Chapter 17
ஒரு சிறு தீப்பொறிதான் வேண்டியிருந்தது.. அந்த அண்ணன் தம்பிகளின் மனதிலிருந்த அன்பை பற்ற வைக்க..
ஒரு தூண்டுதல்தான் தேவையாக இருந்தது.. அந்த உடன் பிறப்புகளின் பாச விளக்கு பிரகாசமாக எரிய..
நிவேதா.. அதைத்தான் செய்தாள்..
தம்பியின் மனதில் அண்ணனைப் பற்றிய நினைவலைகளை உண்டாக்கி அவர் சிந்திய பாசத்துளிகளை சேகரித்து.. அண்ணனிடம் அப்படியே சேர்த்தும் விட்டாள்..
‘பூட்டிக் கிடக்கிற உங்க பூர்வீக வீட்டைப் பற்றி கதைகதையாய் அவர் சொன்னார் அங்கிள்..?”
‘என்ன சொன்னான்..? பழைய வீடுன்னு சொன்னானா..? அந்தக்கால வீடும்மா அது.. அழியாத பொக்கிசம்.. அதோட ஒவ்வொரு தூணும்.. சலவைக் கல்லால் இழைக்கப்பட்டிருக்கு.. சின்னக் கீறல்.. சின்னதாய் இடிமானமுன்னு ஒன்னைக் காட்ட முடியுமா.. அந்த வீட்டின் சுவரிலே.. அவ்வளவு கெட்டியான கருங்கல் கட்டிடம்மா அது.. செங்கலையும்.. சிமிண்டையும் சேர்த்து வைச்சு கட்டினதா வீடா அது..? அன்பையும்.. பாசத்தையும்.. அதில வாழ்ந்த நினைவுகளையும் சேர்த்து வைச்சு கட்டினதும்மா அந்த வீடு.. அந்த வீட்டை
அந்தப் பய குறை சொன்னானா..?”
‘இல்லை அங்கிள்.. அதைக் கோவில்ன்னு சொன்னார்.. நீங்க அதில தெய்வம் மாதிரி இருந்தீங்கன்னு சொன்னார்..”
“இவ அப்பாவை கிளின் போல்டாக்கி விட்டா..’ கார்த்திகேயனின் முகத்தில் தவழ்ந்த சிரிப்பு.. மீனாட்சியின் முகத்திற்கும் தாவியது..
“கெட்டிக்காரி..’ அவள் மனதிற்குள் பாசமாக சொல்லிக் கொண்டாள்
‘அப்படியா சொன்னான்..?”
‘ஆமாம் அங்கிள்.. என் தம்பி குடியில்லாத வீட்டில் நானும் இருக்க மாட்டேன்னு என் அண்ணனும் தனியாய் போயிட்டாருன்னு வருத்தப்பட்டார் அங்கிள்..”
‘என் அண்ணன்னுனா.. சொன்னான்..?”
‘வார்த்தைக்கு வார்த்தை “என் அண்ணன்..’ “என் அண்ணன்.. ‘அப்படின்னுதான் அவர் சொன்னார் அங்கிள்..”
நிவேதா அந்த “என் அண்ண’னை உச்சரித்த விதத்தில் மற்றவர்களுக்கு சிரிப்பு அதிகமாக.. சிதம்பரநாதனுக்கு பாசம் அதிகமாகியது..
‘அவன் பாசக்கார பய புள்ளம்மா.. என்ன ஒன்னு.. பெண்டாட்டி மேலயும்.. அதிகமா பாசத்தை வைச்சுத் தொலைச்சிட்டான்.. அதனாலதான் ஒன்னு மன்னா இருந்த அண்ணனும் தம்பியும்.. கிழக்கு மேற்கா.. பிரிஞ்சு நிற்கிறோம்..”
பெண்டாட்டியின் மீது பாசம் வைப்பது பெரிய குற்றம் என்ற ரீதியில் சிதம்பரநாதன் பேசிக் கொண்டே போக.. மீனாட்சியின் முகம் வாடிவிட்டது..
அதை ஓரக் கண்ணால பார்த்தாள் நிவேதா..
‘ஊருக்கே நியாயம் சொல்கிற என் அண்ணன் என் நியாயத்தை புரிஞ்சுக்கலையேன்னுதான் அவர் வருத்தப்பட்டார் அங்கிள்..” என்று அவளாக ஒரு கதையைப் பிணைய ஆரம்பித்தாள்..
‘அவன் பக்கம் இருக்கிற நியாயமா..? இது என்னம்மா புதுசா இருக்கு.. என் வீட்டில் நடக்கக் கூடாதது நடந்துருச்சு.. அதச் செய்தவங்க.. என் தம்பி பெண்டாட்டியோட பிறந்த வீட்டைச் சேர்ந்தவங்க… அதை நான் சொல்லிக் காட்டினா.. அது ஒரு குத்தமா..? அந்த அமராவதி என்னை எதுத்துப் பேசுச்சு.. நான் அவளை அதட்டினேன்.. இவனுக்கு உடனே ரோசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு.. என்னை எது வேணும்னாலும் சொல்லுங்க.. என் பெண்டாட்டியைப் பேச நீங்க யாருன்னு கேட்டுப்புட்டான்..”
“அதுதான் ஆண்மை ..’ என்று நினைத்துக் கொண்டாள் நிவேதா..
தன்னை நம்பி வந்த பெண்ணைக் காப்பது.. அவளது மரியாதைக்கு மற்றவர்களால் சிறு பங்கம் கூட ஏற்பட்டு விடாமல் அரணாக காவல் காத்து நிற்பது..
‘அவர் செய்தது சரிதானே அங்கிள்..?”
‘என்னம்மா சொல்கிற.. என்னைப் பார்த்து நீ யாருன்னு கேட்டு விட்டான்.. யாருக்காக கேட்டான்.. அவன் பெண்டாட்டிக்காக என்னை எதுத்து கேள்வி கேட்டான்ம்மா..” சிதம்பரநாதன் கொதித்தார்..
‘நீங்க கேட்க மாட்டிங்களா..?” நிவேதா நிதானமாக கேட்டாள்..
இப்படிப்பட்ட பேச்சு வார்த்தையை அந்தக் குடும்பம் இதுவரை சந்தித்தது இல்லை..
சிதம்பரநாதனின் முன்னால் நின்று கேள்வி கேட்க யாரும் துணிந்ததில்லை.. மீனாட்சி பொறுமை காத்தாள்.. கார்த்திகேயன்.. பரம்பரைப் பெருமையை நினைத்து.. தகப்பனுக்கு எதிராக சுட்டு விரலை நீட்டும் காரியத்தை தான் செய்யக் கூடாது என்று பொறுமை காத்தான்.. கல்யாணியோ.. தகப்பனாரின் முன்னால் நிற்கவே பயப்பட்டு நடுங்குவாள்..
அப்படிப்பட்ட குடும்பத்தில்… நிவேதா புதிதாக நுழைந்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்..
யாரும் கேட்கத் துணியாத கேள்வியை.. சிதம்பரநாதனைப் பார்த்து அவள் கேட்டாள்..
‘என்னம்மா சொல்கிற..?”
‘உண்மையைத்தான் சொல்கிறேன்.. உங்க கண்ணுக்கு முன்னாடி ஆண்ட்டியை யாராவது திட்டினால் நீங்க பார்த்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா..? அது உங்க அப்பாவாக இருந்தாலும் சரி..”
அதுவரையில் அப்படி ஓர் கோணத்தில் அவர் சிந்தித்ததே இல்லை..
‘நீங்க கோபக்காரார்தான் அங்கிள்.. ஆண்ட்டியை எப்படி வேண்டுமானாலும் நீங்க திட்டுவீங்க.. ஆனா.. மத்தவங்க உங்க முன்னால.. ஆண்டியைப் பார்த்து ஒரு சொல் சொல்லி விட முடியுமா..?”
முடியாதுதான்.. சிதம்பரநாதன் அவர்களை அந்த இடத்திலேயே உண்டு… இல்லையென்று பண்ணிவிடுவார்தான்.. இது ஏன் இத்தனை நாளாய் அவரது புத்திக்கு பிடிபடாமல் போயிருந்தது..?
‘உங்க தம்பியும் அப்படித்தான் அங்கிள்.. என்னை என்ன வேணும்னாலும் செய்யுங்கன்னு தானே அவர் சொன்னார்..? நீங்க கொன்றே போட்டாலும்..அவர் சந்தோசமாய் செத்திருக்க மாட்டாரா..?”
‘அம்மாடி.. நிவேதா.. நீ யாரு தாயி..?”
சிதம்பரநாதன் நாத்தழுதழுக்க கேட்டார்.. அந்தக் குடும்பமே அமைதியாய் உணர்ச்சி வசப்பட்டது..
‘அங்கிள்..”
‘எங்கிருந்தும்மா வந்த..? எப்படிம்மா இத்தனை பேரோட மனசையும் நாடி பிடிச்சுப் பார்த்துச் சொல்கிற..?”
‘மனசில் பட்டதை சொன்னேன் அங்கிள்.. உங்க தம்பி உங்க நினைவாகவே இருக்கிறார்.. அவர் என்ன சொல்கிறாருன்னா.. என் வொய்பின் மேல ஏதாவது குற்றமிருந்தா.. அண்ணன் என்கிட்டக் கூப்பிட்டு.. உன் வொய்ப் இப்படிப் பேசுகிறாடா.. நீ கண்டிச்சு வைய்யுன்னு சொல்லியிருக்கலாமே.. அப்ப நான் அவளை.. எப்படிடீ என் அண்ணனை எதிர்த்து நீ பேசலாமுன்னு கேட்டு வெட்டிப் போட்டிருப்பேனே.. அதை அண்ணன் செய்யலையேன்னு கேட்டார் அங்கிள்;..”
மேகநாதனின் வார்த்தையாக தானாக நிவேதா சொல்லிய அத்தனை சொல்களிலும் உள்ள நியாயத்தை உணர்ந்தார் சிதம்பரநாதன்..
அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை..?
மேகநாதனை அழைத்து அமராவதியைப் பற்றிக் குறை கூறியிருந்தால் நிச்சயமாக மேகநாதன் தன் மனைவியை கண்டித்திருப்பார்.. அதை விட்டுவிட்டு.. தம்பியின் எதிரிலேயே.. தம்பி மனைவியை திட்டியிருக்க கூடாதோ..?
‘பெண்கள்தான் வீட்டின் கண்கள் அங்கிள்.. பெண்ணை மதிக்கலைன்னா.. அந்தக் குடும்பம் உருப்படாது.. உங்க தம்பி.. பெண்டாட்டியை மதிக்கிறவர்.. அவளைத் திட்டினாலும்.. கொன்றாலும்.. அது கட்டின கணவனாத்தான் இருக்கனுமுன்னு நினைக்கிறவர்.. அதுதான் சரின்னு நானும் நினைக்கிறேன் அங்கிள்..”
‘இத நான் யோசிக்காம போயிட்டேனேம்மா..”
‘நீங்க இன்னொன்னையும் யோசிக்கலை..”
‘எதைம்மா ?”
‘ஆண்ட்டியை நீங்க நடத்துகிற விதம் தவறுங்கிறதை..”
மீனாட்சி அதிர்ச்சியாகி விட்டாள்.. இதுவரை நிவேதா பேசியதில் அவளுக்கு உடன்பாடு இருந்தது.. இப்போது அவள் பேச ஆரம்பித்ததில் அவளுக்கு உடன்பாடு இல்லை..
‘நிவேதா..” அவள் அதட்டினாள்…
‘என்ன ஆண்ட்டி..?”
‘பெரிய மனுஷியைப் போல இது என்ன பேச்சு..?”
‘நியாயத்தை யார் வேணும்னாலும் சொல்லாம்.. அதில பெரியவங்க.. சின்னவங்கன்னு இருக்கா ஆண்ட்டி..?”
‘அப்படியா..? அப்படின்னா என் பக்க நியாயத்தையும் கேள்.. இது எனக்கும் .. என் புருசனுக்கும் இடையே இருக்கிற விவகாரம்.. அதில் தலையிட நான் பெத்த பிள்ளைகளுக்கே உரிமையில்லை.. அப்படியிருக்கிறப்போ.. நீ யார்.. இதைக் கேட்க..?”
‘ஆண்ட்டி..?”
‘எனக்கும்.. என் புருசனுக்கும்.. ஆயிரம் இருக்கும்.. அவர் என்னை அடிப்பார்.. உதைப்பார்.. ஏன் கொன்று கூடப் போடுவார்.. அதுக்கு அவருக்கு உரிமையிருக்கு.. மத்தவங்க தலையிட வேணாம்..”
“இப்படி பேசியே.. இந்த இந்தியப் பெண்கள் பாழாகிப் போகிறார்கள்..’ என்று இருந்தது நிவேதாவுக்கு..
‘நீ பெரிய நியாயவாதியப் போல.. சின்னவரு பக்கம் இருக்கிற நியாயத்தைச் சொன்னியே.. அவர் பெண்டாட்டியை அவர் திட்டலாம்.. மத்தவங்க திட்டினா கேட்டுக்க மாட்டாருன்னு.. அதப்போலத்தானே என் புருசனும் செய்கிறாரு.. அவருதானே என்னைத் திட்டுகிறாரு.. மத்வங்களையா திட்ட விடுகிறாரு..?”
‘ஆனா ஆண்ட்டி.. சின்ன அங்கிள்.. அந்த ஆண்ட்டியை கொண்டாடுகிறாரே..”
‘கொடுத்து வைத்த பிறவி.. கொண்டாடுகிறார்..”
‘ஆண்ட்டி..”
‘ஆமாம்மா.. அவருக்கு என்ன பொறுப்பிருந்தது..? அத்தனையும் என் புருசன் தலைமேல இருந்தது.. என் மாமியார் படுத்த படுக்கையா இருந்தாங்க.. என் மாமனாருக்கு அவங்களை விட்டா வேற நினைப்பில்லை.. என் மாமியாரின் பக்கத்திலேயே உட்கார்ந்துகிட்டாரு.. நானு கல்யாணமாகி இந்த வீட்டுகுள்ள காலடி வைக்கிறப்போ.. தம்பி தங்கைளுக்கு.. இவர் அண்ணனா மட்டும் இல்லாம.. தாய் தகப்பனா இருந்தார்..”
“மீனாட்சி..! ‘ சிதம்பரநாதன் நெகிழ்ந்து விட்டார்..
வாயைத் திறக்காமல் அவரின் வசவுகளை வாங்கிக் கொண்டு சிரித்த முகம் மாறாமல் அந்த வீட்டை கட்டிக்காத்து வலம் வந்து கொண்டிருக்கும் மனைவி காட்டும் நேசம் அவர் மனதை அசைத்தது..
“இம்புட்டு பாசக்காரியாய் இருந்து தொலைச்சிருக்காளே.. என்னை எப்படி கண்டு பிடிச்சு வைச்சிருக்கா..’
அவர் பெருமையுடன் மீசையை முறுக்கிக் கொண்டார்..
‘வீட்டுப் பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன் .. என் புருசன் கூடப் பிறந்த பிறப்புகளை.. நான் என் பெத்த பிள்ளைகளா நினைச்சு வளர்த்தேன்.. சின்னவருக்கும்.. கல்யாணமாச்சு.. அதுக்குப் பிறகு இந்தக் குடும்பம் ஆட்டம் கண்டில்ல போச்சு..?”
ஏனோ நிவேதா முகம் மாறினாள்.. அவர்களைப் பார்க்காமல் விட்டத்தில இருந்த பல்லியை வெறித்தாள்..
‘அக்கா.. அக்கான்னு இவரு உருகினாரு.. அவங்க நாத்தனாரையே என் கொழுந்தனுக்கு கட்டி வைச்சாரு.. ஒன்னுக்குள்ள ஒன்னா பெண்ணெடுத்து.. பெண் கொடுத்தா.. குடும்பம் உடையாம இருக்குமாம்.. இந்தக் கொடுமையை யாருக்கிட்டப் போயி சொல்ல.. அதுக்குப் பின்னாலதான இந்தக் குடும்பம் உடைஞ்சு போச்சு..?”
நிவேதா மௌனம் சாதித்தாள்..
‘குடும்பத்தை தாங்கின மனுசன்.. அவரை மதிக்காம.. எல்லோரும் ஆளுக்கொரு திசையில் பிரிஞ்சு போயிட்டாங்க.. என் மாமியாரும்.. மாமனாரும் போயி சேர்ந்திட்டாங்க.. நாங்களும் பூர்வீக வீட்டை பூட்டி வைத்துவிட்டு இந்த வீட்டைக் கட்டி குடிவந்திட்டோம் இந்த வீட்டில் பணங்காசுகளுக்கு குறைவில்லம்மா.. ஆனா நிம்மதி..? அதை இந்த மனுசன் எங்கே போயி தேடுவாரு..?”
மீனாட்சியின் சொற்களைக் கேட்டு கல்யாணி விசும்பவே ஆரம்பித்து விட்டாள்.. கார்த்திகேயனோ கலங்கிய கண்களை இமைகளை கொட்டி சரி செய்து கொண்டிருந்தான்..
‘வீடு பூராவும் நிறைஞ்சிருந்த ஜனம்.. வேத்து மனுசங்களா ஆகிப் போச்சு.. கூடப் பிறந்தது கூட்டில்லை.. ஒட்டிப் பிறந்தது உறவில்லைன்னு ஆகிப் போச்சு.. அத்தனை சுமையையும் மனசில சுமக்கிற இந்த மனுசன்.. அதை யாருகிட்ட இறக்கி வைப்பாரு..? கட்டின பெண்டாட்டிகிட்டதானே.. அத்தனை கோபத்தையும் அவர் காட்டியாகனும்..? அதுவும் இல்லைன்னா.. அவரும்.. பாவம் என்ன செய்வார்..?”
‘மீனாட்சி..” இப்போது வாய்விட்டு சிதம்பரநாதன் அழைத்து விட்டார்..
எத்தனையோ காலத்திற்கு பிறகு மனைவியை பாசத்துடன் பெயர் சொல்லி அழைக்கிறார் அவர்..
அவள் உடைந்து அழுது விட்டாள்.. கல்யாணி இப்போது பெரிதாக அழ ஆரம்பிக்க.. கை நீட்டி மகளை அழைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டார் சிதம்பரநாதன்..
“அப்பாவா.. இது..’ கல்யாணியால் நம்பவே முடியவில்லை..
அன்றைய தினம் மறக்க முடியாத தினம் என்று கார்த்திகேயனுக்குத் தோன்றியது..
முப்பது வருடங்களாக புரிந்து கொள்ளாத மனைவியை சிதம்பரநாதன் புரிந்து கொண்ட தினம்.. எதுவும் பேசாமல் அமைதியே வடிவமாக நடமாடிக் கொண்டிருந்த மீனாட்சி அவரை அணுஅணுவாகப் புரிந்து வைத்திருக்கிறாள் என்பதை அவர் தெரிந்து கொண்ட தினம்..
‘தேங்ஸ் நிவேதா..”
மறுநாள் ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கார்த்திகேயன் நிவேதாவின் கை விரல்களை வருடியபடி கூறினான்..
‘எதுக்கு..?”
‘அம்மாவை அப்பாவுக்கு புரிய வைத்ததுக்கு..”
‘இட் இஸ் மை டியுட்டி கார்த்திக்..”
நிவேதா இதைச் சொன்னபோது.. வருங்கால மாமனார்.. மாமியாரை ஒற்றுமையாக்குவது அவளது கடமை என்று அவள் சொல்கிறாள் என்ற நினைப்பில் அவளது கன்னத்தை தட்டினான் கார்த்திகேயன்..
அவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயனின் கவனத்தில் ஆற்று நீரை வெறித்துக் கொண்டிருந்த நிவேதாவின் விழிகளில் தெரிந்த சோகம் படவேயில்லை.. அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..
“அதற்காகத்தானே இந்த ஊருக்கு வந்திருக்கிறேன்..’
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.