Chapter 08

0Shares

கோவிலுக்குள் அவர்கள் இருவரும் காலடி வைத்த போது கோயில் மணியோசை கேட்டது..

“ஆர்த்தி…! பூஜை ஆரம்பமாகி விட்டது போல..”

ஆர்த்தி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்..

அவளின் செய்கை கபிலனுக்கு வியப்பைத் தந்தது.. அவன் விழிகளில் அதை உணர்ந்தவள், அழகாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்..

“நீங்கள் கோயிலுக்கு வந்ததே இல்லையா..?”

“இல்லை..”

“ஏன்..?”

“தோணலை.. வரவில்லை..”

“வந்திருக்கணும்.. வந்து சாமிகிட்டப் பேசியிருக்கணும்.. ‘ஏன் இப்படி எனக்குச் செய்தாய்..’ன்னு கேட்டிருக்கணும்..”

தீவிரமாய் தலையாட்டிப் பேசியவளைப் பார்க்கும் போது அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.. கடவுளை தினமும் நேரில் சந்தித்து அளவளாவுவதைப் போல அவள் உரிமையுடன் கூறியதை ரசித்தபடி அவன் கேட்டான்.

“பெரிய பெரிய ஞானிகள்.. சித்தர்கள் கூட இப்படிப் பேசியிருக்க மாட்டாங்க.. நீ அவங்களைவிட பெரிய ஆள் போல் பேசுகிறாயே..”

“த்சு.. ஞானிகள் சித்தர்கள் எல்லாம் தெய்வப் பிறவிகள்.. அவங்களோடு என்னை இணை சேர்த்துப் பேசக்கூடாது..”

“தினமும் கடவுளைப் பார்த்துப் பேசுவது போல நீ கொடுக்கும் ‘பில்ட் அப்’பைப் பார்த்தால் வேறு என்ன சொல்ல..?”

“கடவுளைப் பார்த்துப் பேசினேன்னு நான் உங்க கிட்டச் சொன்னேனா..?”

“ஏய்ய்.. காபி வித் அனு.. என்பது போல காபி வித் கடவுள்ன்னு நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு லெக்சர் கொடுத்த..?”

“கடவுளிடம் பேசணும்னு சொன்னேன்.. அவரை நேரில் பார்த்துப் பேசணும்னு சொன்னேனா..?”

“குழப்பத்துக்கு மறுபெயர் ஆர்த்தியா..?”

“அப்படியில்லை.. நீங்க உங்க பிரண்ட்ஸ்கிட்ட நட்பா பழகறீங்க இல்லையா..?”

“ஆமாம்..”

“அந்த நம்புங்கிற உணர்வை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீங்களா..?”

“ஆர்த்தி..”

“அதே போல்தான்.. பக்திங்கிறது ஒரு உணர்வு.. கடவுள்ங்கிறது ஒரு நம்பிக்கை.. மானசீகமாய் இந்தக் கோயிலில் உட்கார்ந்து கடவுளிடம் கேட்டுப் பாருங்கள்.. உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்..”

ஆர்த்தி சொன்ன விதம் கபிலனைக் கவர்ந்தது..

“நீ அடிக்கடி கோயிலுக்கு வருவாயா..?”

“ம்ம்.. பெருமாள் எனக்கு ஃபிரண்டு தெரியுமா..?”

“எந்தப் பெருமாளைச் சொல்கிற..? உன் கிளாஸ் மேட் பெருமாளைச் சொல்கிறாயா..?”

“ராமா.. அவனுடன் எல்லாம் நான் பேச்சே வைத்துக் கொள்ளமாட்டேன்.. நீங்க என்ன என்னை இப்படி யெல்லாம் கேள்வி கேட்கறீங்க..?”

“நீ தானே பெருமாள் உன் ஃபிரண்டுன்ன…?”

“ச்ச்.. நான் அந்தப் பெருமாளைச் சொல்லவில்லை.. இந்தக் கோயிலில் இருக்கும் வெங்கடாஜலபதி பெருமாளைச் சொன்னேன்..”

கடவுளை என்னவோ பக்கத்து வீட்டுக்காரர் போல அவள் கூற, அவளின் அறியாமை கலந்த அந்த பக்தியை மீண்டும் ரசித்தான் கபிலன்..

“நீ எந்தப் பெருமாளைச் சொல்கிறாய்ன்னு எனக்கென்ன தெரியும்..?”

“பெருமாள்ன்னா.. எனக்கு ஒருத்தர்தான்.. புரிந்ததா..?”

“புரிந்தது..”

அவன் பயந்தது போல கன்னத்தில் போட்டுக் கொண்டதைக் கண்டு மனம் விட்டுச் சிரித்தாள் ஆர்த்தி..

“இப்படியெல்லாம் நடிக்க எங்கே கத்துக்கிட்டிங்க..?”

“ம்ம்.. இதுக்குன்னு ஒரு இடத்தில் டியூசன் எடுக்கிறாங்க.. அங்கே போய் கத்துக்கிட்டேன்..”

சந்நிதானத்தில் நின்று பெருமாளை வணங்கினார்கள்.. தீபாராதனை காட்டப்படும்போது, ஆர்த்தி கண்மூடி எதையோ வேண்டிக் கொண்டிருந்தாள்..

“கற்பூர ஜோதியைத் தொட்டுக் கும்பிடுங்க..”

அவன் கையில் கிள்ளி.. முணுமுணுத்தாள்.. அவன் பழக்கமில்லாமல் செய்வதால் புதுமையான உணர்வுடன் கற்பூர ஜோதியைத் தொட்டு வணங்கினான்..

“குங்குமம் வாங்கிக்கங்க..”

வாங்கிக் கொண்டான்..

“துளசி தீர்த்தம் வாங்கிக்கங்க..”

குடித்து விட்டு தலையில் தெளித்துக் கொண்டான்..

“பெருமாள் பாதம் வருது.. தலையைக் குனிங்க..”

குனிந்தவன் அவன் தலையில் அர்ச்சகர் வைத்த சடாரியில் அவனுக்குள் ஏதோ ஒன்று பொங்கி எழுவதை உணர்ந்தான்..

‘இதுதான் ஆன்மிகமா..?’

அவனுக்குள் ஆச்சரியம் குமிழிட்டது..

“தாயாரைச் சேவிக்கலாம் வாங்க..”

கோயிலைச் சுற்றி ஆர்த்தியுடன் வலம் வந்த போது இதுபோல ஒரு மாலைப் பொழுதை இதற்கு முன் பார்த்ததில்லை என்று அவனுக்குத் தோன்றியது..

கோயிலில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தவர்கள்.. பட்டுச்சேலை சரசரக்க கடந்து போன பெண்கள்.. இங்கும் அங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் என்று அந்தச் சூழலே ஒரு விழாவை உணர்த்தியது.. உணர்ந்ததை ஆர்த்தியிடம் சொன்னான்.. அவள் அதற்கும் ஒரு விளக்கம் சொன்னாள்.

“கண்ணன் இருக்கும் இடத்தில் குதூகலமும் கோலாகலமும் நிறைந்துதானே இருக்கும்..”

கோயில் பிராகாரத்தில் அமர்ந்திருந்த போது ஆர்த்தி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

“என்ன ஆர்த்தி..”

“உங்களை முதன் முதலில் பார்த்தபோது நீங்கள் தைரியசாலி.. முரட்டுத்தனமான சுபாவம் உடையவர்.. கோபக்காரர் என்று மட்டும்தான் நான் நினைத்தேன்..”

“இப்போ அந்த நினைவு மாறிவிட்டதா..?”

“இல்லை.. கூடுதலாக.. கவனிக்க ஆளில்லாமல் இருக்கும் குழந்தைன்னு இப்போதுதான் தெரிந்தது..”

அவள் கண்களில் தாய்மை பொங்கி வழிந்தது.. உலகம் தெரியாத அறியாப் பெண் என்று அவனால் நினைக்கப்பட்டவள்.. ஒரு அன்னையாய் அவனைக் கருணைப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்..

“ஏய்ய்.. இது என்ன மாதிரியான பார்வை..?”

“தப்பாய் ஒன்னும் பார்க்கலையே..”

“தப்பாய் பார்த்தால் கூடத் தவறில்லை..”

“ச்சே.. என்ன மாதிரியான பேச்சு இது..”

ஆர்த்தி எழுந்து கொள்ளப் போனாள்.. கபிலன் அவள் கை பிடித்து உட்கார வைத்தான்.. அவள் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தான்.. அவன் பார்வையின் பொருள் புரியாதவளாய், அவள் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவன் விழிகளுக்குள் பதிலைத் தேடினாள்..

“பொறு ஆர்த்தி.. நான் உன்னுடன் பேசனும்…”

“பேசுங்க..”

கபிலன் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.. விரல்களை நீவி விட்டான்.. ஆர்த்திக்கு என்னவோ போல் இருந்தது.. கையை உருவிக் கொண்டாள்..

“ஏன்..?” அவன் குரலில் கோபம் இருந்தது..

“ப்ளீஸ்..” அவள் எப்போதும் போல இறைஞ்சும் குரலில் கேட்டாள்..

“இது.. இது இதைப்பற்றித்தான் நான் பேசணும்னு நினைக்கிறேன்.. அன்றைக்கும் இதுபோல் தான் ப்ளீஸ் போட்டாய்.. இன்றைக்கும் அதையே செய்கிறாய்.. எனக்கு ஒரு உண்மை தெரியணும்..”

‘இவன் இது போல சீரியஸாகப் பேசமாட்டானே..’

ஆர்த்திக்குள் ஏனோ ஒரு பதற்றம் வந்தது, கபிலன் பேசப் போவதை, அவள் மனம் யூகித்தது.. அவளது பயத்தை மெய்ப்பிப்பது போல.. அவன் தொடர்ந்து பேசினான்..

“உனக்கு என் மேல் இருக்கும் உணர்விற்குப் பெயர் என்ன ஆர்த்தி..?”

‘கேட்டே விட்டான்..’

எந்தக் கேள்வியை அவன் கேட்டுவிடக்கூடாது என்று ஆர்த்தி பயந்தாளோ.. அந்தக் கேள்வியை அவன் கேட்டே விட்டான்.. ஆர்த்திக்கு பதில் சொல்ல முடியாமல் நாவு உலர்ந்தது..

“புரியவில்லை..”

“உனக்கா புரியாது..? எனக்கும் அஜய்க்கும் இடையில் இருக்கும் உணர்விற்கு நட்பு என்று பெயர்.. உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இடையில் இருக்கும் உணர்விற்கு பாசம் என்று பெயர்.. எனக்கும் உனக்கும் இடையில் இருக்கும் இந்த உணர்விற்கு என்ன பெயர்..?”

“வேண்டாம்.. இதற்கு பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.. விட்டு விடுங்கள்..”

“இப்படியே எத்தனை நாள்கள் சொல்லித் தப்பிப்பாய்..? எனக்கு இன்றைக்கு ஒரு பதில் வேண்டும்..”

“என்ன பதிலைச் சொல்ல..?”

“உண்மையைச் சொல்லு.. உனக்கு என்மேல் இருப்பது காதலா.. இல்லை கருணையா..?”

ஆர்த்தி சற்று நேரம் யோசித்தாள்.. பின்னர் கபிலனின் முகத்தைப் பார்த்து தெளிவான குரலில் கூறினாள்..

“உங்களுக்கு யாருமில்லை என்பதற்காக உங்களின் வலிமை குறைந்து விட்டதாய் அர்த்தமில்லை.. கவனிக்க ஆளில்லாமல் இருக்கும் குழந்தைன்னு நான் உங்களைச் சொல்லலாம்.. ஆனால் நீங்கள் உங்களைச் சார்ந்திருக்கும் நண்பர்களையும் மற்றவர்களையும் காப்பாற்றும் வல்லமை படைத்தவர்.. அதனால் நான் உங்கள் மேல் கருணை காட்டவேயில்லை.. உங்களின் கருணையை எதிர்பார்த்துத் தான் இன்னும் இருக்கிறேன்..”

“அப்போ.. என்னை நீ காதலிக்கிறாயா..?” கண்கள் மின்ன கபிலன் வினவினான்..

“ஊஹூம்..” ஆர்த்தி நிர்த்தாட்சண்யமாக மறுத்தாள்..

“ஆர்த்தி..” கபிலனின் குரலில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது..

“இதுநாள்வரை நீ என்னுடன் பழகியது..?”

“நீங்கள் என்னை ரேகிங் பண்ண விடாமல் காப்பாற்றினீங்க.. பதிலுக்கு உங்களிடம் நான் தன்மையாகப் பழகினேன்…”

“தினேஷ் காரில் கூப்பிட்டபோது மறுத்து விட்டு, மழையில் நனைந்து கொண்டு என்னுடன் டூ வீலரில் வந்தது..?”

“நீங்கள் எனக்குப் பழக்கமானவர்.. தினேஷுடன் எனக்குப் பழக்கமில்லை.. கொட்டுகிற மழையில் பழகாதவருடன் எப்படி நான் காரில் போக முடியும்..?”

“நான் காய்ச்சலில் விழுந்த போது, உதவிக்கு ஓடி வந்தாயே..! கஞ்சி வைத்துக் கொடுத்து கவனித்துக் கொண்டாயே..!”

“யாரால் காய்ச்சலில் விழுந்தீங்க..? என்னால் காய்ச்சலில் விழுந்தீங்க.. எனக்கு ரெயின் கோட்டைக் கொடுத்துவிட்டு நனைந்து கொண்டே வண்டியை ஓட்டினீங்க.. பதிலுக்கு நான் உதவ வேண்டிய கடமை யிருந்தது செய்தேன்..”

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link