Chapter 22
கண்ணன் மும்பைக்கு பறந்து விட்டான்.. தான்யாவை தனிமை சூழ்ந்தது.. அவளைச் சுற்றியிருந்த மற்ற மாணவ.. மாணவிகளின் கலகலப்பான பேச்சுச் சப்தம் அவள் செவிகளை எட்டவே இல்லை.. சோர்ந்து போய் விட்டாள்.. இரண்டாம் வருடப் படிப்பை முடித்து.. மூன்றாம் வருடத்தில் அவள் அடியெடுத்து வைத்த போது.. கண்ணன் யு.எஸ்.ஏக்கு பறந்து விட்டான்..
“யு.எஸ்.ஏக்கு போகனும்டி..”
“போயிட்டு வாங்க..”
“இங்கே இருக்கும் போதாவது.. மாசத்துக்கு ஒரு தடவை உன்னைப் பார்க்க வருவேன்.. இப்போ அதுக்கும் வேட்டு வருது..”
“கொஞ்ச நாள்தானே கண்ணன்..”
“கொஞ்ச நாளா..? வருசம்டி.. நீ படிப்பை முடிக்காம கல்யாணம் பண்ணிக் மாட்டேன்னு அடம் பிடிக்கிற.. அதனாலதான் இந்த அவதி..”
“எப்படி கண்ணன்..? உங்க பேமிலி.. இருக்கிற சிச்சுவேஷனில் நானும் படிப்பை முடிக்காம உங்க வீட்டுக்கு வந்தா நல்லாயிருக்குமா..”
“அதுக்காக உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கனுமா..?”
“ஊஹூம்.. முதல்ல உங்க பேமிலியைக் கவனிங்க.. மாமாவோட கடனை அடைங்க.. சுவாதி ப்ளஸ் டூவுக்கு வந்திட்டா.. அடுத்த வருடம் அவளைக் காலேஜில் சேர்க்கனும்.. அதைப் பாருங்க..”
“நீ…”
“உங்களுக்காக காத்திருப்பேன்..”
தான்யா வாக்குக் கொடுத்தாள்.. அந்த வாக்கை நம்பி.. கண்ணன் நாடுவிட்டு நாடு பறந்தான்.. அவர்களின் காதல் அலை பேசியில் தொடர்ந்தது.. அவள் மூன்றாம் வருடப் படிப்பை முடித்து.. நான்காம் வருடத்தில் நுழைந்த போது கண்ணனின் தங்கை சுவாதியும்.. அதே கல்லூரியில் முதல் வருடத்தில் சேர்ந்தாள்..
“உங்க அண்ணன் ஃபைனல் இயல் படிச்சப்போ.. நான் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா இந்த காலேஜூக்குள்ள நுழைஞ்சேன்.. அவர் என்னை மழையில் நிக்க வைச்சு ராகிங் பண்ணினார் தெரியுமா..?”
கொட்டும் மழைநாளில் சுவாதியை வம்புக்கு இழுத்தாள் தான்யா.. அவள் தான்யாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்..
“ஆனா.. நீங்க என்னோட செல்ல அண்ணியாச்சே.. என்னையும் அதேபோல மழையில நிக்க வைக்க மாட்டிங்களே..”
“நினைச்சுக்கிட்டே இரு.. அண்ணியெல்லாம் இந்தக் காலேஜின் காம்பவுண்ட்டுக்கு வெளியிலதான்.. இங்கே நான் சீனியர்.. நீ ஜூனியர்..”
“அப்படியா..? நான் வேணும்னா கொட்ற மழையில நிற்கவா..?”
சுவாதி லேசாக மழைநீரில் கால் வைத்தற்கே தான்யா பதறிப் போனாள்..
“ஏய்ய் சுவாதி.. மழையில நனைஞ்சு வைக்காதே..”
“அஃது.. அந்த பயம் இருக்கில்ல.. அப்புறமும் எதுக்காக பிலிம் காட்டறீங்க அண்ணி..” சுவாதி தான்யாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்..
அவர்களுக்கிடையே அற்புதமானதொரு அன்யோன்யம் நிலவியது.. சுவாதியின் அண்ணி.. அண்ணியென்ற அழைப்பில்.. தன்னை கண்ணனின் மனைவியாகவே உணர்ந்தாள் தான்யா.. வாரத்திற்கு ஒரு முறை சுவாதியுடன் கண்ணனின் வீட்டிற்குப் போய்விடுவாள்..
“எனக்குச் சமையல் கத்துக்கொடுங்கத்தை..” என்று சமையலறையில் புகுந்து விடுவாள்..
“குக்கரை எடு.. அரிசி ஒரு பங்குன்னா.. தண்ணீர் இரண்டு பங்கு..”
அம்பிகாவும் அவளுக்கு கற்றுக் கொடுப்பாள்.. பேச்சுக்குக் கூட.. “உனக்கெதுக்குமா இதெல்லாம்.. நீயே கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணு..” என்று அவள் சொன்னதில்லை..
“நீ கண்ணனின் மனைவி.. என் மருமகள்.. இதையெல்லாம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்..” என்று சொல்லாமல் அவள் சொல்லிய விதத்தில் தான்ய லட்சுமி தன்னை அந்த வீட்டின் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டாள்..
அவர்கள் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.. அப்போதெல்லாம் சாமிநாதனும் அவர்களுடைய பேச்சில் கலந்து கொள்வார்.. எதைச் சொன்னாலும் “கண்ணனும் இதைத்தான் சொல்வான்..” என்று நினைவு கூர்வார்.. அவரால் கண்ணனை இழுக்காமல் எந்தப் பேச்சையும் பேச முடியாது… அவருடைய உலகம் கண்ணனை மையமாகக் கொண்டு சுழல்வதை தான்யாவினால் புரிந்து கொள்ள முடிந்தது..
அந்த வீட்டில் கண்ணனின் நினைவுகள் சூழ்ந்திருப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அந்தச் சூழலில் தன்னைக் கரைத்துக் கொள்வதின் மூலம் கண்ணனின் பிரிவைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை பெற்றாள் தான்யா..
அரவிந்தன் அடிக்கடி வர ஆரம்பித்தான்.. அவன் வரும் தினங்களில் எல்லாம் மாணிக்கத்திற்கு ஏதாவதொரு அவசர வேலை வந்தது.. அவளைக் கல்லூரியில் கொண்டு போய் விடும் பொறுப்பை அவன் எடுத்துக் கொண்டான்..
அப்போது அவளை அவன் பார்க்கும் பார்வையில் வெற்றிக்குறியீடு இருக்கும்..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.