Chapter 08

0Shares

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..

நின்னை தீண்டும் இன்பம்

தோன்றுதடா.. நந்தலாலா..”

கண்மூடி மெல்லிய குரலில் பாடினாள் தான்ய லட்சுமி.. மூடிய கண்களுக்குள்.. குழலூதும் கண்ணனாக அந்தக் கோகுல கண்ணன் வந்து நின்று சிரித்தாள்…

‘அவன் தீயா..? அவன் தீயானால் நான் நீராவேன்.. அவனது வேகத்தில் எனைக் கரைத்து.. அவனோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுவேன்.. எது என்னை தடுப்பது..’

கட்டிலின் அருகேயிருந்த டீப்பாயின் மீதிருந்த புகைப்படத்தில் சோமசுந்தரமும்.. அகிலாண்டேஸ்வரியும்.. தான்யலட்சுமியை நடுவில் வைத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தார்கள்..

புகைப்படத்தை கையிலெடுத்துப் பார்த்தாள்…

கோடிஸ்வர சோமசுந்தரம் மடிப்புக் கலையாத உடையுடன் இருக்க.. அகிலாண்டேஸ்வரி வைரங்களில் மிளிர்ந்தாள்..

தான்யலட்சுமிக்கு.. கோகுலக்கண்ணனின் யமஹா நினைவில் வந்தது…

புருவங்களை சுளிக்க.. ஏதேதோ சிந்தனைகள் மனதில் ஓட.. மெல்ல அவள் தூங்கிப் போனாள்..

“இன்னைக்கென்ன ஸ்பெஷல்..?”

மறுநாள்.. மரத்தடியில் சந்தித்த போது கோகுலக் கண்ணன் கேட்டான்..

“நீங்களே பார்த்துச் சொல்லுங்க..”

தான்யலட்சுமி டிபன் டப்பாவை அவனிடம் நீட்டினாள்…

“நான் திறந்து பார்த்தா அத்தனையும் காலியாகிடும் பரவாயில்லையா..?”

புருவங்களை உயர்த்தி அவன் சிரித்த சிரிப்பில் அவள் மனம் சிதறித் தவித்தது..

அவன் ஆறடி உயரத்தில்.. கம்பீரமாக இருந்தான்.. மாநிறம் என்று சொல்லக் கூட முடியாத கருமை நிறம்.. ஏனோ.. அந்த நிறமே.. அவனது அழகைக் கூட்டிக் காட்டுவதைப் போல அவளுக்கு தோன்றிவைத்தது.. அவனது அந்த நிறத்தினாலேயே.. அவன் சிரிக்கும் போது பளிச்சிடும் வெண்ணிற பற்களின் அணி வகுப்பு.. அவள் மனதை மயக்கியது..

அவனிடம் ஒரு காந்தக் கவர்ச்சி இருந்தது.. அதை யாமினியே ஒப்புக் கொண்டாள்…

“அவன் பின்னால் சுத்த ஒரு பட்டாளமே இருக்குடி..” என்றாள்..

“பிரண்ட்ஸாயிருக்கும்..”

“இவன் அப்படித்தான் சொல்லிக்கிறான்..”

“பசங்கன்னா அப்படித்தான்..”

“போடி பைத்தியம்.. நான் சொன்னது பசங்க பட்டாளத்தையில்லை..”

“பின்னே..?”

“கேர்ள்ஸ் பட்டாளத்தை..”

“என்னது..?”

விழி விரித்த தான்யலட்சுமியின் மனத்திரையில் கோபியர் கூட்டம் தோன்றியது.. அதன் நடுவில் கோகுலக் கண்ணன் நின்றிருந்தான்..

 “கன்னிப் பெண்கள் கூட்டம்..

கண்ணன் நடுவினிலே…”

பாடல் வரிகளில் அவள் மனம் சிக்குண்டது..

“இவன் மேலே கேர்ள்ஸூக்கு ஒரு கிரேஸ்… இவனும் பாக்குறதுக்கு ஹீரோ போலத்தான் இருந்து வைக்கிறான்..?”

“எனக்கொன்னும் தெரியலை..”

“உனக்கா தெரியாமலிருக்கும்..? அதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.. நீ ஒரு மார்க்கமாத்தாண்டி அலைகிற..”

“ஏய்ய்…”

“ஹை.. இப்படிச் சொன்னா நான் பயந்துடுவேனா..? அவன் கிட்ட ஒரு கவர்ச்சி இருக்குடி.. அதை நான் ஒப்புக் கிட்டுத்தான் ஆகனும்.. அவன் பெண்களை இம்ப்ரெஸ் பண்றதில கெட்டிக்காரன்..”

“அப்படியும் இருக்குமோ..”

தான்ய லட்சுமியின் மனம் அலை பாய்ந்தது.. தொடர்ந்து வந்த நாள்களில்.. மரத்தடி மேடையில் அவனைச் சந்திக்காமல் புறக்கணித்தாள்.. அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. ஒரு மழையில்லாத மாலைப் பொழுதில் அவன் வழி மறித்தான்..

“ஏய்ய்.. நில்லு..”

“என்ன..?”

அவன் முகம் பார்க்காமல் வேறு திக்கில் பார்த்தபடி கேள்வி கேட்டாள் தான்யலட்சுமி..

அவன் முகம் பார்க்க அவளுக்கு பயம்.. அவன் முகம் பார்த்தாள்.. அவள் அனலின் மீது பட்ட மெழுகாக உருகி கரைந்து விடுவாள்.. அவளது வைராக்கியம் உடைந்து நொறுங்கிச் சில்லுசில்லுhக ஆகிவிடும்..

அதைப் புரிந்து கொள்ளாத கண்ணன் ரௌத்திரம் கொண்டான்.. அவன் விழிகள் சிவந்தன..

“திமிராடி..”

முதன்முதலாக அவளை அவன் “டீ” போட்டு அழைத்தும் அவளது வைராக்கியத்தை மறந்து விட்டு.. விழி விரிய அவனைப் பார்த்தாள் தான்யா..

அந்தப் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவன் கைதானான்.. அவள் மேல் இருந்த கோபத்தீ.. மோகத்தீயாக எந்த கணத்தில் மாறியது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை..

அதுவரை அவளறியாத வார்த்தை.. அந்த “டீ” அந்த வார்த்தையில் வெகுவாக அவள் வசீகரிக்கப்பட்டாள்.. அவனின் அந்த ரௌத்திர அழைப்பில் தன்னை இழந்தாள் தான்யலட்சுமி..

அவளின் படபடக்கும் இமைகளைத் தாண்டிய பட்டாம் பூச்சி பார்வையில் எதைக் கண்டானோ.. கோகுலக் கண்ணன் பேச்சிழந்தவனாக அவள் முகத்தையே பார்த்தபடி நின்று விட்டான்…

இருவரும் எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ.. அவர்களுக்கே அது தெரியவில்லை..

“அம்மா..” என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தாள் தான்ய லட்சுமி..

மாணிக்கம் நின்றிருந்தான்..

அவள் போக வேண்டும் என்ற நினைப்பே அவள் மனதுக்கு துன்பத்தைக் கொடுத்தது.. அவனை விட்டு விலகிச் செல்ல முடியாமல் கால்களில் இரும்புக் குண்டு பிணைக்கப்பட்டு விட்டதைப் போல அவள் உணர்ந்தாள்..

“அம்மா..” மீண்டும் மாணிக்கம் அழைத்தான்..

‘இனி தாமதிக்க முடியாது..’ ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்து தலையசைத்து விட்டு.. காரை நோக்கிச் சென்றாள்.. தான்யலட்சுமி..

கார் நகர்ந்த போதுதான் அவள் அதைக் கவனித்தாள்.. அவன் நின்றிருந்த இடத்திலேயே அசையாமல் ஆணியடித்ததைப் போல நின்று கொண்டிருந்தான்..

‘அவனா.. அப்படி ஒரு இடத்தில் நிலை கொண்டு நிற்கிறான்..’ எதற்கும் அசையாத இரும்பு மனிதனை அசைத்து விட்ட கர்வத்தில் அவள் மனமும் அசைந்தது..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link