Chapter 02

0Shares

யாரோ தட்டி எழுப்பியதைப் போல விழிப்பு வந்து விட்டது சித்ரலேகாவுக்கு.. புரண்டு படுத்து உள்ளங்கைகளை விரித்து அதைப் பார்த்தபடி கண் விழித்தாள்.. அது ஒரு பழக்கம்.. விழித்தவுடன் பச்சை மரத்தைப் பார்க்க வேண்டும் அல்லது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது.. பாட்டி சொல்லிக் கொடுத்தது.. இந்தக் கருக்கல்லில் பச்சை மரம் கண்ணுக்குத் தெரியுமா..? கன்னங் கரேலென்ற கிளைகளுடன் காற்றில் ஆடிப் பயமுறுத்தாதா..? அதனால் உள்ளங்கைகளைப் பார்ப்பதே உத்தமம் என்று அதை கடைபிடித்து வந்தாள்..

கட்டிலை விட்டு இறங்கியதும் மெத்தை விரிப்பை உதறி, சுருக்கமில்லாமல் விரித்து விட்டு போர்வையை மடித்து வைத்தாள்.. தலையணைகளை ஒழுங்கு படுத்தினாள்.. இது அடுத்த பழக்கம்.. இது அம்மா சொல்லிக் கொடுத்தது..

“விடிஞ்ச பின்னாலும் விரிப்பான் கசங்கிக் கிடந்தா வீட்டில இருக்கிற மகாலட்சுமி சிரிப்பாய் சிரிச்சுற மாட்டாளா..? எழுந்திரிக்கிறப்பவே போர்வையை மடிச்சு வைக்கிற பழக்கம் தானா வரனும்டி.. அப்பத்தான் இந்த சொர்ணம் பெத்த பொண்ண ஒழுங்கா வளத்திருக்கான்னு அர்த்தம்.. என்ன.. காதில் விழுந்ததா..?”

காதில் விழாமல் எப்படியிருக்கும்..? சொர்ணத்திற்கு ஒன்றும் எட்டுக் கட்டைத் தொண்டையில்லைதான்.. ஏழுஸ்வரங்களில் இனிய ஸ்வரமாகப் பேசுபவள்தான்.. மற்றவர்களிடம் மிருதுவான குரலில் பேசுபவள் மகளிடம் மட்டும் கே.பி சுந்தராம்பாளின் குரலில் பேசிக் கதற வைப்பாள்.. வெங்கலத் தொண்டையில் அவள் கத்தும் சப்தம் சித்ரலேகாவின் செவிகளில் ஏறாமல் இருக்குமா என்ன..?

சித்ரலேகா குளியலறைக்குள் புகுந்தாள்.. பல் துலக்கி, முகம் கழுவி, மாடிப்படிகளில் இறங்கினாள்.. பழைய காலத்துப் பாணியில் இருந்த வீட்டில் இருந்த பொருள்களும் பழைய காலத்துப் பாணியிலேயே இருந்தன.. மாடிப்படிகளில் இருந்த தேக்கு மர வேலைப்பாடுகளுடன் கூடிய கைபிடி வளைவுகள்.. ஹாலின் மேற்கூரையில் தொங்கிய அலங்கார கொத்து லஸ்தர் விளக்கு.. ஹாலில் பளபளவென பொழிவு மாறாமல் இருந்த தேக்கு மர சோபாக்கள் என்று கிராமத்துப் பெரியதனக்கார வீட்டின் கலை நயத்தையும், செல்வ வளத்தையும் அவை கண் முன் கொண்டு வந்தன..

ஹாலை ஒட்டியிருந்த பெரிய தேக்கு மரக் கதவைத் திறந்தால் பெரிதாக விரிந்தது வீட்டின் பின்பகுதி.. ஹாலின் இருபுறமும் அறைகள் இருக்க வீட்டின் பின்பகுதியில் சாப்பிடும் அறையும் பூஜை அறையும் இருந்தன.. இங்கும் தங்கும் அறைகள் உண்டு.. அவை விருந்தினர்க்கு.. சாப்பிடும் அறையில் இருந்த நீண்ட மேஜையும் தேக்குமரத்தினால் செய்யப்பட்ட அந்தக்கால மேஜைதான்.. நாற்காலிகளும் அப்படியே.. ஹாலின் மையத்தில் சோபாக்கள் இருந்ததைப் போல வீட்டின் பின் பகுதியின் மையத்தில் தேக்குமர ஊஞ்சல் இருந்தது.. அதையடுத்து சமையலறை..

சமையலறையில் விளக்கு வெளிச்சமும் ஆள் நடமாட்டமும் தெரிந்தது..

‘ம்ஹீம்.. இந்த வீட்டில இருக்கிற பொம்பளைக தூங்காவரம் வாங்கினவுக போல..’

சன்னமான செல்லக் கொட்டாவியுடன் சமையலறைக்குள் போனவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் சொர்ணம்..

“விட்ட விடிகாலைல கொட்டாவி விட்டுக்கிட்டு நில்லு.. வீடு விளங்கிரும்..”

‘கொட்டாவி விடறது ஒரு குத்தமா..?’ சித்ரலேகாவின் சின்னஞ்சிறிய சிமிழ் வாய் உடனடியாக மூடிக் கொண்டது..

“பாவம்மா புள்ள.. இன்னும் விடியல.. இப்பக் கொட்டாவி வராம என்ன செய்யும்..? நாமதான் தூக்கமில்லாம அடுப்படியில நின்னுக்கிட்டு இருக்கோம்ன்னா புள்ளயும் கருக்கல்லிலேயே எழுந்திரிச்சுக்கனுமா என்ன..?” எரிச்சலுடன் கேட்டாள்.. சமையல் வேலை செய்யும் சாந்தா..

சாந்தாவின் அஞ்சாமையின் மீது சித்ரலேகாவுக்கு தனிப்பட்டதொரு ஆராதனை இருக்கும்.. அதுவும் அவள் சொர்ணத்தை எதிர்த்துப் பேசும் போது மனதுக்குள் அவளுக்கு பூமாரி பொழிந்து விடுவாள்..

அன்றும் அதுபோன்றதொரு பூமாரி சாந்தாவுக்கு கிட்டியது..

“இப்ப எழுந்திரிக்காம சூரியன் உச்சிப் பொழுதுக்கு வர்றப்ப எழுந்திரிச்சு வரச் சொல்றியா சாந்தா..?”

“அப்புடி வந்தாத்தான் என்னம்மா..?”

“அதுசரி.. நாளைக்குக் கல்யாணம் கட்டி இன்னொருத்தன் வீட்டுக்குக் குடித்தனம் பண்ணப் போறப்ப இந்தப் பழக்கம்தான அங்கேயும் வரும்..? அப்ப உன்னக் குத்தம் சொல்ல மாட்டாக.. ஆத்தாகாரி புள்ளய வளத்து வைச்சிருக்கிற லட்சணத்தப் பாருன்னு என்னத்தான் குத்தம் சொல்லுவாக..”

“இத இப்புடியும் சொல்லலாமில்லம்மா..?”

“எப்புடி..?”

“பொறந்த வீட்டில இருக்கிற வரைக்கும்தான் பொம்பளப் புள்ளைக புடிச்சத சாப்பிட்டு, நெனச்ச நேரத்துக்கு தூங்கி எந்திரிக்க முடியும்.. கட்டிக் கொடுத்து புருசன் வீட்டுக்குப் போயிட்டா அதுக இஷ்டம் போல இருக்க முடியுமா..?”

“இப்ப நீ என்ன சொல்ல வர்ற..?”

“புள்ளய போட்டு அதட்டாதீகம்மா.. பாவம்.. கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அது இஷ்டம் போல இருக்கட்டும்..”

“எல்லாம் எனக்குத் தெரியும்.. நீ உன் சோலிக் கழுதயப் பாரு.. விட்டா விடிய விடிய ராமாயணம் படிக்க ஆரம்பிச்சிருவியே.. எம்புள்ளய எப்புடி வளக்கனும்னு எனக்குத் தெரியும்.. உங்கிட்ட வியாக்கினம் கேக்கல.. காபித்தண்ணியப் போடுடின்னா அத விட்டுட்டு விடியறதுக்குள்ள ஏன் புள்ளய எழுப்பினேன்னு வித்தாரம் பேசிக்கிட்டு இருக்கா..”

சொர்ணத்திற்கு கோபம் வந்து விட்டது.. அவளது கோபத்திற்கு அஞ்சுபவளா சாந்தா..? அவள் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி..

“பாலக் கறந்து கொண்டாந்து கொடுத்தாத்தானம்மா காபித் தண்ணியக் கலக்க முடியும்..? இன்னும் பால் வந்து சேரல..” என்றாள் சட்டமாக..

“என்னாது..? இன்னுமா முனியன் பால் கறந்துக்கிட்டு வரல..”

“ஆமாம்மா..”

“வரட்டும் அவன்.. என்னான்னு கேக்கறேன்..”

“என்னத்தக் கேட்பீக.. மாடும் முழிச்சிருக்காது.. அவனும் முழிச்சிருக்க மாட்டான்.. ஜாமத்தில பால் கறக்க பயந்துக் கிட்டு இழுத்துப் போத்திக்கிட்டு முடங்கிக் கிடக்கிறானோ என்னவோ..”

“இது ஜாமமா..?”

“இல்லையா..?”

இதுதான் சாந்தா.. அவள் பேச ஆரம்பித்துப் பேச்சில் தோற்றதாக சரித்திரமே கிடையாது.. அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்துத் தூங்க விடாமல் பாடாய் படுத்தும் சொர்ணத்தைத் தன்னால் இயன்ற அளவுக்குப் பழி வாங்கிக் கொண்டிருந்தாள் அவள்..

சாந்தாவிடம் பேச முடியாமல் மகளை முறைத்த சொர்ணம்..

“நீயேண்டி இங்கே நின்னு வாயைப் பாக்கிற.. போ.. போ..” என்று கடுகடுத்தாள்..

“எங்கேம்மா போகச் சொல்ற..?” என்றாள் சித்ரலேகா..

“தூங்கப் போகச் சொல்றாக போல இருக்கு பாப்பா..” சாந்தா வழி காட்டினாள்..

“தூங்கப் போனா உன் கால முறிச்சுருவேன்..” சொர்ணம் பயம் காட்டினாள்..

“எதுக்கும்மா புள்ளய பயமுறுத்தறீக.. இப்ப இந்தப் புள்ளய எங்கேதான் போகச் சொல்றீக..?” வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினாள் சாந்தா..

சித்ரலேகாவால் கேட்க முடியாத கேள்வியைக் கேட்ட சாந்தாவின் மீது சித்ரலேகாவுக்குள் வாஞ்சை பெருகியது..

“வாசல் தெளிச்சுக் கோலம் போடப் போகச் சொல்றேன்.. போதுமா..” சொர்ணம் கையைக் காட்டினாள்..

“ஏம்மா.. அதுக்குத்தான் மணக்க மணக்க வேல பாக்கிற மருக்கொழுந்து இருக்காளே.. நம்ம புள்ளய ஏம்மா படுத்தறீக..?”

“அவ ஆடி அசைஞ்சு வாற வரைக்கும் வாசலில் கோலம் போடாமக் கிடக்கனுமா..? போடி.. போய் வாசல் தெளிச்சுக் கோலம் போடு..”

இந்த உத்தரவுக்காகத்தானே சித்ரலேகா எழுந்து வந்தாள்..? இல்லையெனில் கருக்கல்லில் சமையலறைக்குள் நுழைந்து சொர்ணத்தின் கண்ணில் பட்டுப் பாட்டு வாங்க அவளுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?

சித்ரலேகா வாளியில் தண்ணீருடன் வாசலுக்குச் சென்றாள்.. ‘சள, புளா’ எனக் கையில் தண்ணீரை அள்ளி வாசலில் தெளிப்பதைப் போல வசந்த ரூபனின் மீது தெளித்தாள்..

0Shares

Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link