Chapter 27
“ஷட் அப்..” சீறினாள் சந்தியா…
“சந்தியா…” கல்பனா வாயடைத்துப் போனாள்…
“யார்கிட்ட வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க..? என் புருசனின் நிழலைப் பற்றிப் பேச நீ யார்..? அவர் நிழல்கூட எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அன்டர்ஸ்டாண்ட்..? இனியொருதரம் அவர் பெயரை உன் வாயாலே சொன்ன.. கூடப் படிச்சவன்னு கூடப் பார்க்க மாட்டேன்.. வாயைப் பெயர்த்து விடுவேன்.. ஆளைப் பாரு.. ரகுநந்தனாம் ரகுநந்தன்.. ரகுநந்தன்னு அவர் பெயரைச் சொல்ற..? யாருடி நீ..? ஆப்டர் ஆல்.. அவரிடம் உன் வீட்டை விற்று அதில வந்த அதிகப்படி பணத்தில் பிஸினெஸ் பண்ற பிஸினெஸ் மேனின் மகள்.. நீ என் புருசனைப் பத்திப் பேசறயா.. இனியொருதரம் எனக்குப் போன் பண்ணின.. நடக்கிறதே வேற…”
“நான்.. நான்.. உண்மையைத்தான் சொன்னேன்..”
“என்னத்தடி உண்மையைக் கண்டுட்ட.. நீ பெரிய இவ.. உன் பெயரைச் சொல்லித்தான் நான் என் ஆளைக் கவுக்கனுமாக்கும்..? அப்படியொரு காதலே எனக்குத் தேவையில்லைடி.. என் ஆள் என்னை.. எனக்காக மட்டுமே விரும்பிக் காதலிச்சார்.. இன்னும் சொல்லப்போனா இப்ப நீ வாழ்கிற வாழ்வு.. நான் போட்ட பிச்சை.. புரிஞ்சுக்க…”
“என்னது..?!”
“ஆமாம்.. இதைச் சொல்லிக் காட்டனும்னு நான் நினைச்சதே இல்லை.. நீ சொல்லிக் காட்ட வச்சிட்ட.. என் புருசன்.. எனக்காக.. என் பிரண்டுங்கிற ஒரே காரணத்துக்காக.. உன் அப்பா பேசின பேச்சை மன்னித்து.. உங்களுக்கு புது வீட்டை வாங்கித் தந்தார்.. உன் அப்பா பிஸினெஸ் ஆரம்பிக்க பணமும் கொடுத்து.. கடையும் கொடுத்தார்.. இது அத்தனையும் அவர் எனக்காகச் செய்தார்.. இதை உன் மரமண்டையில ஏத்திக்க…”
“இப்படியெல்லாம் பேசாதே சந்தியா…”
“இதைவிட அதிகமா பேசுவேன்.. யார் புருசன் மேலே யார் கண்ணை வைக்கிறது..? என் புருசன் எனக்கு மட்டும் தான் சொந்தம்.. போனை வைடி…”
சந்தியா கோபத்துடன் போனை விட்டெறிந்து விட்டு நிமிர்ந்தாள்.. நிமிர்ந்தவள் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
அங்கே… அறைவாசலில் சாய்ந்து… கைகளை முன்னால் மடித்துக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ரகுநந்தன்…
‘இவன் எப்ப வந்தான்..?’ சட்டென்று முகம் திருப்பிக் கொண்டாள் சந்தியா…
‘வார்த்தைக்கு வார்த்தை.. என் புருசன்.. என் புருசன்னு சொன்னேனே.. அதைக் கவனித்திருப்பானோ.. சும்மாவே ஆடுவான்.. இப்பக் கேட்கவே வேண்டாம்.. டிஸ்கொதேயைப் போட்டுத் தாக்கப் போறான்..’
அழுத்தமான காலடியோசை அவளை நெருங்கியதில் கண்களை இறுக மூடிக் கொண்டு.. விறைப்பாய் உட்கார்ந்திருந்தாள் சந்தியா…
‘கிட்ட வந்துட்டான்.. என்ன செய்யப் போகிறானோ..’
படபடப்புடன் அவள் காத்திருக்க.. அவன் எதுவும் செய்யாமல் அவள் முகத்தை தன் பக்கமாக திருப்பினான்.. கண்விழித்த சந்தியாவின் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. கண் சிமிட்டினான்…
“தூள் கிளப்பிட்டடி.. என் நிழல்கூட உனக்குச் சொந்தமா..? இத்தனை ஆசையை மனதில வைச்சுக்கிட்டு.. ஏண்டி என்னிடம் சொல்லாம மறைச்சு வைச்சிருந்த…” என்று கேட்டான்..
‘இது வேறயா..’ சந்தியா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..
“உன் புருசன் உனக்கு மட்டும்தான் சொந்தம்.. இதை நீ சொல்லி நான் கேட்கும் போது.. மனம் இனிக்குது சந்தியா…”
அவள் தோள் தடவிய கை கீழே இறங்க ஆரம்பிக்க.. சந்தியா விலக முயன்றாள்.. அவன் விடவில்லை.. வேறு வழியில்லாமல் அவன் அணைப்பில் அடங்கினாள்.. ஏனோ தெரியவில்லை.. அந்த நொடியில் ரகுநந்தனின் நெருக்கம் அவளுக்கு துன்பத்தைக் கொடுக்கவில்லை… மாறாக.. அவளுக்குள் ஏற்பட்டிருந்த அதிர்வுக்கான மருந்தாக அது இருந்தது…
அதை உணர்ந்தவனைப் போல ரகுநந்தன் மென்மையாக அவளைக் கையாண்டான்.. இமை மூடிக் கிடந்தவளின் முகத்தில் ஈரமான முத்தத்தைப் பதித்தான்.. உடல் நடுங்க அவனுடன் பிணைந்தவளிடம் தெரிந்த ஒத்துழைப்பில் அவன் கண்கள் மின்னின…
“என் சந்தியா…”
உணவை மறந்து.. பிரயாணத்தை மறந்து.. அதற்கான உடைகளை அடுக்க வேண்டும் என்பதை மறந்து அவர்கள் பின்னிப் பிணைந்தார்கள்..
விலகி எழுந்தபோது ரகுநந்தனின் முகத்தில் நிலவிய திருப்தியில் சந்தியா முகம் சிவந்தாள்.. குளித்து உடை மாற்றி.. அவர்கள் பெட்டிகளில் பிரயாணத்துக்குத் தேவையான உடைகளை அடுக்கி வைத்துவிட்டு நிமிர்ந்த போது உணவு நேரம் வந்து விட்டிருந்தது…
“கீழே சாப்பிடப் போகலாமா..? இன்னைக்கு ஃபாரின் கிளம்பறோம்.. அம்மா கூடச் சேர்ந்து சாப்பிடலாமே..” ரகுநந்தன் சொன்னான்..
“ஃபாரினா..?” சந்தியா விழி விரித்த போது…
“யெஸ்.. சுவிட்சர்லாந்த் போறோம்…”
ரகுநந்தன் வலது கையை கீழிருந்து உயர்த்தி விமானம் பறப்பதைப் போல சைகை செய்து காண்பித்து விட்டு வாயால் “விஷ்ஷ்..” என்று சப்தம் எழுப்பியபோது அதைப் பார்த்த சந்தியாவிற்கு.. இவன்தான் எத்தனை உற்சாகமானவன் என்று தோன்றியது..
சாம்பல் வண்ண ஜின்ஸீம்.. காபிக் கொட்டை கலரில் சட்டையும் அணிந்திருந்தவனிடம் தெரிந்த கவர்ச்சியில் அவள் மனம் லயித்தது..
‘இந்தக் கவர்ச்சியிலதான் கல்பனா மயங்கினாளோ..’ என்று நினைத்தவளுக்கு அந்த நினைவே பிடிக்கவில்லை..
“என்னடி பார்க்கிற.. அத்தான் அசத்தலா இருக்கிறேனா..?” அவன் புருவங்களை உயர்த்தியதற்கு அவள் எந்தவொரு பதிலையும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்…
அவன் புருவங்கள் முடிச்சிட்டன.. ஒற்றை விரலில் அவள் முகவாயைத் தூக்கி.. உற்றுப் பார்த்தவன்…
“ஏன்.. என்னை அத்தான்னு கூப்பிட மாட்டியா..?” என்று கண்டனைக் குரலில் கேட்டான்…
சந்தியா அவன் கைகளைத் தட்டிவிட்டு அறையை விட்டு வெளியே போக முயன்றாள்.. அவன் முகத்தில் கடுமை பரவியது…
“நில் சந்தியா..” அதட்டினான்…
அவள் நின்றாள்.. திரும்பிப் பார்க்கவில்லை.. அழுத்தமான நடையுடன் அவளருகே வந்தவனின் முகத்தில் கோபம் கனன்றது…
“அவனை மட்டும்தான் அத்தான்னு சொல்லுவியா..?” என்று அவன் கேட்டான்…
‘அவன்’ என்று ரகுநந்தன் யாரைக் குறிப்பிடுகிறான் என்ற புரிதலில் சந்தியாவின் உடல் நடுங்கியது…
அது உண்மைதானே.. ‘அத்தான்..’ என்றால் அந்த அபிஷேக்கின் ஞாபகம்தானே அவளுக்கு வந்து தொலைக்கிறது..?
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.