Chapter 21

0Shares

சந்தியாவின் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது… முதன் முறையாக.. வேறு வகையான உணர்வுடன் கூடிய ஆணின் தொடுகையுணர்வை அவள் அனுபவித்தாள்..

அது அவளறியாத புது உணர்வு.. அபிஷேக்கைத் திருமணம் செய்து கொள்ளும் நினைவுடன் அவள் இருந்தாள்தான்.. ஆனால் அவனைத் தொட்டுப் பேசியதில்லை.. எட்ட நின்றுதான் பேசியிருக்கிறாள்.. பார்த்திருக்கிறாள்.. அவன் விழிகளில் அந்த ஆவல் தென்படும்.. வார்த்தைகளில் அதை வெளிப்படுத்தவும் செய்வான்.. சந்தியா அதற்கு இடம் கொடுக்க மாட்டாள்.. தள்ளி நின்றுதான் பேசிப்பழகுவாள்…

இன்று ரகுநந்தனின் கை அவள் கையை உரிமையுடன் பற்றும்போது அவளுக்குள் கொழுந்து விட்டு எரியும் ஜ்வாலை போன்ற உணர்வை அதற்கு முன் அவள் உணர்ந்ததில்லை…

சட்டென்று கையை உறுவிக் கொண்டாள் சந்தியா.. அவன் தொட்ட இடம் தீப்பிடித்ததைப் போல தகித்தது.. அவள் உடல் நடுங்கியது..

‘எப்பேற்பட்டவன் இவன்..’ மனம் குமுறினாள்..

‘கத்தி முனையில் காதல் சொல்ல வைத்து விட்டு.. என்னைத் தொட்டுப் பேச நினைக்கிறானே…’

“ஏன்..?” அவன் அதட்டினான்…

அவள் பதில் பேசவில்லை.. ஏனென்று அவன் அறிய மாட்டானா என்ற மெலிதான கோபம் அவளுக்குள் எழுந்தது..

“ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள் சந்தியா.. என் கண்டிசன் என்ன தெரியுமா..? நீ என்னிடம் மனதாரக் காதல் சொல்ல வேண்டும்.. நான் கட்டுகிற தாலிக்கு விருப்பத்துடன் கழுத்தை நீட்ட வேண்டும்.. என்னை விரும்பி.. என்கூட குடும்பம் நடத்தனும்.. என் குழந்தைகளுக்கு நீ அம்மாவாகனும்..”

அவன் சொல்லிக் கொண்டே வர.. கேட்க முடியாமல்…

“போதும்.. போதும்..” என்றாள் சந்தியா..

“இதுக்கே போதும்ன்னா எப்படி..? இன்னும் நிறைய இருக்கே.. அதையெல்லாம் ஒவ்வொன்னாச் சொல்றேன்.. இப்ப மாமனார் கிட்ட விசயத்தை ஓப்பன் பண்ணியாகனும்.. அவரும் கிட்ட வந்துட்டாரே…”

மழைக்கு குடையைப் பிடித்தபடி வந்து நின்று குனிந்து பார்த்த கல்யாணராமனுக்கு தூக்கி வாரிப் போட்டது…

‘என்ன இது..?! ரகுநந்தன் சாரோட காரில சந்தியா வந்திருக்கா..’ 

‘அப்பா என்ன நினைப்பாரோ..’ சந்தியா கூனிக் குறுகிப் போய்விட்டாள்..

‘எல்லாம் இவனால் வந்தது..’ சினத்தை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் அவள் கார் கதவை திறக்க முயன்றபோது…

“ஹலோ சார்..” என்றபடி காரை விட்டு இறங்கி விட்டான் ரகுநந்தன்…

“நீங்க இங்கே எப்படி.. உங்க காரில.. என் பொண்ணு..” கல்யாணராமன் கோர்வையாக பேச முடியாமல் சங்கடப்பட்டார்..

“அதை உள்ளே போய் பேசலாமா..? முதன் முதலா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்.. அதுவும் மழையை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கேன்.. உள்ளே கூப்பிட்டு சூடாய் ஒரு கப் காப்பி குடுக்க மாட்டிங்களா..? சந்தியாவின் அம்மா போடற காபி சூப்பராய் இருக்குமாமே.. சந்தியா சொல்லியிருக்கா..” அவன் இயல்பாக பேசிக் கொண்டே போக…

‘இவன்கிட்ட இதையெல்லாம் எப்பச் சொன்னேன்..?’ என்ற நினைவில் பல்லைக் கடித்தாள் சந்தியா..

‘அப்பா என்ன நினைத்துக்குவார்…’

கல்யாணராமன் எதை நினைத்தாரோ.. காரை விட்டு இறங்கிய மகளை குடைக்குள் அழைத்துக் கொண்டு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டை நோக்கி நடந்தார்.. ரகுநந்தன் கழட்டிய மழைக்கோட்டை வாங்கி வராண்டாவில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் விரித்துப் போட்டார்…

“உங்ளே வாங்க சார்..” என்று மரியாதையுடன் அவனை அழைத்துக் கொண்டு போனார்..

கவலையுடன் அமர்ந்திருந்த ஜானகி மகளைக் கண்டதும்…

“என்னடி இவ்வளவு நேரம் ஆச்சு..? உன் ஸ்கூட்டியை யாரோ ஒருத்தன் கொண்டு வந்தானே.. யார் அவன்..? இவ்வளவு நேரமா வீட்டுக்கு வராமா எங்கேடி போயிருந்த..?” என்று பொரிந்த வண்ணம் எழுந்து நின்றாள்..

“ஜானகி…”

கல்யாணராமனின் அதட்டலில் ரகுநந்தனைப் பார்த்தவளின் வாய் சட்டென்று மூடிக் கொண்டது.. செல்போனில் பேசியபடி மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த சுதர்சனமும் ரகுநந்தனைக் கண்டதும் சட்டென்று செல் போனை அணைத்து விட்டு.. தாயைப் பார்த்தான்…

‘இந்த நேரத்தில்.. இவர்கூட சந்தியா வந்திருக்காளே..’ அவன் மனம் யோசனையில் ஆழ்ந்தது..

“ஜானகி.. சார்தான் ரகுநந்தன்…”

கல்யாணராமன் அறிமுகப் படுத்தியதும்.. ஜானகி ரகுநந்தனைப் பார்த்த பார்வையில்…

‘இவன் தான் சந்தியா சொன்ன அந்த வில்லனா..?’ என்ற கேள்வி இருந்தது.. சுதர்சனத்திற்கோ.. ‘தி கிரேட் பிஸினெஸ் மேக்னட் ரகுநந்தன்…’ இவன்தானா.. என்ற பிரமிப்பு ஏற்பட்டது..

“வாங்க..” என்று ஜானகி கை குவிக்க…

“வெல்கம் சார்..” என்று சுதர்சனம் பரபரத்தான்…

“காபி கொண்டு வா ஜானகி..” கல்யாணராமன் சொன்னதும்…

“இதோ..” என்று சமையலறைப் பக்கமாக போய் விட்டாள் ஜானகி…

போகும் போது மகளை முறைத்த அவள் பார்வையில்.. வந்து பேசிக்கறேன் என்ற செய்தி இருந்தது..

ரகுநந்தன் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த தோரணை வெகு இயல்பானதாக.. வசீகரம் நிறைந்ததாக இருந்தது.. ஏனோ.. அபிஷேக் அதைப் போல உட்கார முயன்று தோற்றதும்.. அதை.. ‘உங்களுக்குத்தான் வரலைல்ல.. விட்டிருங்க..’ என்று சுதர்சனம் கேலி செய்ததும் சந்தியாவின் நினைவுக்கு வந்தது…

அந்த அபிஷேக்கை இவன் தான் விலகி ஓட வைத்தான் என்று மனம் கசந்த அதே நேரத்தில்.. அபிஷேக் மிக எளிதாக விலை போனவன் என்ற நினைவும் கூடச் சேர்ந்தே வந்தது…

‘இவன் ஓட வைத்தா.. அவன் ஏன் ஓடறான்..?’

அந்த நினைவுகளே வேண்டாம் என்று தலையைக் குலுக்கி அவற்றை விரட்ட முயன்றாள் சந்தியா.. அவள் முன்னால் திரும்ப முடியாத ஒருவழிப்பாதை வந்து விட்டது.. அவளும் அதில் காலடி வைத்து விட்டாள்.. இனிப் பழைய நினைவுகளை நினைப்பதால் யாதொரு பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை…

ஜானகி காபியுடன் வரும்வரை.. கல்யாணராமனிடம் பொதுவான வங்கி நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.. சுதர்சனத்திடம் அவனுடைய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டான்.. இருவரும் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும்.. இந்த இரவு நேரத்தில் சந்தியா அவனுடன் காரில் வந்து இறங்கியிருக் கிறாள் என்ற விவரம் அவர்களின் தொண்டையில் மீன் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது…

ஜானகி காபியுடன் வந்து விட்டாள்.. ரகுநந்தனிடம் காபியை கொடுத்துவிட்டு மகளுக்கு ஜாடை காட்டி உடன்வரச் சொல்லி அழைத்தபடி நகர முயன்றவளை ரகுநந்தனின் குரல் தடுத்து நிறுத்தியது…

“நீங்களும் இப்படி உட்காருங்க.. நான் ஒரு முக்கியமான விசயத்தைப் பேச வேண்டியிருக்கிறது.. அதற்கு நீங்களும் இருந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.. உங்களுக்காகத்தான் நான் அதை ஓப்பன் பண்ணாமல் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்..”

ஜானகியின் முகத்தில் குழப்பம் பரவியது.. அவள் கல்யாணராமனின் முகத்தைப் பார்த்து.. விழிகளால் என்னவென்று கேட்டாள்.. அவர் தெரியவில்லையென்று சமிக்ஞை செய்தார்.. சுதர்சனமும் யோசனையாக தந்தையின் முகத்தைப் பார்த்தான்…

அவர்கள் அனைவரின் முகத்திலும் நிலவிய குழப்பத்தை கவனித்தும் கவனிக்காதவனைப் போல நிதானமான குரலில் பேச ஆரம்பித்தான் ரகுநந்தன்..

“உங்க மகளை நான் காதலிக்கிறேன் சார்.. அவளிடம் பலமுறை என் காதலைச் சொல்லியிருக்கேன்.. அவ மறுத்திருக்கா.. விடாம அவளை ஃபாலோ பண்ணினேன்.. இன்னைக்குத்தான் அவ மனம் இரங்கி என் காதலை ஏத்துக்கிட்டா.. உடனடியா உங்களிடம் பேசி.. உங்க சம்மதத்தோட மேரேஜை பிக்ஸ் பண்ணலாம்ன்னு நேரே வந்தேன்.. சந்தியாவின் ஸ்கூட்டியை கொண்டு வந்தது என் டிரைவர்தான்.. உங்களைப் பார்க்க வரும் போது சேர்ந்து வரலாம்ன்னு நாங்க நினைத்தோம்.. அதனால உங்க எல்லோருக்கும் பதட்டம் ஏற்பட்டிருக்கும்.. ஸாரி ஃபார் தட்..”

கல்யாணராமனுக்கு அவர் காதுகளையே நம்ப முடியவில்லை.. எந்த தொழிலதிபனின் வங்கிக் கணக்கு.. அவர் வேலைசெய்யும் வங்கிக் கிளையில் இருக்கிறதால் அவர் எந்தவித உளைச்சலும் இல்லாமல் நிம்மதியாக வேலை செய்கிறாரோ.. அந்தத் தொழிலதிபன் அவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி அவரின் சம்மதத்தை கேட்டு வந்திருக்கிறானா..?

‘நம்ப முடியவில்லை.. இல்லை..’ அவர் மனம் கூவியது..

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link