Chapter 14
அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்ட அரவிந்தனின் செய்கையில் மேல்தட்டு வர்த்தகத்திற்கே உரித்தான நாகரீகம் இருந்தது.. நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினான்.. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.. தான்யலட்சுமியின் மீது அவனுக்கிருந்த ஆர்வத்தை அவனது பார்வை வெளிப்படையாக பிரதிபலித்ததில் அவள் சங்கடத்துக்கு உள்ளானாள்..
“பர்ஸ்ட் இயர் கம்ப்ளீட் ஆகப் போகுதில்லையா..?”
“ம்ம்…”
“அடுத்து திரி அன் ஹாஃப் இயர்தானே..?”
அவனது வார்த்தைகளில் அவளது படிப்புக்கான கால அவகாசம் ஏன் கணக்கிடப்படுகிறது என்று புரியாமல் குழம்பிப் போனாள் தான்யலட்சுமி..
“ம்ம்…”
“படிப்பை கம்ப்ளீட் பண்ணிட்டுத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு கட்டாயம் எதுவுமில்லை..”
‘இதை எதற்காக இவன் சொல்கிறான்..’ என்ற அதீத கவலைக்கு ஆளானாள் தான்யலட்சுமி..
அவன் பேசியதற்கு “ம்ம்..” என்று கூட முணுமுணுக்காமல் மௌனம் சாதித்தபடி.. கண்ணுக்கு முன்னால் ஓடி மறைந்து கொண்டிருந்த சாலையைப் பார்த்தாள்..
“நீ அழகாய் இருக்க..”
திடீரென்று அவன் சொன்னதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவன் கண்களில் ரசனை தெரிந்தது.. அவள் மீதான ஆர்வத்தை வெளிப்படையாக காட்டுவதில் அவனுக்கு தயக்கம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை..
“ஸோ.. வாட்..?”
மெலிதான கோபத்துடன் அவள் வினவினாள்.. அரவிந்தன் வியப்புடன் அவளைப் பார்த்தான்.. அவள் வித்தியாசமானவள் என்று அவனுக்குத் தோன்றியது.. அவன் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் அவனிடம் வலிய வந்து பேசும் பெண்களில் அவன் மீதான ஆர்வமிருப்பதை அவன் அறிந்திருக்கிறான்..
இதைப் போன்ற வார்த்தைகளை அவன் வாயிலிருந்து கேட்டுவிட அந்தப் பெண்கள் தொடுக்கும் மறைமுகக் கேள்விகளைப் பற்றி இவள் அறிவாளா.. என்ற நினைவில் அவன் புன்னகைத்துக் கொண்டான்..
“இந்த டிரெஸ்ஸில் நீங்க அழகாயிருக்கீங்க…”
இப்படிச் சொன்ன பெண்கள் அதிகம்.. அதையே அவனும் திருப்பிச் சொல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் அவனைப் பார்ப்பார்கள்.. அவன் சொல்ல மாட்டான்.. அதனால் அவர்கள் முகத்தில் கவிழும் ஏமாற்றத்தின் திரையினை இப்போது அவன் நினைத்துப் பார்த்தான்..
இவளோ.. நீ அழகாக இருக்கிறாய்.. என்ற பாராட்டுக்கு “அதனால் என்ன..?” என்று வெகு இயல்பாக கேட்டு வைக்கிறாள்..
இந்த அவளின் இயல்பே அவனை ஈர்த்தது.. அவள் மீதான அவனின் ஆர்வமும் அதிகரித்தது..
“ஒரு பூ அழகாயிருந்தால் சொல்ல மாட்டோமா..?”
“அந்த பூவுக்கு வாயில்லைங்கிற தைரியம்தானே..?”
“பாராட்டுக்குக் கூட.. பூவானது புயலாய் மாறிவிடுமா..?”
“பாராட்டச் சொல்லி.. அந்தப் பூ உங்களிடம் கேட்டதா..?”
“சிலதை கேட்டுச் செய்யக் கூடாது தான்யா.. தானாய் அது வரனும்.. இப்ப என் மனசில் உன் மேல் காதல் வந்திருக்கிறதைப் போல..”
அவன் அவளைவிடவும் வெகு இயல்பாக காதலைச் சொல்லிவிட.. அவள் அதிர்ந்து போனாள்..
“வாட்..?”
அவளின் முகத்தில் தெரிந்த அதிர்வையும் அவன் ரசித்தான்.. காதல் சொன்னால் மகிழ்ந்து போகாமல் அதிர்ந்து போகும் அவளின் அந்த குணம் வெகுவாக அவனை வசீகரித்தது..
“ஏன்.. ஏன்.. எதற்காக இத்தனை அதிர்ச்சி..?”
“யார் சார் நீங்க..?”
“அரவிந்தன்.. உன் டாடிதான் சொன்னாரே.. மேக்னா குரூப் ஆப் கம்பெனிகளின் எம்.டி.”
“நீங்க யாரா வேணும்னாலும் இருந்துட்டு போங்க.. எனக்கு அதைப் பற்றி ஒன்னுமேயில்லை.. திடீர்ன்னு வந்து இப்படி காதல் சொன்னா.. அதிர்ந்து போகாம என்ன செய்வேன்னு நினைச்சீங்க..?”
“நான் திடீர்ன்னு உன்னைப் பார்க்கலை தான்யா.. உன் டாடி கூட போன மாதம் ஒரு மேரேஜூக்கு நீ வந்திருந்த இல்லையா..?”
“யெஸ்.. அது என் ஆண்ட்டி வீட்டு மேரேஜ்..”
“எனக்கு அவங்க சித்தி முறையாகனும்..”
“அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றீங்க..?”
“எதுவும் பண்ண வேண்டாம்.. என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டாப் போதும்..”
அவன் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியைப் போல அலட்டிக் கொள்ளாமல் குளிர்ச்சியாக சொன்ன விதத்தில் அவள் வெந்தே போனாள்..
“நான் இப்பத்தான் பர்ஸ்ட் இயரே கம்ப்ளீட் பண்ணப் போறேன்..”
“இருக்கட்டும்.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..?”
“அப்படின்னா..?”
“மேரேஜ் பண்ணிக்கிட்டு படியேன்.. யாரு வேண்டாம்ன்னு தடுப்பது..?”
‘அதைக்கூட நீ செய்வியா..?’ மனதிற்குள் வெகுண்டு போனாள் தான்யா லட்சுமி..
பெண்களின் சுதந்திரமும்.. உரிமையும்.. எந்த நொடியில் ஆண்களின் கைக்கு இடம் மாறுகின்றன என்ற விந்தை புரியாமல் அவள் கோபம் கொண்டாள்..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.