Chapter 24
“என்னால அபிஷேக் அத்தானை மறக்க முடியலண்ணா…”
பொய்மையும் வாய்மையிடத்து என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கைத் துணைக்கு வைத்துக் கொண்டு மனமாரப் பொய் சொன்னாள் சந்தியா…
“என்னது..?!” சுதர்சனம் அதிர்ந்து விட்டான்…
“ஆமாண்ணா.. எப்படியும் அத்தான் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவார்ன்னு நினைச்சேன்.. அவர் நினைப்பினாலதான்.. இவர் காதல் சொல்ல வந்தப்பகூட நான் அதை ஏத்துக்கலை…”
“முட்டாளா.. நீ..? போயும்.. போயும்.. அந்த அல்டாப் ஆறுமுகத்துக்காகவா.. இப்படிப்பட்ட பெரிய மனிதனின் காதலை வேணாம்ன்னு சொன்ன..? காதல் தகுதி பார்த்து வருவதில்லைதான்.. ஆனா.. உன் காதலுக்கு அவன் தகுதியானவன்தானான்னு நீ யோசிக்க வேண்டாமா..? அவன் ஒரு குள்ளநரிம்மா…”
“அது இப்பத்தான எனக்குத் தெரிஞ்சது..? அத்தான் பண்ணிவிட்டுப் போன துரோகத்தை நினைக்கிறப்ப என் மனசே தாங்கலைண்ணா…”
“இதை ஏன் எங்ககிட்டச் சொல்லலை..?”
“சொன்னா நீயும்.. அப்பாவும் போய் அத்தான் கல்யாணத்தை நிறுத்துவீங்க.. அதில எனக்கு இஷ்ட மில்லைண்ணா.. எப்ப நான் வேணாம்ன்னு அத்தான் நினைச்சுட்டாரோ.. அதுக்கப்புறம் அவர் முகத்தில விழிக்கவே எனக்கு விருப்பமில்லை…”
“இந்த மட்டும் ரோசக்காரியாய் இருக்கிறாயே.. சந்தோசம்..”
“இவர் விடாம என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார்.. யோசிச்சேன்.. அத்தானை மறக்கிறதுக்கு இவர் காதலை ஏத்துக்கிறதுதான் சரியான வழியாயிருக்கும்ன்னு எனக்குத் தோணுச்சு.. சரின்னு சொல்லிட்டேன்.. இவர் காதலை ஏத்துக்கிட்டாலும் சந்தோசமாய் இருக்க என்னால் முடியலைண்ணா…”
“பைத்தியமா நீ..? என்கிட்ட சொன்னதைப் போல இதை வெளியே யாரிடமும் உளறி வைக்காதே.. புரியுதா..”
“புரியுதுண்ணா…”
“உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு சந்தியா.. அதை நினைத்து சந்தோசப்படக் கத்துக்க…”
“ஆகட்டும் அண்ணா…”
“அந்த அல்டாப்பு ஆறுமுகமெல்லாம் ஒரு மனிதன்னு அவனை நினைத்துக்கிட்டு சிரிக்க முடியலைன்னு சொல்கிறயே.. அடிதான் வாங்கப் போற..”
“இல்லண்ணா.. இனிமே இப்படிச் சொல்ல மாட்டேன்..”
“நல்லவேளை.. அவன் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வரலை.. இல்லைண்ணா காலம் முழுவதும் அவனைச் சகிச்சுக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாகியிருப்பேன்.. கடவுள்தான் என்னைக் காப்பாத்தினார்..”
“அப்படியா சொல்கிற..?”
“பின்னே..? மாப்பிள்ளைன்னா இவர்தான் மாப்பிள்ளை.. ரகுநந்தனுக்கு என் தங்கையைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம்ன்னு வெளியே சொன்னா என்ன கெத்தாயிருக்கும்ன்னு தெரியுமா..? அந்த அல்டாப்பு ஆறுமுகத்தை அப்படிச் சொல்ல முடியுமா..? காட்..! நினைக்கிறப்பவே நெஞ்சை அடைக்குது..”
அதற்குப் பின்னால் மறந்து கூட சந்தியாவின் முகம் எதற்காக வாடியிருக்கிறது என்ற கேள்வியை சுதர்சனம் கேட்கவில்லை.. அப்படிக் கேட்டால் சந்தியா அபிஷேக்கைப் பற்றிப் பேசி வைப்பாள் என்ற அலர்ஜியினால் அவன் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.. ஒருவழியாக எவன் பெயரைக் கேட்கக் கூட சுதர்சனம் விரும்பமாட்டானோ அவன் பெயரைச் சொல்லி.. தமையனின் வாயை அடைத்து விட்டாள் சந்தியா…
அதன் பின்னால் முழுமூச்சாக தன்னைத் திருமண வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு விட்டான் சுதர்சனம்.. ஒரே நாளில் வீட்டுக்கு வர்ணம் அடித்து.. பழைய பர்னிச்சர்களை மாற்றி.. புதிய பர்னிச்சர்களை இறக்கி.. வீட்டை அழகுபடுத்தி விட்டான்.. வீட்டைச் சுற்றிப் பார்த்த ஜானகிக்கு இது அவர்கள் வீடுதானா என்ற சந்தேகமே
வந்து விட்டது.. அந்த அளவுக்கு வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தையும்.. உட்புறத் தோற்றத்தையும் அவன் மாற்றியிருந்தான்.. வீடு முழுவதும் பெயிண்டிங்குகளை வாங்கி மாட்டியிருந்தான்..
“என் கல்யாணத்துக்கு இதைப் போல எதுவும் செய்யலையே…”
மிகச் சரியாக.. மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு அரைமணி நேரம் முன்பாக வீட்டுக்கு வந்த சூர்யா பொறாமைப் பட்டாள்…
“மிடில் கிளாஸ் மாப்பிள்ளைக்கு அவ்வளவு போதும்ன்னு உங்க வீட்டில நினைச்சிட்டாங்க போல…” சாய்நாதன் அவன் பங்குக்கு குத்திக் காட்டினான்…
‘ஒரு துரும்பைக் கிள்ளிப் போட துணைக்கு வருகிறதில்லை.. உரிமைக் குரல் மட்டும் பொத்துக்கிட்டு வருது…’ சுதர்சனம் எரிச்சலை அடக்கிக் கொண்டு வரவேற்பாக சிரித்து வைத்தான்…
ரகுநந்தன் மிகச் சரியாக ஆறுமணிக்கெல்லாம் வந்து இறங்கிவிட்டான்.. அவன் வீட்டிலிருந்து நான்கு கார்கள் வந்திருந்தன.. அவனுடைய உறவினர்களும்.. பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டதாக அவன் சொன்னான்.. ரகுநந்தனின் அம்மாவான கௌசல்யா சிரித்த முகத்துடன் சாந்த சொரூபியாக இருந்தாள்.. சந்தியாவின் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு அவளைப் பார்த்ததும் பிடித்து விட்டது.. அவளுக்கும் சந்தியாவைப் பார்த்ததும் பிடித்து விட்டது..
“வாம்மா.. இப்படி உட்காரு…”
அன்புடன் சந்தியாவை அழைத்து அவள் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டதில் சூர்யா ஏகத்துக்கும் பொறாமைப் பட்டாள்…
ஓர்நாள்.. ஓர் பொழுதாவது அவளுடைய மாமியாரான வனஜா.. இத்தனை அன்பாக மருமகளை உட்காரவைத்துப் பேசியிருப்பாளா..?
‘ம்ஹீம்.. இவ கொடுத்து வைச்சவ…’
சூர்யா பெருமூச்சை விட.. அந்தப் பெருமூச்சை ரகுநந்தனைப் பார்த்து விட்டாளா.. இல்லை.. அவனுடைய வசதியைப் பார்த்து விட்டாளா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டான் சாய்நாதன்…
“அடுத்த வாரம் நிச்சய தாம்பூலத்தை நடத்திரலாம்.. மாதக் கடைசியில் வருகிற முகூர்த்தத்தில் கல்யாணத்தை முடிச்சிடலாம்…”
ரகுநந்தனின் தாய் மாமா சொல்ல.. கல்யாணராமன் வாயெல்லாம் பல்லாக அதற்கு ஒப்புக் கொண்டார்.. ரகுநந்தன் வைத்த கண் வாங்காமல் சந்தியாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அதை உணர்ந்த அவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை..
திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது… சூர்யாவிற்கு அரசாங்க வேலைக்கான ஆர்டர் வந்து விட்டது.. அவள் சந்தோசத்துடன் பழைய வேலையை விட்டு விட்டு.. புதிய வேலையில் சேர்ந்தாள்.. கல்யாண ராமன் ரீஜினல் மேனேஜராக பொறுப்பேற்றார்.. சுதர்சனத்துடன் போடப்பட்ட அக்ரிமென்டை இன்டர் நேசனல் கம்பெனி நிரந்தரமாக்கியது…
இவை அத்தனையும் சந்தியாவால்தான் சாத்தியமானது என்பதை அறியாமல் அவள் வீட்டார் சந்தோசமாக இருக்க.. மனதில் சந்தோசமில்லாமல் ரகுநந்தனின் மனைவியானாள் சந்தியா…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.