Chapter 01
எத்தனையோ பெயர்கள் உலகத்தில் இருக்க… அந்த ஊருக்கு “கரிச்சான் பட்டி..’ என்று யார் பெயர் வைத்தார்களோ.. தெரியவில்லை..
ஆனால் பெயருக்கும்.. ஊருக்கும் சம்மந்தமில்லாமல் அந்த ஊர் அழகாக இருந்தது..
பச்சைப் பசேலென்ற.. பரந்த வயல்கள்.. அதில் தேங்கி நிற்கும் தண்ணீர்.. ஒற்றைக் காலையூண்டி.. தவம் செய்யும் முனிவர்களைப் போல தோற்றமளிக்கும் நாரைகள்.. ஊரின் ஒருபக்க எல்லையில் இருக்கும் மலை.. அந்த மலையின் மீது லட்சுமி சமேதராக வாசம் செய்யும் பெருமாள்.. மறுபக்க எல்லையில் இருக்கும அருவி.. அதையொட்டிய காடு.. அருவித் தண்ணீர் கொட்டும் இடத்தில் தேங்கி நிற்கும் பூங்குளம்.. அதைத்தாண்டி ஓடும் ஆறு.. என.. அந்த கரிச்சான் பட்டியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. எனலாம்..
இப்படியாகப்பட்ட அழகையும்.. பெயரையும் உடைய அந்த கிராமத்தில்.. சினிமாக்களில் வருவதைப் போல.. சின்னப் பண்ணையார் வீடு.. பெரிய பண்ணையார் வீடு என… இரண்டு பண்ணையார்களின் வீடுகள் இருந்தன..
அந்த இரண்டு பண்ணையார்களையும் பெற்ற பெரிய பண்ணையார் உயிரோடு இருந்த காலத்தில்.. அந்த ஊரில்.. ஒரு பண்ணையார் வீடுதான் இருந்தது…
அவரின் காலத்திற்குப் பின்னால்.. அவருக்குப் பிறந்த மகன்கள் இருவரும்… பாகப் பிரிவினை செய்து கொண்டு… தனித் தனி வீடுகளில் குடியேறினார்கள்..
அண்ணனின் வீடு..பெரிய பண்ணiயாரின் வீடாகி விட.. தம்பியின் வீடு.. சின்னப் பண்ணையாரின் வீடாக மாறியது..
இப்படி.. ஒரு பண்ணையார் வீட்டை.. இரண்டு பண்ணையார் வீடாக மாற்றிய பெருமையுடைய .. அந்த அபூர்வ சகோதரர்கள் இருவரும்.. ஒருவரோடு .. ஒருவர் பேசிக் கொள்வதில்லை..
அவர்களையும் தாண்டி.. மூன்றாவது வீடு ஒன்று இருந்தது…
அது.. அவர்களின் கூடப் பிறந்த அக்காவின் புகுந்த வீடு..
எங்கே.. எப்படி.. ஆரம்பித்தது என்று தெரியாமல்.. அண்ணனும் தம்பியும் பகையாளியாகி விட்டனர்.. அவர்கள் இருவருமாகச் சேர்ந்து அவர்களின் அக்கா குடும்பத்தையும் பகைத்துக் கொண்டனர்..
அவர்கள்தான் பகையாளி என்றால்.. அவர்களின் காடுகரை.. தோப்பு துரவு.. வயல் வரப்பு.. என்று கழனியிலே விவசாய வேலை செய்யும் பாமர மக்களையும் பகையாளிக்கி விடத் துடித்துக் கொண்டிருந்தார்கள்..
‘ஏண்டா பரமா..”
‘என்னங்கய்யா..”
‘நேத்து உன்ன.. மேலத்தெரு பொன்னயன் கூடச் சேர்த்து பார்த்தேனே..”
‘அதுவாங்கய்யா.. சந்தைக்கு போயிட்டு திரும்பி வந்தேன்.. அவனும் கூட வந்தான்.. பேச்சுத் துணைக்கு ஆளாச்சேன்னு பேசிக்கிட்டே வந்தோமுங்க..”
‘உனக்கு பேச வேற ஆள் கிடைக்கலியாக்கும்.. இருந்திருந்து அந்த சின்னப் பண்ணை வீட்டில வேலை செய்கிறவன்தான் கிடைச்சானாக்கும்..”
‘அப்படியில்லீங்கய்யா..”
‘வேற எப்படி..?”
நண்டுப்பிடி.. நண்டுப்பிடி.. என்பார்களே.. அந்தப் பிடியை போடுவதில் பெரிய பண்ணையார் சிதம்பரநாதன் மகா கில்லாடி..
அப்படிப்பட்ட உடும்புப் பிடியில் மாட்டிக் கொண்ட பரமன் பேச்சு வராமல் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டவனாக திணறிப் போனான்..
அவனும்தான் என்ன பண்ணுவான்..? பக்கத்து ஊர் சந்தைக்குப் போய் திரும்பும் வழியில்.. அருவிக்கரை காடிருந்தது..
அந்தக் காட்டுக்குள் பல பேய்கள் உலவுகின்றன என்ற கதையும் இருந்தது..
உச்சிப் பொழுதில் அந்தக காட்டைக் கடக்க நேர்நதவன்.. வழித்துணையாய் வருபவன் பகையாளியாய் இருந்தாலும் பேசித்தானே ஆகவேண்டும்..?
வந்தவனோ.. பகையாளியில்லை.. அவன் வேலை செய்யும் பண்ணையார்தான்.. பரமனின் எஜமானனுக்கு பகையாளி..
பெருந்தலைகள் அடித்துக் கொண்டால்.. கைத்தடிகளும் அடித்துக் கொள்ள வேண்டுமென்று சட்டமிருக்கிறதா என்ன..?
‘என்னப்பா.. பொன்னய்யா.. எங்கே இந்தப் பக்கம்..?”
‘அருவிக்கரைக்கு காத்தாட வந்தேன்னு சொன்னா.. நீ நம்பப் போறியாக்கும்..?”
‘அதுக்கெல்லாம்.. உனக்கும்.. எனக்கும் நேரமிருக்கா..?”
‘தெரியுதில்ல.. அப்புறம் எதுக்கு கேள்வி கேட்கிறவன்..? உன்னப் போல.. நானும் சந்தையில் சாமான் வாங்க வந்தவன்தான்..”
‘என்னா வெயிலு..”
‘ஆமாம்பா.. கொளுத்தித் தள்ளுது..”
‘இப்பவே இப்படி வெயிலடிச்சா.. சித்திரை மாசத்து கத்தரிவெயிலை மனுசக் கழுதை எப்படித் தாங்குமாம்.. நீயே சொல்லு..”
‘என்னத்தை சொல்ல..? நிக்காம மழை கொட்டினாலும் கஷ்டமாத்தான் இருக்கு.. இப்படி வெயிலு வறுத்தெடுத்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கு.. மனுசப் பொறப்பா பொறந்திட்டோம்.. அனுபவிச்சுத்தானே ஆகனும்.. தப்பிப் பிழைச்சு.. எங்கே ஓட முடியும்..?”
‘அஃதைச் சொல்லு..”
இந்த ரீதியில்தான் பரமனும்.. பொன்னயனும் பேசிக் கொண்டு வந்தார்கள்…
ஆனால்.. அதை நம்ப சிதம்பரநாதன் தயாராக இல்லை..
‘அவன்கிட்ட அம்புட்டுத் தூரத்துக்கு கொஞ்சிக் குழாவி பேசிக்கிட்டு வந்தியே.. என்ன பேசின..?”
என்னவென்று அவன் சொல்லுவான்..? சித்திரை மாதத்து கத்திரி வெயிலைப் பற்றிப் பேசினோம் என்றால் சிதம்பரநாதன் அதை நம்பவா போகிறார்..
“என்னடா பொழைப்பு இது..’ அவன் மனதிற்குள் நொந்து போனான்..
“உழைக்கிறோம்.. கூலியை வாங்கறோம்.. இதில… அங்கே வேலை பாக்கறவன் கூடப் பேசாதே.. இங்கே வேலை பார்க்கிறவன் கூடப் பேசாதேன்னு.. தடையுத்தரவு போட்டா என்னதான் செய்யறது..’
‘என்னடா.. பேச்சையே காணோம்..”
‘அவன்கூட அப்படியொன்னும் முக்கியமான பேச்சை.. பேசிப்புடலங்கய்யா..”
‘அதக்கூட.. கழுதை.. ஏன் அவன்கிட்ட பேசனும்..”
‘தப்புத்தாங்கய்யா..”
‘போன வாரம் அப்படித்தான்.. கீழத்தெரு முனுசாமிக்கிட்ட சொந்தம் கொண்டாடி பேசிக்கிட்டு நின்ன..”
‘ஐயா.. அவன் எனக்கு சொந்தக்காரன் தானுங்களே..”
‘எப்படிடா சொந்தம் வருது..?”
‘என் சின்னம்மா மகளைத்தான்.. அவனோட பெரியப்பன் மகனுக்கு கொடுத்திருக்காங்கய்யா..”
‘இது ஒரு சொந்தாமாடா.. “
“அது சரி.. கூடப் பிறந்த தம்பியையே தள்ளி வச்சிருக்கீங்க.. உங்களுக்கு.. இதெல்லாம் ஒரு சொந்தமில்லைதான்..’
‘என்னடா திரும்பவும் வாயடைச்சுப் போயிட்ட..?”
“உங்க முன்னாலே.. மனுசன் பேச முடியுங்களா..?’
‘அந்த முனுசாமியும் அவன் கிட்ட வேலை செய்யறவன்தான்..”
“இந்த ஊரிலேயே.. உங்க மூணு வீடுதான பெரிய வீடா இருக்குது.. ஊருல இருக்கற விவசாய வேலை செய்யறவன்.. உங்க மூணு வீட்டிலே.. எதிலயாவது ஒண்ணில்தான் வேலை பார்த்துத் தொலைக்கனும்.. நீங்க மூணு பேரும் தான் அடிச்சுக்கிட்டு கிடக்கறீங்க.. ஆனா.. உங்ககிட்ட வேலை பார்க்கிறவனுங்க எல்லோரும்.. அண்ணன்.. தம்பி.. மாமன்.. மச்சான்னு.. ஒன்னுக்குள்ள ஒன்னா.. சொந்த பந்தமா இருந்து தொலைக்கிறாங்களே.. அவனுகளையும் அடிச்சுக்கிட்டு மண்டையை உடைச்சு.. குடுமியைப் பிடிங்கடான்னு சொல்லி.. கொலை
வெறி பிடிச்சு அலைஞ்சீங்கன்னா என்ன செய்து தொலைக்கிறது..? எங்கேயாவது.. காடே.. பரதேசமேன்னு.. ஓடிட வேண்டியதுதான்..’
‘உன்கிட்;ட சொல்லி வைக்கிறேன் பரமா..”
” எதைச் சொல்லி வைக்கறீங்க.. ‘
‘அவனுககிட்டயிருந்து.. நாலு அடி தள்ளியே நில்லு..”
” அளந்து பார்க்க… குச்சியிருந்தா.. அதையும் குடுத்துருங்கய்யா.. உங்களுக்கு கோடி புண்ணியமா போயிரும்.. ‘
‘நீ.. பாவம்..”
” உங்ககிட்ட வேலை பார்க்கிறேனில்ல.. பாவப்பட்ட பிறவியாத்தான் இருப்பேன்.. ‘
‘யதார்த்தமானவன்..”
“என்னடா இது.. பெரிசு.. நல்லதா.. ஒருவார்த்ததை சொல்லுது.. இதில ஏதாவது வில்லங்கம் இருக்கனுமே..’
‘ஆனா அவன்கிட்ட வேலை பார்க்கிறவன் உன்னைப் போல யதார்த்தமானவனா இருக்க மாட்டான்..”
“அதானே.. பார்த்தேன்.. இதுக்குத்தான் என்ன ரொம்ம்ப.. நல்ல்ல்வன்னு சொன்னீங்களா..?’
‘உன் வாயைக் கிளறப் பார்ப்பான்..”
“அது எதுக்காம்..?’
‘இங்கே நடக்கிறதையெல்லாம் உன் வாயிலிருந்து பிடுங்கப் பார்ப்பான்..”
“பிடுங்கி என்ன செய்யப் போகிறானம்..? அடப் போங்கய்ய்h..’
‘அப்படியே அங்கே போய் கொட்டுவான்…”
“ஆக.. உங்ககிட்ட கூலிக்கு வேலை செய்கிற எங்களுக்கு போட்டுக் கொடுக்கிற புத்திதான் இருக்குமுன்னு ஒரு முடிவோட இருக்கீங்க.. எங்களுக்கு இது தேவையாய்யா..’
‘அதனால பார்த்து நடந்துக்க..”
“சொல்லிட்டிங்கல்ல.. இனி.. அங்கே வேலை செய்கிற எவன் கூடப் பேசினாலும்.. அக்கம் பக்கம் உங்க தலை தெரிகிறாதுன்னு பார்த்துதானே பேசுவேன்..’
பரமன் தலைவலியோடு வீட்டுக்குப் போனான்..
அன்று மாலையில் பரமனைச் சந்தித்த பொன்னயனும் முனுசாமியும் இதே பாட்டைத்தான் அவர்களின் எஜமானர்களிடம் கேட்டுக் கொண்டார்கள் என்பதையறிந்த பின் பரமனுக்கு.. தலைவலி கொஞ்சம் குறைந்தது..
“ஆயுh.. இவனுகளும் மாத்து வாங்கியிருக்கானுக..’
யான் பெற்ற துன்பம்.. பெறுக.. மற்றவனும்.. என்ற தமிழனின் பாரம்பர்யமிக்க மனப் போக்கை கொண்டிருந்த பரமன் மகிழ்ந்து போனான்..
அதற்குப்பின்.. அந்தப் பண்ணையார்களின் இரண்டு வீடுகளிலும்.. அவற்றைத் தவிர்த்த.. மூன்றாவது வீட்டிலும் வேலை பார்க்கிற வேலையாள்கள்.. மற்றவர்கள் பார்க்க பேசிக் கொள்ளக் கூடாது என்றும்.. காதலர்களைப் போல… யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்று பேச வேண்டும் என்றும்.. ஒரு மனதாக அவர்கள் கூடிப் பேசி முடிவெடுத்து அதையே செயல் படுத்தவும் ஆரம்பித்தார்கள்..
அவர்கள்தான் பண்ணையார்கள்.. ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்றால்.. அவாகளுக்கு சமமான வசதியையுடைய மூன்றாவது வீடான.. கேசவ மூர்த்தியுடன்.. இரண்டு பண்ணையார்களுமே வம்புக்கு போவார்கள்..
அதற்கு கேசவமூர்த்தியின் மனைவியான அந்த இரு பண்ணையார்களின் கூடப் பிறந்த சகோதரியான மரகதம்தான் கணவனிடம் பேச்சு வாங்குவாள்..
‘ஆயிரம்தான் இருந்தாலும் அவனுக என் தம்பிக..”
‘அதுக்காக.. அவனுக எதைச் செய்தாலும் நான் பொறுத்துக்கிட்டுப் போகனுமா..?”
‘நீரடிச்சு நீர் விலகாதுங்க..”
“கல்லடிச்சா.. கல் விலகும் மரகதம்.. உன் தம்பிகளும் தண்ணியில்ல.. நானும் தண்ணியில்ல..”
“அவனுகதான் புத்தி கெட்டுப் போய் கூடப் பிறந்தவன்னு கூடப் பார்க்காம.. முறுக்கிக்கிட்டு அலைகிறானுகன்னா… நீங்களும் அப்படியே இருக்கனுமா..?”
‘ஏண்;டி.. உன் தம்பிகளுக்குத்தான் சூடு.. சொரணை இருக்கனும்.. எனக்கு அது இருக்கவே கூடாதுன்னு முடிவே பண்ணிட்டியா..?”
‘ஏங்க இப்படிப் பேசறீங்க..? நான் அப்படியா சொன்னேன்..?”
‘நீ சொன்னாலும்… சொல்லுவேடி… உன் கழுத்தில் தாலியைக் கட்டிட்டேனில்ல.. நீ இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ..”
உரலுக்கு ஒருபக்கம் தான் இடி.. மத்தளத்துக்கோ.. இரண்டு பக்கமும் இடி..
மரகதத்தின் நிலையும்.. அப்படித்தான் ஆகிப் போனது.. அவள்.. கூடப் பிறந்தவர்களுக்கும்.. கணவனுக்கும் இடையே மாட்டிக் கொண்டு.. பாடாய் பட்டாள்..
மூன்று வீடுகளும்.. மூன்று துருவங்களாய் முறைத்துக் கொண்டு நின்றன..
அண்ணன் வீட்டுக்கு தம்பி போக மாட்டார்.. தம்பியின் வீட்டுப் பக்கம் அண்ணன் தலை வைத்துக்கூடப் படுக்க மாட்டார்.. இந்த இருவரும் ஒன்று சேர்ந்த மனமாக.. கூடப் பிறந்தவளை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்..
‘என்ன குடும்பம்டா இது..”
இந்தக் கேள்வியைக் கேட்காத ஆளே அந்த ஊரில் இல்லை..
‘அடிச்சாலும்.. பிடிச்சாலும்.. ஒன்னாய் சேர்ந்துக்கனும்.. அதுதான் குடும்பம்.. சொந்த பந்தமுன்னு இருந்தால்.. புகைச்சல் வரத்தான் செய்யும்.. அதுக்காக.. சொந்த பந்தத்தையே தூக்கி எறியனுமுன்னா… அது சரியில்லாத சோலியாச்சே..”
இதையெல்லாம்.. மூன்று வீட்டு ஆண்களிடமும் சொல்ல யாருக்கும் வாய் வராது..
‘நமக்கெதுக்கு பெரிய வீட்டு பொல்லாப்பு.. நமக்கு இருக்குப்பா.. ஆயிரம் சோலி.. அவங்ககிட்ட புத்தியைச் சொல்லிட்டு.. ஏன் வாங்கிக் கட்டிக்னும்.. அது என்ன தேவைக்குப்பா..”
அவர்கள் புத்திசாலி ஜனங்கள்..
அந்த மூன்று வீட்டின் விவகாரங்களில் தலையிட்டு மூக்கை உடைத்துக் கொண்டு.. பிழைப்பை கெடுத்துக் கொள்ள அவர்களில் யாருமே முன் வரவில்லை..
இப்படிப்பட்ட வரலாற்றை உள்ளடக்கிய.. அந்த கரிச்சான்பட்டி கிராமத்திற்கு போகும்.. சாலையை ஒட்டிய மெயின் ரோட்டில்.. டவுனிலிருந்து வரும் பஸ் வந்து நின்றது..
அந்த பஸ்ஸிலிருந்து இறங்கினாள் அந்தப் பெண்..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.