Chapter 14
“பெரிய பணக்காரனாம்.. ஒற்றை மகளைக் கட்டிக் கொடுத்து அவன் பிஸினெஸ்ஸையும் இந்த ஸ்டேசன் மாஸ்டர் கையில ஒப்படைக்கிறானாம்.. இதுக்கு மேலே வேலை எதுக்குன்னு நம்ம மாமன் மகன் வேலையை ரிசைன் பண்ணிட்டானாம்.. எண்ணி ஏழே நாளில் கல்யாணமாம்.. இவனுக்கெல்லாம் வந்த யோகத்தைப் பார்த்தீங்களாப்பா..?” கல்யாணராமனிடம் பொருமிக் கொண்டிருந்தான் சுதர்சனம்…
அந்த யோகம் எப்படி வந்திருக்கக் கூடும் என்று சந்தியாவினால் கணிக்க முடிந்தது.. அவள் மனதில் அபிஷேக்கின் பார்வைகளும்.. பேச்சுக்களும் நிழலாடின..
‘அவன் அவ்வளவு எளிதாக விலை போய் விட்டானா..?’
அவள் மனம் தாங்கவில்லை…
“உன்னைச் சுற்றியிருக்கிறவர்களோட சாவி என் கையில் இருக்கு..” ரகுநந்தனின் குரல் அவள் காதுகளில் ஒலித்தது…
எப்படி அவனால் இதைச் சாதிக்க முடிந்தது.. அபிஷேக் மட்டும் திட மனதுடன் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்குமா..? அவன் பேசிய காதல் வார்த்தைகள் பொய்யா..?
“அழியாது காதல்…
நிலையான தென்று..
அழகாக கவி பாடுவார்..
வாழ்வில் வளமான மங்கை..
பொருளோடு வந்தால்..
மனம் மாறி உறவாடுவார்…”
டிவியில் பாடல் ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது.. வெறுமையான மனதுடன் பாடலைக் கவனித்தாள் சந்தியா.
“கொஞ்சும் மொழி பேசி..
வலை வீசுவார்…
தன்னை மலிவாக…
விலை பேசுவார்…”
அபிஷேக்கின் பசப்பு வார்த்தைகளையும் அவனது பச்சோந்தித் தனத்தையும் நினைத்துப் பார்த்தவளின் மனதில் வெறுப்பு மண்டியது…
இவனையா அவள் நேசிக்க நினைத்தாள்..? இவன் பார்வைகளிலா மனம் மயங்கி நின்றாள்..?
“என்றன் கனிவான பாடல்..
முடிவாகு முன்னே..
கனவான கதை கூறவா..?
பொங்கும் விழி நீரை அணை போடவா..?”
சந்தியா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. புறக்கணிக்கப்பட்ட வேதனை அவள் மனதில் கவிழ்ந்தது..
“பொருளோடு வாழ்வு…
உருவாகும் போது…
புகழ்பாட பலர் கூடுவார்..
அந்தப் புகழ் போதையாலே…
எளியோரின் வாழ்வை…
மதியாமல் உரையாடுவார்..”
வரப்போகும் மாமனார் வீட்டின் வளங்களை அபிஷேக் அள்ளி விட்டதாக சுதர்சனம் கூறிய பேச்சுக்களில் அவள் மனம் சினந்தது.. கனவிலும் நினைக்காத வாழ்வென்று அவன் சொன்னதாக சுதர்சனம் கூறிய நினைவில் பல்லைக் கடித்தாள் சந்தியா…
“ஏழை விதியோடு…
விளையாடுவார்…
அன்பை மலிவாக..
எடை போடுவார்..
என்றன் கனிவான பாடல்..
முடிவாகு முன்னே..
கனவான கதை கூறவா..?
பொங்கும் விழிநீரை அணை போடவா..?”
சந்தியா சோபாவில் சுருண்டு படுத்தாள்.. மனதின் பாரம் தாங்காமல் அவள் விழிகள் மூடிக் கொண்டன…
“காவேரி ஓரம்…
கவி சொன்ன காதல்..
கதை சொல்லி நான் பாடவா..?
உள்ளம்.. அலைமோதும் நிலைகூறவா..?
என்றன் கனிவான பாடல்
முடிவாகு முன்னே..
கனவான கதை கூறவா..?
பொங்கும் விழிநீரை அணை போடவா..?”
சந்தியாவின் இமையோரம் வழிந்த நீர்த்துளிகள் எதற்காக என்று அவளுக்கே புரியவில்லை… அது அபிஷேக்கை இழந்து விட்ட துயரத்தால் உருவானதா..? இல்லை.. ரகுநந்தனிடம் தோற்றுவிட்ட நினைவினால் உருவானதா..?
“சந்தியா…”
கல்யாண ராமனின் கனிவான குரலில் அவள் அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.. அவளது இமையோரம் வழிந்த கண்ணித் துளிகளின் மீது கல்யாண ராமனின் பார்வை படிவதைக் கண்டதும் அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்…
“என்னம்மா இது..?” கல்யாணராமன் துணுக்குற்றார்.
“ஒன்னுமில்லைப்பா..”
“நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்… அந்த அபிஷேக் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற செய்தியைக் கேட்டதில இருந்து
நீ இப்படித்தான் இருக்க.. ஏன்ம்மா… என்ன விசயம்..? உனக்கு அவன் மேல காதல் இருந்ததா..?”
கல்யாண ராமனின் கேள்வியில் அவள் இதயம் குழுங்கியது..
‘இல்லையே..’ அவள் மனம் தவித்தாள்…
அத்தைமகள்.. மாமன் மகன் என்ற பந்தம் மட்டும் தானே அவர்களுக்குள் இருந்தது..? காதல் என்ற வார்த்தைக்கே அங்கே இடமில்லையே.. ஒருவேளை சந்தியாவின் படிப்பு முடிவதற்குள் அபிஷேக் திருமணத்திற்கு அவசரப்பட்டிருந்தால் தாராளமாக அவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று சந்தியாவே சொல்லியிருப்பாளே..
“சொல்லும்மா…”
“இல்லைப்பா…”
“பிறகு எதுக்காகம்மா இந்தக் கண்ணீர்..? யாருக்காக இந்த வேதனை…? இந்த அளவுக்கு உன் மனசில அவன்மேல எண்ணமிருந்தா ஊம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு.. இப்பவே நானும் உன் அம்மாவும் நாமக்கல்லுக்கு கிளம்பிப் போறோம்…”
எதற்காக..? அவளை வேண்டாமென்று புறக்கணித்த அபிஷேக்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவா..? அந்த அளவுக்கா சந்தியாவின் நிலை இறங்கி விட்டது..?
“பேசும்மா.. உன் மாமனுக்கு உன் அம்மா மேல பாசம் அதிகம்..”
அந்தப் பாசம்.. அந்த மாமன் பெற்ற மகனுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது…? அவனை நம்பி சந்தியா சவால் விட்டாளே.. ஒரு நொடியில் அந்த நம்பிக்கையை அவன் தகர்த்து விட்டானே.. அவனை நம்பி வாழ்வு முழுவதையும் எப்படி அவள் ஒப்படைப்பாள்..?
“உன் அம்மா கண்ணில இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் போதும்.. உன் மாமன் மனம் இளகிரும்..”
அதற்காகவா அவள் பெண்ணாகப் பிறந்தாள்..? அவளைப் பெற்றுவிட்ட பாவத்திற்காக அவளைப் பெற்ற அன்னை கூடப் பிறந்தவனின் முன்னால் கண்ணீர் விட்டு நிற்க வேண்டுமா..? அந்த அளவுக்கா சந்தியா தரம் தாழ்ந்து விட்டாள்..?
“அப்பா ப்ளீஸ்..” சந்தியா காதுகளைப் பொத்திக் கொண்டாள்..
“என்னடா..?”
“இந்தப் பேச்சை இத்தோடு விட்டு விடுங்கப்பா.. இனி அந்த அபிஷேக்கே என்னைக் கல்யாணம் பண்ணிக் கிறேன்னு வந்து நின்னாலும் நான் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்…”
“சந்தியா…”
“அவன் என்ன பெரிய இவனா..? நான் உங்க மகள்ப்பா.. எனக்காக அம்மா போய் மாமாகிட்டக் கெஞ்சனுமா..? இத்தனை நாளாய் அந்த அபிஷேக்தான் என்னிடம் கெஞ்சினான்.. கல்யாணம் பண்ணிக்கிட்டு சி.ஏ பண்ணு சந்தியா.. அதுக்குப் பின்னாலே வேலைக்குப் போன்னு மண்டி போட்டான்.. நான் யோசிச்சு முடிவு சொல்றேன்னு சொன்னேன்.. டிசிசன் அத்தாரிட்டி என் கையில இருந்ததுப்பா.. ஒரு நாளும் அவன் கையில் அது இல்லை.. என்னைப் பிடிச்சிருக்குன்னு அவன்தான் சொன்னான்ப்பா.. அவனைப் பிடிச்சிருக்குன்னு நானாகச் சொன்னதே இல்லை.. அவன்தான் கேட்பான்.. என்னைப் பிடிச்சிருக்கா சந்தியாம்பான்.. பிடிக்கலைன்னா சொல்ல முடியும்..? அதுக்குத்தான் பதில் சொல்லியிருக்கேன்..”
“இப்பத்தான் என் மனது குளிருது சந்தியா.. எங்கே என் பொண்ணு அவன் மேல மனசை வைச்சிட்டு மறக்க முடியாம தவிக்கிறாளோன்னு பயந்தே போயிட்டேன்..”
“நான் தவிக்கிறது நிஜம்தான்ப்பா.. இத்தனை நாளாய் கட்டினால் என்னைத்தான் கட்டுவேன்னு சொன்னவன் ஒரு நிமிசத்தில நிறம் மாறிட்டானேன்னு தவிக்கிறேன்.. இப்படிப் பட்டவனை நம்பி கழுத்தை நீட்டியிருந்தா என் கதி என்னவாக ஆகியிருக்கும்ன்னு நினைச்சு தவிக்கிறேன்..”
“தப்பிச்சுட்டோம்ன்னு நினைச்சுக்கம்மா…”
கல்யாணராமன் அமைதியானவராய் வங்கிக்கு கிளம்பிப் போனார்.. சந்தியாவினால் அப்படி நினைக்க முடியவில்லை.. அவள் மனதில் கட்டை விரலை உயர்த்தி சவால் விட்ட ரகுநந்தனின் தோற்றமே வலம் வந்தது…
நாமக்கல்லில் இருந்து அபிசேக்கின் திருமணப் பத்திரிக்கை வைக்க ஜனார்த்தனம் மனைவியுடன் வந்திருந்தார்.. ஞானசம்பந்தரும் கோதாவரியும் கூட வர மாட்டேனென்னு சொல்லி விட்டார்களாம்.. தங்கையின் முகம் பார்க்க முடியாமல் தரையைப் பார்த்தபடியே பேசியவளிடம் கலகலப்பாக வரவேற்றுப் பேசினாள் ஜானகி…
“இதுக்குப் போய் எதுக்காகண்ணா சங்கடப்படறிங்க..? நாங்களே இதை எப்படிச் சொல்கிறதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.. தானா இது நடந்து எங்களை சங்கடத்தில இருந்து காப்பாத்தியிருக்கு…”
“என்னம்மா சொல்கிற..?”
“சந்தியாவுக்கு அபிஷேக்கைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை அண்ணா.. அவ மேலே படிக்கனும்.. வேலைக்குப் போகனும்ன்னு விருப்பப் பட்டா.. அதுக்குப் பின்னாலே தான் கல்யாணம்ன்னு முடிவாச் சொல்லிட்டா.. அபிஷேக்கிடமும் இதைச் சொன்னாளாமே.. இதைக் கேட்டபின்னாலதான் அபிஷேக் இந்த முடிவுக்கு வந்திருப்பான்.. நீங்க எதுக்காக மனதைப் போட்டு வருத்திக்கறிங்க..?”
“இல்லைம்மா.. நம்ம காலத்தில ஒட்ட முடியலையே..”
“ஏன்னா.. சயின்ஸே.. சொந்த அத்தை மகள்.. மாமன்.. மாமன் மகன்னு கல்யாணம் பண்ணி வைக்கிறது தப்புன்னு சொல்லுது.. அதை நினைச்சுப் பார்க்காம நீயும் நானும் பேசினா சரியாப் போயிருமா..? விடுங்கண்ணா.. இப்ப என்ன.. பொண்ணுக்கொடுத்து பொண்ணைக் கட்டிக்கிட்டாத்தான் நீங்களும் நானும் அண்ணன் தங்கைன்னு ஆவோமா..? இல்லைன்னா நம்ம சொந்தம் இல்லைன்னு ஆகிருமா..?”
“ஜானகி..” ஜனார்த்தனம் கண் கலங்கி விட்டார்…
“பார்த்தியா சந்தியா.. ஊரில இருந்து பத்திரிக்கை வைக்க கிளம்பி வரும்போது நம்ம மாமன் என்ன நினைச்சுக்கிட்டு வந்திருப்பார்..? நம்ம தங்கைக்கு பத்திரிக்கை வைக்கப் போகிறோமே.. அது என்னண்ணா.. என் மகளைக் கட்டிக்காம வேற இடத்தில பொண்ணு கட்டறேங்களேன்னு கண்ணீர் விட்டா நாம என்ன பண்ணுவோம்ன்னு கதிகலங்கிப் போய் வந்திருப்பார்.. அப்பேற்பட்ட அண்ணனையே நம்ம அம்மா கண்ணீர் விட வைச்சுட்டாங்களே.. நம்ம அம்மாவா.. கொக்கா..?”
சுதர்சனம் சந்தியாவின் காதுகளில் முணுமுணுத்தான்.. ஜானகி அதைப் போலத்தான் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள்..
“எதுக்காக அண்ணா அழுகறிங்க..? இந்தக் காலத்துப் பொண்ணுக நம்ம காலத்துப் பொண்ணுக மாதிரியில்லை.. நீங்க கை காட்டின மாப்பிள்ளைக்கு நான் கழுத்தை நீட்டினேன்…”
ஜானகி நீட்டி முழங்கிக் கொண்டிருக்க.. இப்போது எதற்காக இவள் இதைச் சொல்கிறாள் என்று யோசித்தார் கல்யாணராமன்…
‘அதனால் இவளுக்கு என்ன குறைவு வந்து விட்டதாம்..? என்னை விட பெட்டரான மாப்பிள்ளை கிடைக்கலேன்னு மனதுக்குள்ள ஒரு நினைப்பிருக்குமோ..’
கணவனின் நினைப்பைப் பற்றிய கவலையில்லாமல் ஜானகி தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்…
“இப்ப அப்படியா..? இதுதான் மாப்பிள்ளைன்னு நாம எல்லோரும் சந்தியாகிட்ட அபிஷேக்கை கை காட்டி விட்டோம்.. அவ முடியாதுன்னு மறுத்துட்டாளே…
கடைசி வரைக்கும் அபிஷேக்கிட்ட சாதகமான பதிலைச் சொல்லவே இல்லையே.. முடிவு சொல்லுன்னு நம்ம அபிஷேக் கேட்டப்ப டைம் கொடுங்க அத்தான்னு சொல்லிட்டாளே.. என்கிட்ட வந்து எப்படிம்மா அத்தான் கிட்ட அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கிற முடிவை நான் சொல்லுவேன்.? அதை நீங்களே சொல்லிருங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. நான் நினைக்கிறேன்.. அந்தப் பேச்சு அபிஷேக் காதில விழுந்திருக்கும்ன்னு.. அதான்.. பிள்ளை சொல்லாமக் கொள்ளாம நாமக்கல்லுக்கு கிளம்பி வந்திட்டான்.. எங்களுக்கும் மனதுக்கு கஷ்டமாத்தான் இருந்தது.. இருந்தாலும் எங்க பொண்ணு மனதுக்கு விருப்பமில்லாம நாங்க கல்யாணத்தை நடத்தி வைக்க முடியாதில்ல.. நல்ல வேளை.. அபிஷேக்குக்கும் ஒரு பொண்ணு கிடைச்சிட்டா.. அவனுக்கும் கல்யாணம் ஆகப் போகுது.. இப்ப எங்க மனசில குற்ற உணர்வு இல்லாம நிம்மதியா இருக்க முடியுது..”
இப்படிச் சொல்லி ஜனார்த்தனத்தின் மனதிலிருந்த குற்ற உணர்வை விரட்டியடித்து தானும் தலைநிமிர்ந்து நின்று விட்டாள் ஜானகி… அதில் ஜனார்த்தனனின் மனைவியான மைதிலிக்குத்தான் கொள்ளை வருத்தம்…
‘இவ மக பெரிய அப்சரஸ்.. இவ என் மகனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளாம்.. பெரிய பேங்க் மேனேஜர் பெண்டாட்டின்னு இவ காட்டின ஜம்பத்துக்கு பதிலடி கொடுக்கனும்னு நினைச்சுக்கிட்டு வந்தா இவ இப்பவும் ஜம்பம் காட்டறாளே.. ஐயோ பாவம் சந்தியான்னு நாங்க இரக்கப்படறதுக்குப் பதிலா.. இவ ஐயோ பாவம் அபிஷேக்.. அவனுக்கும் ஒரு பொண்ணு கிடைச்சிட்டாளேன்னு சொல்லிக் காட்டறாளே.. இவளை என்ன செய்தால் தேவலாம்.. இவ ஆட்டம் அடங்கவே அடங்காதா..?’
நாத்தனாரை மட்டம் தட்ட முடியாத கொதிப்புடன் கடனேயென்று பேசிச் சிரித்து விட்டு.. கணவருடன் கிளம்பிச் சென்றாள் மைதிலி.. அந்தப் பத்திரிக்கையை யாரும் பிரித்துப் படிக்கவில்லை..
“கல்யாணம் எங்கே.. என்ன தேதியில் நடக்குதுன்னு தெரியும்.. முகூர்த்தத்தப்ப போயி தலையைக் காண்பிச்சுட்டு வந்திரலாம்.. இதுக்கு அந்தப் பத்திரிக்கைப் பிரிச்சுப் படிச்சுட்டுத்தான் போகனுமா..?”
கல்யாணராமன் அதைத் தூக்கிக் கடாசி விட்டார்.. சும்மாவே அவர் மாமனார் வீட்டுக்கு தண்ணீர் காட்டுகிறவர்.. இப்போது அபிஷேக் பண்ணி வைத்த வேலைக்குப் பின்னால் அவருக்கு மச்சினன் வீடும் ஆகாததாக மாறி விட்டது…
சந்தியா நடந்ததை ஜீரணித்துக் கொண்டு படிப்பில் கவனமானாள்.. கடைசி செமஸ்டருக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தது.. இது முடிந்ததும் திருமணத்தை நடத்தி விடலாம் என்று அபிஷேக் சொல்லியிருந்தான்.. அந்த நினைவில் பல்லைக் கடித்தபடி தோழிகளை விட்டு விலகி ஸ்கூட்டியை உதைக்கப் போன போதுதான் அவனைக் கவனித்தாள்..
உதடுகளில் அழுத்தமான புன்சிரிப்புடன் அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தியவனின் கண்களில் சவால் கலந்த சிரிப்பு இருந்தது..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.