிறதுங்கிறது.. தனியாய் பெண் கேட்டு வருவேன்னு நான் சொன்னேனா..?”

“இப்பச் சொல்லலையா..?”

“பெண் கேட்டு வருவேன்னுதான் சொன்னேன்.. தனியாய் பெண் கேட்டு வருவேன்னு சொல்லலை.. குடும்பத் தோடதான் வருவேன்..”

“வாங்க.. பார்க்கலாம்..”

“யாரை.. என்னைத்தானே..?”

அவள் பதில் சொல்லாமல் ஸ்கூட்டியில் பறந்து விட்டாள்..

‘எப்படிப் பேசினாலும் பிடிகொடுக்க மாட்டேங்கிறாளே..’ தாடையைத் தடவியபடி யோசித்தான் மோகன்..

“அங்கே எல்லோரும் உன்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க.. இங்கே வந்து என்னடா பண்ணிக்கிட்டு இருக்க..?”

மோகனைத் தேடி வந்த அன்பழகன் கேட்டான்.. மோகன் சுசரிதாவின் ஸ்கூட்டி பறந்து போன திசையைப் பார்த்தான்.. அன்பழகனுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.. நண்பன் பார்த்த திசையில் அவனும் பார்த்தான்.. ஒரு ஈ.. குஞ்சு.. காக்கையைக் கூட காணவில்லை..

“யாரைடா பார்த்துக்கிட்டு இருக்க..?” நண்பனிடமே கேட்டான்..

மோகனோ இரு கைகளையும் விரித்து நடிகர் திலகம் போல தோளைக் குலுக்கினான்.. அன்பழகன் இரண்டடி தள்ளி நின்று அவனை வினோதமாக பார்த்தான்..

“கிளிக்கு ரெக்கை முளைச்சிருச்சு… பறந்து போயிருச்சு..”

“உன்னைப் பத்தின விவரம் தெரிஞ்ச கிளியாயிருக்கும்.. பறந்து போயிருக்கும்.. உள்ளே வா.. குயிலே உனக்காக காத்திருக்குது..”

“லதிகாவத்தான சொல்ற..?”

“வேற யாரைச் சொல்வேன்..”

“குயில் பாட்டை நீயே கேட்டுக்க.. உனக்குத்தான் அது பிடிக்கும்.. எனக்கு அப்படியில்லை.. நேக்கு கிளிப் பாட்டுன்னா.. வளர இஷ்டம்..”

“கஷ்டம்..! உள்ளே வந்து தொலைடா..”

அன்பழகன் அவனை உள்ளே தள்ளிக் கொண்டு போனான்.. தாரா அவன் பாட்டைப் புகழ்ந்து பேசிவிட்டு..

“கேடரிங் சர்வீஸ்க்கு நீங்கதானே போன் பண்ணினீங்க..?” என்று கேட்டாள்..

“யெஸ் மேம்.. வெரைட்டிஸெல்லாம் அப்பவே வேனில வந்து இறங்கியாச்சே.. ஸ்டோர் ரூமில வைச்சுப் பூட்டியிருக்கேன்.. அன்பு சொல்லலையா..?”

“சொன்னார்.. பட்.. வேர் இஸ் தி கீ..?”

அப்போதுதான் அந்த அறையின் சாவியை சட்டைப் பையில் போட்டுக் கொண்ட ஞாபகம் வந்தவனாக அதை எடுத்துக் கொடுத்தான் மோகன்..

‘இதுக்குத்தான் எல்லோரும் என்னைத் தேடினாங்களா..?’

லதிகாவின் பார்வை.. ‘பின்னே..? உன் பாட்டைக் கேட்டு பாராட்டத்தான் உன்னைத் தேடினாங்கன்னு நினைச்சியா..?’ என்று கேட்டது..

மோகனின் பார்வை ‘ஹ..’ என்று உதட்டைச் சுழித்தது..

“ஏண்டா அன்பு..?” லதிகாவைப் பார்த்தபடியே நண்பனை விளித்தான்..

“என்னடா வம்பு..?” அவன் பார்வை போன திசையை கண்டு கொண்டவனாக பதில் குரல் கொடுத்தான் அவன் நண்பன்..

“இந்தக் குயில் பாட்டு.. குயில் பாட்டுங்கறாங்களே.. அது எப்படியிருக்கும்ன்னு நீ கேட்டுப் பார்த்திருக்கியா..?”

நண்பனின் இடக்கைப் புரிந்து கொண்ட அன்பு எதற்கு வம்பு என்று இடத்தை காலி செய்துவிட…

“நான் கேட்டிருக்கேன் மோகன்..” என்றபடி அருகில் வந்தாள் கோமளா.. 

அவள் கையிலிருந்த தட்டில் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பி வழிந்தன.. அதைப் பார்த்தபடி..

“உங்க டேஸ்டைப் பத்தித்தான் எனக்குத் தெரியுமே..” என்று பாராட்டி வைத்தான் மோகன்..

“செம டேஸ்டில்ல..” கோமளா தட்டிலிருந்த உணவை ருசித்தபடி சொல்ல…

“ஆமாமா.. டேஸ்ட் பாக்கிறதில உங்களை அடிச்சுக்க யாராலும் முடியாது..” என்றான் மோகன்..

“நீங்க குயில் பாட்டைப் பத்தித்தான சொல்கிறிங்க..?” கோமளாவுக்கு சந்தேகம் வந்து விட்டது.

“பின்னே..?” விட்டால் அவள் கையிலிருக்கும் உணவைப் பிடுங்கி விடுபவனைப் போல மோகன் கேட்டு வைத்ததில் உஷார் பேர்வழியாக தள்ளி நின்று கொண்டாள் கோமளா..

“அதில பாருங்க மோகன்..”

“எதில பார்க்க கோமளா..?”

மோகனின் பார்வை அவள் தட்டிலேயே இருக்க..

“நீங்க குயில் பாட்டைக் கேட்டிருக்கீங்களா..?” என்று எரிச்சலுடன் கேட்டாள் கோமளா..

அருகில் நின்ற லதிகாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி..

“ஊஹீம்..” என்று தலையாட்டி வைத்த மோகன்..

“மயில்பாட்டை வேண்டும்னா கேட்டிருக்கேன்..” என்று அறிவித்து வைத்தான்..

“மயில் பாட்டா..?” கோமளாவின் புருவங்கள் உயர்ந்தன..

“ஆமா.. மயில் பாட்டுத்தான்.. நம்ம லதிகா பாடினா அச்சு அசல் அந்த அழகு மயிலே தோகை விரித்துப் பாடுவதைப் போல அத்தனை அழகாயிருக்கும்.. இல்லையா லதிகா..”

இல்லை என்று சொல்ல முடியாத லதிகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.. அவர்களின் அருகே நின்று கொண்டிருந்த தாராவின் அகலமான புன்னகையில் அவளால் எதையும் சொல்ல முடியாமல் போனது..

“மயில் பாட்டு..? ஹா.. ஹா.. மோகன்..”

“யெஸ் மேம்..”

“எப்படித்தான் இப்படிப் பேசறிங்களோ.. யோசிக்காம விட் அடிக்கறிங்க.. கீப் இட் அப்..”

‘அதுசரி.. ஊரான் வீட்டுப் பெண்ணை விட் அடித்தா நீ கீப் இட் அப்புன்னுதான் சொல்லுவ.. உன்னைச் சொன்னாத் தெரியும்..’

மேலதிகாரியை பகைத்துக் கொள்ள முடியாத லதிகா மனதக்குள் பொறுமியபடியே கலாவிடம் பேசுவதைப் போல நகர்ந்து விட்டாள்.. சுற்றிலும் பார்த்த தாராவின் புருவங்கள் உயர்ந்தன..

“வேர் இஸ் சுசரிதா மோகன்.. ஃபீஸ்டில அவங்க கலந்துக்கலையா..?”

மோகன் கவலையாகிப் போனான்.. சுசரிதா விருந்தைப் புறக்கணித்து கிளம்பிப் போய் விட்ட விவரத்தை அறிந்தால் தாரா சும்மாவிட மாட்டாள்.. அவளுக்கு அது பிடிக்காது.. மேலதிகாரியே விழாவில் கலந்து கொண்டு தாமதமாக வீட்டுக்குப் போகும் போது மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று கேட்பாள்..

‘இவதான் என் பாட்டைக் கேட்ட மயக்கத்திலே.. இங்கே நின்னா எங்கே அவ வாயாலே காதலை 

ஒப்புக்க வேண்டிய கட்டாயம் வந்திருமோன்னு ஓடிப் போயிட்டாளே..’

காதலியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான மோகன்..

“அவங்களுக்கு செம ஃபீவர் மேம்.. நீங்க கலந்துக்கிற பங்சன்ங்கிறதினால இவ்வளவு நேரமும் இங்கே இருந்தாங்க.. பட்.. ஹெவி ஃபுட் சாப்பிட முடியாதில்ல.. அதான் வீட்டுக்கு ஓடிப் போயி சூடான கஞ்சியைக் குடிச்சிட்டு.. மாத்திரையை விழுங்கலாம்ன்னு கிளம்பிட்டாங்க.. இப்பத்தான் ஆட்டோவில ஏத்தி அனுப்பி வைச்சிட்டு வர்றேன்.. அவங்களாலே ஆட்டோவில கூட உட்கார முடியலை மேம்..”

நண்பனின் கோர்வையான புளுகில் புளகாங்கிதப் பட்டுப் போன அன்பழகனை அடுத்து தாரா கேட்ட கேள்வி ‘சபாஷ்’ போட வைத்தது..

“ஏன் ஆட்டோவில போனாங்க..? அவங்க ஸ்கூட்டி என்ன ஆச்சு..?”

‘இந்த புத்திசாலித்தனத்தினாலதான் இவங்க சுப்பிரியரா இருக்காங்க..’ வியந்த அன்பழகனின் விழிகளில்

‘நீ வாயாலேயே கெட்டுப் போறடா..’ என்ற வசை இருந்தது..

“அவங்களே நிற்க முடியாம தள்ளாடிக்கிட்டு செம காய்ச்சல்ல இருக்காங்க.. அந்த நிலைமையில ஸ்கூட்டியை ஓட்ட அவங்களாலே முடியுமா மேடம்..? அதான்.. அவங்க வீட்டுக்கு தகவல் சொன்னேன்.. அவங்க தம்பி ஆட்டோவோட வந்து அவங்க அக்காவை ஆட்டோவில ஏற்றி அனுப்பி வைச்சுட்டு.. அவங்க ஸ்கூட்டியில அவன் ஏறி ஆட்டோவைத் தொடுத்துக்கிட்டுப் போறான்..”

“ஓ..” தாரா திருப்தியாய் தலையசைத்து விட்டு நகர்ந்தாள்..

“ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களா..? ஏண்டா.. நீ திருந்தவே மாட்டியா..? சுசரிதா கிளம்பிப் போயிட்டாங்கிறதோட நிறுத்த வேண்டியதுதான..? அதென்ன அடிசனலா ஆட்டோவை உன் கதையில இழுக்கிற..?”

“உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. தாரா மேடம் செம புத்திசாலி..”

“அதான் ஊருக்கே தெரிஞ்ச சங்கதியாச்சே..”

“இப்ப சுசரிதா ஸ்கூட்டியில போனான்னு சொன்னா.. காய்ச்சல்ல நிக்க முடியாம தள்ளாடறவளால ஸ்கூட்டியை ஓட்ட முடியுமான்னு கேள்வி கேட்பாங்க.. சுசரிதா மாட்டிக்குவா..”

“ஆமாமில்ல..”

“இப்போச் சொல்லு.. இந்த மோகன் பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்றவன்.. உன்னைப் போல உண்மையைச் சொல்றதுக்கே உளறிக் கொட்டி கிளறி மூடறவனில்ல..”

“உன் திறமையைப் பத்தி எனக்குத் தெரியாதாடா..?”

அன்பழகனின் கண்களில் தெரிந்த குருபக்தியில் விட்டால் அவன் மோகனுக்கு அபிசேக ஆராதனைகள் நடத்திவிடுவான் போலத் தோன்ற..

“டேய்.. அடங்குடா..” என்று அவனை அடக்கி வைத்து விட்டு வீட்டைப் பார்த்துக் கிளம்பினான் மோகன்..

“மாளவிகா என்ன சொன்னா..?” என்று விசாரித்தான் அன்பழகன்..

“உன் பிரண்டுக்கு அடுத்து ஒரு லவ் லெட்டர எழுதித் தாரேன்.. அத அப்படியே அவனோட அம்மா கையிலே கொடுத்து இன்னார்தான் கொடுத்தான்னு என் விலாசத்தைச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொல்லுடா அண்ணான்னு சொன்னா.. என்னடா..? செய்யச் சொல்லவா..?” என்று கேட்டான் மோகன்..

“டேய்.. அண்ணனும் தங்கச்சியும் எப்படா மலையிறங்குவீங்க..?” அன்பழகன் அழுது விடுபவனைப் போல ஆனான்..

“உன்னைப் பத்திக் கேட்டாலே என் தங்கச்சி இமயமலைப் பக்கம் தாவறா.. இந்த ஜென்மத்திலே மலையிறங்க மாட்டான்னுதான் நினைக்கிறேன்.. நீ எதொன்னுக்கும் ‘எங்கிருந்தாலும் வாழ்க..’ ங்கிற பாட்டை மனப்பாடம் பண்ணி வைச்சுக்க…”

முடிந்தவரை அவனை கடுப்படித்துவிட்டு கிளம்பிப் போனான் மோகன்..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link