Chapter 24
“அப்ப இருந்து இப்ப வரைக்கும் இவன் நம்ம வீட்டுக்கு வந்தா பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டான்..” என்றான் மோகன்..
“எதுக்காம்..?” என்றாள் சுசரிதா..
“உனக்குப் பச்சைத் தண்ணியைக் கொடுத்தாக்கூட பாவம்டான்னு மாளவிகா இவனை ராடு கட்டியிருக்கா..”
சுசரிதாவுக்கு மாளவிகாவை நினைத்துப் பாவமாக இருந்தது.. அவ்வளவு அருமையான பெண்.. அண்ணனின் மனைவியை சிநேகிதியாக பார்க்கும் பிரியமான நாத்தனார்.. அவள் மனதில் ஆறாத ரணமா..?
“நெக்ஸ்ட் வீக்கில மாலுவோட படிப்பு முடியுதில்ல..”
“யெஸ்…”
“அதுக்கப்புறமா நாம ஒரு வேலை பண்ணலாமா..?”
“என்ன வேலைடி..?”
மோகன் கிறக்கத்துடன் சுசரிதாவின் கன்னம் தடவிக் குனிய..
“இந்த வேலையில்லை..” என்று அவனைத் தள்ளிவிட்ட சுசரிதா.. அவன் காதுகளில் அவள் திட்டத்தைச் சொன்னாள்..
“என்னை பொய் சொல்லின்னு சொல்லிட்டு.. நீ என்னைவிட அதிகமா பொய் சொல்ற..?” மோகன் வியந்தான்..
“பொய் சில நேரங்களில் அழகானது..” என்றாள் சுசரிதா..
“இதை நீ சொல்ற பாரு.. இதுதாண்டி ட்விட்ஸ்ட்..”
“என்ன செய்றது..? உங்கள மாதிரி உண்மை விளம்பிக்கு பெண்டாட்டியா ஆகிட்டேனில்ல.. பேய்க்கு வாழ்க்கைப் பட்டா முருங்கை மரத்தில ஏறனும்.. பொய் சொல்லிக்கு வாழ்க்கைப்பட்டா.. நாமளும் கூட்டுச் சேர்ந்துக்கிட்டுப் பொய் சொல்லனும்..”
சுசரிதா சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.. மோகன் அவள் கன்னத்தில் தட்டுகிற சாக்கில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு விலகினான்.. அழகான அந்தக் குடும்பத்தில் வெகு அழகாக தன்னை இணைத்துக் கொண்டு அனைவரிடமும் அன்யோன்யமாக ஆனாள் சுசரிதா..
மறுநாளில் அவளும் மோகனும் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போனார்கள்.. புதுமணத்தம்பதிகளை வாழ்த்தி வரவேற்றது அலுவலகம்.. அவர்களுக்கான பிரத்யேக விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள் தாரா.. மோகனை அவனுடைய அலுவலகம் கொண்டாடிய விதத்தில் அந்த பொய்காரன் அலுவலகத்தை எந்த அளவுக்கு காந்தம் போல கவர்ந்து வைத்திருக்கிறான் என்ற உண்மை சுசரிதாவிற்குப் புரிந்தது..
அழகான நாள்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன.. சுசரிதா கார்த்திகாவோடு கோவிலுக்குப் போனாள்.. சரவணனுக்கு மருந்து மாத்திரைகளைக் கவனமாக அந்தந்த நேரங்களில் கொடுத்தாள்.. மாளவிகா படிக்க டீ போட்டுக் கொடுத்தாள்.. அந்தக் குடும்பத்தின் ஆணிவேராக பரிமளித்தாள்..
“மருமக.. நாம பயந்ததைப் போல இல்லைடி.. மாளவிகா போல இவளும் நம்ம மகதான்னு தோணுது..”
“ஆமாங்க…”
கார்த்திகாவும் சரவணனும் பயத்தை விட்டு.. சுசரிதாவிடம் வாஞ்சையுடன் பேசிப் பழக ஆரம்பித் தார்கள்.. மாளவிகாவின் தேர்வுகள் முடிந்தன.. அவள் வீட்டுக்குள்ளே சிறைபட்டவளாக உற்சாக மில்லாமல் வீட்டை வலம் வந்தாள்..
அன்று மாலையில் அலுவலகத்திற்கு பர்மிசன் போட்டுவிட்டு மோகனும் சுசரிதாவும் அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.. அவர்களுக்குப் பின்னாடியே சரவணனும் வந்து நின்றார்.. கார்த்திகாவைக் கூப்பிட்டு வைத்து அவர்கள் கூடிப் பேசியதில் வீட்டுக்குள் திடிர் பரபரப்பு ஏற்பட்டு விட்டது…
சுசரிதா சேலையை இழுத்துக் சொறுகிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.. சற்று நேரத்தில் நெய் வாசனை வீட்டில் கமழ்ந்தது.. கார்த்திகா பரபரவென்று வீட்டை ஒழுங்கு செய்தாள்.. மோகன் ஜன்னலுக்கும் வாசலுக்கும் புதுத் திரைச்சீலைகளை மாற்றி விட்டான்.. சரவணன் குட்டி போட்ட பூனை போல வீட்டுக்கும்.. வாசலுக்குமாக அலைந்தார்..
என்னவாக இருக்கக் கூடும் என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதனால பாதிக்கப்படாதவளாக எனக்கென்ன என்று விட்டத்தில் ஓடும் பல்லிகளை விரக்தியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாளவிகா..
ஈரக் கையை சேலை முந்தானையில் துடைத்தபடி அவளருகில் வந்த சுசரிதா மாளவிகாவின் தோள் தொட்டு எழுப்பி விட்டாள்..
“வா மாலு.. டிரெஸ் சேன்ஞ் பண்ணிக்கிட்டு.. சிம்பிளா மேக் அப் போட்டுக்க..”
“எதுக்கு அண்ணி..?”
“உன்னைப் பெண் பார்க்க வரப் போறாங்க..”
“என்னது..?”
மாளவிகா கொதித்து எழுந்து விட்டாள்.. அவள் உடல் நடுங்கியது..
“யாரைக் கேட்டு இந்த ஏற்பாடைப் பண்ணினீங்க..?”
“விவரம் புரியாமல் பேசாதே மாளவிகா.. அன்பழகனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சு.. உனக்குத் தெரியுமா..?”
மாளவிகாவின் முகம் மாறிவிட்டது.. அவள் கண்களில் கனல் பறந்தது..
“எப்ப..?” என்றாள்..
“லாஸ்ட் வீக்கே என் கேஜ்மெண்ட் முடிஞ்சிருச்சு.. நெக்ஸ்ட் வீக்கில கல்யாணமாம்.. பொண்ணு பணக்கார இடமாம்..”
‘கடைசியில் அன்பழகனும் பணத்துக்கு விலை போய்விட்டானா..?’ மாளவிகாவின் மனம் கசந்தது..
“அதான் மாலு.. அவர் கல்யாணத்துக்கு முன்னாலே உன் கல்யாணத்தை நடத்திரனும்னு நானும் உன் அண்ணனும் முடிவு பண்ணினோம்.. இப்ப உன்னைப் பார்க்க வருகிற மாப்பிள்ளை அன்பழகனுக்கு குறைஞ்சவரில்ல..”
“யாரா வேணும்னா இருக்கட்டும் அண்ணி.. ஐ டோண்ட் கேர்..”
மாளவிகா கோபத்துடன் வேண்டா வெறுப்பாக தயாராகி உட்கார்ந்தாள்..
அன்பழகனின் துரோகம் அவள் மனதை வாள் கொண்டு அறுத்தது.. அவனா இப்படிச் செய்தான் என்பதை அவள் மனம் நம்ப மறுத்தது.. எப்போது அவனுடைய அப்பாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாளவிகாவை விட்டுவிட்டு அவன் வேறு பெண்ணை மணக்கத் துணிந்து விட்டானோ.. அதற்குப் பின்னால் அவன் முகத்தில் விழிப்பதே பாவம் என்று அவள் மனம் வெறுத்து விட்டது..
ஹாலில் சளசளப்பு கேட்டது.. மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்று சுசரிதா வந்து சொல்லி விட்டுப் போனாள்.. மாளவிகாவின் மனதில் துக்கம் பெருகியது.. அப்படியே பின்வாசல் வழியாக உலகத்தின் மறுமுனைக்கு ஓடிப்போய் விட்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.. அதற்கு வழியில்லாமல் சுசரிதா அவளை அழைத்துக்கொண்டு போக வந்துவிட்டாள்..
‘நான் இதுக்கு ஒப்புக் கொண்டிருக்கக் கூடாதோ..’
துயரத்துடன் மறுகினாள் மாளவிகா.. இனி பின் வாங்க முடியாது.. வீட்டு மனிதர்களை அவமானப் படுத்தாமல் வந்தவர்களின் முன்னால் போய் நின்று விட்டு.. அவர்கள் போனதும் மறுப்பைச் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவளாக சுசரிதாவை பின் தொடர்ந்தாள் மாளவிகா..
“உட்காரும்மா..”
தலைநிமிராமல் நின்ற மாளவிகா காதில் விழுந்த பெண்குரலின் உத்தரவுப்படி அங்கேயிருந்த ஒற்றை சோபாவில் உட்கார்ந்தாள்.. சுசரிதா அவளுக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள்..
“பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு.. மோகனின் தங்கைன்னா சொல்லவா வேணும்..? அன்பு அடிக்கடி சொல்வான்.. இந்த பிரபஞ்சத்திலேயே பேரழகி மாளவிகா தான்ம்மான்னு அவன் சொன்னது அப்படியே உண்மையாய் இருக்கு..”
பெண்குரல் பேசிக் கொண்டே போனதில் ‘என்னடா இது இந்தம்மா அறிமுகமானவங்களப் போல பேசித் தள்ளராங்க..’ என்று நிமிர்ந்து பார்த்த மாளவிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
அங்கே.. மங்களகரமான பெண்மணி ஒருத்தி பேசிக் கொண்டிருக்க அருகே அன்பழகன் அமர்ந்திருந்தான்.. அவனுக்குப் பக்கத்தில் மீசையை முறுக்கியபடி அவனுடைய மிலிடி அப்பா உட்கார்ந்திருந்தார்.. மற்ற ஆண்.. பெண்களை அவளுக்கு அடையாளம் தெரிய வில்லை.. அவர்களின் பேச்சிலிருந்து அவர்கள் அன்பழகனின் உறவுக்காரர்கள் என்பதை அவள் அறிந்தாள்..
“அன்பு அடிச்சுச் சொல்லிட்டான்.. கட்டினா மாளவிகாவைத்தான் கட்டுவேன்.. இல்லேன்னா காவி வேட்டியைக் கட்டிக்கிட்டு சன்யாசம் போவேன்னான்.. ஒற்றை மகனை அப்படி விட்டுற முடியுமா..? பெண்ணும் குறைசொல்ல முடியாத அழகும்.. படிப்பும்.. குணமுமா இருக்கு.. குடும்பமும் மோகனின் குடும்பமா போயிருச்சு.. இதுக்கு மேலே எங்களுக்கு என்ன வேணும்..? நாங்க தேடினாலும் இதைப் போல பெண்கிடைக்காதுங்கிற தினால நல்ல காரியத்தைத் தள்ளிப் போட வேண்டாம்ன்னு கிளம்பி வந்துட்டேன்..”
மீசையை முறுக்கியபடி அன்பழகனின் அப்பா பேசியதில் இந்த மனிதரா கல்லூரிக்கு வந்து அவளை மிரட்டியவர் என்ற சந்தேகம் மாளவிகாவுக்கு வந்து விட்டது..
“நிச்சய தாம்பூலத் தட்டை மாத்திக்கலாமா..?”
அன்பழகனின் அப்பா கேட்க.. ஆஹா என்று தலையாட்டினார் சரவணன்.. கையோடு கொண்டு வந்திருந்த தங்க அட்டிகையை மாளவிகாவின் கழுத்தில் போட்டு திருமணத்தை உறுதி செய்தாள் அன்பழகனின் அம்மா..
“மாப்பிள்ளை எதையும் சாப்பிடலையே..” சரவணன் உறவு கொண்டாட.. மாளவிகாவை அள்ளிப் பருகுவதைப் போல பார்த்தபடி..
“மாலுவோட கையாலே பச்சைத் தண்ணியைக் குடுத்தாக்கூட பால் பாயாசம் போல சாப்பிடுவேன் மாமா..” என்றான் அன்பழகன்..
அவன் எதிர்பார்த்ததைப் போலவே மாளவிகாவின் பார்வை உயர்ந்து அவன் பார்வையை சந்தித்தது…
அவள் எழுந்து பால்பாயச தம்ளரைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.. அவள் விரல்களை அழுத்தித் தொட்டு அதை வாங்கிக் குடித்தான் அன்பழகன்.. மாளவிகாவின் விழிகள் கலங்கின…
“எதுக்கு உனக்கு கோபம் மாலு..? நான் தைரியமா என் காதலை என் அப்பாகிட்டச் சொல்லலை.. உன்னை விட்டுக் கொடுத்திட்டேன்னுதானே கோபம்..? உன் மனசு எனக்குத் தெரியாதுடி.. நீ கொடுத்த லெட்டரில யதார்த்தமா எதையோ எழுதியிருக்கேன்னுதான்டி நான் நினைச்சுக் கிட்டு இருந்தேன்.. உன்மேல் எனக்குக் காதல் மாளவிகா.. ஆனா நீ என்னைக் காதலிப்பன்னு கனவிலயும் நான் நினைச்சுப் பார்த்ததில்ல.. உங்கண்ணனைப் போல சூராதி சூரன்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும்ன்னு நினைச்சுட்டேன்.. என்னையும் உனக்குப் பிடிக்கும்.. எனக்கும் நீ காதல் கடிதம் எழுதுவன்னு தெரிஞ்ச பின்னால எப்படி மாளவிகா உன்னை நான் விட்டுக் கொடுப்பேன்..? உன் வீடு புகுந்து உன்னைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்டிர மாட்டேனா..? எங்கப்பா உன்னை வேணாம்ன்னு சொன்னா.. நான் அவரையே வேணாம்ன்னு சொல்லிட்டு உன்கூட தனிக்குடித்தனம் போயிர மாட்டேனா..? ஐ லவ் யு மாளவிகா.. ஐ லவ்
ஒன்லி யு…”
தோட்டத்தின் இருளில் மாளவிகாவின் கைபற்றி அன்பழகன் சொன்னபோது அனைத்து துயரங்களும் கரைந்து போக லேசான மனதுடன் விம்மியபடி அவன் தோள் சாய்ந்தாள் மாளவிகா..
விருந்தினர்கள் போனபின்பு சுசரிதாவிடம் வந்தவள்..
“நீங்களும் அண்ணனும் பொய் சொல்லி என்னை கலங்கடிச்சுட்டிங்களே அண்ணி..” என்று குற்றம் சாட்டினாள்..
“வேறு என்ன செய்வது மாளவிகா..? அன்பு அண்ணா செய்து வைத்திருந்த வேலையிலே அவர்தான் உன்னை பெண் பார்க்க வருகிறார்ன்னு சொன்னா நீ அதுக்கு சம்மதிப்பியா..? அவர் மனசை சொன்னா காது கொடுத்து கேட்பியா..? அதான் இப்படி பொய் சொல்லி
உன்னை சம்மதிக்க வைச்சு.. அன்பழகன் அண்ணாவின் தைரியத்தை உனக்கு புருவ் பண்ணிக்காட்டினோம்..” என்று நாத்தனாரை அணைத்துக் கொண்டாள் சுசரிதா..
அன்பழகனுக்கும் மாளவிகாவுக்கும் திருமணமானது.. நாத்தனார் முடிச்சை போட்டு விட்ட சுசரிதாவிற்கு அந்த நொடியில் பொய் சில நேரங்களில் அழகானது என்று தோன்றியது..
– முற்றும் –
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.