Chapter 13
என்ன நடக்கிறது என்று நிவேதா உணரும் முன்னாலேயே.. கார்த்திகேயன்.. குனிந்து..அவளது இதழ்மீது இதழ் பதித்து முத்தமிட்டு விட்டான்..
நிவேதாவின் உடல் நடுங்கியது.. அவளுக்குள் ஒரு பிரவாகம் பொங்கி எழுந்தது.. அவளுக்கு எதிரில் கொட்டிக் கொண்டிருந்த அருவி.. அவளுக்குள் பேரிரைச்சலுடன் கொட்டிக் கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்..
அவனைத் தள்ளி விட வேண்டுமென்று நினைத்தாள்.. அதை செயல்படுத்த முடியாமல் கைகள் தொய்ந்து விழ.. தளர்ந்து நின்றாள்.. அவன் முகத்திலிருந்து.. முகம் விலக்கிக் கொண்டு விட வேண்டுமென்று மனம் துடித்தாள்.. மாறாக.. கண்கள் மூடிக் கிறங்கிப் போனவளாக அவன் தோள் சாய்ந்து நின்று விட்டாள்..
அவளிடமிருந்து எதிர்ப்பு வராமல் போகவும்.. அவனது அணைப்பு இன்னும் இறுகியது.. அவன் மீண்டும் அவளது இதழ்களைத் தேடிக் குனிந்தான்.. அவனது முதுகில் அவளது கரம் பரவியதில்.. அவன் கை தைரியம் பெற்று முன்னேறியது..
எந்த நொடியில் அவள் தன்னுணர்விற்கு மீண்டாளோ.. அவளே அறியவில்லை.. எத்தனை நேரமாக அவன் பிடியில் கட்டுண்டிருந்தாள் என்பதையும் அவள் அறியவில்லை..
அவனது நீண்ட முத்தம்.. முடிவடையாமல் இருக்கும்போதே.. அவள் சுய உணர்விற்கு மீண்டவளாக அவனைத் தள்ளி விட்டு.. விலகி நின்றாள்..
‘நிவேதா..” அவன் மயங்கிய குரலில் அழைத்தபடி அவளருகே வர முனைந்தான்..
‘;நில்லுங்கள்..” அவள் ஒரு கையை முன்னால் நீட்டி ஆணையிட்டாள்..
‘இன்னும் ஒரு அடி.. என் பக்கமாக நீங்கள் எடுத்து வைத்தாலும்.. நான் சொல்லாமல்.. கொள்ளாமல் இந்த ஊரை விட்டே போய் விடுவேன்.. ” அவள் குரலில் திடம் இருந்தது..
‘நிவேதா..” அவன் அதிர்ந்தான்..
‘நீங்க மோசக்காரர்..” அவள் குமுறினாள்
‘தனியாக உங்கனை நம்பி வந்த என் தனிமையை பயன் படுத்திக்க பார்க்கறீங்க.. இதை உங்ககிட்ட நான் எதிர்பார்க்கவில்லை..”
‘இப்ப நான் சொல்வதைக் கேளு நிவி..”
‘வேண்டாம்.. என் பெயரை சுருக்கிக் கூப்பிடாதீங்க.. உங்களுக்கு அதுக்கெல்லாம் உரிமையில்லை..” கடினமான குரலில் அவள் பேசினாள்..
சற்று முன்தான்.. அவள் அவன் கைக்குள் கண் மூடி கிறங்கி நின்றாள்.. அவனது முத்தத்திற்கு முகம் கொடுத்து விலகாமல் தோள் தொட்டு நின்றாள்.. அதை நொடியில் மறந்து விட்டு.. அவனுக்கு அவள் மேல் உரிமையில்லையென்று சொல்கிறாள்..
“என்ன மாதிரியான பெண்.. இவள்..’ அவன் மனம் கசந்தான்..
‘நான்..? உன் தனிமையை பயன்படுத்திக்க நினைத்தேன்..? பெரிய வார்த்தையை பேசுகிறாய் நிவேதா.. இப்பத்தான் நம்ம மத்தியில தனிமை வந்ததா..? இந்த அருவிக் கரையில் ஒன்றரை மணி நேரமா.. நீயும் நானும்.. தனியாத்தான் உட்கார்ந்திருக்கிறோம்.. உன் தனிமையை பயன்படுத்திக்க நினைச்சிருந்தா.. அப்பவே.. உன்னைத் தொட்டிருக்க மாட்டேனா..?”
‘இதெல்லாம் பேச்சில சேர்த்தியில்லை..”
‘வேற எதுதான் சேர்த்தி..? நீயே சொல்லு..”
‘இப்படித்தானே.. அந்தப் பெண்ணையும் ஒருவன் ஏமாற்றினான்..?”
‘எந்தப் பெண்ணை..?”
‘அந்தப் பாட்டு பாடிய பெண்ணை..”
கார்த்திகேயன் சட்டென்று அவளது மனநிலையை புரிந்து கொண்டான்.. அவளிடமிருந்து விலகி நின்று..
‘நட.. போகலாம்.. ” என்றான்..
அவளை முன்னால் விட்டு.. பின்னால் அவன் வர முனைந்ததில் அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது..
‘எதுக்கு.. என்னை முன்னால் போகச் சொல்றீங்க.. இதில் ஏதோ விசயமிருக்கு..” என்றாள் சந்தேகக் குரலில்..
அவனுக்கு “சுர்’ரென்று கோபம் வந்து விட்டது..
‘ஏய்ய்.. நடடி..” என்றான்..
‘என்னது.. “டீ’யா…?” அவள் அதிர்ந்தாள்..
‘ஆமாண்டி.. உன்னோடு குடும்பம் நடத்த ஆசைப்பட்டு முன்னால் நடன்னு நான் சொல்லவில்லை.. இருட்டு நேரம் .. அருவிக்காடு.. என் கண் பார்வையில் நீ நடப்பதுதான் உனக்கு பாதுகாப்பு.. அதுனாலதான் உன்னை முன்னால் விட்டு நான் பின்னால் வருகிறேன்.. ரொம்ப் பேசினேன்னு வை.. இந்த அருவிக் கரையிலேயே உன் கூட முதலிரவை கொண்டாட ஆரம்பிச்சுருவேன்.. எப்படி வசதி..? வழியோடு போனவனை… தோட்டத்துக்கு பாட்டு கேட்கப் போகிறேன்.. துணைக்கு வான்னு கூப்பிட்டவள் நீ.. வேலை முடிந்ததும் வீடு போய் சேராம.. அருவிக் கரைக்கு போகலாம் வாடான்னு அடம் பிடிச்சு கூப்பிட்டுக்கிட்டு வந்தவள் நீ.. அருவியைப் பார்த்ததும் நகராமல் பாறையில் உட்கார்ந்து கதை பேச ஆரம்பிச்சவ நீ.. இருட்டில் கால் தடுக்கி என் மேல சாய்ஞ்சு நின்னவ நீ.. இத்தனையும் நடந்தா ஒரு மனுசன் எப்படி தாங்குவான்..? நானென்ன மனுசனா.. இல்லை மெஷினா..? எனக்கும் உணர்ச்சிகள் இருக்காதா..? இவ்வளவு பேசுகிறவ நான் தொட்டபோதே தட்டி விட்டு.. விலகிப் போயிருக்க வேண்டியதுதானே.. இவ்வளவு நேரமும் ஏன் பேசாம என் தோள் மேல் கை போட்டு நின்ன..?”
நிவேதாவின் முகம் லஜ்ஜையால் சிவந்து விட்டது.. அவள் வேகமாக காரை நோக்கி விரைந்தாள்.. கார்த்திகேயன் காரைக் கிளப்பிய விதத்தில் அவனது கோபத்தின் பரிணாமம் தெரிந்தது..
வீட்டு வாசலில் இறங்கியவள் அவன் முகம் பாராமல் உள்ளே விரைந்து விட்டாள்.. அவனும் காரை எடுத்துக் கொண்டு வெளியில் போய் விட்டான்..
இரவு உணவுக்கு அவன் வீட்டுக்கு வரவில்லை..
‘உன் அண்ணன் சாப்பிட வரலையேடி..” மீனாட்சி கவலைப் பட்டாள்..
‘அது ஊர் சுற்றிவிட்டு இருக்கும்மா.. எனக்கு óரியைப் போடு..”
‘கார்த்தி எங்கே போனான்.. ? இன்னுமா வீட்டுக்கு வரலை..?”
தொழில் சம்மந்தமாக அவனிடம் கேள்வி கேட்க வந்த சிதம்பரநாதன் முகம் சுளித்தார்.. மீனாட்சி பதட்டத்துடன் கையை பிசைந்தாள்..
‘அவனுக்கு போனைப் போடுய்யா..” கணக்கப் பிள்ளையைப் பார்த்துச் சொன்னான் சிதம்பரநாதன்..
‘சுச்சு ஆப்புன்னு பதில் வருதுங்க ஐயா..” கணக்குப்பிள்ளை ஆங்கிலத்தை கொலை செய்தார்..
‘போனை ஆஃப் பண்ணிட்டு எங்கே சுத்தறான்..? நீ இதையெல்லாம் கேட்க மாட்டியா..?” சிதம்பரநாதன் மனைவியை முறைத்தார்..
‘எப்பவும் இப்படி அவன் லேட்டா வந்ததில்லீங்க..”
‘இன்னைக்கு வரலையே.. இதுக்கு என்ன சொல்ற…?”
‘ஏதாச்சும் வேலை வந்திருக்கும்.. இல்லைன்னா கார்த்தி அநாவசியமா வெளியே தங்க மாட்டான்..”
‘அது எனக்கும் தெரியும்.. நீ சொல்லி என் மகனைப் பத்தி நான் தெரிஞ்சுக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லை..”
“பதில் சொன்னது ஒரு குத்தமா..’ மீனாட்சி தன் தலைவிதியை நொந்தபடி பேசாமல் நின்றாள்..
‘ஒரு முக்கியமான விசயம் பேசலாமுன்னு வந்தேன்.. இன்னைக்குன்னு அவனைக் காணோம்.. இதுதான் சோதானைங்கறது.. யோவ்.. கணக்கு..”
‘என்னங்கய்யா..”
‘நீ போயிட்டு காலம்பர வா.. இவன் எப்ப வருவான்னு இந்த வீட்டில யாருக்கும் தெரியலையாய்.. பிள்ளை வளர்க்கிற லட்சணம் அப்படி..”
கணக்குபிள்ளை போய் விட்டாலும்.. சிதம்பரநாதனின் கோபம் போய் விடவில்லை.. தேடிவந்த நேரத்தில் கார்த்திகேயன் இல்லாத கோபத்தை அவர் மீனாட்சியிடம் காட்டினார்..
‘என்னத்தை பிள்ளை வளர்த்து வச்சிருக்கவ… இருட்டினப்புறமும் வீடு வந்து சேரலைன்னா எப்படி..?”
‘இதுவரைக்கும் கார்த்தி இப்படிப் பண்ணினது இல்லையே..”
‘இன்னைக்கு கதையைப் பேசு..”
‘என்னன்னு எனக்கெப்படித் தெரியும்..”
‘அதைத் தெரிஞ்சுக்காம எண்ணத்தை குடும்பம் நடத்தறவ..”
“ஏன் நீங்க தெரிஞ்சு வைச்சுக்க வேண்டியதுதானே.. வார்த்தைக்கு வார்த்தை வாய் கிழிய.. என் மகன்.. என் மகள்ன்னு பெருமை பேசத் தெரியுதில்ல.. அப்ப பிள்ளைகளைப் பத்தியும் தெரிஞ்சு வைச்சுக்கனும்.. சும்மா.. வளர்த்த லட்சணம் சரியில்லைன்னு வாய் பேசினா மட்டும் பத்தாது.. வளர்த்துப் பார்க்கனும்.. அப்பத் தெரியும் பொம்பளைக படற கஷ்டம் என்னான்னு..’
வழக்கம் போல மனதிற்குள் பொரிந்து தள்ளினாள் மீனாட்சி இதையெல்லாம் சிதம்பர நாதனிடம் பேசிவிட்டு.. அவள் தப்பித்து விட முடியுமா என்ன.. ? மனதிற்குள் திட்டித் தீர்க்கும் வரத்தை கடவுள் அவளுக்கு கொடுத்திருக்கவில்லையென்றால்.. அவளுக்கு எப்போதோ பைத்தியம் பிடித்துத் தொலைத்திருக்கும்..
‘பிள்ளையைப் பெத்திட்டா மட்டும் போதாதுடி.. வளர்க்கவும் தெரியனும்..”
“ஏன்.. நீங்க வளர்த்திருக்க வேண்டியதுதானே.. பத்து மாசம் வயித்தில் சுமந்தது பத்தாது.. செத்துப் பிழைச்சது பத்தாதுன்னு.. அந்தப் பிள்ளை நடை பழகற வரைக்கும் இடுப்பில சுமக்கிறவ பொம்பளை.. அது நடைபழகின பின்னாலே.. அதுக்குப் பின்னாலே நடையாய் நடந்து.. நிலாவைக் காட்டி கதை சொல்லி.. சோறூட்டி வளர்க்கிறவ பொம்பள.. அது வளர.. வளர அதுக்கு தேவையானதை கவனிச்சு ஆளாக்கிறவ பொம்பள.. தாயில்லாத பிள்ளைதாங்க தவிச்சுப் போயிடும்.. அப்பனில்லாத பிள்ளையைக் கூட யாரும் அநாதைன்னு பரிதாபம் காட்ட மாட்டாங்க.. தாயில்லாத பிள்ளைன்னா.. ஐயோ பாவம்.. தாயில்லாத பிள்ளையாமேன்னு பரிதாபம் காட்டுவாங்க.. இதெல்லாம் உங்களப் போல இருக்கிற ஆம்பளைக்கு எங்கே தெரியப் போகுது..’
ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்ததைகளை மனதிற்குள் மனைவி பேசித் தள்ளுகிற மர்மம் புரியாமல் தன் வார்த்தைக்கு அவள் எதிர் வார்த்தை பேசவில்லை என்ற பெருமித்தோடு.. மனைவியை
“அஃது.. அந்த பயம் இருக்கட்டும்..’ என்று எச்சரிக்கை செய்யும் பார்வையைப் பார்த்தபடி.. மீசையை முறுக்கியபடி அகன்றார் சிதம்பரநாதன்..
“அப்பா.. ஒரு வழியாய் வசவு நின்னது..’ என்ற நிம்மதியுடன் மகளைப் பார்த்து..
‘நீயேண்டி என்னையே பார்த்துக்கிட்டு அப்படியே உட்கார்ந்திருக்கிற.. சாப்பிடுடி..” என்று அதட்டினாள் மீனாட்சி..
‘அப்பா ஏம்மா.. உன்னைத் தினமும் இப்படி வையறாரு..”
‘ம்ம்ம்.. எனக்கு அப்படியொரு வேண்டுதல்.. நீயும் ஏண்டி என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிற.. சாப்பாட்டை முதலில் கொட்டிக்க..”
‘என்மேல ஏம்மா கோபப்படறே..”
‘வேற யார் மேல கோபப்பட..? உங்கப்பா மேல கோபப்பட முடியுமா..? ஆகாத கோபத்தை பெத்தவ யார் மேல காட்டுவா.. பிள்ளைக மேலதான் காட்டுவா.. ஏண்டி கல்யாணி.. உன் அண்ணன் எங்கேதான் போனான்..? உனக்கு ஏதாச்சும் தெரியுமா..?”
‘எனக்கென்னம்மா தெரியும்..? மதியத்துக்கு மேல வீட்டுக்கு வந்தவன்.. இதோ.. இவளைக் கூப்பிட்டுக்கிட்டு வயக்காட்டுப் பக்கம் போனானாம்.. நம்ம மல்லிகாதான் சொன்னா.. இருட்டினதுக்கப்புறம்.. இவ மட்டும் வந்து நிற்கிறா.. அண்ணன் இவளை இறக்கிவிட்டுட்டு வாசலோடு போயிருச்சாம்.. அதனால்… எதைக் கேட்கிறதா இருந்தாலும் இவளைக் கேளும்மா.. என்னை விடு..”
அவர்களது பேச்சில் பங்கெடுத்துக் கொள்ளாமல் சாப்பாட்டில் கவனமாக இருந்த நிவேதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது..
“வீட்டை விட்டு வெளியேறாதவள்’ என்று அவள் கணித்திருந்த கல்யாணி வீட்டுக்குள் உட்கார்ந்தபடியே இவ்வளவு விவரங்களை சேகரித்திருப்பாள் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை..
மீனாட்சியின் பார்வை நிவேதாவின் பக்கம் திரும்பியது.. பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தான் ஆளாகி விட்டதை உணர்ந்தாள் நிவேதா..
‘மதியத்துக்கு மேல வயலுக்குப் போனனோம் ஆண்ட்டி..”
‘உன் ஆராய்ச்சிக்காக போயிருப்ப.. துணைக்கு கார்த்தியும் வந்திருப்பான்..”
புரிந்து கொள்ளும் தன்மையான பேச்சு.. இப்படிப் பேச மீனாட்சியால் மட்டுமே முடியும்..
‘பாட்டைப் பதிவு பண்ணி முடிக்கும் போதே இருட்டிவிட்டது..”
அவள் மனது “நீ சொல்வது பொய்..’ என்று கூவியது.. அருவிக்கரைக்கு போனதையும்.. அதற்குப் பின்னால் அங்கே நடந்ததையும் சொல்ல முடியாமல் மறைக்க நேர்ந்த குற்ற உணர்ச்சி அவளுக்குள் எழுந்தது.. மனதை சூழ்ந்த அந்த குற்ற உணர்விலிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியாமல் தவித்தாள் நிவேதா..
காhத்திகேயன் வீட்டுக்கு வரவில்லை.. அவனைக் காணாமல் அவளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் குடும்பNம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது.. அதற்கு அவள் காரணமாகி விட்டாள்..
மனதைக் கொன்று தின்ற குற்ற உணர்வோடு..
‘என்னை வாசலில் இறக்கி விட்டுவிட்டு வேகமாய் போய் விட்டார் ஆண்ட்டி.. மதியத்திலிருந்து என் கூட இருந்ததினால் ஏதும் வேலையிருக்குமோன்னு நானும் அமைதியாய் இருந்திட்டேன்.. ” என்று மேலும் பொய் பாதி.. உண்மைபாதியாக விளக்கம் சொன்னாள் நிவேதா..
‘நீ சொல்றதும் சரிதான்.. மதியம் வரும் போது ஏதாச்சும் ஒரு வேலையை அரையும்.. குறையுமா போட்டுட்டு வந்திருப்பான்.. அது நினைவுக்கு வந்திருக்கும்.. போயிருப்பான்.. நீ சாப்பிடும்மா..” மீனாட்சி இதமாகச் சொன்னாள்..
தன் கவலையை மறந்து .. விருந்தாளியை உபசரிக்கும் அந்த பண்பு அவளை வருத்தியது.. தொண்டைக்குள் சாப்பாடு இறங்காமல் போக.. பாதியிலேயே எழுந்து விட்டாள் நிவேதா..
‘என்னம்மா..”
கையில் பூரியோடு வந்த மீனாட்சி திகைத்தாள்..
‘போதும் ஆண்ட்டி..”
‘ம்ஹீம்.. கார்த்திக்கு பூரி கிழங்குன்னா உசிரு.. சூடு ஆறுவதற்க்கு முன்னாடி அவன் சாப்பிட வந்துட்டா தேவலை..”
அவன் வரவேயில்லை.. இரவு முழுவமு; வீட்டுக்கு அவன் திரும்பாமல் போக.. மீனாட்சி பயந்து விட்டாள்..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.