Chapter 24
“நீ.. நீ.. நீதான்..’
அந்த ஊரே நிவேதாவை நோக்கி.. தன் சுட்டு விரலை நீட்டி குற்றம் சாட்டியது..
‘இந்தப் பொண்ணுதான் கல்யாணியம்மாவைக் கூப்பிட்டுக்கிட்டு போச்சுய்யா.. நான் சந்தேகப்பட்டு யாருன்னு கிட்டப் போய் பார்க்கிறதுக்குள்ள ஒன்னுமில்லைன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சிருச்சுங்கய்யா..”
தோட்டக்கார காத்தான் சொன்னதைப் போலவே.. ஊரில் பலரும் சொன்னார்கள்.. சிதம்பரநாதன் வெறி; கொண்ட வேங்கையானார்..
‘எங்கே அந்தப் பொண்ணு..?”
அவளோ.. தன் பெட்டி.. பைகளுடன் புறப்படத் தயாராகி.. மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்..
‘இந்த வீட்டுப் பெண்ணை ஓட்டிவிடறதுக்- காகத்தான்.. நாட்டுப்புறப் பாட்டை ஆராய்ச்சி பண்ண வருகிறேன்னு கதை சொல்லிட்டு வந்தியா..?”
“இல்லை..’ மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் நிவேதா..
“நான் வந்த காரணமே வேறு.. இனி அதைச் சொல்லி என்னாகப் போகிறது..? சொன்னாலும்.. உங்கள் கோபம் கூடத்தான் செய்யும்.. குறையாது..’
‘அங்கிள்.. ” அவர் முகத்தை அவள் நிமிர்ந்து பார்த்த போது..
‘பேசாதே..” என்று அவர் வெடித்தார்..
‘ஆண்ட்டி..” மீனாட்சியின் முகம் பார்த்தாள்..
அவள் ஒருவார்த்தை கூடப் பேசாமல் முகம் திருப்பிக் கொண்டாள்..
கார்த்திகேயனின் விழிகள் அவளையே உறுத்துப் பார்த்தன..
‘என்கிட்ட மறைச்சுட்டியேடி..” மற்றவர்கள் அறியாத வகையில் அடிக்குரலில் அவன் உறுமினான்..
‘ஐ ஆம் ஸாரி.. ” நிவேதா முணுமுணுத்தாள்..
‘எதுக்குடி ஸாரி சொல்கிற..? உனக்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தன் உன்னை பார்க்கத்தான் வந்தான்னு என்கிட்டயே தைரியமா சொன்னயே.. அந்த நெஞ்சழுத்ததிற்கா ஸாரி சொல்கிற..?”
‘கார்த்திக்.. உண்மையில் அவர் என் அண்ணன்..”
‘எனக்கு உன்னைத் தெரியும்டி.. நீ என்னையே.. உன்னைத் தொட்டதற்காக தூக்கியெறியப் பார்த்தவ.. நீயாவது.. இன்னொருத்தன் கூட மொட்டை மாடியில் கொஞ்சிக் குழாவுறதாவது.. ஆனா.. அந்த வார்த்தையை பயமேயில்லாம அவன் முன்னாடி என் முகத்தைப் பார்த்து சொன்னயே.. அதைத்தான் என்னால மன்னிக்க முடியல.. அப்பவே நினைச்சேண்டி.. நீ யாரையோ காப்பாத்தத்தான் இந்த வேசம் கட்டுகிறன்னு.. அது கல்யாணியாய் இருக்கும்ன்னு நான் கனவிவயும் நினைக்கலடி..”
‘அவங்க காதலிச்சாங்க கார்த்திக்..”
‘அதை என்கிட்ட சொல்லியிருக்கலாமுல்ல..? நான் காதலுக்கு எதிரியா..? நானும் காதலிக்கிறவன்தானே.. அப்புறமும் ஏன் சொல்லல..?”
‘கல்யாணிதான் சொல்ல வேணாம்ன்னு கெஞ்சினா..”
‘அவ சொன்னா.. நீ மறைச்சிருவியா..? இப்படி எத்தனை விசயத்தை என்கிட்டயிருந்து மறைச்சிருக்க..?”
நிவேதா தடுமாறிப் போனாள்.. கார்த்திகேயன் கேட்ட கேள்வி அவளைச் சுட்டது.. மேகநாதன் கொதித்துக் கொண்டிருந்தார்.. அமராவதியோ விட்டால் நிவேதாவை உண்டு.. இல்லையென்று பண்ணி விடும் ஆவேசத்தில் இருந்தாள்.. தங்கையின் மகளை தன் மகனுக்கு கட்ட முடியாத கேசவமூர்த்;தி..
‘துரோகி..” என்று நிவேதாவின் கழுத்தைப் பிடிக்க போனார்..
‘விடுடா அவளை..” கோசலை சீற்றத்துடன் மகனை தடுத்தாள்..
‘அம்மா..” அமராவதியின் குரலில் குற்றச் சாட்டுத் தொணித்தது..
‘அமரா.. நீ நான் பெத்த பொண்ணுதான்.. உன் மகளை என் பேரனுக்கு கட்டி வைக்கனும்ன்னு எனக்கும் கொள்ளை ஆசைதான்.. ஆனா.. இப்படி நடந்திருச்சே.. இனிமே யாரைக் குற்றம் சொல்லி என்ன ஆகப் போகுதும்மா..?”
‘இவளால்தான் அம்மா.. இவதான் பெண்ணைக் கடத்தி விட்டிருக்கா..”
‘கடத்தி யார்கிட்ட விட்டா..? உன் அண்ணன் மகன்தானே அவளைக் கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்கான்..? அதை மறந்துட்டுப் பேசறது நியாயமில்ல அமரா..”
‘அதுக்காக .. உறவாடிக் கெடுத்த இவளை சும்மா விடச் சொல்றியாம்மா..?”
‘கோவப்படாதே கேசவா.. இதே பழியைத்தானே உன் மச்சினன்மாரும் இத்தனை வருசமா உன் மேல போட்டிருந்தாங்க.. பழைய கதை மறந்து போச்சா..? அன்னைக்கு நீ செஞ்ச வேலையைத்தானே இன்னைக்கு இந்தப் பொண்ணும் செஞ்சிருக்கு ..?”
‘அம்மா..” கேசவமூர்த்தி திகைத்து நின்று விடடார்..
‘ஆவேசப்படாதே.. பொண்ணைக் கூப்பிடுக்கிட்டு வரச் சொன்னது உன் மகன்.. கூப்பிட்டுக்கிட்டு போனதும் உன் மகன்.. ஊடே வர்ற மத்தவங்களை பகையாளியா நினைக்காதே..”
‘அதுக்காக.. இவளை இப்படியே விட்டுவிடச் சொல்கிறியா..? இன்னும் ஏண்டி இங்கே நிக்கிற..? என் மகளின் வாழ்க்கையைக் கெடுத்தவ.. இன்னும் ஒரு நொடி கூட இந்த ஊருக்குள் கால் பதிச்சு நிக்கக் கூடாது..”
அமராவதி வெறி கொண்டவளாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மற்றவர்கள் தடுப்பதற்குள் நிவேதாவின் முடியைப் பிடித்து வாசலுக்கு தள்ளினாள்..
கார்த்திகேயன் அமராவதி அப்படி நடந்து கொள்வாள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.. அவன் கண் முன்னால் நிவேதா வாசலில் விழுகப் போன போது அவசரமாக அவன் தாங்கிப் பிடிக்க போனான்..
ஆனால் அவனுக்கு முன்னால் தலை குப்புற விழ இருந்தவளை தாங்கிப் பிடித்து .. தோளில் சாய்த்துக் கொண்டது.. வலிமையான ஒரு ஆண் கரம்..
திகைத்து நிமிர்ந்த நிவேதாவின் விழிகள் பிரகாசித்தன.. அவள் விழிகளில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது..
‘அப்பா..! ” அவள் தேம்பினாள்..
அவசரமாக நிவேதாவைப் பின்பற்றி வாசலுக்கு வந்த கார்த்திகேயன் அந்தக் காட்சியைக் கண்டதும் அசையாமல் நின்று விட்டான்..
“அப்பாவா..? இவரா நிவேதாவின் அப்பா..?’
நிவேதாவின் அப்பாவை கார்த்திகேயனுக்குத்தான் தெரியவில்லை.. ஆனால்.. அங்கேயிருந்த மற்றவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது..
‘இவனா..?”
‘இவரா..?”
அதிர்ச்சியில் குரல்கள் எழும்ப.. கேசவமூர்த்தி விழிகளை விரித்து.. அருகில் வந்தார்..
‘யாரு அரவிந்தனா..?”
கார்த்திகேயனால் தன் செவிகளை நம்பவே முடியவில்லை.. அவனுக்கு நன்றாக நினைவிருந்தது.. தன் தந்தையின் பெயர் அன்பழகனென்றுதான் நிவேதா சொல்லியிருந்தாள்..
“இவரென்ன இப்படிச் சொல்லிக் கூப்பிடறாரு.. இவருக்கு நிவேதாவின் அப்பாவைத் தெரியுமா..?’
அப்போதுதான் ஒன்றை அவன் தெளிவாக உணர்ந்தான்.. கேசவமூர்த்திக்கு மட்டுமல்ல.. அவன் குடும்பத்து பெரியவர்கள் அனைவருக்குமே.. நிவேதாவின் அப்பாவை தெரிந்திருந்தது..
“யார்.. இவர்..?’ அவனால் அனுமானிக்க முடியவில்லை..
‘நான்தான் கேசவா..”
‘அப்ப.. இந்தப் பொண்ணு..?”
‘இன்னும் தெரியலையா.. என் மகள்தான்..”
‘அடிப்பாவி.. யாரைப் பார்த்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளின..? இவ என் பெண்ணுடி.. மரகதம்.. வந்திருக்கிறவ.. உன் தங்கச்சி மகளாம்.. அதனாலதான் இவ.. உன்னையும்.. என்னையும்.. அம்மா.. அப்பான்னு கூப்பிடிருக்கா.. என் அம்மாவுக்கு தெரிஞ்சது.. உனக்கும் எனக்கும் தெரியாம போச்சே..”
மரகதம்.. ஆவலுடன் நிவேதாவின் தலையைக் கோதி.. அவள் முகத்தை கையில் ஏந்தி உற்றுப் பார்த்தாள்..
‘கொஞ்சம் கூட வைஷ்ணவியின் ஜாடையில்லங்க.. அச்சு.. அசல் இவ.. அவங்க அப்பாவை உரிச்சு வைச்சிருக்கா.. அப்புறம் எப்படி எனக்கு அடையாளம் தெரியும்..? நிவேதா.. என் தங்கமே..”
அவள் கொஞ்சுதலாய் அழைக்க..
‘பெரியம்மா..” என்று விம்மினாள் நிவேதா.. அரவிந்தன் உள்ளே வந்து.. சிதம்பரநாதனை தீர்க்கமாகப் பார்த்தார்..
‘இந்த வீட்டுப் படியை மிதிக்க எனக்கு இஷ்டமில்லை.. எல்லாத் தகுதியும் எனக்கிருந்தும்.. என்னை உங்க தங்கை காதலிச்சுட்டாங்கிற ஒரே காரணத்துக்காக அவளை எனக்குக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்க.. வேற இடத்தில் கல்யாணமும் பிக்ஸ் பண்ணிட்டிங்க.. ஆனாலும்.. பாவம்.. அவளோட அக்காவின் கணவன்.. எனக்கு பெரியம்மாவின் மகனாப் போயிட்டான்.. என் காதலுக்கு துணையாவும் நின்னுட்டான்.. அவன் உதவியோட.. கல்யாணத்துக்கு முதல்நாள் நைட்டில் உங்க தங்கையை நான் கடத்திக்கிட்டுப் போயிட்டேன்.. தாலி கட்டி.. அமெரிக்காவுக்கு கூப்பிட்டுக்கிட்டும் போயிட்டேன்.. என் காதலுக்கு துணை செஞ்சான்னு.. உங்க அக்காவின் கணவனா இருந்தாலும்.. என் பெரியம்மா மகனைத் தள்ளி வைத்தீங்க.. அப்படிப்பட்ட உங்களின் முகத்தில் விழிக்க எனக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லைங்க..”
அவர் பேசுவதை.. கண்கள் இடுங்க.. முகச் சுருக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரநாதன் கையை உயர்த்தி பேச்சை நிறுத்துமாறு சைகை செய்தார்;..
‘இந்தக் கதையெல்லாம் எனக்குத் தேவையில்லை.. எங்க முகத்தில் விழிக்க விருப்பமில்லாதவன்.. ஏன்.. பெத்த மகளை இங்கே.. இந்த வீட்டுக்கு.. பொய்யாய் காரணம் சொல்லி அனுப்பி வைக்கனும்..?”
‘நான் அனுப்பி வைக்கலை.. அவளா வந்திருக்கா.. லாஸ் ஏஞ்சல்ஸில் மேலே படிக்கப் போகிறதா என்னிடம் சொல்லி விட்டு.. எனக்குத் தெரியாமல் இந்தியாவுக்கு வந்திருக்கிறா.. உங்களுக்கும்.. எனக்கும் பொதுவான பிரண்டான சந்தானத்தின் உதவியோட உங்க ஊருக்கு வந்து.. உங்க வீட்டில் நுழைஞ்சிருக்கா..”
‘இதை .. என்னை நம்பச் சொல்கிறயா..?”
‘நம்பினால்.. நம்புங்க.. நம்பாவிட்டால் போங்க.. எனக்கொன்னுமில்ல.. உங்ககிட்ட பொய் சொல்லி என் மக வந்தது.. சொத்துக்காக இல்ல.. உங்க சொத்தைப் போல ஆயிரம் மடங்கு அதிகமான சொத்தை அவளுக்காக நான் சேர்த்து வச்சிருக்கேன்..
‘அப்புறம் எதுக்கு.. அவ இங்க வந்தா..?”
‘உங்க வீட்டில் என் மகள் இருந்த குற்றத்துக்காக.. அவளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினீங்களே.. உங்களுக்குத் தெரியுமா.. அவ ஏன் இங்கே வந்தான்னு..”
‘அதைத்தானே நாங்களும் கேக்கிறோம்.. சொல்லு..”
‘உங்க மகளைப் பார்க்க வந்தா.. போதுமா..”
அரவிந்தன் உணர்ச்சி வசப்பட்டார்.. அவரது உதடுகள் துடித்தன.. மரகதம் சிலையாக சமைந்து நின்றாள்.. அவள் மனதிற்குள் ஏதோ துக்கம் சுரந்தது..
“கல்யாணியைப் பார்க்க.. அவளுடைய அப்பாவுக்குத் தெரியாமல் நிவேதா ஏன் வந்தாள்..? அப்படின்னா..?’ அவளுடைய இதயம் நடுங்கியது..
‘வைஷ்ணவிக்கு என்ன ஆச்சு..?” அவள் அவசரமாகக் கேட்டாள்..
அதுவரை பொறுமையாக தகப்பனின் தோள்மீது சாய்ந்திருந்த நிவேதா உடைந்து போய் கதறி அழுதாள்..
‘அம்மா.. ஆ.. ஆ.. ஆ..”
அரவிந்தனின் கண்கள் கலங்கி விட்டன.. அவர் மகளைச் சமாதானப்படுத்தப் போராடினார்.. அவளது துடிப்பு நிற்கவில்லை.. கார்த்திகேயன் இரண்டே எட்டில் நிவேதாவின் அருகில் வந்தான்.. சுற்றிலும்.. இருப்பவர்கள் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் நிவேதாவை அரவிந்தனிடமிருந்து பிரித்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்… அவன் மார்பில் முகம் புதைத்து அவள் குமுறினாள்..
‘அம்மா.. என் அம்மா கார்த்திக்.. போயிட்டாங்க கார்த்திக்.. என்னை விட்டுவிட்டு போயிட்டாங்க கார்த்திக்..”
‘வேண்டாம் நிவேதா.. அழாதே..”
‘அவங்க கடைசி மூச்சில் கதை கதையாய் இந்த ஊரைப் பற்றியும்.. உங்க.. எல்லோரையும் பற்றியும் சொன்னாங்க.. பூர்வீக வீட்டில் அவங்க இளவரசியாய் வாழ்ந்த கதையைச் சொன்னாங்க.. இந்த ஊருக்கு வரனும்னு அவங்க ஆசைப்பட்டாங்க கார்த்திக்.. உங்களையெல்லாம் ஒரு முறை கண்ணால் பார்த்து விடனும்னு ஏங்கினாங்க.. அது நிறைவேறாமலே செத்துப் போயிட்டாங்க கார்த்திக்..”
நிவேதா கேவி அழுதாள்.. தாயினும் மேலான பாசத்தையும்.. அரவணைப்பையும் அவளுக்கு தந்தபடி.. அவளது துக்கத்தை குறைக்க முயன்றான் கார்த்திகேயன்.. அவளது துக்கம் குறையவில்லை.. அங்கிருந்த மற்ற அனைவருமே திக்பிரமை பிடித்து நின்று விட்டார்கள்..
‘அடிப்பாவி.. தாயில்லாத் பெண்ணை முடியைப் பிடிச்சு வாசலில் தள்ளி விட்டயே.. உன்னைப் பெத்த வயிறு எரியுதுடி..” கோசலை மகளைப் பார்த்து ஆத்திரப் பட்டாள்..
‘நான் என்னத்தம்மா கண்டேன்..” அமராவதி கைகளை பிசைந்தாள்..
‘இந்தப் பொண்ணைப் பார்க்க அன்னைக்கே எனக்கு தெரிஞ்சுபோச்சு.. அப்படியே.. அரவிந்தனின் அச்சு.. என் தங்கச்சி மகனையே நேரில பார்த்த பூரிப்பு எனக்கு.. ஆனா.. இப்படி ஆத்தாளை பறி கொடுத்துட்டு ஆறுதலைத் தேடி வந்திருக்கிறான்னு தெரியாமல் போச்சேடி..,” கோசலை புலம்பினாள்..
மீனாட்சியின் கண்களில் கண்ணீH; தாரைதாரையாய் வழிந்தது.. அவளுக்குத் தெரியும்.. தாயைப் பிரிந்த நிவேதா ஏன்.. கல்யாணியைத் தேடி ஓடி வந்திருக்கிறாள் என்று..
‘அம்மாடி.. நிவேதா.. ” அவள் மகனுக்கருகில் வந்தாள்..
‘ஆண்ட்டி..” நிவேதா..சொல்லி அழும் குழந்தையாய் விசும்பினாள்..
‘பெத்த மக.. ஓடிப் போயிட்டாங்கிற துக்கத்தில முகம் திருப்பிட்டேம்மா.. இப்படி ஒரு துக்கத்தை மனசில போட்டுக்கிட்டு நீ வந்திருக்கிறன்னு எங்க யாருக்குமே தெரியாம போச்சேம்மா..”
அரவிந்தன் நிதானத்துக்கு வந்தவராக.. மகளைப் பார்த்தார்.. அப்போதும் அவளை கார்த்திகேயன் அணைத்து சமாதானப் படுத்திக் கொண்டுதான் இருந்தான்.. அவர்களுக்கிடையே இருந்த உறவு அவருக்கு புரிந்தது.. இருந்தாலும் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு சிதம்பரநாதனைப் பார்த்தார்..
‘வைஷ்ணவி இறந்து போன ஒரு மாதத்தில் சந்தானம் சென்னையிலிருந்து துக்கம் விசாரிக்க.. அமெரிக்காவுக்கு வந்தான்.. அவனிடம் நிவேதா உங்களைப் பற்றியும்.. இந்த ஊரைப் பற்றியும் கேட்டிருக்கா.. அவனும்.. அவனுக்குத் தெரிஞ்சதையெல்லாம் சொல்லியிருக்கான்.. அதில் ஒன்னு .. உங்க மக கல்யாணி.. அச்சு.. அசல் வைஷ்ணவியின் ஜாடையிலேயே.. வைஷ்ணவியைப் போல இருப்பாள் என்பது..”
கார்த்திகேயன் வியந்து போனான்.. அவனுக்கே அது தெரியாது.. அந்த வீட்டில் பிறந்த சிதம்பரநாதனின் இளைய தங்கை திருமணத்துக்கு முதல் நாள் தன் காதலனுடன் ஓடிப் போய் விட்டாள்… அதனால்.. ஏற்பாடு பண்ணப்பட்ட திருமணம் நடக்காமலே நின்று விட்டது.. அவளைக் கூப்பிட்டுக் கொண்டு போன காதலன்.. சிதம்பரநாதனின் அக்காவான மரகதத்தின் கணவனுக்கு.. சொந்த சின்னம்மாவின் மகன்.. இந்தக் காதலுக்கு மரகதத்தின் கணவன் துணை நின்றார்.. அதனால்.. மரகதத்தையும் அவளது கணவனையும்.. அந்த வீட்டில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்தார்கள்.. அதுவும் பத்தாது என்று.. சிதம்பரநாதன் தினமும் அதைச் சொல்லிக் காண்பித்துக் கொண்டிருந்தார்.. பொறுக்க முடியாத அமராவதி எதிர்த்து கேள்வி கேட்க.. அவருக்கும்.. தம்பிக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது..
இதுதான் அவனுக்குத் தெரியும்..
ஓடிப் போன இளைய தங்கையைப் பற்றி.. மறந்தும் கூட ..அவனது தகப்பனும்.. சிறிய தகப்பனும் பேசியதில்லை..
அந்த அத்தையின் பெயர் வைஷ்ணவி என்பதை அவன் அறிவான்.. ஆனால் அந்த வைஷ்ணவியின் சாயலில்தான் கல்யாணி இருக்கிறாள் என்பதை அவன் அறிந்ததில்லை..
வைஷ்ணவியின் போட்டோ எதுவும்.. அந்த வீட்டில் இருக்கவில்லை.. அவளைப் போலவே.. கல்யாணியும் இருக்கிறாள் என்று பேச்சுக்கு கூட யாரும் சொன்னதில்லை..
‘நிவேதாவிற்கு.. அவளுடைய அம்மாவின் மேல் பாசம் அதிகம்.. வைஷ்ணவியின் சாவை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.. பெற்ற தாயைப் போலவே ஒருத்தி இருக்கிறாள் என்றதும்.. அவள் என்னிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் இந்தியாவுக்கு வந்து விட்டாள்.. கடைசி காலத்தில் வைஷ்ணவி உங்க குடும்பம் சிதறிப் போனதை சொல்லி மகளிடம் அழுதிருக்கிறா.. குடும்பத்தை ஒன்று சேர்க்கச் சொல்லி நிவேதாவிடம் சொல்லியிருக்கிறா.. உங்க பூர்வீக வீட்டில்தான் வைஷ்ணவியின் ஆத்மா இருக்கிறதாக நிவேதா நம்புகிறா.. அதனால்.. சந்தானத்தின் உதவியோடு.. இந்த ஊருக்கு வந்து உங்க வீட்டுக்குள் நுழைந்து.. குடும்பத்தை ஒன்று சேர்த்திருக்கிறா.. இப்பச் சொல்லுங்க சிதம்பர நாதன்.. நிவேதாவைப் பெற்றவளின் உருவத்தில் இருக்கும் கல்யாணிக்காக.. நிவேதா எதையும் செய்யத் துணிய மாட்டாளா..?”
இறுகிய கல் உருகியது.. வைஷ்ணவி உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று அதுவரை நினைத்- திருந்தவர்கள்.. அவள் இறந்து விட்டாள் என்று அறிந்ததும்.. மனம் மாறிவிட்டார்கள்..
‘அண்ணே.. இது நம்ம வைஷ்ணவியோட பொண்ணுன்னே..” மேகநாதன் சொல்லும் போதே சிதம்பரநாதன் குலுங்கி அழுது விட்டார்..
‘பாவி.. இப்படி அல்பாயிசுல போயிட்டாளேடா..”
பிரிந்தவர்கள் ஒன்று கூடினார்கள்.. ஒரு வழியாக கொந்தளிப்பு அடங்கியதும் நிவேதாவை அழைத்துக் கொண்டு கிளம்பப் போவதாக அரவிந்தன் கூறினார்..
‘அப்பா..” நிவேதா தயங்கினாள்..
ஆனால் கார்த்திகேயன் தயங்கவில்லை..
‘மாமா.. உங்க பெண் இனிமே.. எங்க வீட்டில்.. என் கூடத்தான் இருப்பா.. நீங்க பெரியவங்க.. எங்க கல்யாணத்தை நடத்தி வையுங்க..” என்று சொல்லி விட்டான்..
‘தாராளமா பண்ணி வைக்கிறேன்.. ஆனா.. உங்கப்பா.. என் அண்ணன் மகனுக்கும்.. அவர் மகளுக்கும் முன்னால் நின்னு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?”
அரவிந்தன் புதிர் போட.. மற்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை.. அவரே புதிரை விடுவித்தார்..
‘நிரஞ்சனும்.. கல்யாணியும்.. சென்னையில் சந்தானத்தின் வீட்டில்தான் இருக்காங்க.. அவங்க கல்யாணத்தை இதே ஊரில்.. உங்க அப்பா நடத்திவைக்க ஒப்புக் கொண்டா.. நானும் உங்களுக்கு என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஒப்புக் கொள்கிறேன்..”
மீனாட்சியின் உயிரில்லாத விழிகளில் உயிர் வருவதைக் கண்டவராக சிதம்பரநாதன் யோசித்தார்.. பின்னர் தயக்கத்துடன் மேகநாதனைப் பார்த்தார்..
‘மேகா.. உன் மகளுக்கு நீ பார்த்த மாப்பிள்ளை.. எனக்கு மருமகனாகி விட்டான்.. என் மகளுக்காக நான் பார்த்த மாப்பிள்ளையை.. நீ ஏன் உன் மருமகனாக்கிக்க கூடாது..?”
மேகநாதன் மனைவியைப் பார்த்தார்.. அமராவதியின் மலர்ந்த முகம் அவள் சம்மதத்தைக் கூறியது.. நின்று விட்ட மகளின் கல்யாணம் சீரும்.. சிறப்புமாக நடக்கப் போவதில் அவளுக்கு அதிக சந்தோஷம்….
நிவேதாவின் ஆசைப்படியே.. அந்த மூன்று திருமணங்களும் .. அடுத்தடுத்த முகூர்த்த நாள்களில் சிதம்பரநாதனின் பூர்வீக அரண்மனை போன்ற வீட்டில் நடந்தன..
வீடு பூராவும்.. ஆள்கள் நிறைந்திருக்க.. அலங்கார விளக்குகளால் அந்த வீடு ஜொலிப்பதை ஆசையுடன் பார்த்தாள் நிவேதா..
“அம்மா.. உங்க.. கனவு நிறைவேறியிருச்சா..?’ மனதிற்குள் கேட்டாள்.. அவளது தோளைச் சுற்றி ஒரு கரம் படிந்தது.. திரும்பிப் பார்த்தாள்..
‘தேங்க்ஸ் நிவேதா.. என் கனவை நிறைவேத்திட்ட..” என்றாள் கல்யாணி..
நிவேதாவின் கண்கள் நிறைந்து விட்டன..
… முற்றும் …
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.