Chapter 17

0Shares

வேதவள்ளி கையில் காபி டிரேயோடு சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.. ஹாலில் கனகவேலின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கபிலனிடம் ஒரு கோப்பையை நீட்டிவிட்டு கனகவேலிடம் ஒன்றைக் கொடுத்தான்.. சற்றுத்தள்ளி நின்று கொண்டு அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்..

“சார்.. என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும்..”

“ம்ம்.. தெரியுமே..! ஆஷாவின் கல்யாணத்திற்கும் அனிதாவின் கல்யாணத்திற்கும் வந்திருந்தீங்களே.. ஆர்த்தியின் காலேஜ் மேட்டுன்னு சொன்னாளே.. உங்களுக்கு ஒன்று தெரியுமா..? ஆர்த்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் மாப்பிள்ளையும் உங்கள் காலேஜ்தான்.. உங்களுக்குக் கூடத் தெரிந்திருக்கலாம்.. தினேஷ்.. அவர்தான் ஆர்த்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவர்..”

கபிலன் தன் கை முஷ்டியை மடக்குவதைக் கவலையோடு பார்த்தாள் ஆர்த்தி.. கண்களால் அவனிடம் இறைஞ்சினாள்.. அவன் கொஞ்சம் மலையிறங்கினான்..

“நானும் அது விசயமாத்தான் உங்களிடம் பேச வந்திருக்கிறேன்..”

“பேசுங்க..”

கனகவேல் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.. அவருடைய கூரிய மூளை எதுவோ சரியில்லை என்று அவருக்கு அறிவுறுத்தியது.. ஆர்த்தி கபிலனின் அருகே அமர்ந்திருந்ததை அவரது புத்தி குறித்துக் கொண்டது..

“நான் ஆர்த்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன்..” கபிலன் நிதானமாகக் கூறினான்..

கனகவேல் முகம் மாறியது.. இதை ஆர்த்தியை வைத்துக் கொண்டு கபிலன் சொல்ல.. ஆர்த்தி கேட்டுக் கொள்கிறாளே என்று வியந்தார்..

‘தினேஷ் வேறு மாதிரி சொன்னாரே..’

“ஆர்த்திக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது கபிலன்..”

“நிச்சயம்தானே ஆகியிருக்கிறது..? கல்யாணம் இன்னும் நடந்து விடவில்லையே.. அது என்னைத் தவிர வேறு யாரோடும் அவளுக்கு நடக்காது..”

“ஏன் அப்படி.?”

“நாங்க ஒருத்தரையொருத்தர் காதலிக்கிறோம் சார்..”

“இதையே தான் தினேஷும் சொன்னார்..”

“அது உண்மையான்னு ஆர்த்திகிட்ட நீங்க கேட்டீங்களா..?”

கனகவேலுக்கு தன் தவறு உறைத்தது.. ‘ஆர்த்தி தன்னிடம் காதலைப் பற்றிப் பேச சங்கடப்பட்டுக் கொண்டு தினேஷின் மூலம் தூது விடுகிறாள் என்று தவறாகப் புரிந்துகொண்டு விட்டோமோ..’ என்று சஞ்சலம் கொண்டார் கனகவேல்..

“ஆர்த்தி.. இதெல்லாம் என்னம்மா..?” அவருடைய குரல் கண்டிப்புடன் வெளிவந்தது..

“அப்பா நான் இவரைத்தான் காதலிக்கிறேன்..” ஆர்த்தி பயந்த குரலில் சொன்னாள்..

கனகவேல் தாடையைத் தடவியபடி யோசித்தார்.. தினேஷின் பின்புலம் அவருக்குப் பிடித்திருந்தது.. பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு, வெளிநாட்டுக் கம்பெனியில் வேலை என்று எல்லா வகையிலும் அவன் கனகவேலுக்கு திருப்திகரமான மாப்பிள்ளையாக இருந்தான்..

“இப்போவந்து இதைச் சொல்லி என்ன பிரயோசனம்..? கல்யாண இன்விடேசன் கூட அடித்தாகி விட்டது.. இனி இதை மாற்ற முடியாது.. ஐ ஆம் ஸாரி மிஸ்டர் கபிலன்..”

“சார்.. பொறுங்க.. இது உங்க பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது..”

“அதைத்தான் நானும் சொல்கிறேன்.. இது என் பெண்ணின் வாழ்க்கை.. உங்களைப் பற்றி ஆர்த்தி சொல்லியிருக்கிறாள்.. நீங்கள் அநாதையாமே..? உழைத்து முன்னேறிக் கொண்டிருப்பவராமே..? தினேஷ் அப்படி யில்லையே.. பாருங்க கபிலன்.. என் பெரிய பெண் அமெரிக்காவில் இருக்கிறாள்.. இரண்டாவது பெண் கனடாவில் இருக்கிறாள்.. அதைப்போல என் கடைசிப் பெண்ணையும் வெளிநாட்டில் கட்டிக் கொடுக்கவே நான் ஆசைப்பட்டேன்.. தினேஷ் நியூயார்க்கில் வேலை பார்க்கிறார்.. இந்தச் சம்பந்தம் நான் விரும்பிச் செய்து கொள்ளப் போவது.. இதை நிறுத்த முடியாது..”

கனகவேல் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கபிலன் ரௌத்ரமானான்.. எழுந்து கனகவேல் முன்னால் நின்று கர்ஜித்தான்..

“யோவ்.. உன் பொண்ணுக்கு என்னைத்தான் பிடித்திருக்கிறது.. பொறுமையாய் சின்னப் புள்ளைக்கு சொல்வது போல சொல்லிக்கொண்டிருக்கிறேன்… நீ பிடிவாதமாய் நீ பிடித்த முயலுக்கு ஒத்தைக் காலுங்கிற.. இப்ப என்னதான் சொல்கிற..?”

ஆர்த்தி பயந்து விட்டாள்.. வேதவள்ளி பதறிப் போய் கணவனை.. கபிலன் ஏதாவது செய்து விடுவானோ என்று அவர் அருகே ஓட.. ஆர்த்தி கை கூப்பிக் கொண்டு கபிலனை மறித்து நின்றாள்.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

“வேண்டாம்.. விட்டு விடுங்கள்..”

“எதைவிடச் சொல்கிறாய்..? உன்னையா..?”

“போய் விடுங்கள்..”

“உன்னை விட்டுப் போகச் சொல்கிறாயா..?”

ஆர்த்தி அசையாமல் மௌனமாக நின்றாள்.. கபிலன் உதைத்த வேகத்தில் டீப்பாய் சுவரில் மோதிக் கவிழ… அதிலிருந்த காலி காபிக் கோப்பை விழுந்து நொறுங்கியது..

“உன் அப்பனுக்கு பணமோகம் பிடிக்கவில்லை.. உனக்குத்தான் பிடித்திருக்கிறது.. வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்தவுடன் எனக்கு டாட்டா சொல்லத் தயாராகி விட்டாய் சே..”

கபிலன் வெளியேறி விட்டான்.. கடற்கரையில் காரை நிறுத்திவிட்டு கால்போன போக்கில் நீரோரமாய் நடந்தான்.. அலைகடலாய் அவன் மனம் ஆர்ப்பரித்தது..

இதே தினேஷிடமிருந்து அவனைக் காப்பாற்ற ஆர்த்தி அவன் கால்பிடித்துக் கதறியது நினைவில் ஆடியது.. சாவியைக் கொடுக்க மறுத்து அவள் போராடியதையும் அதற்குப் பின் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தவனின் நெஞ்சம் குமுறியது..

‘போய் விடுங்கன்னு சொல்லி விட்டாளே..’

அவன் மனம் வலித்தது..

ரணம் ஆறாத மனத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான்.. கார் பார்க்கிங்கில், காரை நிறுத்தி விட்டு இறங்கி லிப்டில் ஏறி அவனது அபார்ட்மெண்டின் வாசலை அடைந்தவன் அசையாமல் நின்று விட்டான்..

கையில் பெட்டியோடு வாசலில் அவனுக்காகக் காத்திருந்தாள் ஆர்த்தி..

“ஆர்த்தி…!” 

“முதலில் கதவைத் திறங்க..”

அவளுடைய அதட்டலுக்கு ஆனந்தமாகக் கீழ் படிந்தான். அவளது பெட்டியைத் தூக்கிக் கொண்டான்..

“உள்ளே வா..”

கதவை மூடிவிட்டு அவள் முகம் பார்த்தான்.. அவள் விழிகலங்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.. தன்மேல் தளிர்க்கொடி போல் படர்ந்தவளின் முதுகை வளைத்தன கபிலனின் கரங்கள்..

“சண்டையை விட்டு விடுங்கன்னு சொன்னேன்.. என்னை விட்டு விடச் சொல்லவில்லை.. இப்போதைக்குப் பேசவேண்டாம்.. போய் விடுங்கன்னு சொன்னேன்.. என்னை விட்டுப் போகச் சொல்ல வில்லை.. நீங்கள் என்னை விட்டாலும் நான் உங்களை விடமாட்டேன்.. நிழல் போல் தொடர்ந்து வருவேன்.. இது உங்களுக்கு ஏன் தெரியவில்லை..?”

அந்தத் திருமண மண்டபம் நிறைந்திருந்தது.. ஆர்த்தியின் போனைக் கேட்டதும், பறந்து கொண்டு வந்த ஆஷாவும், அனிதாவும் கனகவேலை பிடிபிடியென்று பிடித்து சண்டைபோட.. அவர் மலை இறங்கினார்.. கபிலனைத் தேடிவந்து திருமணத் தேதியை முடிவு செய்தார்..

“நாங்க இருக்கோம்டி.. வீட்டுக்கு வா.. கபிலன் முறைப்படி உன் கழுத்தில் தாலிகட்டி கூப்பிட்டுக் கொண்டு போகட்டும்..” என்று ஆஷாவும் அனிதாவும் தைரியம் கொடுக்கவும், ஆர்த்தி வீட்டிற்குத் திரும்பினாள்..

கெட்டிமேளம் கொட்ட.. கபிலன் தாலியை எடுத்து ஆர்த்தியின் கழுத்தில் கட்டினான்.. புயலிடம் காதல் கொண்ட பூ.. விருப்பத்துடன் தன் வாழ்க்கையை ஆரம்பித்தது..

– முற்றும் –

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link