Chapter 07

0Shares

 அபிஷேக் பேசவில்லை.. அவன் செவிகளில் சுதர்சனத்தின் பேச்சு ஏறவேயில்லை.. அவன் ஏதோ மந்திர சக்திக்கு கட்டுப் பட்டவனைப் போல சந்தியாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. சுதர்சனத்தின் முன்னால் அவன் அப்படிப் பார்த்ததில் சங்கடமடைந்த சந்தியா.. அபிஷேக்கைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து விட்டாள்…

அபிஷேக்கின் கால்கள் தானாக அவளைப் பின் தொடர முனைய.. சுதர்சனம் அவனை தடுத்து நிறுத்தினான்..

“என்ன மச்சான்.. தூக்கம் வருதுன்னு சொன்னீங்க.. தூங்கப் போகலையா..?”

“நானா..? தூக்கம் வருதுன்னு சொன்னேனா..? எப்ப..?” அபிஷேக் அப்பாவி போல் இமை கொட்ட..

‘ஆஹா.. மச்சான் பிளேட்டை மாத்திப் போடறாண்டா..’ என்று மனதுக்குள் கொந்தளித்தான் சுதர்சனம்…

‘ஏண்டா.. டேய்.. உன் தங்கையை மட்டும் அடைகோழி போல அடை காத்து அடுத்தவனுக்கு கட்டிக் கொடுப்ப.. என் தங்கையை மட்டும் தூக்கிக்கிட்டுப் போகிறதைப் போலப் பார்த்து வைப்பியா..? நீ கெட்டிக் காரண்டா…’

“என்ன சொன்னீங்க..?”

“எதுவும் சொல்லலையே.. அப்ப உங்க கண்ணில தூக்கம் சொக்குச்சு.. இப்ப வேற எதுவோ சொக்குது…”

“பசியாயிருக்கும்…”

“இருக்கும்.. இருக்கும்…”

“கீழே போகலாமா..?”

“இப்பத்தான மேலே வந்தோம்.. உடனே கீழே போகனும்னா எப்படி..?”

“சாப்பிடக் கீழேதானே போகனும்..”

“அதுக்கு கீழேதான் போகனும்.. ஆனா.. ஆறரை மணிக்கே நைட் டிபனை எங்க வீட்டில் ரெடி பண்ணியிருக்க மாட்டாங்களே.. உங்க வீட்டிலும் அப்படித்தான்னு நினைக்கிறேன்…”

“ஆமாமாம்.. டிவி பார்க்கப் போகலாமா..?”

“எங்கே..?”

“கீழே..”

“அதுக்கு எதுக்கு வேலை மெனக்கெட்டு கீழே போகனும்..? அதுக்குத்தான் மாடிஹாலிலேயும் ஒரு டிவியை பிட்-அப் பண்ணி வைச்சிருக்கோமே…”

எந்தப் பக்கம் போனாலும்.. அந்தப் பக்கம் வந்து சுதர்சனம் வழியை அடைத்ததில் கீழே போக முடியாமல் மாடி ஹாலிலேயே தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் அபிஷேக்…

“என்ன மச்சான்.. தலையை வலிக்கிறதா..?”

அக்கறையுடன் சுதர்சனம் விசாரித்ததும் அடுத்தவழி கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி எழுந்தான் அபிஷேக்…

“ஆமாமாம்.. கீழே போகலாமா..?”

“அதுக்கு எதுக்கு கீழே போகனும்…?”

‘யாருடா இவன்.. எதுக்கெடுத்தாலும் கீறல் விழுந்த ரிகார்டைப் போல ஒரே கேள்வியையே கேட்டு வைக்கிறான். என் தங்கையை இவனுக்கு கட்டிக் கொடுக்காத காரணத்துக்காக.. இவன் தங்கையை என் கண்ணில பட விடாம பழி வாங்குறானே…’

அபிஷேக் அழ மாட்டாத குறையாய் சுதர்சனத்தை நோக்கினான்.. இவன் இப்படியெல்லாம் வழி மறிப்பான் என்று தெரிந்திருந்தால்.. பேசாமல் ஒரு வயது குறைந் திருந்தால் கூடப் பரவாயில்லையென்று பெண் கொடுத்துப் பெண் எடுத்திருக்கலாமோ என்ற காலம் கடந்த ஞானோதயம் அவனுக்கு வந்து தொலைத்தது…

அவன் தங்கையொன்றும் அருமை பெருமையாக வாழ்ந்து விடவில்லை என்பதும் அதற்கான ஒரு காரணமாக இருந்தது…

“சூடா ஒரு காபி குடிச்சா தலைவலி போயிருமே..” அபிஷேக் காரணம் கண்டு பிடிக்க..

“தலைவலி மாத்திரையைப் போட்டாலும் தலைவலி போயிரும்…” என்று தயாராகத் தன் கையில் வைத்திருந்த மாத்திரையைக் குடுத்து அந்தக் காரணத்தை உடைத்தான் சுதர்சனம்…

வராத தலைவலிக்கு மாத்திரையைப் போட்டுக் கொண்ட அபிஷேக் விதியே என்று தொலைக்காட்சியைப் பார்க்கலானான்…

எப்போது இரவு உணவு உண்ணக் கூப்பிடுவார்கள்.. அந்தச் சாக்கில் கீழே போய் சந்தியாவிடம் வாய் வளர்க்கலாம் என்று காத்துக்கிடந்தவனின் பக்கத்தில் அமர்ந்து தொணதொணவென்று பேசி.. அவனுக்கு உண்மையிலேயே தலைவலியை வரச் செய்தான் சுதர்சனம்…

‘போட்ட மாத்திரை வேஸ்டாப் போயிடக் கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு தீயாய் வேலை செய்றானே.. ம்ஹீம்… இப்படி ஓட்டைப் பானைக்குள்ள நண்டை விட்டதைப் போல லொடலொடன்னு பேசித்தள்ளினா.. தலைவலி வராம என்ன செய்யும்..?’ 

தூங்கப் போகவும் முடியாமல்.. டிவியைப் பார்க்கவும் முடியாமல் கதி கலங்கிப் போயிருந்த அபிஷேக்கிற்கு ஒரு வழியாக இரவு உணவு அழைப்பு வந்து விட்டது..

அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தவனைப் பார்த்த சுதர்சனம்..

“எங்க வீட்டு டிபன் வாய்க்கு ருசியா இருக்கும்தான் மச்சான்.. அதுக்கு இப்படியா அடித்துப் பிடித்துக்கிட்டு ஓடனும்..? எப்பப் போனாலும்.. உங்களுக்கான டிபனை எங்கம்மா எடுத்து வைச்சிருப்பாங்க மச்சான்.. உங்களைத் தவிர வேற யாருக்கும் கொடுத்துற மாட்டாங்க.. அதனால மெதுவாகவே போகலாம்..” என்று சொல்லி அபிஷேக்கின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான்..

இவன் தங்கையை பார்வையிடுவதற்காக.. இவனிடம் என்னவெல்லாம் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது என்று நொந்து போனான் அபிஷேக்.. 

அவர்கள் கீழே இறங்கிய போது.. டைனிங் ஹாலில் கூடியிருந்த குடும்பத்தினர் எதையோ கூடிப் பேசி 

சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.. அபிஷேக்கையும்.. சுதர்சனத்தையும் பார்த்ததும்…

“இங்க பாரு.. இனம்.. இனத்தோடதான சேரும்..? நாம எல்லாம் ஒன்னாக் கூடிப் பேசிக்கிட்டு இருந்தா.. இளந்தாரிப் பயலுக ஒன்னாக் கூடிப் பேசிட்டு வர்றாங்க.. ஜானகி.. சீக்கிரமா தட்டைப் போடு.. மாமன் மகனும்.. அத்தை மகனும்.. சட்டு புட்டுன்னு சாப்பிட்டு முடிச்சிட்டு.. விட்ட பேச்சை கன்டினியூ பண்ணப் போகட்டும்..” என்று சொன்னார் ஞானசம்பந்தர்…

‘இந்தத் தாத்தா வாயை வைத்துக்கிட்டு சும்மா இருந்தால் தேவலை..’ அபிஷேக்குக்கு எரிச்சல் மண்டியது.

அவனே வன்பாடு பட்டு சுதர்சனம் போட்ட மொட்டை ரம்பத்திலிருந்து தப்பித்து வெளியே வந்திருக் கிறான்.. அவனிடம் மீண்டும் மாட்டி வைக்க நினைக்கும் தாத்தாவை என்ன செய்தால் தேவலாம் என்ற கொலைவெறி அவனுக்குள் கிளர்ந்தது..

“அது சரி.. மாப்பிள்ளை கூட மட்டும் பேசிக்கிட்டு இருக்கிறதுக்கா நான் சென்னைக்கு வந்திருக்கேன்..?”

அவன் பார்வை உயர்ந்து சந்தியாவின் மீது படர்ந்ததில் உன்னுடன் பேசிக் கொண்டு இருப்பதற்காகவும் தான் கிளம்பி வந்திருக்கிறேன் என்ற செய்தி இருந்தது…

சந்தியா பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.. அபிஷேக் மெல்ல பேச்சில் அவளையும் இழுத்துவிட்டான்..

“என்ன அத்தை.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே இங்கே யாரோ திறந்த வாயை மூடாம பேசிக்கிட்டு இருந்தாங்க.. இப்ப என்னவோ பேசினா முத்து உதிர்ந்து விடும் போல மௌனகுரு வேசம் போடறாங்க.. என்னவாம்..?” என்று அவன் கேட்டதில்…

“இங்கே யாரும் வேசம் போடலைன்னு சொல்லுங்கம்மா…” என்று மௌனத்தை உடைத்து அவன் விரித்த பேச்சு வலையில் விழுந்து விட்டாள் சந்தியா…

அவன் ஒன்றைச் சொல்ல.. அவள் பதிலுக்கு ஒன்றைச் சொல்ல.. அவன் அதற்கும் வேறொன்றைச் சொல்ல என்று அரட்டைக் கச்சேரி அங்கே கொடி கட்டிப் பறந்ததில் பல்லைக் கடித்தான் சுதர்சனம்..

‘இப்ப இவ்வளவு வாய் கிழியப் பேசறவன்.. மாடியிலே என்கூடப் பேசறப்ப மட்டும் மௌனச் சாமியார் வேசம் போட்டானே.. அங்கே அந்த வேசத்தை என்னிடம் கட்டி விட்டு.. இங்கே வந்து அதையே என் தங்கையிடம் சொல்லி பேச வைச்சுட்டானே.. இப்ப மட்டும் இவனுக்கு தலையை வலிக்கவே வலிக்காதா..? இதுவே இவன் தங்கையோடு நான் பேசப் போனப்ப மட்டும் கண்ணாலேயே அதட்டி அவளை உள்ளே ஓட வைச்சிருவானே…’

அவனுக்கு மட்டும்தான் கண்களால் தங்கையை அதட்டத் தெரியுமா என்ற கோபாவேசத்தோடு.. சந்தியாவை கண்களால் அதட்ட முயன்றான் சுதர்சனம்..

அவனோ தமையனின் கண்களைக் கண்டதும்.. அவள் முன்னால் இருந்த சட்னிக் கிண்ணத்தை அவன் பக்கம் நகர்த்தி வைத்து விட்டு…

“இது போதுமா.. இல்ல.. சாம்பார் கிண்ணத்தையும் தள்ளி விடட்டுமா அண்ணா..” என்று தேனொழுக கேட்கவும் செய்தாள்..

‘தத்தி…’ சுதர்சனத்திற்கு ஆத்திரமாக இருந்தது…

இப்படியாகப்பட்ட தங்கையை வைத்துக் கொண்டு எப்படி அவன் மாமன் மகனை விரட்டியடிக்க முடியும்..?

“ஒன்னும் வேணாம்..” முறைப்புடன் அவன் சொல்ல..

“எனக்கு வேணும்..” என்று சட்னிக் கிண்ணத்தை தன் பக்கம் நகர்த்திக் கொண்டான் அபிஷேக்…

போதாக்குறைக்கு.. சந்தியாவை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி..

“அந்த சாம்பாரைக் கொஞ்சம் இந்தப் பக்கமா தள்ளி விட முடியுமா..?” என்று கேட்கவும் செய்தான்..

“இதோ…”

“தேங்க்ஸ்…”

“இதுக்குப் போய் எதுக்கு தேங்க்ஸை வேஸ்ட் பண்றிங்க அத்தான்..?”

“அப்பாடி.. இப்பவாவது நான் அத்தான்ங்கிறது உன் நினைவுக்கு வந்திருச்சே…”

“பின்னே வேற எப்படி நினைப்பேன்னு நினைத்தீங்க..?”

“நான் என்னென்னவோ நினைத்தேன்தான்.. அதைக் கேட்க உனக்கு நேரமிருக்கா.. என்ன..?”

ஒரு சட்னிக் கிண்ணத்தை வைத்து அபிஷேக் பேச்சை நகர்த்திய விதத்தில் அயர்ந்து போய் விட்டான் சுதர்சனம்…

‘இந்த டெக்னிக்கெல்லாம் எனக்கு வரலையே…’

விட்டால்… விடியும் வரை அபிஷேக் பேச்சு வார்த்தையை வளர்த்து விடுவான் என்பதால் குறுக்கே விழுந்தான் சுதர்சனம்… 

“என்னம்மா நீ.. மச்சானுக்கே ஒற்றைத் தலைவலி பாடாய் படுத்துது.. அவராலேயும் பேச முடியல.. மத்தவங்க பேசறதைக் காது கொடுத்துக் கேட்கவும் முடியல.. மாத்திரையைப் போட்டுக்கிட்டு படுத்திருந்த மனுசனை.. நான் தான் சாப்பிடாமப் படுத்தா.. தலைவலி இன்னும்.. கொஞ்சம் அதிகமாகும்ன்னு சொல்லிக் கீழே இழுத்துக் கிட்டு வந்தேன்.. வந்த மனுசன தூங்கப் போக விடாம நீ வேற தொணதொணன்னு பேசிக்கிட்டு இருக்கியே.. விடும்மா.. அவர் போய் தூங்கட்டும்..”

என்றைக்கும் இல்லாத திருநாளாய்.. சுதர்சனம்.. ஆயிரம் முறை ‘அம்மா’ போட்டு அழைத்ததில் சந்தியா பேச்சை நிறுத்திவிட்டாள் போதாக்குறைக்கு..

“ஸாரி அத்தான்.. தெரியாம பேசிட்டேன்..” என்று அவள் பேசியதற்கு வருத்தம் வேறு தெரிவித்தாள்…

ஒய்ந்து போனவனாக சுதர்சனத்தை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான் அபிஷேக்…

அதற்குப் பதிலாக ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணனைப்போல கண்களை விரித்தபடி…

“ஏன் மச்சான் அப்படிப் பாக்கறிங்க..?” என்று அன்பொழுகக் கேட்டு வைத்தான் சுதர்சனம்..

அபிஷேக் கேட்டும் அதே கேள்வியை.. அதே பாணியில் திருப்பிக் கேட்டவனைப் பார்த்து…

‘ஏண்டா.. டேய்.. என் கிட்டயேவா..’ என்று நொந்து நூடுல்ஸாகி விட்டான் அபிஷேக்…

“அடடா.. உனக்குத் தலைவலியா..?”

வீட்டில் இருந்த அனைவரும் ஒன்று போலக் கேள்வி கேட்டு ஆளுக்கொரு வைத்தியம் சொன்னதில் அபிஷேக்கிற்கு உண்மையிலேயே தலையை வலிக்க ஆரம்பித்து விட்டது..

அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு போய் மாடியில் இருந்த விருந்தினர் அறையில் படுக்க வைத்து போர்த்தி தூங்க வைத்து விட்டுத்தான் வேறு வேலை பார்த்தான் சுதர்சனம்…

‘மகனே..! இன்னைக்குத்தானே நீ காவல் காப்ப.. நாளைக்கு என்ன பண்ணுவன்னு பார்க்கலாம்..’ மனதுக்குள் கருவிக் கொண்டான் அபிஷேக்…

அதிகாலையில் கண் விழித்து.. பால்கனியில் தொங்க விடப் பட்டிருக்கும் ஊஞ்சலில் காபியை உறிஞ்சியபடி சந்தியாவிடம் பேச ஆரம்பித்தால்.. இரவில் முழுநிலவு பவனி வரும் போதுதான் அந்தப் பேச்சை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தூங்கி விட்ட அபிசேக் கண் விழித்த போது சந்தியா கல்லூரிக்குப் போய் விட்டிருந்தாள்.

அரக்கப் பறக்க எழுந்து வந்தவனிடம்..

“குட் ஆப்டர் நூன் மச்சான்..” என்று மதிய வணக்கம் சொன்னான் சுதர்சனம்…

“குட் ஆப்டர் நூனா..?” மலங்க மலங்க விழித்தவனிடம்..

“பின்னே.. மதியம் ஒரு மணிக்கு குட் ஆப்டர் நுன்னு சொல்லாம.. குட் நைட்டுன்னா சொல்லுவாங்க..?” என்று விளக்கம் வேறு கேட்டான்…

அத்தோடும் நிறுத்திக் கொள்ளாமல்.. அபிஷேக்கைப் பார்த்து.. 

“ஆக்சுவலா குட்நைட் சொல்ல வேண்டிதான் வரும்ன்னு நினைச்சேன்.. உங்களுக்கு ஸ்ட்ராங் பாடி போல.. குட் ஆப்டர் நூன் சொல்கிறதுக்கே எழுந்து வந்துட்டிங்க..” என்றும் சொன்னான்..

“என்னது..? குட்நைட் சொல்லனும்னு நினைச் சீங்களா..? ஏன்..?”

“ஏன்னா.. மாத்திரையோட பவர் அப்படி மச்சான்..”

“மாத்திரையோட பவரா..?”

“ஆமா.. நல்லாத் தூங்கினாத்தான தலைவலி பறந்து போகும்..?”

“அதுக்கு..?”

“ஸ்லீப்பிங் வித் பெயின் கில்லர் மாத்திரையைத் தான் கொடுத்தேன்.. அதைச் சாப்பிட்டா.. அடிச்சுப் போட்டதைப் போல ரெண்டு நாளாவது தூங்குவாங்க மச்சான்..”

‘அடப்பாவி…’

இப்படியும் கூட ஒரு அண்ணன் செய்வான் என்பதை சுதர்சனம் நிரூபித்து வைக்க…

‘உன் தங்கையை என்னடா செய்தேன்..?’ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டான் அபிஷேக்…

ஒரு மாமன் மகனாகப் பட்டவனுக்கு அத்தையின் மகளை சைட் அடிக்கக் கூட உரிமையில்லையா..?

“என்ன மச்சான் அப்படியே நின்னுட்டிங்க.. இன்னும் தலையை வலிக்குதா..?” கரிசனமாகக் கேட்டான் சுதர்சனம்.

“இல்லையே.. எதுக்குக் கேட்கறிங்க..?”

“இல்லை.. இன்னும் ஒரு மாத்திரையை கொடுக் கலாமான்னுதான் கேட்டேன்…”

‘ஏண்டா கொடுக்க மாட்ட.. உன் தங்கையை ஏறெடுத்துப் பார்த்து விட்ட குற்றத்திற்காக.. என்னை 

தூங்க வைத்தே ஒரு வழி பண்ணிரலாம்ங்கிற முடிவோட இருக்கியா…?’

அபிஷேக் பதிலே சொல்லாமல்.. குளிக்கப் போய் விட்டான்.. மதிய உணவுக்குப் பின்னால் உண்மையிலேயே அவன் தலை ‘விண்.. விண்..’ணென்ற தெறிக்க ஆரம்பித்தது…

‘என்ன மாத்திரையை கொடுத்து தொலைத்தானோ..’

சட்டையை மாட்டிக் கொண்டு.. தெரு முனையில் இருந்த மெடிகல் ஷாப்பிற்குச் சென்று ஒரு தலைவலி மாத்திரையை வாங்கி விழுங்கி வைத்தான் அபிஷேக்..

இல்லாவிட்டால்.. அவன் முகத்தை வைத்தே.. அன்றும் ஒர் மாத்திரையை சுதர்சனம் தந்து தொலைத்து விடுவானே…

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link