Chapter 04
எந்த ரகுநந்தனைப் பற்றிய நினைவில்.. ரத்தம் கொதி..கொதிக்க.. இடியாப்பத்தை சாப்பிட வேண்டும் என்பதை மறந்து.. அதில் சந்தியா கோலம் போட்டுக் கொண்டிருந்தாளோ.. அந்த ரகுநந்தனைப் பற்றி அவளைப் பெற்ற தந்தையே மகாப் பெருமையாகப் பேசியதில் சந்தியாவுக்கு கோபம் வந்துவிட்டது…
“உங்களுக்கு அந்த ரகுநந்தன் யார்ன்னு தெரியுமாப்பா..?” என்று கோபத்துடன் கேட்டாள்..
அதற்கு கல்யாணராமன் பதில் சொல்வதற்குள் சுதர்சன் முந்திக்கொண்டு சந்தியாவை நோக்கி கை நீட்டிச் சிரித்தான்…
“பார்த்தீங்களாப்பா.. தத்தின்னு சொன்னா மட்டும் இவளுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சே… இப்பப் பார்த்தீங்களா.. கைப் புள்ளைக்குக் கூட ரகுநந்தன்னா யாருன்னு தெரியறப்ப.. வாய் கிழியப் பேசற
இவளுக்கு அவர் யாருன்னு தெரியலை.. மண்டையிலே ஏதுமில்லைப்பா.. இது மேல்மாடி காலி கேஸ்..”
“அடேய் அண்ணா.. எனக்கு மேல்மாடி காலியாவே இருக்கட்டும்.. உன் மேல்மாடியில் செங்கலும்.. சிமிண்டுமா நிரம்பியே இருக்கட்டும்.. அந்த ரகுநந்தன் என்ன பெரிய இவனா..? அவனைத் தெரிந்துக்கலைன்னா எனக்கு மேல்மாடி காலின்னு அர்த்தமாகுமா..? அவனைத் தெரிந்து வைத்துக்கிட்டுத்தான் என் மேல் மாடி நிரம்பி வழியனும்னா.. அதுக்கு அது காலியாவே இருந்துடறது பெட்டர்.. ரகுநந்தனாம்.. ரகுநந்தன்…”
முகம் சிவக்கப் பேசிய மகளை கூர்ந்து பார்த்தார் கல்யாணராமன்..
‘ரகுநந்தன் பெயரைச் சொன்னால்.. இவளுக்கு எதற்காக இப்படிக் கோபம் கொந்தளிக்கிறது..?’
அவர் புருவங்களை உயர்த்தினார்..
“உனக்கு அந்த ரகுநந்தனைத் தெரியுமா சந்தியா..?”
“அது தெரியாமத்தானே அவர் யாருன்னு இவ உங்க கிட்டக் கேட்டாப்பா.. அதுக்குள்ள அதை மறந்துட்டிங்களா..? என்ன ஆச்சு..? இவ காத்து உங்க மேலயும் அடிச்சிருச்சா..?”
“சும்மா இரு சுதர்சனா.. சொல்லும்மா.. உனக்கு அந்த ரகுநந்தனைத் தெரியுமா..?”
“நல்லவேளை.. தெரிஞ்சுக்கலை..”
“அப்புறம் எதுக்கும்மா.. தெரியாத ஒருத்தங்களைப் பத்தி இவ்வளவு வெறுப்பாப் பேசற..? நீ இப்படிப் பேசற பெண்ணில்லையே…”
“ஏன்னா.. அவன் வெறுக்க வேண்டியவன்.. என்ன மாதிரியான மனுசன் அவன்னு உங்களுக்குத் தெரியுமாப்பா..? அவன் நினைத்தது கிடைக்கனும்னா அவன் என்ன வேணும்னாலும் செய்வான்.. சீட்டிங் பெர்ஸனாலிட்டி..”
வெறுப்புடன் முகம் சுளித்தபடி சந்தியா பேசிக் கொண்டே போனாள்.. அவள் முகத்தில் தெரிந்த வெறுப்பின் அலைகளை வித்தியாசமாய் பார்த்த சுதர்சன் தோள்களைக் குலுக்க.. கல்யாணராமன்..
“சந்தியா..” என்று அதட்டினார்..
“அப்பா..?”
“அவர் எவ்வளவு பெரிய வி.ஐ.பி ன்னு உனக்குத் தெரியுமா..? அவர் பெயரைச் சொல்ற சின்னப்புள்ள கூட மரியாதையாய்த்தான் அவர் பெயரைச் சொல்லும்.. அப்படிப் பட்ட மனுசனைப் பார்த்து நீ என்னென்னவோ பேசறியே.. வாட்’ஸ் ராங் வித் யு..?”
“அப்பா..”
“பேசாதே.. இதே பேச்சுத்தானே நாலுபேர் மத்தியிலும் வரும்..? என்ன ஜானு.. இவ என்ன இப்படிப் பேசிப் பழகறா..?”
“நான் விசாரிக்கறேன்…”
“அந்த மனுசன் என் பேங்கிலயும் ஒரு அக்கவுண்டை வைச்சிருக்கிறதாலேதான் நான் டெபாசிட்டைப் பத்தின டென்சனில்லாம வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.. பேங்கைப் பத்தி இவளுக்கென்ன தெரியும்..? இயர் எண்டு கணக்கு முடிகிறதுக்குள்ள மனுசன் ஒரு வழியாகிருவான்.. அதைப் புரிஞ்சு பேசறாளா இவ..?”
கல்யாணராமன் கோபத்துடன் பேசிவிட்டு கை கழுவச் சென்று விட்டார்.. சுதர்சனின் முகத்தில் கேலிப் புன்னகை தவழ்ந்தது…
“என்னைக்கும் போல இன்னைக்கும் உன்னை அப்பா செல்லம் கொஞ்சுவார்ன்னு தானே நினைச்ச..? அந்த ரகுநந்தனின் பெயரைக் கேட்டா.. வீட்டில இருந்தாக்கூட அப்பா எழுந்து நின்னுக்குவார்.. அவ்வளவு பய பக்தி.. அந்த ஆளைப் போயி வாய்க்கு வந்தபடி நீ பேசினா.. கொஞ்சுவார்ன்னு நினைச்சியா..?”
“நீ கொட்டிக்கிட்டயில்ல..?”
“அதெல்லாம் ஆச்சு.. என்னையென்ன.. உன்னைப் போலன்னு நினைச்சியா..? இடியாப்பமே நூல்.. நூலா.. கோலம் போட்டதைப் போலத்தான் பிண்ணி பிணைஞ்சி கிடக்கு.. நீ அதில போய் கோலம் போட்டுட்டு சாப்பிடாம வெட்டி வியாக்கினம் பேசி அப்பாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டா நானும் அப்படித்தான் இருப்பேனா..?”
“இல்லேல்ல.. அப்ப நடையைக் கட்டு..”
“உன்னையெல்லாம் திருத்த முடியாது..”
“அதை நான் சொல்லனும்.. நீ சொல்லக் கூடாது..”
“போடி போ…”
சுதர்சனமும் எழுந்து சென்று விட்டான்.. டைனிங் டேபிளில் வருத்தமான முகத்துடன் அமர்ந்திருந்த மகளை இரக்கத்துடன் பார்த்தாள் ஜானகி.. சந்தியாவின் கண்கள் கலங்கியிருந்தன…
“விடுடா.. அப்பாதானே பேசினார்..?”
“அதுக்கில்லைம்மா.. அவனைப் போல ஒரு ஆளுக்கு பரிஞ்சு பேசிக்கிட்டு அப்பா என்னிடம் கோவிச்சுக் கிட்டாரே.. அதைத்தான்ம்மா என்னால தாங்க முடியலை..”
“ஏய்ய்.. உனக்கும் அந்த ரகுநந்தனுக்கும் இடையில என்னடி பிரச்னை..?”
தாயின் அதட்டலில் விழித்தாள் சந்தியா…
‘இல்லையே.. அப்படியெதுவும் இல்லையே.. ஆனால்..’
மகளின் பார்வையில் எதைக் கண்டாளோ.. ஜானகியின் புருவங்கள் முடிச்சிட்டன.. அவள் மகளுக்கு அருகில் நெருங்கி அமர்ந்து அவளின் தலைமுடியைக் கோதினாள்..
“என்னடா பிரச்னை..?”
“அம்மா..”
சந்தியா மனதிலிருந்ததை கொட்டி விட்டாள்.. பொறுமையாகக் கேட்ட ஜானகியின் முகத்தில் யோசனை வந்தது.. மகள் தோழியின் நிலையை எண்ணி வருந்துவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..
‘அதற்காக தோழியின் எதிரியை இவளும் எதிரியாய் நினைக்கலாமா..?’
கல்யாணராமன் நினைத்ததைப் போலவே ‘இது நல்லதுக்கில்லையே..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஜானகி..
“சந்தியாம்மா.. இதில அந்த ரகுநந்தன் மேலே எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தோணலையே..” என்றாள் அவள்..
“என்னம்மா நீங்க.. கோடிக்கணக்கில பெறுமானமுள்ள வீடும்மா… இன்னைக்கு அந்தவீடு அவர்களுக்குச் சொந்தமில்லாம போயிருச்சு.. இதைச் செய்தவன் மேலே தப்பில்லைன்னா சொல்கிறிங்க..?”
“நான் அப்படிச் சொல்லலைடா.. அந்த புராப்பர்டி மேல ஆசைவந்ததும் ரகுநந்தன் அதுக்குச் சொந்தக்காரங்க கிட்ட விலை பேசினாரா இல்லையா..?”
“ம்மா.. அது புராப்பர்ட்டி இல்ல.. வீடு..”
“சரி.. சரி.. நீ சொல்றபடி வீடுன்னே வைச்சுக்கலாம்.”
“வீடுன்னு வைச்சுக்க வேணாம்.. அது வீடுதான்..”
“சரி.. வீடுதான்.. அந்த வீட்டைப் போல இன்னொரு வீட்டை வாங்கித் தந்து.. அந்த வீட்டுக்கான பணத்தையும் அவர் கொடுக்கிறேன்னு சொன்னாரா.. இல்லையா..?”
“வேற எந்த வீடும்.. அவங்களோட அந்த வீட்டுக்கு இணையாகுமா அம்மா..?”
“சில நேரங்களில் செண்டிமென்ட்ஸைப் பார்க்கக் கூடாதுடா கண்ணம்மா…”
“ம்மா.. நீங்களா இதைச் சொல்கிறிங்க..”
மகளின் கண்களில் தெரிந்த அதிர்ச்சியில் உதட்டைக் கடித்துக் கொண்டாள் ஜானகி.. எப்படிச் சொல்லி மகளுக்கு புரிய வைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை.. அதற்காக மகள் பேசும் போக்கிலேயே பேசி.. அந்த ரகுநந்தனின் மீது மனதுக்குள் பகை உணர்வை அவள் வளர்த்துக் கொள்வதை.. வளர விடவும் அவளுக்கு விருப்பமில்லை…
‘எதுக்கு வம்பு..? அவர் சொல்கிறதைப் போல.. இதே நாக்குத்தானே நாலு பேர் மத்தியில அந்த ரகுநந்தனைப் பற்றித் தப்பாப் பேசி வைக்கும்..? இது தேவையா..?’
அதனால் மகளின் பார்வையை சட்டை செய்யாமல் தன் மனதுக்குப்பட்ட நியாயத்தை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க முயன்றாள் ஜானகி..
“நான் உன் பிரண்டை குறை சொல்லலைம்மா.. நாட்டு நடப்பைச் சொன்னேன்.. அவளுக்குப் பெரிதாக தோன்றும் ஒன்று.. எதிராளிக்குச் சாதாரணமாகத் தோன்றலாமில்லையா..?”
“அம்மா… அது அவளுடைய சொத்தும்மா… அதை அவள் பெரிதாகவும் நினைப்பாள்.. சிறிதாகவும் நினைப்பாள்.. அது அவளுடைய இஷ்டம்.. இதில அவன் நினைக்க என்ன இருக்கு..?”
என்ன சொன்னாலும் சந்தியா ரகுநந்தனை எதிரியாக நினைப்பதை நிறுத்த மாட்டாள் என்று தோன்றிவிட.. ஜானகிக்கு தலைவேதனையாக இருந்தது…
‘இப்படியா ஊரார் வீட்டுப் பகையை இவள் உள்வீடு வரைக்கும் கொண்டு வருவாள்…’
தான் பிள்ளையைப் பெற்றுப் பெயர் வைத்து வளர்த்த நேரம் சரியில்லையென்று நினைத்துக் கொண்டாள் ஜானகி…
“விடும்மா… உன் பிரண்டை நினைத்தாலும் கவலையாகத்தான் இருக்கிறது.. என்ன செய்கிறது..? அவள் தலைவிதி இப்படியாகி விட்டது.. நம்மாலே என்ன செய்ய முடியும்..? நாம போய் சொன்னா மட்டும் அவன் அப்படியா.. சரிசரின்னு கேட்டுக்கப் போகிறானா..? நீ போய் தூங்கு..”
எதையாவது சொல்லி வைத்து அந்தப் பேச்சை அப்படியே முடித்துவிட வேண்டும் என்பதற்காக ஜானகி பேசி வைக்க.. சந்தியாவின் கண்கள் மின்னின.. அந்த மின்னலைக் கவனிக்காமல் எழுந்து போய் விட்டாள் ஜானகி..
அவளுக்குத் தெரியாது… அவள் சொன்ன வார்த்தையைப் பிடித்துக் கொண்டு மறுநாள் சந்தியா அந்த ரகுநந்தனைத் தேடிப் போய் பார்க்கப் போகிறாள் என்பது..
அதனால் விளையப் போகும் விபரீதங்களைப் பற்றி அறியாமல் ஜானகி நிம்மதியாக உறங்கப் போய் விட்டாள்..
கம்யூட்டரின் சின்னத் திரையை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்த ரகுநந்தன் தொலைபேசியின் அழைப்பில் கவனம் கலைந்து அதை எடுத்து காதுக்கு கொடுத்தான்..
“சார்.. உங்களைப் பார்க்க யங்லேடி ஒருத்தங்க வந்திருக்காங்க…” என்றாள் அவனது செகரட்டரி ஜெனிஃபர்..
“ஹீ இஸ் ஷி…?”
“அடையாறு பிரான்ச் பேங்க் மேனேஜரோட டாட்டராம் சார்.. உங்களுக்கு அவங்க டாடியைத் தெரியும்ன்னு சொல்கிறாங்க..”
ரகுநந்தனின் புருவங்கள் உயர்ந்தன.. அந்த வங்கிக் கிளையின் மேலாளர் யார் என்று யோசித்தான்.. கூப்பிய கரங்களுடன் கல்யாணராமன் அவன் நினைவுக்கு வந்தார்..
‘அவரோட டாட்டர் என்னை எதுக்காக பார்க்க வந்திருக்கிறா…?’ யோசனையுடன்..
“வரச்சொல்லுங்க..” என்றான்..
அறையின் கதவை ஒற்றை விரல் தட்டும் ஒலியைக் கேட்டதும் நிமிர்ந்து பார்க்காமல்..
“யெஸ்..” என்றான்..
அறையில் நுழைந்தவள்.. அவன் உட்காரச் சொல்வானா என்று பொறுமை காத்துப் பார்த்தாள்.. அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. அவளை உட்காரவும் சொல்ல வில்லை..
‘திமிர்..’ மனதுக்குள் பல்லைக் கடித்தபடி..
“ஐ ஆம் சந்தியா..” என்றாள்..
“ஊஹீம்..?” அவன் நிமிர்ந்து பார்த்தான்..
எதிரில் நின்றவளின் முகத்தில் தெரிந்த கோபத்தில் அவன் புருவங்கள் சுருங்கின.. அவளைக் காலோடு தலைவரை அளவெடுப்பதைப் போல பார்த்து வைத்தவனின் மனதில்..
‘அழகாகத்தான் இருக்கிறா..’ என்று தோன்றியது…
“எங்கப்பா அடையாறு பேங்கில் மேனேஜரா இருக்கிறார்..”
“அதனால்தான் உன்னை உள்ளே அலோவ் பண்ணியிருக்கிறேன்..” மிதப்பாக அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு கோபம்.. கோபமாக வந்தது…
”உன்னை’யாமில்ல.. வா.. போன்னு பேசறான்.. எல்லாம் பணத்திமிர்.. மரியாதை கொடுக்கத் தெரியாதவன்..’
அவள் மனதுக்குள் பொரிந்து கொண்டிருக்க.. அவன் அவளை உட்காரச் சொல்லாமல் புருவங்களை உயர்த்திக் கேட்டான்..
“என்ன வேணும்..? வேலை தேடி வந்திருக்கிறயா..?”
யாருக்கு வேணும் உன் வேலை என்று சொல்லத் தோன்றியது சந்தியாவிற்கு.. இருந்திருந்து இவனிடம் வேலை பார்க்கத்தான் அவள் தவமிருக்கிறாளா..?
“நான் இன்னும் படிப்பையே முடிக்கலை..”
“என்ன படிக்கிற..?”
அப்போதும் ‘உட்கார்’ என்று சொல்லாமல் அவளை நிற்க வைத்தே அவன் பேசிய விதத்தில் அவளுடைய சுயமரியாதை கொந்தளித்தது…
“பி.காம் ஃபைனல் இயர்..” பல்லைக் கடித்தபடி சொன்னாள்…
‘இவன் விசாரணைக்கு பதில் சொல்லத்தான் நான் வந்தேனா..?’
“ஓ.. எல்லோரும் சாப்ட்வேர் இன்ஜினியர்ன்னு ஓடறாங்க.. நீ என்னடான்னா பி.காம் படிக்கிற..?”
“சி.ஏ படிக்க ஆசை..”
“ம்ம்ம்… அப்பா பேங்க் மேனேஜரில்ல… அக்கவுண்ட்ஸைத்தான் சூஸ் பண்ணியிருப்பார்.. ஓகே.. லீவ் தட் மேட்டர்.. என்னைப் பார்க்க எதுக்கு வந்த..? வாட்டு யு வான்ட்..?”
“அதை உட்கார்ந்து சொல்லாமில்லையா.?”
அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவன் முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்தவளைப் பார்த்தவனின் கண்களில் வியப்புத் தெரிந்தது..
‘இவள் கல்யாண ராமனின் டாட்டரா..? நம்பவே முடியலை…’
வாகாக சோபாவில் சாய்ந்து கொண்டவளிடம் தெரிந்த வசீகரத்தை அவன் ரசித்தான்.. இளமை தவளும் அவள் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனத்துடன் கூடிய தேவதையின் பொழிவில் அவன் வேலைகளை மறந்து அவளை ஊன்றிப் பார்க்க ஆரம்பித்து விட்டான்..
“எனக்கொரு பிரண்ட் இருக்கா..?”
“வாட்..?”
அவன் வியப்பு அதிகரித்தது.. ஒவ்வொரு வினாடி களையும் பணம் பண்ணும் ஒருவன் முன்னால் சட்டமாக அமர்ந்து கொண்டு தனது கல்லூரித் தோழியைப் பற்றிக் கதை சொல்லும் அந்தக் கல்லூரிமாணவியின் குழந்தைத் தனமான செயல்பாட்டில் அவன் ஈர்க்கப்பட்டான்…
‘நான் யாரென்று இவளுக்குத் தெரியுமா..? என் உயரம் எதுவென்று இவள் அறிவாளா..?’ அவன் நெஞ்சில் கேள்வி எழுந்தது..
எதையும் அறியாதவளாக அவள் இருந்ததில்.. அவள் மீதான அவனது ஆர்வம் அதிகமானது..
“அவ பெயர் கல்பனா..”
“ஓ.. அவளுக்கு எதுவும் பிரச்னையா..? அதுக்கு உதவி கேட்டுத்தான் என்னிடம் வந்தாயா..?”
“உங்களால்தான் அவளுக்குப் பிரச்னை.. இதில் நீங்க அவளுக்கு என்ன உதவி செய்து கிழிக்கப் போகிறிங்க..?”
ரகுநந்தனின் முகம் மாறியது.. இது போன்ற வார்த்தைகளை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்க வில்லையென்பதை அவனது கடினப்பட்ட முகம் கூறியது..
“என்ன சொல்ற..?” கடுமையாக அவன் கேட்டான்..
“யெஸ்.. அவ குடியிருக்கிற வீட்டை பிளான் பண்ணி நீங்க அபேஸ் பண்ணப் பார்க்கறிங்களாமே.. உங்களுக்கு ஏன் சார் இந்தப் புத்தி..? அதான்.. கோடிக்கணக்கில உங்க கிட்ட பணம் கொட்டிக்கிடக்கே.. இதில அவ வீட்டு மேல ஏன் கண் வைக்கறிங்க..? அதைத்தவிர வேறு சொத்து அவளுக்கில்லை சார்..”
“எனஃப்.. ஐ ஸே ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…”
“நீங்க செய்கிறதெல்லாம் சென்ஸிபிளாவா இருக்கு..?”
“ஷட் அப்.. உன்னை சிறு பெண்ணுன்னு நினைத்தா.. நீ என்னென்னவோ பேசற..? யார் அந்த கல்பனா..?”
“கல்பணாவை உங்களுக்குத் தெரிந்திருக்காது.. அவ அப்பா மந்திரமூர்த்தியை உங்களுக்குத் தெரிந்திருக்கனுமே சார்.. வெறும் மந்திரமூர்த்தியில்ல.. மவுண்ட் ரோட்டில
வீடு வைத்திருக்கிற மந்திரமூர்த்தி.. இப்ப நினைவுக்கு வந்திருக்குமே…”
அவளின் கிண்டலான கேள்வியில் பாதிக்கப் பட்டவனாக அவன் அவளையே உற்றுப் பார்த்தான்.. அதில் தெரிந்த வெறுப்பில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன…
இந்த அளவுக்கு அவனை அவள் வெறுக்க காரணம் என்ன..?
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.