Chapter 05

0Shares

“என் பிரண்ட்ன்னு யாரைச் சொல்கிற.. இதோ இருக்கானே.. இந்த சுந்தரையா சொல்கிற..?”

அஜய் சுந்தரைக் காண்பிக்க.. சுந்தர் கலவரமானான்..

“ஏய்ய்.. ஏண்டா என்னைக் கை காட்டுகிற.. என் ஆளுக்குத் தெரிந்தால் என்னைப் பிளந்து கட்டிடுவா..”

“பொறுடா.. பாப்பா யாரைக் கேட்டதுன்னு தெரிய வேண்டாமா..?”

அஜய் சுந்தரைச் சமாதானப் படுத்திக் கொண்டிருக் கையில்.. ஆர்த்தி ரோசத்துடன் குறுக்கிட்டாள்.

“என் பெயர் ஒன்றும் பாப்பா இல்லை..”

“தெரியுமே.. கே.ஆர்த்திதானே உன் பெயர்..?”

“நான் போகிறேன்..”

“பொறும்மா.. நீ எந்த ஃபிரண்டைக் கேட்கிறன்னு சொல்லிவிட்டுப் போ..”

“அவர்தான்..”

அவள் காலேஜின் சுவரைப் பார்த்துக் கொண்டே கபிலனின் பெயரைச் சொல்லத் திணற.. அஜய்.. புருவம் உயர்த்தினான்..

“ஏண்டா சுந்தர்.. ‘அவர்தான்’னு சொல்லிக்கிட்டே.. இந்தப் பொண்ணு.. சுவரைப் பார்க்குதே.. எவர்தாண்டா.. அந்த அவர்..?”

“ஒருவேளை.. நீ சொன்னது போல.. இந்தச் சுவராயிருக்குமோ..”

அவர்களின் கேலியைத் தாங்க முடியாமல் ஆர்த்திக்கு கண் கலங்கிவிட்டது.. அதைப் பார்த்த சுந்தர் மெதுவான குரலில் அவளிடம் வினவினான்..

“பெயரைச் சொல் ஆர்த்தி..”

“அவர்தான்.. கபிலன்..”

அதைச் சொல்வதற்குள் அவளுடைய முகம் வியர்த்துக் கொட்டி விட்டது..

“கபிலனா..?” என்ற வினாவோடு அஜய்யை சுந்தர் பார்க்க.. அவன் விழிகளிலும்.. அந்தக் கேள்வி மிதந்தது.. ஆர்த்தி கையிலிருந்த புத்தகக் கட்டை பற்றுக்கோல் போல் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..

“அவன் கிளாஸ் ரூமிற்கு போய் விட்டானேம்மா..” என்றான் அஜய்..

“போய் விட்டாரா..?” என்று கேட்ட ஆர்த்தியின் குரலில் ஏமாற்றம் பொங்கி வழிந்தது..

அவள் தளர்ந்த நடையோடு.. தன் வகுப்பறையை நாடிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே அஜய்.. சுந்தரின் பக்கம் திரும்பினான்..

“கடைசியில் ஆர்த்தியின் மனதிலிருப்பது கபிலன் தான் போல..”

“எனக்கும் அப்படித்தான் தோணுது…”

வகுப்பறையில் பாடம் கேட்டுக் கொண்டிருந்த கபிலனின் அருகே அமர்ந்த சுந்தர், அவனுடைய காதோரம் மெதுவான குரலில்..

“உன்னைத் தேடி.. ஆர்த்தி வந்தாள்..” என்றான்.. கபிலனின் கவனம் கலைந்தது.. அவன் முகத்தில் சலனம் தெரிந்தது..

“எப்போது..?” என்று கேட்டான்..

“இப்போதுதான்.. நீ வந்து ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் இருக்கும்.. அவன் உன் பெயரைச் சொல்லி.. என்னிடமும் அஜய்யிடமும் விசாரித்தாள்..”

கபிலனுக்கு வகுப்பறையில் இருப்புக் கொள்ள வில்லை.. அவன் மெதுவாக எழுந்து விரிவுரையாளரின் உரையிலிருந்து தப்பி.. வெளியே போனான்..

“எங்கே போகிறான்..?” என்று விசாரித்தார் விரிவுரையாளர்..

“கொடுத்து வைத்தவன் தப்பிப் பிழைக்க எங்கே யாவது போய்விட்டுப் போகிறான்.. நீங்க மாட்டிக்கிட்ட எங்களைக் கவனியுங்க சார்..” என்றான் அஜய்..

மதிய உணவு இடைவேளையில், வகுப்பறையை விட்டு வெளியே வந்த ஆர்த்தியின் கண்கள், சந்தோசத்தை வாங்கின.. தூரத்தில் கபிலன் வந்து கொண்டிருந்தான்..

ஓட்டமும்.. நடையுமாய்.. அவனுக்கு எதிரே போய் நின்றாள் ஆர்த்தி.. மூச்சு வாங்க.. அவனைப் பார்த்துச் சிரித்தாள்.. அவன் முகம் கடுகடு வென்று இருந்தது.. யாரையோ பார்ப்பது போல.. ஆர்த்தியை அறிமுகமற்ற பார்வை பார்த்தபடி அவன் நின்றான்..

“நான் உங்களைக் காலையிலேயே தேடி வந்தேன் தெரியுமா..?”

அவனுடைய முகச் சுளிப்பைக் கவனிக்காமல்.. ஆர்த்தி தன் போக்கில் சொன்னாள்..

“எங்கே தேடி வந்தாய்..?”

“நீங்களும் உங்க பிரண்ட்ஸும்.. வழக்கமாக உட்கார்ந்து கொண்டு கலாட்டா பண்ணிக்கொண்டிருப் பீங்க இல்ல.. அந்த மரத்தடிக்குத்தான் தேடி வந்தேன்..”

“எங்களைப் பார்த்தால் உனக்கு கலாட்டாக் காரர்கள் போல தெரிகிறதா..?”

கபிலன் கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும் ஆர்த்தி பயந்து போனாள்..

“தெரியாமல் சொல்லிவிட்டேன்.. ஸாரி..”

“ம்ஹூம்.. போனால் போகிறதுன்னு உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன்.. எதற்கு என்னைத் தேடி வந்த..?”

ஆர்த்திக்கு.. எப்படி அதைச் சொல்வது என்று தெரியவில்லை..

‘உன் புறக்கணிப்பு என்னைப் பாதித்து விட்டது.. உன் கோபத்தை நினைத்து.. எனக்குப் பசி தூக்கம் மறந்து போய் விட்டது.. உன் கடுமையான வார்த்தைகள் என் நிம்மதியைப் பறித்து விட்டது.. நீ சிரித்த முகத்துடன் என்னைப் பார்த்து ஒரு வார்த்தை இனிமையாகப் பேசி விட்டால் போதும்.. நான் இந்தத் துக்கத்திலிருந்து மீண்டு விடுவேன்..’

மனம் நினைத்ததை சொல்லும் வகை தெரியாமல் திணறினாள் ஆர்த்தி..

“அது வந்து..”

“அதுதான் வந்து விட்டாயே.. என்னோடு கேண்டீனுக்கு வருகிறாயா..?”

“கேண்டீனுக்கா..?”

“எதற்கு இந்த முழி முழிக்கிறாய்..? நான் நம்ம காலேஜ் கேண்டீனுக்குத்தானே கூப்பிட்டேன்..”

“அங்கே எதற்கு நாம போகணும்..?”

“சாப்பிடத்தான்.. வேறு எதற்கு..? எனக்குப் பசிக்கிறது..”

“நான் லஞ்ச் கொண்டு வந்து விட்டேனே..!”

“நான் கொண்டு வரவில்லையே..!”

“நீங்க போய் சாப்பிட்டுவிட்டு வாங்க.. நானும் லஞ்ச்சை முடித்து விட்டு உங்களுக்காக வெயிட் பண்ணுகிறேன்..”

கபிலன் கோபத்துடன் முறைக்கவும்.. ஆர்த்தியின் பேச்சு பாதியிலேயே நின்று விட்டது..

“எனக்காக நீயேன் வெயிட் பண்ண வேண்டும்..?”

“பேசத்தான்..”

“உன்னிடம் பேச.. எனக்கு என்ன இருக்கிறது..?”

கபிலன் கிளம்ப முனைய.. ஆர்த்தி அவசரமாய் அவனைத் தடுத்தாள்.

“ஆனால்.. நான் உங்களிடம் பேச வேண்டுமே..!”

“அப்படி நீ நினைத்தால் கேண்டீனுக்கு வந்து பேசு..”

கபிலன் கண்டிப்புடன் கூறிவிட்டு.. காலேஜ் கேண்டீனுக்கு சென்று விட்டான்.. ஒரமாய் இருந்த டேபிளின் முன்னால் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.. அவன் முன்னால் நிழலாடியது.. நிமிர்ந்து பார்த்தான்.. ஆர்த்தி தயக்கத்துடன் சற்ற முற்றும் பார்த்துக் கொண்டே.. அவன் முன்னால் அமர்ந்தாள்..

“எங்கே வந்தாய்..?”

“உங்களுடன் பேசத்தான்..”

கபிலன் பதில் சொல்லாமல் அவளையே உற்றுப் பார்த்தான்..

அவள் முகம் சிவக்க.. டேபிளின் மேல் விழுந்திருந்த தண்ணீரில் விரல் வைத்துக் கோலம் போட்டாள்..

கபிலன் எழுந்து சென்று.. இரண்ட பிளேட் பிரைட் ரைஸ் வாங்கிக் கொண்டு வந்து.. டேபிளின் மேல் வைத்தான் ஒன்றை அவள் முன்னால் நகர்த்தினான்..

“இந்தா.. சாப்பிடு..”

“எனக்கு வேண்டாம்..”

“இப்போது நீ சாப்பிடப் போகிறாயா.. இல்லையா..?”

“நான் லஞ்ச் கொண்டு வந்திருக்கிறேனே..”

“சொல்லிக் கொண்டே இருக்கிறாயே தவிர, உன் லஞ்ச் டப்பாவைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன்கிறாயே..”

ஆர்த்தி தயக்கத்துடன் தன் டிபன் டப்பாவைத் தூக்கி.. மேஜையின் மேல் வைத்தாள்.. அதைத் தன் பக்கம் இழுத்துக் கொண்ட கபிலன்,

“இதில என்ன இருக்கு..?” என்று வினவினான்..

“தயிர் சாதம்..”

“தொட்டுக்கொள்ள மாங்காய் ஊறுகாயா..?”

“எப்டிக் கண்டுபிடித்தீங்க..?”

ஆர்த்தியின் வியப்பைக் கண்டு கபிலனுக்கு சிரிப்புத்தான் வந்தது..

“சாப்பிடு..” என்றான் கனிவாக..

ஆர்த்தியின் மனக்கலக்கம் பறந்து விட்டது.. முதல் நாள் மாலையிலிருந்து அவள் நெஞ்சில் பாறாங்கல்லாய் ஏறிக் கொண்டிருந்த சுமை மறைந்து.. மனம் லேசானதை உணர்ந்தாள அவள்.. அவசரமாய் தன் முன் இருந்த பிரைட் ரைஸைச் சாப்பிட ஆரம்பித்தாள்.. ஊடே நிமிர்ந்து தன் மதிய டப்பாவைக் கவலையுடன் பார்த்துக் கொண்டாள்..

“என்ன..?”

“அம்மா கொடுத்த லஞ்ச்.. வேஸ்டாகப் போய்விடுமே..!”

“வேஸ்டாகாது.. நாம் ஷேர் பண்ணிக்கொள்ளலாம்..”

“அப்போ சரி..”

அவள் கவலை அகன்று விட்ட நிம்மதியுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.. கபிலன் அவள் முகத்தையே பார்த்தவாறு வினவினான்..

“இப்போ சொல்லு.. ஏன் என்னைத் தேடி வந்தாய்..?”

“நீங்க ஏன் நேற்றைக்கு ஈவினிங் கோபமா போனீங்க..?”

“உனக்கு ஏன்னு தெரியாதா..?”

“நான் முன்னே பின்னே ஜென்ட்ஸின் பக்கத்தில் உட்கார்ந்தது இல்லை..”

கபிலன் மீண்டும் முகம் கடுத்தான்.. தான் இப்போது எதைச் சொல்லித் தொலைத்தேம் என்று தெரியாமல் ஆர்த்தி குழம்பினாள்..

“நான் எதுவும் தப்பா சொல்லி விட்டேனா..?” பயத்துடன் கேட்டாள்..

“…..” கபிலன் பதில் பேசவில்லை..

“என்ன செய்தேன்னு சொன்னால்தானே தெரியும்..” ஆர்த்தி அழமாட்டாத குறையாய் கேட்டாள்..

‘நேற்றுப் போல் இன்றும் ஆகிவிடுமோ..’ என்ற பயம் அவளுக்கு.. ஒருநாள் இரவைக் கடப்பதற்குள் அவள் ஓய்ந்து போயிருந்தாள்.. இன்றும் அவன் கோபித்துக் கொண்டு விட்டால் அவளால் தாங்க முடியாதே..

“சொன்னால் நீ கேட்டுக் கொள்கிற பிறவியா..?”

‘இவன் என்ன சொல்லி.. நான் கேட்காமல் போய் விட்டேன்..?’ மீண்டும் குழம்பினாள் ஆர்த்தி..

அவனிடம் சந்தேகம் கேட்கலாமென்றால், அவன் முக்ததில் எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது..

ஆர்த்திக்கு அவன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.. அதே சமயம்.. அவனை விட்டுப் போகவும் அவளால் முடியவில்லை..

என்ன செய்வது என்று புரியாமல் மருண்ட பார்வையுடன் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link